சூழல் வளம் பெருக்க சூளுரைப்போம்| Dinamalar

சூழல் வளம் பெருக்க சூளுரைப்போம்

Added : மே 23, 2017
சூழல் வளம் பெருக்க சூளுரைப்போம்

உலகிலேயே அதிக இயற்கை உயிர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
பல்லுயிரினம் அல்லது பல்லுயிர் பரவல் என்பது பல உயிரினங்கள் தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஓரிடத்தில் அதிகமாக இருந்தால் அந்த இடத்தை பல்லுயிரினம் அல்லது உயிர் பரவல் அதிகம் கொண்ட இடம் என்று கூறலாம்.

பல்லுயிர் பெருக்கப்பகுதி என்பது, அதிக அளவிலான உயிர்பெருக்கம், அவ்விடத்திற்கே உரிய இயல்பான உயிரினங்கள் மற்றும் அழியும் தருவாயில் உள்ள உயிரினங்கள் வாழும் பகுதியை குறிக்கும்.பல்லுயிர் பரவல் அதிகமழையும், சூடான தட்ப வெப்பமும் கொண்ட பூமத்திய ரேகைப் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிகளிலேயே காணப்படுகிறது. அந்த காட்டுப்பகுதிகளை மழைக்காடுகள் என்றும் அழைக்கலாம். இந்த மழைக்காடுகள் ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, மத்திய மற்றும் தென் அமெரிக்கப் பகுதிகளில் பரவியுள்ளது.

மழைக்காடு : மழைக்காடுதான் பல்லுயிரினத்தில் மிகச்சிறந்தது. இப் பூமி யின் பரப்பளவில் இரண்டு பங்குக்கும் குறைவாகவே மழைக்காடுகள் இருந்தாலும் இவ்வுலகின் ஐம்பது சதவீதத்திற்கும் மேற்பட்ட தாவரங்களையும் விலங்குகளையும் இந்த மழைக்காடுகள் தன்னகத்தே கொண்டுள்ளது. உலகில் வேறெங்கும் வசிக்காத உயிரினங்கள் பலவற்றை இம்
மழைக்காடுகளில் காணலாம். இந்தியாவில் மழைக்காடுகள் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள காடுகளில் காணப்படுகிறது.

ஏன் உயிர் பரவல் அதிகமாக மழைக்காடுகளில் உள்ளது? : பூமத்திய ரேகைக்கு அருகாமை யில் மழைக்காடுகள் அமைந்துஉள்ளது. இங்குள்ள தாவரங்கள் அதிக சூரிய ஒளியைப் பெறுகின்றன. இவை ஒளிச் சேர்க்கையின் மூலம் அவ்வொளியை சக்தியாக மாற்றுகின்றன. தாவரங்களில் சேமிக்கப்பட்ட அபரிமிதமான இச்சக்தியே மழைக்காட்டிலுள்ள விலங்குகளுக்கு உணவாக அமைகிறது. அதிக உணவு இருப்பதால் அதிக விலங்குகளும் மழைக்காடுகளில் வாழ்கின்றன. இப்புவியின் உயிர்ச்சூழ்நிலைக்கு மழைக்காடுகளின் சேவை மிகவும் அத்தியாவசியமானது. ஏனெனில் மழைக்காடுகள் பலவிதமான தாவரங்களுக்கும் விலங்கு களுக்கும் உறைவிடமாகிறது. உலகின் தட்ப வெப்பநிலையை 'நிலை' நிறுத்துகிறது. மழைக்காடுகள் வெள்ளம், வறட்சி மற்றும் மண்ணரிப்பிலிருந்து இந்த பூமியை பாதுகாக்கிறது. பலவித மூலிகைகள் மற்றும் உணவிற்கு மழைக்காடுகளே மூலாதாரமாக இருக்கிறது.

வன உயிரின பரவல் : உலகின் 2 சதவீத நிலப்பரப்பே இந்தியாவில் உள்ளது. 8 சதவீத வன உயிரினங்கள் இங்கு காணப்படுகிறது. உலகிலுள்ள 12 மிகப் பெரிய பல்லுயிர் பரவல் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக விளங்குகிறது. இவ்வாறு பலவகையான தாவரங்களும், விலங்குகளும் காணப்படுவதற்கு, பலதரப்பட்ட சீதோஷ்ணநிலை மற்றும் புவியமைப்பும் காரணங்களாகும்.உலகில் உள்ள அதிக பல்லுயிர் பரவல் பகுதிகளில், இமயமலை கிழக்குப் பகுதி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை உள்ளன.மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மேற்குத் தொடர்ச்சி மலை 1500 கி.மீ., நீளத்தில் அரபிக் கடற்கரையை ஒட்டி 6 மாநிலங்களில் உள்ள மலைப் பகுதி. இம்மலைப்பகுதி இந்தியாவில் 5 சதவீத நிலப்பகுதியை கொண்டுள்ளது. இங்கு 490 மர வகைகள் உள்ளன. இதில் 308 மர வகைகள் இம்மலைப்பகுதியில் மட்டுமே காணக்கூடியது. இங்கு 75 பேரினத்தை சார்ந்த 245 தாவரவகைகள் (ஆர்கிடுகள்) காணப்படுகின்றன. மேலும் 10 பேரினத்தில் உள்ள 112 சிற்றினங்களும், 1,500க்கும் மேற்பட்ட இருவித்திலைத் தாவரங்களும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டுமே காணக்கூடியவை. மேலும் 12 வகையான பாலுாட்டிகள், 13 வகையான பறவைகள், 89 வகையானஊர்வன, 87 வகையான இருவாழ்விகள் மற்றும் 104 வகையான மீன்கள் இங்கு மட்டுமே வாழ உரித்தானவையாகும்.இம்மலைப் பகுதியிலுள்ள தாவரங்கள், விலங்கினங்கள் அழிவுக்கு உள்ளாகி வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. சுமார் 235 சிறிய வகை பூக்கும் தாவரங்கள் அழியும் தருவாயில் உள்ளன. மேலும் சிங்கவால் குரங்கு, நீலகிரி லஞ்கூர், நீலகிரி வரையாடு, பறக்கும் அணில், மலபார் கிரே ஹார்ன்பில் போன்றவை இப்
பகுதியில் மட்டுமே உள்ள அரிய விலங்கினங்களாகும்.இந்த மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் (வெஸ்டர்ன் காட்ஸ்) தற்போது 'யுனெஸ்கோ' வின் உலகப் பாரம்பரிய பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இம்மலைத்தொடர் அரபிக்கடலிருந்து வரும் குளிர்காற்றை தடுத்து, மழைப் பொழிவை தருகிறது. இதன் மூலம் தமிழகத்தின் 40 சதவீத நீர்த்தேவை நிறைவு செய்யப்படுகிறது. மேற்கு மலைத் தொடரே நம் தமிழ்நாட்டு மக்களின் வாழ்விற்கு முக்கிய ஆதாரமாக திகழ்கிறது.

கிழக்கு இமாலயப்பகுதி : கிழக்கு இமாலயப்பகுதியில் அதிக அளவில் மிகப் பழமையான தாவரங்கள் இருப்பதால் இப்பகுதி “சிற்றின உயிர்களின் தொட்டில்” என்றழைக்கப்படுகிறது. இப்பகுதியில் 60 சதவீத நிலவாழ் பாலுாட்டிகள், 60 சதவீததிற்கும் மேலான இந்திய பறவைகள் இவ்விடத்திற்கே உரிய பல்லுயிரினங்களாகும். 35 வகையான ஊர்வன, 68 வகையான இருவாழ்விகள் காணப்படுகின்றன.

அழிவின் காரணம் : இந்திய வன உயிர்கள்அழிவதற்கு, அவை வாழும் உறைவிடங்கள் அழிக்கப்படுவதே முதல் காரணம். உலகளவில் 89 சதவீத பறவைகள், 3 சதவீத பாலுாட்டிகள், 9 சதவீத
தாவரங்கள், அவற்றின் உறைவிடங்கள் அழிக்கப்பட்டதால் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறது.
விலங்குகள் வேட்டையாடப்படுகின்றன. இதுவே பறவைகள், பாலுாட்டிகள், தாவரங்கள் மற்றும் ஊர்வன ஆகியவைகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். சில விலங்குகளின் உறுப்புகள்
அல்லது மாமிசம் மருத்துவ தன்மை வாய்ந்தது என்ற மூட நம்பிக்கை சிற்றினங்கள் அழிய காரணமாகின்றன.அந்நிய தாவரங்களின்ஊடுருவலால் 350 பறவையினங்கள், 361 தாவர சிற்றினங்களும் பாதிப்பிற்கு உட்பட்டுஉள்ளது. 'யூக்கலிப்டஸ்' என்ற தைல மரங்களும், 'வேட்டில்' என்ற சீகை மரங்களும் அந்த இடத்திலேயே வளரும் உள்ளூர் தாவர வளர்ச்சியை தடைசெய்து நிலப்பரப்பை யும் ஆக்கிரமித்துக் கொள்கிறது. இதனால் வன விலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படுகிறது. அவை இருப்பிடம் விட்டு வேறு இடங்களுக்கு இடம் பெயர்கின்றன.

தற்போதைய நிலை : உலக இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பின் ஆய்வின்படி, உலகளவில் அழிந்து வரும் பறவைகளை பொறுத்தவரை இந்தியா 6ம் இடத்தில் உள்ளது. ஆசியாவில் மிக முக்கியமான 2 சிற்றினங்கள் 20ம் நுாற்றாண்டில் அழிந்துவிட்டன. அவை இளம் சிவப்பு கொண்ட வாத்து 1935லும், சீட்டா என்று அழைக்கப்படும் வேங்கைப்புலி 1949லும் இந்தியாவில்
கடைசியாக காணப்பட்டன.எனவே நம்மிடம் இருக்கும் இந்த பல்லுயிரினங்களை பாதுகாப்பது நமது கடமையாகும். உயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக உலக பல்லுயிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த பல்லுயிரினங்களை பாதுகாக்கும் ஒப்பந்தத்தில் 150 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.தமிழ்நாடு வனத்துறை மூலம் உருவாக்கப்பட்ட 9 வன உயிரின சரணாலயங்கள், இரு தேசிய பூங்காக்கள், மூன்று புலிகள் காப்பகங்கள் உள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் பல்லுயிரின பரவல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இதன்மூலம் நாம் பயனடைவது தான் முக்கிய குறிக்கோள் ஆகும்.பல்லுயிரினப் பரவல் பற்றி
மக்களுக்கு எடுத்துச் சொல்லி பாதுகாக்க வேண்டும். இந்த நோக்கில் பல்வேறு விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது அவசியம்.ஆசியாவின் அரிய உயிரியல் பொக்கிஷம் இந்தியா. இந்தியா வில் உயிரியல் வளங்களை பாதுகாப்போம். உயிரியல் வளத்தை பாதுகாத்து சூழல் சமநிலைலைப் பேணுவோம். உயிரியல் வளங்களுக்கு நன்மை செய்யா
விடினும் தீமை செய்யாமாலாவது இருப்போம்.

து.வெங்கடேஷ்
மாவட்ட வன அலுவலர்
திண்டுக்கல். 94425 27373

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X