உத்தரவை மாற்றுமா மத்திய அரசு?

Added : மே 20, 2017 | கருத்துகள் (1)
Share
Advertisement
  உத்தரவை மாற்றுமா மத்திய அரசு?


இந்தியாவில் மருந்துகளின் விலை, சாமானிய மக்களுக்கு எட்டாத உயரத்துக்கு சென்று விட்டது. இன்றைய உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களால், 40 வயதுக்கு மேல், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு என, பல தரப்பட்ட, தொற்றா நோய்களால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
இவர்களுக்கெல்லாம் வாழ் நாள் முழுவதும் மாத்திரை, மருந்துகள் தேவைப்படுகின்றன. தங்களின் வருமானத்தில் ஒரு பகுதியை மருந்துகளுக்கு ஒதுக்கினால் மட்டுமே இதை சமாளிக்க முடியும்.

இதை கருத்தில் கொண்டு, இந்தியாவில் பல மாநிலங்களில், மத்திய அரசு, மலிவு விலை மருந்தகங்களை சில ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. ஆனால், அவற்றின் செயல்பாடுகள் ஆமை வேகத்தில் இருப்பதால், மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் உடனே கிடைக்கச் செய்ய, 'ஜெனரிக்' எனப்படும், இயற்பெயர்களை கொண்ட மருந்துகளை மட்டுமே மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும் என, பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
அதையொட்டி, இந்திய மருத்துவ கவுன்சிலும், 'பிராண்டட் எனப்படும், வர்த்தக பெயர் கொண்ட மருந்துகளின் பெயர்களை எழுதும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரித்துள்ளது.
ஒரு நோய்க்கு, புதிய மருந்து கண்டுபிடிக்கும் போது, ஆராய்ச்சிக்கு பல கோடி ரூபாய் செலவாகும். பல கட்ட பரிசோதனைகளுக்கு, அதை உட்படுத்த வேண்டும். அதன் பின் தான், விற்பனை செய்ய அரசின் அனுமதியை பெற வேண்டும்.
இப்படி, பல கட்ட சோதனை மற்றும் ஆய்வுகளுக்கு பின் சந்தைக்கு வருவது தான், பிராண்டட் மருந்து. அந்த மருந்தை கண்டுபிடிப்பதற்கான செலவு, விளம்பர செலவு, மருத்துவர்களை எழுத வைக்க, விற்பனை பிரதிநிதிகளை நியமித்து, மாதிரி மருந்துகளையும், அன்பளிப்புகளையும் கொடுத்து, அறிமுகம் செய்வதற்கான செலவு போன்றவற்றை, அந்த மருந்தின் மீது ஏற்றி, விலையை தீர்மானிக்கிறது, மருந்து நிறுவனம்.
இதனால், பிராண்டட் மருந்தின் விலை அதிகமாக இருக்கிறது.
இப்படி அதிக செலவு செய்து, மருந்து கண்டுபிடிப்பவர்களுக்கு, பொருளாதார பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டது தான், 'பேட்டன்ட்' எனப்படும், காப்புரிமை.
இந்தியாவில் புதிய மருந்துக்கு, 20 ஆண்டுகள் காப்புரிமை வழங்கப்படுகிறது. காப்புரிமை காலம் முடிந்ததும், அதே மருந்தின் அடிப்படை மூலக்கூறுகளை பயன்படுத்தி, மற்ற மருந்து நிறுவனங்களும், தயாரித்து விற்க துவங்கும். இப்படி தயாரிக்கப்படுவது, ஜெனரிக் மருந்து.
ஜெனரிக் மருந்து தயாரிப்புக்கு, ஆராய்ச்சி செலவு, பரிசோதனை செலவு, விற்பனை பிரதிநிதிகள் சம்பள செலவு, விளம்பரச் செலவு என, எதுவுமே இல்லை. இதனால், அவற்றின் விலை குறைவாக இருக்கும்.

ஒரு குறிப்பிட்ட மருந்தை, பல நிறுவனங்கள் தயாரிக்கும் போது, அடிப்படை மூலக்கூறுகள் மாறாது என்றாலும், வடிவம், நிறம், மருந்துப் பெட்டி அமைப்பு போன்றவை மாறும்.
ஒரே மருந்து நிறுவனம், பிராண்டட் மருந்தும் தயாரிக்கிறது; ஜெனரிக் மருந்தும் தயாரிக்கிறது. ஆனால், இரண்டுமே ஒரே தரம் என, உறுதி சொல்ல முடியாது. காரணம், ஜெனரிக் மருந்தின் மூலப்பொருளில் சிறிதளவு குறைவாக இருந்தாலும், அதை அரசு ஏற்றுக் கொள்கிறது.
உதாரணமாக, காய்ச்சலுக்கு தரப்படும், 'பாரசிட்டமால்' மாத்திரையில், அதன் மூலக்கூறு, 500 மி.கி., இருக்க வேண்டுமானால், ஜெனரிக் மருந்தில், 400 -- 450 மி.கி., ஆக இருக்கும்.
மருந்தின் அளவு குறைவாக இருப்பதற்காக, அந்த நிறுவனத்தின் மீது எந்த நடவடிக்கையையும் அரசு எடுப்பதில்லை. விலை குறைவான மருந்து, இதய நோய், நீரிழிவு நோய், சிறுநீரக நோய், வலிப்பு நோய், மூளை நோய் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்பட்டால், அவை, பயனாளியின் உயிரை காக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
நம் நாட்டில் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நிறைய தரக் கட்டுப்பாடுகள் உள்ளன; பரிசோதனை முறைகளும் உள்ளன. ஆனால், எல்லாமே ஏட்டளவில் தான் உள்ளன.
மருந்தின் தரத்தை கண்காணிக்கவும், போலி மருந்துகளை கட்டுப்படுத்தவும், போதிய ஆய்வுக் கூட வசதிகளோ, மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளோ, நம் நாட்டில் இல்லை என்பது தான் உண்மை.

இங்கு, 50 முதல், 80 சதவீதம் வரை, ஜெனரிக் மருந்துகள் விற்கப்படுகின்றன என கூறப்படுகிறது. ஆனால், எல்லா மருந்துகளும் தரக் கட்டுப்பாட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை.
நாட்டில் தயாரிக்கப்படும் மருந்துகளில், 0.01 சதவீதத்துக்கும் குறைவாகவே, தர கட்டுப்பாட்டுக்கு உட்படுகின்றன; இதை, அரசே ஒப்புக் கொள்கிறது.
சமீபத்தில் நடந்த ஓர் ஆய்வில், அரசு வினியோகிக்கும், ஜெனரிக் மருந்துகளில், 10 சதவீதம் வரை, தரம் குறைந்தவை என்றும், ராணுவத்தினருக்கு வினியோகம் செய்யப்பட்ட மருந்துகளில், 32 சதவீதம் வரை, தரம் இல்லை என்றும், புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
ஜெனரிக் மருந்துகளின் தரத்துக்கு அரசே உத்தரவாதம் தர முடியாது எனும் போது, மருத்துவர்கள் அவற்றை தான் பரிந்துரை செய்ய வேண்டும் என சொல்வது, எந்த விதத்தில் நியாயம் என, தெரியவில்லை!
அடுத்து, 'மருந்துகளின் தரத்தை சோதிக்க மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் இருக்கின்றனரே...' என, வாதிடலாம். அவர்கள், மருந்துக்கடைகளில் திடீர் சோதனைகளில் ஈடுபடுவது உண்மை தான். ஆனால், நம் நாட்டில் மொத்தமே, 1,600 மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தான் உள்ளனர்.
அவர்களால் எல்லா மருந்துகளையும் ஆய்வு செய்ய முடியாது. அந்த அதிகாரிகள் சந்தேகப்படும், மிகச் சில மருந்துகளை மட்டுமே ஆய்வுக்கு அனுப்புவர்.
நம் நாட்டில், விலை உயர்ந்த பிராண்டட் மருந்துகளை மருத்துவர்கள் எழுதுவதற்கு, அந்த நிறுவனங்களின், 'தனிப்பட்ட கவனிப்பு' முக்கிய காரணமாக பேசப்படுகிறது. ஒரு பக்கம், அது உண்மை தான் என்றாலும், மனித நேயம் மிக்க மருத்துவர்களும் இருக்க தான் செய்கின்றனர். அவர்கள், உயிர் காக்கும் மருந்துகளை எழுதும் போது, பிராண்டட் மருந்துகளை தானே எழுதுகின்றனர்!
'அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் ஜெனரிக் மருந்துகளை தானே, மருத்துவர்கள் எழுதுகின்றனர்...' என, கேட்கலாம். அங்கெல்லாம், 'பயோ ஈக்விவேலென்ஸ்' எனும், மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆய்வு முறை நடைமுறையில் உள்ளது.
எல்லா மருந்துகளும் இந்த பரிசோதனைக்கு உட்பட்ட பிறகே சந்தைக்கு வருகின்றன. இவற்றின் தர கட்டுப்பாட்டின் முடிவுகள், இணையத்தில் வெளியிடப்படுகின்றன.
எனவே தான், அந்நாட்டு மருத்துவர்கள், ஜெனரிக் மருந்துகளை தைரியமாக எழுதுகின்றனர். இம்மாதிரியான நடைமுறை, நம் நாட்டிலும் கடைபிடிக்கப்பட வேண்டும்.
இந்நிலை ஏற்பட்டால், தரமான மருந்தை தான் எழுதுகிறோம் என, மருத்துவர்களுக்கும், பாதுகாப்பான மருந்தை தான் பயன்படுத்துகிறோம் என, மக்களுக்கும், ஜெனரிக் மருந்துகளின் மீது நம்பிக்கை பிறக்கும்.
ஜெனரிக் மருந்துகளின் பெயர்களை எழுத, மருத்துவர்கள் தயங்குவதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. ஜெனரிக் பெயர்களை எழுதும் போது, மருந்துக் கடையில் அந்த பெயருள்ள எந்த மருந்தையும், நோயாளிக்கு, மருந்துக்கடை ஊழியர்கள் கொடுத்து விட வாய்ப்புள்ளது.
இதுவரை, மருந்தை எழுத வைப்பதற்கு, 'அன்பளிப்புகள்' மூலம் மருத்துவர்களை, 'கவனித்த' மருந்து நிறுவனங்கள், இனி மேல், மருந்து கடைக்காரரை கவனிக்க துவங்கும்.
ஆக, பயனாளிக்கு மலிவு விலையில் மருந்து கிடைப்பதற்காக, ஜெனரிக் மருந்தை, மருத்துவரே எழுதினாலும், பயனாளிக்கு கிடைப்பது மலிவு விலை மருந்து தான் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
காரணம், 'ஜெனரிக் பெயரில், மருத்துவர் எழுதிய குறிப்பிட்ட மருந்து இல்லை; அதே வகையான மருந்து தான் இது' என, எந்த மருந்தையும், மருந்துக் கடைக்காரர் தர வாய்ப்புள்ளது. இப்போது, பயனாளிக்கு எந்த மருந்தை தருவது என தீர்மானிப்பது, மருந்து கடைக்காரரே தவிர, மருத்துவர் இல்லை!
நம் நாட்டில், பெரும்பாலான மருத்துவர்கள், பிராண்டட் பெயரிலேயே மருந்துகளை எழுதி பழகி விட்டனர். அவர்கள் உடனே, தங்கள் பழக்கத்தை மாற்றி கொள்வது கடினம்.
எனவே, மருத்துவர்களை, 'ஜெனரிக் பெயரில் தான் மருந்துகளை எழுத வேண்டும்' என, சட்டம் போட்டு, கண்டிப்பு காட்டுவதற்கு பதில், 'காப்புரிமை பெறப்பட்ட மருந்துகள் தவிர, மற்ற மருந்துகளை, ஜெனரிக் பெயரில் தான், இனி மேல் மருந்து நிறுவனங்கள் தயாரிக்க வேண்டும்; பிராண்டட் பெயரில் தயாரிக்க கூடாது' என, சட்டம் போட்டால், பிரச்னை எளிதில் முடிந்து விடும்.
நாட்டில், 350 அத்தியாவசிய மருந்துகளின் விலையை கட்டுப்படுத்தியது போல, ஜெனரிக் மருந்துகளின் விலையையும், ஒரே தரத்திலும், ஒரே விலையிலும் கொண்டு வர, சட்ட, திட்டங்களை கடுமையாக்க வேண்டும்.
நோயாளிகளுக்கு மருத்துவர்கள், மருந்து எழுதும் போது, மலிவு விலையில் உள்ள மருந்தின், ஜெனரிக் பெயரை எழுதலாம். அதே நேரத்தில், தரம் காக்கும் மருந்து நிறுவனத்தின் பெயரையும் சேர்த்து எழுதலாம்.
சாதாரண நோய்களுக்கான மருந்துகளில், மலிவு விலைக்கு நோயாளிகள் முன்னுரிமை தரலாம். ஆனால், உயிர் காக்கும் மருந்துகளில், விலையை பார்க்காமல், தரத்தை பார்த்து பயன்படுத்தினால் தான், நோயாளிகளின் உயிருக்கு உத்தரவாதம் கிடைக்கும். - எழுத்தாளர் --
டாக்டர் கு.கணேசன் இ - மெயில்: gganesan95@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
21-மே-201717:01:15 IST Report Abuse
K.n. Dhasarathan மருத்துவர் ஐயா சொன்னது 100ல் ஒரு வார்த்தை.ஜெனிரிக் மருந்துகளின் விலை, தரம் இரண்டும் கட்டுப்பாட்டுடன் வர வேண்டும்.சாதாரண நோய், உயிர் கொல்லி நோய், அதைப்போல் ஜெனிரிக் மருந்து, தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் இரண்டையும் மருத்துவர் எழுத வேண்டும்,மருந்து கடைக்காரருக்கும் சரியான மருந்து தர பொறுப்பு உள்ளது, மாற்றி கொடுத்தால் கடுமையான தண்டனை முறை வேண்டும். எதையும் அரைகுறையாக விடாமல் முழுவதுமாக செய்ய அரசுக்கும் உயர் அதிகாரியாக இருக்கும் மருத்துவர்களுக்கும் பொறுப்பு உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X