என் அம்மா...என் தோழி...| Dinamalar

என் அம்மா...என் தோழி...

Added : மே 21, 2017
என் அம்மா...என் தோழி...

பாலியல் துன்புறுத்தல் புகார்களுக்கு எதிராக தமிழ் சினிமா உலகில் முதல் போர்க்குரலை எழுப்பியது மட்டுமின்றி அதற்காக அமைப்பையும் தனி ஆளாக துவக்கி பிரபலங்களின் ஆதரவை பெற்றவர் வரலட்சுமி சரத்குமார்.தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம் என பல்மொழி புலமை பெற்றவர். சிறந்த டான்ஸரும் கூட. 'போடா போடி' மூலம் தமிழ் சினிமா உலகில் 'ஹிட்' கொடுத்த கையுடன் தமிழில் தாரைதப்பட்டை, மதகஜ ராஜாவை தொடர்ந்து நிபுணன், கன்னடாவில் மானிக்யா, மலையாளத்தில் தற்போது மம்முட்டியுடன் பெயரிடப்படாத சினிமாக்களில் நடித்து வருபவர், ''தன்னுடைய இந்த வளர்ச்சி அம்மா சாயா இல்லாமல் சாத்தியமில்லை,'' என்கிறார். அன்னையர் தினத்திற்காக தினமலர் வாசகர்களுக்காக அவர் மனம் திறந்ததாவது....தைரியமான பெண்ணாக இன்று வளர்ந்திருக்கிறேனா, அதற்கு அம்மா தான் காரணம். அன்பு காட்டுவதில் தாயாக, அறிவுரைகள் வழங்குவதில் தந்தையாக, துன்பங்களை பகிர்வதில் தோழியாக, நெருக்கடி நேரங்களில் ஆலோசகராக, சினிமாத்துறையில் மேலாளராக, மொத்தத்தில் எனக்கு வழிகாட்டியாக அம்மா இருப்பதால் தான் என்னால் இந்தளவுக்கு சாதிக்க முடிந்தது.ஒன்றும் தெரியாமல் இருந்த என்னை, இந்தளவுக்கு வளர்த்ததில் அவரது பங்கு அலாதி. எந்தவொரு விஷயத்தையும் அவரிடம் நான் மறைத்தது இல்லை. அந்தளவு எல்லா விஷயங்களையும் நான் கூறுவதை கேட்டு அரவணைத்து செல்வதில் அவருக்கு ஈடு யாருமில்லை.எந்தவொரு முடிவை எடுக்கும் அதிகாரத்தையும் அவர் வழங்கியிருக்கிறார். எந்த முடிவையும் தைரியமாக சரியானதாக நான் எடுப்பேன் என்பது அவருக்கு தெரியும். அதுவும் அவரிடமிருந்து கற்றது தான். நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவிற்கும் ஆதரவு தந்து மற்றவர்களிடம் எடுத்து கூறி விடுவார்.'போடா போடி' பார்த்து நடிப்பை ரசித்தவர், 'தாரை தப்பட்டை' பார்த்து கண் கலங்கி உற்சாகமூட்டினார். அம்மா, தங்கையுடன் இருந்தால் பொழுது போவது தெரியாது. கால்ஷீட் ஒதுக்குவது, பயண திட்டங்களை வகுப்பது, தேவையானவற்றை எடுத்து வைப்பது என ஒவ்வொன்றாக பார்த்து செய்வார். அவருடன் செலவிட்ட ஒவ்வொரு நாளையும் என்னால் மறக்க இயலாது. சுருக்கமாக கூறினால் எனக்கு எல்லாமே அம்மா தான், என்றார் நெகிழ்ச்சியாக!

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X