தேவை தண்ணீர்: சேமிப்பும் சிக்கனமும்!| Dinamalar

தேவை தண்ணீர்: சேமிப்பும் சிக்கனமும்!

Added : மே 13, 2017 | கருத்துகள் (1)
Share
பண்டமாற்று முறை இருந்த காலத்தில், நம் நாட்டில் பற்றாக்குறையும் இல்லை; பஞ்சமும் இல்லை. வியாபாரம் செய்ய இங்கு வந்த ஆங்கிலேயர், நம் விவசாயிகள் என்ன பயிரை விளைவிக்க வேண்டும் என, முடிவு செய்ய துவங்கினர்.பாரம்பரிய உணவு தானியங்களை விவசாயம் செய்த நம் விவசாயிகளை, முதலில், 'அபின்' எனப்படும், போதை பொருளை விளைவிக்கும்படி வற்புறுத்தினர். இந்தியாவில் விளைந்த அபினை, சீனாவுக்கு
தேவை, தண்ணீர்,சேமிப்பும் ,சிக்கனமும்!

பண்டமாற்று முறை இருந்த காலத்தில், நம் நாட்டில் பற்றாக்குறையும் இல்லை; பஞ்சமும் இல்லை. வியாபாரம் செய்ய இங்கு வந்த ஆங்கிலேயர், நம் விவசாயிகள் என்ன பயிரை விளைவிக்க வேண்டும் என, முடிவு செய்ய துவங்கினர்.

பாரம்பரிய உணவு தானியங்களை விவசாயம் செய்த நம் விவசாயிகளை, முதலில், 'அபின்' எனப்படும், போதை பொருளை விளைவிக்கும்படி வற்புறுத்தினர். இந்தியாவில் விளைந்த அபினை, சீனாவுக்கு அனுப்பி, அந்நாட்டு மக்களை போதைக்கு அடிமையாக்கினர். காரணம், சீனாவில் விளையும் தேயிலையை இறக்குமதி செய்ய, தங்கம் தர வேண்டியிருந்தது.

எனவே, அபினால், சீனாவை ஆட்டி படைத்தனர். இது, 'அபினி' போர் என, மாறியது. சீனர்கள் விழித்து கொண்டனர் என்பதை அறிந்த ஆங்கிலேயர், தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியாவில், தேயிலை பயிரிட துவங்கினர். காடுகள் அழிக்கப்பட்டன; தேயிலை, காபி, ரப்பர், யூக்கலிப்டஸ் போன்ற பணப்பயிர்கள் விளையும் தோட்டங்கள் உருவாகின.

இங்கிலாந்தில் தொழில் புரட்சி ஏற்பட்ட பின், பணப் பயிரான பருத்தி, கரும்பு, சணல் போன்ற மூலப்பொருட்கள், இங்கிலாந்து தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டன. பாரம்பரிய உணவிற்கான பயிர்கள் கைவிடப்பட்டு, பணப் பயிர்கள் நம் நாட்டில் பயிரிடப்பட்டதால், உணவுப் பஞ்சம் தலை துாக்க துவங்கியது.

இதை எதிர்த்து, 1917, ஏப்., 10ல், காந்தி துவங்கிய போராட்டம் தான், 'சம்ரான் சத்தியாகிரக' போராட்டம்; விடுதலைக்கு முன், காந்தி துவங்கிய முதல் போராட்டம். விவசாயிகளுக்காக காந்தி துவங்கிய இந்த போராட்டம் தான், அவரை, இந்தியாவில் பிரபலமாக்கி, விடுதலை போராட்டத்திற்கு தலைமை தாங்க வைத்தது.

நதி போட்ட வழித்தடத்தை, யாராலும் போட முடியாது. உயிரினங்களின் வாழ்வுக்கு ஏற்றவாறு நதியின் வழித்தடம் அமைந்துள்ளது. அந்த நதியின் வழித்தடத்திலும், ஏரிகள், குளங்கள் என, நீர் நிலைகளில் மனிதனின் ஆக்கிரமிப்பு தொடர்ந்தது. 'நான் ஏரியில் வீடு கட்டியுள்ளேன்' என, யாரும் கூறுவதில்லை. ஆனால், மழை வெள்ளம் வரும்போது, 'வீட்டிற்குள் வெள்ளம் புகுந்து விட்டது' என, புலம்புகிறான்.

காட்டை அழித்து, தோட்ட பயிர்களை பயிரிட்டான். யானையின் வழித்தடத்தை மறைத்தான். விலங்குகள் உள்ள காட்டில் குடியேறி விட்டு, இன்று, 'புலி வீட்டிற்கு வந்து விட்டது; யானை ஊருக்குள் வந்து விட்டது' என, புலம்பி என்ன பயன்?தண்ணீர் உபரியாக இருக்கும் போது உல்லாசமாக செலவழித்தால் பிரச்னை இல்லை. பற்றாக்குறை ஏற்படும் போது, உல்லாசத்தை மறந்து, சேமிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

தண்ணீர் உபரியாக இருந்த போது, கவலை கொள்ளவில்லை. பற்றாக்குறை ஏற்படும் போது, சேமித்து, பக்குவப்படுத்த மறுத்தோம் அல்லது மறந்தோம். இன்று, தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு விட்டது. எல்லா கிராமங்களிலும், ஊர்களிலும் தண்ணீர் பஞ்சம். குடிக்க தண்ணீர் இல்லை. இனி, விவசாயத்திற்கு என்ன செய்வது என, தெரியவில்லை. பஞ்சத்தில் முதலில் தலை துாக்குவது தண்ணீர் பஞ்சம் தான். மெல்ல மெல்ல, ஒவ்வொரு பொருளும் பற்றாக்குறையிலிருந்து, பஞ்சத்திற்கு தள்ளிச்செல்லும்.

பக்கத்து மாநிலங்கள் தண்ணீர் தரவில்லை என்பது ஒரு பக்கம்... ஆனால், மழை நீரையும், கிடைக்கும் நதி நீரையும் பயன்படுத்தி, நிலத்தடி நீரை உயர்த்தியுள்ளோமா... ஏரிகள், குளங்கள் என, தனி மனிதன் ஆக்கிரமிப்பு நடந்தால், தட்டி கேட்கலாம். தமிழக அரசின் பல அலுவலகங்கள், நீதிமன்றங்கள் குளத்தில் தான் கட்டப்பட்டுள்ளன; யாரிடம் முறையிடுவது?

நெடுஞ்சாலையின் இரண்டு பக்கமும் இருந்து நிழல் தந்த பல ஆயிரம் மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன. நான்கு வழி சாலையில் பயணம் செய்யும் போது, வெப்பக் காற்றை தரும், பாலைவன சாலைகள் போல் உள்ளன.

நெடுஞ்சாலையின் இரண்டு பக்கமும் நிழல் தரும் மரங்கள், 15 அடி இடைவெளியில் நடப்பட வேண்டும். புளிய மரம், புங்க மரம், வேப்ப மரம், நாவல் மரம், அரச மரம், ஆல மரம் போன்ற, வெப்பம் தாங்கி வளரும் நாட்டு மரங்களை இன்று நட்டால், இனி, 10 ஆண்டுகள் கழித்து பயன் அடையலாம்.

தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் கிடைக்கும் நிதியை, எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க் கள் தங்கள் தொகுதியில் மரம் வளர்க்க பயன்படுத்த வேண்டும். மரம் வளர்ந்தால், மழை கிடைக்கும்; மழை பெய்தால், தண்ணீர் பஞ்சம் தீரும்.

பல வீடுகளில், தேவைக்கும் அதிகமான குடிநீர் இணைப்புகள் உள்ளன. அந்த வீடுகளில் குளியலறை முதல், கழிப்பறை வரை குடிநீரை தான் பயன்படுத்துகின்றனர். ஆனால், சாதாரண மக்கள், குடிநீருக்காக தெருக்களில் காத்து கிடக்கின்றனர். வீடுகளில், தேவைக்கு அதிகமாக உள்ள குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட வேண்டும்.குடிநீர் குழாய்களில் மின் இணைப்பு பயன்படுத்தி உறிஞ்சும் வீடுகள், தொழிற்சாலைகளை கண்டறிந்து, குடிநீர் இணைப்பு மற்றும் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்.

தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் போது, இனி வரும் காலங்களில், உணவு பற்றாக்குறையும் ஏற்படும். எனவே, மாற்று பயிர்களை பயிரிட்டு, மாற்று உணவுகளை உண்ண பழகி கொள்ள வேண்டும்.வீடுகள் மற்றும் கடைகளில் காலையில், இட்லி, தோசை, வெண் பொங்கல், பூரி, வடை என்பதை தவிர்த்து, கம்பங்கூழ், ராகி கூழ், சோளக்கூழ் என, உணவு பழக்கத்தை மாற்ற வேண்டும்.

ஏனெனில், 1 ஏக்கர் நெல்லுக்கு பாயும் தண்ணீரில், 10 ஏக்கர் சிறு தானியங்களும், 1 ஏக்கர் கரும்புக்கு பாயும் தண்ணீரில், 20 ஏக்கர் சிறு தானியங்களையும் பயிரிட்டு விடலாம். எனவே, தண்ணீர் பற்றாக்குறையால், மாற்று பயிரும், மாற்று உணவும் கண்டறியப்பட வேண்டும்.

ரேஷனில் வழங்கப்படும் அரிசி, கோதுமை அளவை குறைத்து, தரமான கம்பு, சோளம், ராகி, வரகரிசி, தினை போன்ற சிறு தானியங்கள் வழங்க வேண்டும். அவ்வாறு செய்தால், சிறு தானிய உற்பத்தி பெருகவும் செய்யும்; அரிசி கடத்தல் குறையவும் செய்யும். ரேஷன் அரிசியில் கள்ளத்தனமாக தயாரிக்கப்படும் இட்லி, தோசை மாவுகளும் குறைந்து விடும்.

நம் பசி அடங்கிய பின், நாம் உண்ணும் அல்லது நம் தேவைக்கு மேல் வீண் செய்யும் உணவு மற்றும் குடிநீர் யாவும் அடுத்தவருக்கு சொந்தமானது. அடுத்தவருக்கு பயன்படுவதை நாம் வீண் செய்கிறோம் எனும் மனப்பக்குவம் எல்லாருக்கும் வர வேண்டும்.வாக்களிக்கப்பட்ட நிலம் கிடைக்கும் வரை, உலகில் நாடோடியாக, அகதிகளாக இருந்த யூதர்கள், 1948ல், இஸ்ரேல் என்ற தனி நாட்டை அமைத்தனர். அதற்கு முன்பே, நிலங்களை வாங்கி, விவசாய பண்ணையை உருவாக்கினர். இன்று, இஸ்ரேல், தண்ணீர் மேலாண்மையால், விவசாயத்தில் தன்னிறைவு அடைந்தது மட்டுமின்றி, ஏற்றுமதியும் செய்கிறது.

ஆனால், வற்றாத ஜீவ நதிகளை கொண்ட தமிழகம், பாலைவனமாக காட்சி தருகிறது. நதி நீர் பாசனத்தை தமிழகம் நம்பியுள்ளது என்பதை, நன்கு அறிந்த மன்னன் கரிகாலன், அன்று, கல்லணையை கட்டினான். மற்ற மாநிலங்கள்... ஏன் உலக நாடுகளே, நீர் சேமிப்பு பற்றி எண்ணாத போது, கரிகாலன் கல்லணை கட்ட காரணம், நீர் சேமிப்பால் தான், தமிழகம் வாழ முடியும் என்ற அவனின் எண்ணம் தான்.

அதை தான், 'பென்னி குக்' என்ற ஆங்கிலேய அதிகாரி உணர்ந்து, முல்லை பெரியாறு அணையில் நீர் தேக்கி, மதுரை மாவட்டத்தின் பக்கம் தண்ணீரை திருப்பி, பஞ்சத்தை போக்கினார். ஆனால், தண்ணீர் பராமரிப்பு என்பது, தமிழனிடம் இல்லாமல் போனது.
தென் மேற்கு மற்றும் வட கிழக்கு என இரு, பருவக்காற்று பெறும் மாநிலம், தமிழகம். ஒரு பருவக்காற்று ஏமாற்றி விட்டாலும், இன்னொரு பருவக்காற்று காப்பாற்றி விடும். இது தான் பலமுறை நடந்துள்ளது.

இரண்டு பருவ மழையும் பொய்த்து விட்டால், தமிழகம் தாங்காது. அது தான், தற்போதைய நிலை. இன்று, தமிழகத்துக்கு மட்டும் பயன் தரும் படி, ஒரு புயல் வந்து நன்கு மழை பொழிந்தாலும், நம்மால் மழை நீரை முழுமையாக பயன்படுத்தி கொள்ள தெரியாது. ஏரிகள், குளங்கள், அணைகள் எல்லாம் துார் வாரப்படாமல் உள்ளன. சேறும், வண்டலும் அணையின் ஐந்தில் ஒரு பகுதியை அடைத்து விட்டன.

பணப் பயிர்களுக்கு அடிமையாகி, நம் பாரம்பரிய விவசாயத்தை மறந்து விட்டோம். பாரம்பரிய விவசாயத்தை விட, பணப் பயிர் விவசாயத்திற்கு தண்ணீரை பல மடங்கு செலவழித்தோம்.
சட்டசபை இடைத்தேர்தலில் ஒரு கட்சி, 100 கோடி ரூபாய் செலவு செய்யும் அளவு பண வலிமையில் உள்ளது. ஓர் அணையையோ, குளத்தையோ, ஏரியையோ தத்து எடுத்து, துார் வார, அந்த கட்சி மட்டுமல்ல, எந்த ஒரு கட்சியும் இல்லை.

'டாஸ்மாக்' பாட்டிலுக்கு தரப்படும் முக்கியத்துவம், தண்ணீர் பயன்பாட்டிற்கும் தரப்பட வேண்டும். பூட்டிய கடைகளை திறக்க காட்டும் புத்துணர்ச்சி, நீர் நிலைகளை காப்பாற்ற எடுக்கப்படவில்லை என்பது கொடுமை.

தண்ணீர் பஞ்சம் என்பது மற்ற பஞ்சங்களுக்கு முன்னோடி. தண்ணீர் பஞ்சம் வரும் போதே, நாம் தேவையான போர்க்கால நடவடிக்கையை எடுக்க வேண்டும். இல்லையேல், திருவள்ளுவர் சொன்னது போல, 'வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரி முன்னர் வைத்துாறு போலக் கெடும்' என்றாகி விடும்.

பணப்பயிரை மறந்து, பாரம்பரிய உணவுப் பொருட்களை பயிர் செய்வோம். மாற்று பயிர்களை பயிரிட்டு, மாற்று உணவை உண்போம். பண பொருளாதாரத்தை விட பண்டமாற்று பொருளாதாரம் தான் பஞ்சத்திலிருந்து மனிதனை காப்பாற்றும் என, உணர்வோம்.நீரை சேமிப்போம்; ஊரை காப்பாற்றுவோம்; உயிரை காப்பாற்றுவோம். மழை பொழிவே இல்லாத அல்லது மழை வளம் குறைந்த நாடுகள், தண்ணீரில் தன்னிறைவு காணும் போது, தமிழகம் முயன்றால் முடியாது என்பது இல்லை!

- எஸ்.ஏ.சுந்தரமூர்த்தி -
வழக்கறிஞர், சமூக ஆர்வலர்

இ -மெயில்:
asussusi@gmail.com

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X