சேமிக்க தெரிந்தவரே, பிழைக்கத் தெரிந்தவர்| Dinamalar

சேமிக்க தெரிந்தவரே, பிழைக்கத் தெரிந்தவர்

Added : மே 19, 2017 | கருத்துகள் (1)
சேமிக்க தெரிந்தவரே, பிழைக்கத் தெரிந்தவர்

இன்று யாரை பார்த்தாலும் “ ஆமா. எவ்வளவு சேர்த்து வச்சிருக்கே? ” என்று ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்வது மிகவும் சகஜமாகி விட்டது. அந்தளவிற்கு இன்று சேமிப்பு முக்கியமாக உள்ளது. விலைவாசி மலைக்கும்படியாக கூடிவிட்டது. உடல் உழைப்புக்கள் குறைந்து , தேவைகள் மற்றும் மருத்துவ செலவுகள் அதிகரித்து, உறவுகளின் நெருக்கமும், உதவிகளும் குறைந்து அரசு வேலைகளை மட்டுமே நம்பி வாழ்க்கையை ஓட்டி, வரதட்சணையும் அதிகரித்து விட்ட நிலையில் சேமித்து வைக்க வேண்டிய நெருக்கடிகள் ஒவ்வொருவரையும் ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறன.

எருவாட்டி விற்று சேமிப்பு : முன்பெல்லாம் சேமிக்கும் பழக்கம் இயற்கையிலேயே ஒவ்வொரு குடும்பத்திடமும் குடிகொண்டிருந்தது. அறுவடை செய்யும் நெல் மற்றும் நிலத்தில் விளையும் தானியங்களை, உணவுக்கு வேண்டும் என அவற்றின் ஒருபகுதியை சேமிப்பாக சேகரித்து வைத்தனர்.குடும்ப பெண்கள் தான் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களில், அரிசியில்
ஒவ்வொரு நாளும் சிறிது, சிறிதாக சேர்த்தனர். பால், தயிர்,மோர், நெய், எருவாட்டி என விற்று சேர்த்தனர். இவ்வாறு சேர்த்த பணத்தை தங்கள் 'சிறுவாட்டுக் காசாக' (சேமிக்கும் பணமாக) வைத்தனர்.

பல வழிகளிலும் சேமிப்பு : வீட்டிலுள்ள சிறுவர்களுக்கு, மண் உண்டியல்கள் வாங்கி
தந்தனர். அவர்களுக்கு தின்பண்டங்கள் வாங்க தரும் பணத்தை, உண்டியல்களில் போட்டு வைக்கும்படி கூறி அவர்களிடம் சேமிக்கும் பழக்கத்தை கற்றுத்தந்தனர். பெரியவர்களும் உண்டியலில் சேமிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். இப்படி சேமிக்கும் பணம் சமயத்தில் அவர்களுக்கு
பேருதவியாக இருந்தது.பெண்கள் தங்கள் சேமிப்பு பணத்தை பெருக்குவதற்காக, கோழி மற்றும் ஆடு, மாடுகளை வளர்க்க ஆரம்பித்தனர். பூ மற்றும் காய்கறி , பலகாரங்கள் தயாரித்து விற்றனர். தானியங்களை வாங்கி வைத்து விற்பனை செய்தனர். பசுவளர்த்து பால்கறந்து விற்றனர். இவற்றில் ஒரு பகுதியை சேமிப்பாக சேர்த்து வைத்தனர்.சில வீடுகளில் பெண்கள் ஏதாவது ஒரு செலவைக்கூறி அல்லது ஏதாவது ஒரு பொருள் வாங்க வேண்டுமென கூறி கணவனிடம் இருந்து பணத்தை வாங்கி அதை சேமிப்பாக வைத்திருப்பர். குடும்பத்திற்கு அல்லது கணவருக்கு
பொருளாதார பிரச்னைகள் வரும்போது அந்த பணத்தை கொடுத்து உதவியிருக்கின்றனர். பொதுவாக அன்று சேமிப்பதில் ஒவ்வொருவருக்கிடையே போட்டி இருந்தது. இதனால் பணம் விரைய
மாகாமல் அவரவர் தேவையை பூர்த்தி செய்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டது. பல மாணவர்கள் இந்த சேமிப்பு பணத்தின் மூலம் படிப்பை தொடரவும், வேலை வாய்ப்பை பெறவும் செய்திருக்கிறது.அன்றைய மக்களிடம் 'சேமிக்க வேண்டும்' என்ற ஆவல் இயற்கையிலேயே
இருந்ததால் அவர்களிடம் கெட்ட பழக்கவழக்கங்கள் குடிகொண்டிருக்கவில்லை. இதனால் தாங்கள் சேமித்து பணத்தை கொண்டு பூமி, பொருட்கள் என எதையாவது மென்மேலும் வாங்கி சேர்த்து கொண்டிருந்தனர். இப்படி சேமித்து வைப்பதால் இக்கட்டான நேரங்களில் கந்து வட்டிக்கு வாங்க வேண்டிய அவசியம் குறைந்தது.

பற்றாக்குறை பட்ஜெட்டில் வாழ்க்கை : ஆனால் இன்று ஆடம்பரங்களும், அனாவசிய செலவுகளும் பெருகிவிட்டன. சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் செலவழிக்கவே மக்கள் துடிக்கின்றனர். எவ்வளவு சம்பாதித்தாலும் பற்றாக்குறை பட்ஜெட்டிலேயே வாழ்கின்றனர். 'இருக்கும் வரை அனுபவிப்போம் என்ற எண்ணம் மேலோங்கி விட்டது. 'வரவு எட்டணா, செலவு
பத்தணா' என்ற பழமொழியை மெய்ப்பித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.இதனால் கடன்கள் பெருகி வாழ்க்கையே சுமையாக அவர்களை அழுத்துகிறது.சினிமா மோகங்களும், வீண் ஆடம்பரங்களும் மக்களை சேமிக்க விடாமல் சிதறடித்துக்கொண்டிருக்கின்றன. சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே இருந்தாலும் அவர்களால் இயலவில்லை. சேமித்து வைப்பதையே மலைப்பாக கருதுகின்றனர். அவர்களாக சேமிப்பதற்கு சற்றும் பொறுமையில்லை. வேறு வழி முறைகளில் சேமித்து வைப்பதற்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.
ஆனால் இயந்திர கதியில் வாழ்க்கையை ஓட்டும் இன்று சேமிப்பு என்பது மிகவும்
அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. பந்தம், பாசம், கடமை என்ற உணர்வுகள் மங்கி வரும் நிலையில் 'நம் முதுமைகாலத்தில் நம்மை தாங்கிபிடிக்க நம் சேமிப்பால் மட்டுமே முடியும்.' என்பதை நாம் உணர வேண்டும்.

முடிந்தளவு சேமிக்கலாம் : இன்றைய சமூகத்தில் நாம் சேமிக்க கற்றுக்கொள்ள வேண்டும். நம்மால் முடிந்தளவு சேமிக்கலாம். சிறு துரும்பும் பல்குத்த உதவும், சிறு சேமிப்பும் சமயத்திற்கு கைகொடுக்கும் என்றாலும் மக்களால் மொத்தமாக சேமிக்க வழியில்லை, வசதியில்லை, வருமானமும் அதிகமில்லை. அப்புறம் எப்படி சேமிப்பது?இந்த மனப்பான்மை எண்ணமே நமக்கு வரக்கூடாது.சேமிப்பை செலவாக கருத வேண்டும்ஏனெனில் வசதிகள், அதிக வருமானங்கள் இல்லாவிட்டாலும் நம் வாழ்க்கை ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. எல்லா விசேஷங்களுக்கும் ஆஜராகி கொண்டுதான் இருக்கிறோம். இவை எல்லாம் செலவழிக்காமல் நடக்குமா? சமாளித்து கொண்டுதான் வருகிறோம். இதே போல் சேமிப்பையும் ஒரு செலவாக கருதி
சமாளிக்க வேண்டியது அவசியம்.முதலில் நம்மிடையே சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் உதயமானால் போதும். வழி தானாகவே புலப்பட தொடங்கும்.

வங்கியை நாடுவதே சிறந்தது : வீட்டில் மொத்தமாக பணத்தை வைத்திருந்து எந்தக் காரியத்தையும் ஈடேற்ற கூடிய வசதிகளோ, வாய்ப்புகளோ மக்களிடையே இல்லை. இருந்தாலும் போதிய பாதுகாப்பும் இல்லை.எனவே வட்டியின்றி பணத்தை வீட்டில் பாதுகாப்பின்றி முடக்கி வைத்து கொண்டு பயத்துடன் விழித்து கொண்டிருப்பதைவிட, வட்டி குறைந்தாலும்
பாதுகாப்புடன் சேமிக்க உதவும் வங்கிகளையே நாடிச்செல்வது புத்திசாலித்தனம்.
குழந்தைகளின் பிற்கால நலனுக்காக படிப்பிற்காக, ஓய்வூதியம் பெறுவதற்காக என பலவித பயனுள்ள சேமிப்புகளுக்கு வங்கிகள் வழிகாட்டுகின்றன. பணத்தை இங்கு மொத்தமாக போட்டு வைத்து சேமிக்கலாம். தங்கள் வருமானத்தின் ஒருபகுதியை தினசரி முதலீடு செய்து சேமித்து வைக்கலாம். மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிப்பாக செலுத்தி வந்து
குறிப்பிட்ட காலம் முடிந்தவுடன் ஒரு பெரும் தொகையை பெற்றுப் பயனடையலாம். மாதாந்திர சம்பளம் வாங்கும்படியான வேலை பார்ப்பவர்களால் குடும்பத்தை நிர்வகித்து வருவதே பெரும்பாடாகும். அவர்களுக்கு வங்கிகளில் இருக்கும் சிறு சேமிப்பு திட்டங்கள் ஒரு வரப்
பிரசாதமாகும்.

சமூக அந்தஸ்து வரும் : சிறுக,சிறுக சேமித்து வைப்பதன்மூலம் பெருந்தொகையை பெற்று பண்டிகைகளை சிறப்பாக கொண்டாடலாம்.வாழ்க்கை வசதிகளை தொய்வின்றி தேடிக்கொள்ளலாம். அதன் மூலம் சமூகத்தில் ஒரு சிறப்பான அந்தஸ்தை பெற முடியும். நம் கவுரவம் காப்பாற்றப்படும்.எனவே, வாழ்க்கையின் வீண் செலவுகளை குறைத்து கொண்டுமுடிந்தளவு ஒவ்வொருவரும் சேமிக்க கற்றுக்கொள்ள வேண்டும். சேமிக்க தெரிந்தவன் வாழ்க்கையில் பிழைக்க தெரிந்தவன். பிழைக்க தெரிந்தவன் வாழ்க்கையில் வெற்றி பெற்று வளமுடன் வாழ்வான். எனவே சிக்கனமாக இருந்து சேமித்து வளமுடன் வாழ்க்கையை அமைத்து கொள்வதே
புத்திசாலித்தனமாகும்.

-இரா. ரங்கசாமி
வங்கி மேலாளர் (ஓய்வு)
வடுகபட்டி
90925 75184.We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X