பூமியில் வாழும் உயிரினங்களின் கூட்டுத் தொகுப்பே பல்லுயிரினப் பரவல் எனப்படும்.இவ்வுலகத்தில் ஏறத்தாழ 87லட்சம் உயினங்கள் உள்ளதாக விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர். இவைகளுள் பெயரிடப்படாத உயிரினங்கள் ஏராளம். பல்லுயிரின தொகுப்பில் முதுகெலும்புள்ள விலங்குகள், தாவர இனங்கள், பூச்சியினங்கள், பூஞ்சைகள் மற்றும் கண்ணுக்கு புலப்படாத நுண்ணுயிர்கள் அடங்கும்.
உயிரினங்கள் அனைத்தும் ஒன்றுக் கொன்று நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பில் உள்ளன. ஒரு உயினத்தின் அழிவு மற்றொரு உயினத்தையும் சம பங்கு பாதிக்கும் என்பது நிதர்சனம். சமீப காலமாக உயினங்கள் மிகப்பெரிய அழிவை சந்தித்து வருகின்றன. அதற்கு முழுமுதற் காரணம் மனித இனம்தான். இவ்வுலகில் கடைசியாக தோன்றிய இனம் மனித இனம், ஆனால் மனிதன் தோன்றிய பிறகுதான் மற்ற உயிரினங்களின் அழிவு பன்
மடங்கு அதிகரித்துள்ளது.
நமக்கும் என்ன நன்மை
காற்றின் துாய்மை, நீரின் தரம், நோய்க் கட்டுப்பாடு, மகரந்தச் சேர்க்கை, பயிரினங்களின் நோய்க்கட்டுப்பாடு, மண் அரிப்பைத் தடுத்தல் போன்றவைகளுக்கும், மனித குலத்திற்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் போன்ற சேவைகள் அனைத்திற்கும் நாம் மற்ற உயிரினங்களையே ஆதாரமாக கொண்டுள்ளோம். நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் சுமார் 40 சதவிகிதம் மழைக்காடுகளில் இருந்து நமக்கு கிடைக்கிறது.
மேலும் நாம் தொழிற்சாலைகள், குளிர்சாதன பெட்டி, வாகனங்கள் போன்றவைகள் மூலம் வெளியேற்றும் கார்பனை மரங்களே சேமித்துவைக்கின்றன. நாம் இன்று பயிரிடுகின்ற நெல், வாழை, கரும்பு, காய்கறிகள் போன்ற பயிர்களின் மூல ஆதாரம் (மரபணு)காட்டில் உள்ள செடிகளில் இருந்து எடுக்கப்பட்டவை ஆகும்.
மேலும் நாம் வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடு, கோழிகள் போன்ற விலங்குகளின் ஆதாரமும்
காடுகள்தான். இதன் மூலம் நாம் பால், முட்டை மற்றும் மாமிசம் பெறுகிறோம், மேலும் விலங்குகளை விவசாயத் தொழிலுக்கு பயன்படுத்துகிறோம்.
சந்தித்து வரும் இன்னல்கள்
பெருமளவில் காடு அழிப்பு பல்லுயிரினங்களை வெகுவாக பாதிக்கின்றன. இவ்வுலகில் சுமார் 40 சதவிகித காடுகள் அழிக்கப்பட்டு அவற்றை பயிரிடவும் மற்ற பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி வருகிறோம். நமது மேற்குத் தொடர்ச்சி மலையிலேயே பெருமளவு காடுகள் அழிக்கப்பட்டு தேயிலை, காபி தோட்டங்களாக மாற்றப்பட்டுள்ளது, இத்தோட்டங்களை சூழலியலாளர்கள் பசுமை பாலைவனம் என்றழைக்கின்றனர். உயிரினங்கள் மற்றும் இயற்கை வளங்களை மனிதர்கள் அபரிமிதமாக பயன்படுத்துகின்றனர்.
உதாரணத்திற்கு கடலில் பிடிக்கப்படும் மீன், பொருளாதார நோக்கத்திற்காக விசைப்படகுகளை பயன்படுத்தி அதிக அளவில் மீன்களை பிடித்து வியாபாரம் செய்யப்படுகிறது, இது ஒரு குறிப்பிட்ட காலம் கழித்து குறிப்பிட்ட வகை மீன்களின் அழிவிற்கு வழி வகுக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் பிராஞ்சேரி மற்றும் திருக்குறுங்குடி குளங்களில் அமலைக் கிழங்கு என்ற ஒரு வகை மருந்து தாவரம் இயற்கையாகவே விளைகிறது. பொருளாதார நோக்கில் மக்கள் அவற்றை வேகமாக சேகரித்து விற்பனை செய்கின்றனர். ஒரு காலத்தில் அமலைக் கிழங்கு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களிலும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இயற்கை வளங்களை மாசுபடுத்துவது உயிரின அழிவிற்கு வழிவகுக்கிறது. நீர்நிலைகளில் கொட்டப்படும் குப்பைகள் மற்றும் கலக்கப்படும் சாக்கடைகளால் அந்நீர்நிலைகளில் உள்ள மீன்கள், ஆமைகள், தவளைகள், பறவைகள், தாவரங்கள் போன்றவற்றை அழிவு பாதைக்கு கொண்டு செல்கிறது,
விளை நிலங்களில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளால் தீமை செய்யும் பூச்சிகளை தவிர்த்து தேனீக்கள் போன்ற ஏராளமான நன்மை செய்யும் பூச்சிகளையும் அதை நம்பி வாழும் ஓணான் போன்ற சிறு விலங்கினங்களையும் பாதிப்பதோடு மண்ணில் இருக்கும் நுண்ணுயிரினங்களையும் அழித்து விடுகிறது.
வேற்றுப்புவி பிரதேசஉயிரினங்கள் பல்லுயிரினங்களுக்கு அடுத்த பெரும் ஆபத்தாக நிற்பவை
வேற்றுப்புவி பிரதேசங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட தாவர மற்றும் விலங்கினங்கள். வெளிநாடுகளில்இருந்து செல்லப்பிராணிகளாக கொண்டுவரப்பட்ட ஆமையினம் தற்போது நம்நாட்டு ஆமையினங்களின் வாழ்விடங்களை ஆக்கிரமித்து அவைகளை அழித்துவருகிறது. மேலும் வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட அழகு தாவரமான உண்ணிச்செடி நம் காடுகள் முழுவதும் ஆக்கிரமித்து நமது இயல்தாவரங்களின் வளர்ச்சியை பெரிதும் பாதிக்கிறது.
புவி வெப்பமயமாதல்
புவி வெப்பமயமாதலால் பருவச் சூழல்கள் மாறி
உயிரினங்களுக்கு பெரிய ஆபத்தை விளைவிக்கின்றன. உலக நாடுகள் 1992ல் ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற பல்லுயிர் பரவல் மாநாட்டில் ஒன்று கூடி, பல்லு
யிரினங்களை பாதுகாக்கும்
ஒப்பந்தத்தில் கையெழுத்
திட்டன. இதன் தொடர்ச்சியாக நம் நாட்டில் பல்லுயிர் பரவல் சட்டம் 2002 ல் இயற்றப்பட்டது.
இச்சட்டம் குறித்த விதிமுறைகளை 2004ம் ஆண்டு இந்திய அரசு அறிவித்துள்ளது. பல்லுயிர் பரவலை பாதுகாத்தல், அளவோடு பயன்படுத்துதல், செழுமை மற்றும் மரபின ஆதாரங்கள் மூலம் கிடைக்கும் பயன்களை சமபங்கீடு செய்தல் போன்றவைகளே இச்
சட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பும் தங்கள் எல்லைக்குள் பல்லுயிர்ப்பாதுகாப்பு, வாழ்விடங்களை பராமரித்தல், நுண்ணுயிர்களை பாதுகாத்தல் மற்றும்
பல்லுயிர்ப்பரவல் நிர்வாகக் குழுவினை அமைத்திடவேண்டும். அதற்கு தேவையான நிதியினை தேசிய பல்லுயிர் பரவல் ஆணையம் வழங்குகிறது. இந்த பல்லுயிர் நிர்வாக குழுக்களில் தலைவர் உட்பட ஏழு உறுப்
பினர்கள் இருப்பார்கள்.
அப்பகுதியில் உள்ள பாரம்பரிய மருத்துவர்கள் இக்
குழுவில் இடம்பெறுதல் வேண்டும். பயிரிடப்படும் பயிர் வகைகள் மற்றும் முறைகள், நாட்டு ரக கால்
நடைகள், வளர்ப்புக்காக பயன்படுத்தப்படும் கால்
நடைகள் மற்றும் அப்பகுதி யில் உள்ள பாரம்
பரிய மருத்துவர்கள் தயாரிக்கின்ற மருந்து பொருட்கள் போன்றவற்றை 'மக்கள்
பல்லுயிர் பதிவேட்டில்' பதிவு செய்து ஆவணப்படுத்தல் வேண்டும். பின்பு பாரம்பரிய மற்றும் மரபு சார்ந்த உயிரினங்களை பாதுகாத்திட இச்சட்டம் வழிவகை செய்கிறது.
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் நல்லுார் என்ற
கிராமத்தில் உள்ள புளியமர
தோட்டத்தை பல்லுயிர் பரவல் நிர்வாக குழு மற்றும் கர்நாடகா மாநில பல்லுயிர் பரவல்
வாரியத்தின் பரிந்துரையின் படி
பல்லுயிர் பாரம்பரிய இடமாக தேசிய பல்லுயிர் பரவல் ஆணையம் அறிவித்துள்ளது.
கேரளாவில் சுமார் 90 சதவிகித
உள்ளாட்சி அமைப்புகளில்
பல்லுயிர் பரவல் நிர்வாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தெலுங்கானா மாநிலத்தில் பெருமளவு உள்ளாட்சிகளில்
பல்லுயிர் நிர்வாக குழுக்கள்
உருவாக்கப்பட்டு மக்கள் பல்லுயிர் பரவல் பதிவேடு தயாரிக்கப்
பட்டுள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் பல்லுயிர் நிர்வாக குழுக்கள் ஒன்று கூட அமைக்கப்படவில்லை. பல்லுயிரினங்களை பாதுகாத்திட உள்ளாட்சிகளில்
பல்லுயிர் நிர்வாக குழுக்கள் அடிப்படையானது, இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் உள்ளாட்சிகளில் பல்லுயிர் நிர்வாக குழுக்களை அமைக்க வேண்டும்.
நாம் இன்று அனுபவித்து வரும் இயற்கை வளங்கள் அனைத்தும் நமது முன்னோர்கள் நமக்கு
பாதுகாத்து அளித்தவை. அதை நமக்கு பின்னர் வரும் தலைமுறைக்கு பாதுகாப்பாக அளிப்பது நமது கடமை. இதனை மனதில் வைத்து பொது மக்கள் இயற்கை வளங்களையும் பல்லுயிரினங்களையும் பாதுகாத்திட வேண்டும்.
மு. மதிவாணன்
ஒருங்கிணைப்பாளர், அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம், மணிமுத்தாறு
94880 63750