கனவுகளைக் கைப்பற்றுவோம் - 48| Dinamalar

சிறப்பு பகுதிகள்

நீங்களும் தொழிலதிபராகலாம்

கனவுகளைக் கைப்பற்றுவோம் - 48

Added : மே 15, 2017
கனவுகளைக் கைப்பற்றுவோம் - 48

பயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில் தொடங்கும்போது மட்டும் பயம் வருவதில்லை, தொழிலின் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு செல்லும்போதும் பயம் வருகின்றது. பயம் ஏற்படுவது மனித இயல்புதான். பயத்தைத் தாண்டி வெளியே வரும் போதுதான் வெற்றி கிடைக்கும். நாம் தொழில் தொடங்க எடுத்து வைக்கும் முதல் அடிதான், பயத்தை கடப்பதற்கான முதல் படியாகும். தொழிலில் வருமானம் ஈட்டும் வழி தெரிந்தால் நிச்சயம் பயம் வருவதற்கு வாய்ப்பு குறைவு. தொழில் தொடங்குவதற்கு முன் நீண்ட காலத்திற்கு வருமானம் ஈட்டகூடிய வழிகளை கண்டுபிடிக்க வேண்டும். வருமானம் கிடைக்கும் வழிகளில் கவனம் செலுத்தவேண்டும். அப்போதுதான் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவதற்கான நம்பிக்கை பிறக்கும். தொழில் புரிய ஆர்வமும், உந்துதலும் இருந்தால் மட்டும் போதாது. செய்யும் தொழிலில் துறைக்கேற்ற பிசினஸ் மாடல், திட்டம் மிக அவசியம். நம் தொழில் சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் சரி அதன் தொழில் வளர்ச்சியடைய தொழில்நுட்பம் (technology) பெரிதும் உதவுகிறது. தொழில்நுட்பங்கள் தொழிலின் பல மட்டங்களில் பயன்படுகிறது பின்பற்றியே ஆக வேண்டிய சூழ்நிலை. உலகம் முழுவதிலும் நிரம்பியிருக்கும் அபரிமிதமான வாய்ப்புகளை அழகினை செழுமையினை எவ்வாறு தொழில்நுட்பமாக பயன்படுத்திக் கொள்வது என்பதை குறித்து காண்போம்..ஒரு தொழிலதிபர் தன்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் அவரிடம் பணிபுரியும் பணியாளர்களுக்கு தங்க மோதிரம் பரிசளிப்பாராம் இதைப் பார்த்த நண்பர் காரணம் கேட்டபோது தொழிலதிபர் என் பணியாளர்களுக்கு நான் மோதிரத்தை மட்டும் தருவதில்லை அவர்களுக்கு அபரிதமான வாய்ப்பினை வழங்குகின்றேன் என்றார். இந்தப் பதிலால் குழம்பியிருந்த நண்பருக்கு மேலும் சில விளக்கங்களை கொடுத்தார் தொழிலதிபர் என்னுடைய ஐந்தாம் பிறந்தநாளில் என் அப்பா என்னை ஒரு சாக்லேட் கடைக்கு அழைத்துச் சென்றார் உனக்கு என்ன வேண்டுமோ , எத்தனை வேண்டுமோ எடுத்துக் கொள் என்றார்.அந்தக் கடை எனக்காக திறந்து கிடப்பது போல் இருந்தது. சாக்லேட் மற்றும் பல இனிப்புகளால் நிரம்பி வழிந்தது .எனக்கு எங்கு துவங்குவது என்று தெரியவில்லை இருந்த போதும் அங்கிருந்த எனக்கு விருப்பமான சாக்லேட்டுகளை என் பையில் நிரப்பத்துவங்கினேன், நான் எல்லாவற்றையும் எடுக்கவில்லை ஆனாலும் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளலாம் என்று எனக்கிருந்த வாய்ப்பு சிந்திக்கத் தூண்டியது.
அப்போது என் அப்பா சொன்னார், ‛‛இந்தக் கடையில் எதையும் எடுத்துக் கொள்ளலாம் என்ற அபரிதமான உணர்வை அனுபவி''. அன்று முதல் உலகம் முழுவதிலும் நிரம்பியிருக்கும் அபரிதமான வாய்ப்புகளை அழகினை செழுமையினை கவனிக்கத் துவங்கிவிட்டேன் என்றார்.
புதிய விடியலை தேடிச் செல்லும் போது தான் மனம் புத்துணர்வுடன் செயல்படுகின்றது. ஒரு போதும் பழமைக்குள் மூழ்கி மக்கிப் போய்விடக் கூடாது. தொடர்ந்து தேடிக் கொண்டே இருக்க வேண்டும் எதிர் வரும் தடைகளைப் படிகளாக்கி முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும்.
டிஜிட்டல் தொழில்நுட்பம் ஒரு தொழிலின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது. அதேபோல் தொழிலை, ஒரு தயாரிப்பை அல்லது சேவையை சந்தைப்படுத்துவதிலும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கை பயன்படுத்தும்போது தொழிலில் வளர்ச்சி அதிகரித்து உலகப் பொருளாதார முறையில் புரட்சிகர மாற்றங்களை நிகழ்த்துகின்றது.. மின்னணு ஊடகங்கள் வழியாக தயாரிப்பு மற்றும் சேவையை சந்தைப்படுத்துதல் டிஜிட்டல் மார்க்கெட்டிங். இத்தகைய டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் பல உத்திகள் பயன்படுத்தப்படுகிறதுஇன்றைய நிலையில் பெரும்பாலோனோர் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றோம். . நாம் உற்பத்தி செய்யும் பொருட்கள் மற்றும் சேவை பிறரை சென்றடைய சமூக வலைத்தள மார்கெட்டிங்கை பின்பற்றுவது நல்ல பலன்களை கொடுத்துள்ளது .Face book, Twitter, linked in, போன்ற பல சமூக வலைத்தளங்களில் நிறுவனத்தின் பெயரில் தனி பக்கங்களை தொடங்குவது, நிறுவனத்தைப் பற்றியும், தனித்தன்மைகள் பற்றியும், என்னென்ன தயாரிப்புகள் . சேவைகள் கொடுக்கின்றோம் , அது மற்ற நிறுவனங்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன, சிறப்பம்சங்கள், வாடிக்கையாளர்கள் நம்மிடம் பொருட்களை வாங்குவதால் அவர்கள் என்னென்ன பலன்களை அடைய போகிறார்கள் போன்ற தகவல்களை அடிக்கடி சமூக வலைத்தளத்தின் பக்கங்களில் பதிவிடவேண்டும்.தொழில் மற்றும் நிறுவனத்தைப் பற்றி, பிராண்டு பற்றி, தயாரிப்பு மற்றும் சேவையை பற்றி விளக்க, வாடிக்கையாளர்களை கவர, ஈர்க்க தெளிவாக மற்றும் புரிந்துகொள்ளும்படியான வரையறுக்கப்படும் படங்கள், பத்திகள், விளக்கங்கள், வார்த்தைகள் வாடிக்கையாளர்களை கவர, இழுக்க, தயாரிப்பு மற்றும் சேவையை வாங்க வைக்க தொழிலுக்கு பயன்படுத்தப்படும் வகையில் இருக்க வேண்டும் .தொழிலைப் பற்றிய தகவல்களை பரிமாற படங்கள் வீடியோக்கள் கிராபிக்ஸ் மற்றும் டிசைன்களை பயன்படுத்துவது போன்றவை வாடிக்கையாளர்களை எளிதாக சென்றடைய உதவும்.இந்தியாவில் மின் வணிகம் கொடிகட்டிப் பறக்கிறது. உதாரணமாக FlipKart, Amazon, eBay, SnapDeal போன்றதளங்கள் அதிகமான வருமானம் ஈட்டி வருகின்றன.பெண்கள் நாட்டின் கண்கள் ஒரு நல்ல குடும்பத்தை உருவாக்குவதில் பெண்ணுக்கு தான் அதிக பங்குள்ளது பெண்கள் நாட்டின் மற்றும் வீட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றுகின்றனர். நம் நாட்டில் பல பெண்கள் தொழில்முனைவோர்களாக உள்ளனர். பெண் தொழில்முனைவோர்களை மேம்படுத்தும் மற்றும் ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசு Mahila E-haat என்ற ஆன்லைன் தளத்தை உருவாகியுள்ளது. Mahila E-haat ஆன்லைன் தளத்தின் மூலம் பெண்கள் தங்களின் உற்பத்தி பொருட்கள் மற்றும் சேவையை நேரடியாக எவ்வித கட்டணமும் இல்லாமல் சந்தைப்படுத்திக் கொள்ளலாம். Mahila E-haat பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் (Ministry of Women and Child Development) இந்த தளத்தை தொடங்கியது. பெண் தொழில்முனைவோர் மற்றும் சுய உதவி குழுக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் மற்றும் சேவையை எவ்வித இடைத்தரகரும் இல்லாமல் கட்டணமின்றி Mahila E-haat தளத்தில் சந்தைப்படுத்தலாம். வாங்குபவர்கள் இந்த தளத்தின் வாயிலாக விற்பனையாளர்களை தொடர்புகொண்டு வாங்கிக்கொள்ள முடியும்.ஒரு ஆசிரியரின் பணி நிறைவு விழா மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்தது. மனநிறைவோடு பணியாற்றி விடை பெறுகிறேன் , ஓய்வுக்காக அல்ல மாறாக , " இன்னும் இந்தச் சமூகத்திற்கு நான் செய்ய வேண்டியது என்ன ?" என்ற ஆய்வுக்காகவே என்ற அவரது ஏற்புரையில் இந்த வார்த்தைகள் அனைவரையும் உள்ளம் கவர்ந்ததாக இருந்தது . பணி புரிந்தே வாழ வேண்டும் என்ற லட்சிய கூர்நோக்கு உடையவர்களுக்கு ஓய்வென்பதே இல்லை தான். அதற்குக் காரணம் பணித்தெளிவும் அதற்கான உறுதியான நிலைப்பாடும் தான் . அந்த குறிப்பிட்ட ஆசிரியரிடம் பயின்ற மாணவர்களோ , " நாங்கள் பாடங்களைக் கற்கவில்லை . மனப்பாட நுணுக்கங்களைக் கற்கவில்லை , வாழ்க்கையை வாழ்வியலை கற்றுக் கொண்டோம் . வாழ்வின் சவால்களை எதிர்கொள்ளும் சாதுரியங்களைக் கற்றுக் கொண்டோம் . 'சிலையும் நானே சிற்பியும் நானே ' என்ற தத்துவத்தை வாழ்வாக்க கற்றுக் கொண்டோம் ' எனப் பகிர்ந்து கொண்டனர் .இதே போல் நாம் செய்யும் தொழில் வாழ்வியலாக இருக்க வேண்டும் 'செய்யும் தொழிலே தெய்வம்' என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.நாம் செய்கின்ற தொழிலை தெய்வமாக மதித்துப் போற்றவேண்டும் என்பது மட்டுமல்ல அதன் பொருள். நம்முடைய தொழிலின் வாயிலாக யாருக்கும் எவ்வித துரோகமோ, தீங்கோ, நட்டமோ விளைவிக்கக் கூடாதென்பதும் அப்பழமொழியில் அடங்கியுள்ளது.உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டுமென்பதும் என் தொழிலால்தான் நான் வாழ்கிறேன் என்று காட்டிக் கொண்டு அதை வைத்தே பிறரைக் கொள்ளையடித்தல் கூடாதென்பதையும் அப்பழமொழி நமக்கு உணர்த்துகிறது. இதனை மனதில் கொண்டு வாழ்ந்தால் 'சிலையும் நானே சிற்பியும் நானே ' என்பதில் துளியும் ஐயம் இல்லை..ஆ.ரோஸ்லின்9842073219aaroseline@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X