உடன் பிறப்புகள் உடைத்த ஓட்டல் - ஒரு பைசா தராமல் மிரட்டல்!

Added : மே 24, 2017
Share
Advertisement
உடன் பிறப்புகள் உடைத்த ஓட்டல் - ஒரு பைசா தராமல் மிரட்டல்!

சுழலும் கயிற்றின் வேகம், காற்றிலே கலங்கலாய்த் தெரியும் அளவுக்கு, படுவேகமாய், 'ஸ்கிப்பிங்' அடித்துக் கொண்டிருந்தாள் மித்ரா; அருகில் நின்று, அதை எண்ணிக்கொண்டிருந்தாள் சித்ரா. முன்னுாறு முடித்த பின், மூச்சு வாங்கப் பேசினாள் மித்ரா.
''அக்கா... ரெண்டு மாசத்துல, ஏழு கிலோ குறைச்சிட்டேன்; இப்பல்லாம், 'செக்கு'ல ஆட்டுற எண்ணெய் தான், வீட்டுல, 'யூஸ்' பண்றோம்; ஏன்னா, எந்த, 'பிராண்ட்' எண்ணெயை வாங்குனாலும், அது ஒரிஜினலான்னு சந்தேகமா இருக்கே.''
''நீ எந்த மேட்டரோட ஆரம்பிக்கிறேன்னு தெரியுது; வணிகர் சங்க நிர்வாகியோட கடைகள்ல இருந்து, 127 எண்ணெய் டின்களை 'புட் சேப்டி'காரங்க பிடிச்சாங்களே; அதைத்தான சொல்ற... அவரோட கடைகள்ல இருந்து தான், சிட்டியில இருக்குற பல மளிகைக்கடைகளுக்கு, 'ரீபைண்ட் ஆயில்'ங்கிற பேருல, இந்த எண்ணெயை, 'சப்ளை' பண்ணிருக்காங்க,'' என்றாள் சித்ரா.
''இருதயமே இல்லாம, இப்பிடிப் பண்ணி இருக்காரே... அவருக்கு சிட்டிக்குள்ள அஞ்சு கடை இருக்காம். இதுல ரெண்டு கடையில மட்டும், இவ்ளோ எடுத்திருக்காங்க. மத்ததுல ரெய்டே போகலை. இப்ப என்னடான்னா, 'அது பயன் படுத்தக் கூடிய எண்ணெய் தான்'னு 'ரிசல்ட்' கொடுக்கச் சொல்லி, பயங்கர பிரஷராம்,'' என்றாள் மித்ரா.
''நம்மூர்லயே, 'கணபதி ஆயில்'ங்கிற, 'பிராண்ட்' பேர்ல, போலியா எண்ணெய் தயாரிச்ச மூணு பேரை, 'அரெஸ்ட்' பண்ணாங்களே; அதுல முக்கியமான, 'அக்யூஸ்ட்'டும், 'இருதயமே' இல்லாத அந்த வணிகரோட மச்சினனாம்,'' என்றாள் சித்ரா.
''இப்பல்லாம் யாரை நம்புறதுன்னே தெரியலைக்கா... ஊரைக் காக்குறதுக்கு, போலீசுக்கு உதவியா ஒரு படை வச்சிருக்காங்களே; அதுல இருக்குற எஸ்.ஐ., ஒருத்தரு பண்ற வேலையக் கேட்டா, மனசு கொதிக்குது,'' என்றாள் மித்ரா.
''அந்த படையச் சேர்ந்தவுங்க, போலீஸ் பிரண்ட்ஸ்ன்னு வலம் வர்றவுங்க பல பேரு, சமூகசேவைன்னு உள்ள வர்றாங்க; ஆனா, பண்றதெல்லாம் கட்டப்பஞ்சாயத்து, கலெக்ஷன் வேலைகதான்... இதனால, சமூக அக்கறையோட அதுல வேலை பாக்கிறவங்களுக்கும் கெட்ட பேரு வருது; நீ சொல்ற எஸ்.ஐ., என்ன பண்றாராம்?'' என்று கேட்டாள் சித்ரா.
''ஊருக்கு உதவலாம்னு இந்த வேலைக்கு வர்ற பொண்ணுங்ககிட்ட ரொம்ப மோசமா நடந்துக்கிறாராம்; சாப்பிட்டு, கையக் கழுவிட்டு, பொண்ணுங்களை திரும்பி நிக்கச் சொல்லிட்டு, அவுங்க யூனிபார்ம்ல துடைக்கிறாராம்,'' என்றாள் மித்ரா.
உடற்பயிற்சியை முடித்து விட்டு, இருவரும், 'நடராஜா' சர்வீஸ் ஆக, வண்டியை நோக்கி நடந்தனர். மித்ரா வண்டியை எடுக்க, பின்னால் உட்கார்ந்த சித்ரா, 'ஓட்டலுக்கு விடு' என்றாள். ஏதோ நினைவுக்கு வந்தவளாய் வேகமாய்ப் பேசினாள் மித்ரா...
''அக்கா... விவசாயிகளுக்கு ஆதரவா, எதிர்க்கட்சிகள், 'பந்த்' நடத்துன அன்னிக்கு, மறியல் பண்ணுன உடன் பிறப்புகளை, சரவணம்பட்டியில ஒரு கல்யாண மண்டபத்துல உட்கார வச்சிருக்காங்க. அதுல, 30 பேரு, மத்தியானம், 'சாப்பிட்டு வந்துர்றோம்'னு 'இன்ஸ்'கிட்டச் சொல்லிட்டு, 'மணியான' ஒரு ஓட்டல்ல போய் சாப்பிட்டு இருக்காங்க.''
''வழக்கமா, போலீஸ் தான சாப்பாடு வாங்கித்தருவாங்க?''
''ஆமா... அந்த, 'இன்ஸ்' ராசகுமாரனுக்கு, என்ன பஞ்சமோ தெரியலை; சரி போங்கன்னு அனுப்பி விட்டாரு. அங்க போய்ச் சாப்பிட்டவுங்க, கையக்கழுவுனதும், 'இன்னிக்கு 'பந்த்'ன்னு தெரியும்ல; எப்பிடி ஓட்டலைத் திறந்தீங்கன்னு, காசு தராம, தகராறு பண்ணி, டேபிள், கண்ணாடியெல்லாம் அடிச்சு நொறுக்கிட்டாங்க.''
''அடப்பாவமே... அவுங்க மேல, ஒரு ஆக்ஷனும் எடுக்கலையா?''
''எடுத்தா, 'நீ ஏன்யா அவுங்களை வெளிய விட்ட'ன்னு 'இன்ஸ்'சை பெரிய ஆபீசருங்க ஏத்துவாங்கள்ல... அதனால, வேற யாரோ நாலு பேரு மேல, ஓட்டலைத் தாக்குனதா கேசைப் போட்டு கணக்கை முடிச்சிட்டாரு,'' என்றாள் மித்ரா.
''அதே 'இன்சு'கிட்டத்தான், ஒரு கோடி ரூபா, பழைய நோட்டோட ரெண்டு பேரு பிடிபட்டாங்கள்ல; அவுங்களை அந்த கேசுல இருந்து காப்பாத்துறேன்னு சொல்லி, அவுங்களோட, 'ப்ராப்பர்டி' ஒண்ணை அமுக்கப் பாத்திருக்காரு. இது தெரிஞ்சு தான், மறுபடியும் மாவட்டத்தை விட்டே துாக்கி விட்ருக்காங்க,'' என்றாள் சித்ரா.
வண்டியை ஓட்டலில் நிறுத்தி விட்டு, இடம் பிடித்து, தண்ணீரைக் குடித்து தாகம் தணித்தனர். சர்வரிடம், 'ரெண்டு பில்டர் காபி' சொல்லி விட்டு, பேச்சைத் தொடர்ந்தனர்.
''உடன் பிறப்புகளைப் பத்திப்பேசவும், இன்னொரு மேட்டர் ஞாபகம் வந்துச்சுக்கா. கோயம்புத்துார்ல ரெண்டா இருந்த மாவட்டங்களை நாலாப் பிரிச்சு, திசைக்கு ஒரு, 'மாவட்டத்தை' போட்டும், இங்க சூரியன் உதிக்கிறது மாதிரித் தெரியலை; அதனால, மறுபடியும் ரெண்டு மாவட்டமா மாத்தப்போறாங்களாம்,'' என்றாள் மித்ரா.
''எப்பிடி பிரிக்கப்போறாங்களாம்?'' என்று கேட்டாள் சித்ரா.
''நுாறு வார்டுகளை மாநகர் மாவட்டமாக்கி, மத்த பகுதிகளை, புறநகர் மாவட்டமா அறிவிக்கலாம்னு யோசிச்சிட்டு இருக்காங்களாம். தனக்குத் தெரிஞ்ச, 'இன்டஸ்ட்ரியலிஸ்ட்'களை வச்சு, ஸ்டாலினுக்கு இந்த, 'ஐடியா'வைக் கொடுத்ததே, பொங்கலுார்க்காரர் தானாம்,'' என்றாள் மித்ரா.
''மறுபடியும், ஏதாவது ஒரு பதவிக்கு வரணும்னு காய் நகர்த்துறாரோ?'' என்றாள் சித்ரா.
''அவருக்கு என்னவோ, அதுல, 'இன்ட்ரஸ்ட்' இருக்குறதாத் தெரியலை; அவரோட மகனுக்கோ, மருமகனுக்கோ, பொறுப்பு வாங்க 'ட்ரை' பண்ணலாம்,'' என்றாள் மித்ரா.
''ஆனா, ஆளுங்கட்சியோட அலை, ஆதிக்கம் செலுத்துன தலை, ஓட்டுக்கு விலை எல்லாத்தையும் தாண்டி, எம்.எல்.ஏ.,வா ஜெயிச்ச கார்த்திக்கை, ஏன், 'மாவட்டமா' நியமிக்க மாட்டேங்கிறாங்கன்னு, சாதாரணத் தொண்டர்கள் கேக்குறாங்க,'' என்றாள் சித்ரா.
''உண்மை தான்க்கா... அவரு மேல, 'அவுங்க' தளபதிக்கு இன்னமும் நம்பிக்கை வரலை போலிருக்கு,'' என்றாள் மித்ரா.
காபி வந்தது; குடித்துக்கொண்டிருக்கும்போது, இவர்களைக் கடந்த ஒருவர், மித்ராவைப் பார்த்து, 'மேடம், நல்லா இருக்கீங்களா' என்று கேட்டு விட்டு நகர்ந்தார். சித்ரா கேட்டாள்...
''இவரை எங்கேயோ பார்த்தது மாதிரி இருக்கே மித்து... யாரு?''
''இவர் ஒரு, 'பேர்டு வாச்சர்'க்கா... பறவைகளைப் பத்தி, அத்துப்படியா தெரிஞ்சு வச்சிருப்பாரு. வேடபட்டி குளத்துல, துார் வார்றதுக்காக, அங்க இருந்த நாட்டுக்கருவேலத்தை எல்லாம் வெட்டுறதுல, இவரை மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் பயங்கர வருத்தம்.''
''நம்ம ஊருல தான் பறவைகளைப் பத்தி ஆராயுற, 'ஷேகான்' இருக்கே; அவுங்களை அழைச்சிட்டுப் போய், எந்தெந்த குளத்துக்கு பறவைகள் வருதுன்னு தெரிஞ்சிட்டு, அட்லீஸ்ட் அந்த குளங்கள்ல மட்டுமாவது, நாட்டுக் கருவேல மரங்களை கொஞ்சம் விட்டு வைக்கலாம்ல.''
''குளத்தைப் பத்திப் பேசவும், நம்ம கங்க நாராயணசமுத்திரம், சொட்டையாண்டி குட்டை ஞாபகம் வந்துச்சு; அந்த ரெண்டு குளத்துக் கரையிலயும் தார் ரோடு போட்ருக்காங்க; அதுல போனா, ரெண்டு பக்கமும் உவ்வே... வண்டியே போகாத அந்த கரையில ரோடு போட்ட காசுல, அங்க இருக்குற குடிசை மக்களுக்கு, ரெண்டு, 'டாய்லெட்' கட்டிருக்கலாம்ல,'' என்றாள் மித்ரா.
''நீ வேற மித்து... 'ஸ்வச் பாரத்' ஸ்கீம்ல, சிட்டிக்குள்ள போன வருஷம், வேகவேகமா ரெண்டாயிரம் 'டாய்லெட்' கட்டுனாங்களே. அதைக் கட்டுன காண்ட்ராக்டர்களுக்கு இன்னிக்கி வரைக்கும் துட்டே தராம, 'லோ லோ'ன்னு அலைய விடுறாங்களாம். கேட்டா 'பண்ட் இல்லை'ங்கிறாங்களாம்,'' என்றாள் சித்ரா.
''இதுக்கு எல்லாம், 'செட்டில்' பண்ணாமத்தான் உபரி பட்ஜெட் போட்டாங்களா?'' என்று கோபமாய்க் கேட்டாள் மித்ரா.
''கார்ப்பரேஷன் வண்டிகளுக்கு ஜி.பி.எஸ்., போட்டு, டீசல் அளவைக் குறைச்சாங்கள்ல... அதுக்கு எதிராசேனிட்டரி இன்ஸ்பெக்டர்க எல்லாம் போர்க்கொடி துாக்கிருக்காங்க. நேத்து, இதைப் பத்திப் பேசப் போனப்போ, கமிஷனர் இல்லை; டெபுடி மேடத்துக்கிட்ட போனதுக்கு, 'எதுவா இருந்தாலும் எழுதிக்கொண்டு வாங்க'ன்னு அனுப்பீட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.
''அக்கா... கவுண்டம்பாளையம் ஜீவா நகர்ல இருக்குற, 203 குடும்பங்களுக்கு, மாற்று வீடு கொடுக்கச் சொல்லி, 'ஸ்லம் போர்டு'க்கு கார்ப்பரேஷன் 'ரெகமண்ட்' பண்ணுனாங்களே; அதுக்கு வீடு ஒதுக்க முடியாதுன்னு, அங்க இருக்குற இன்ஜினியரு முரண்டு பிடிக்கிறாராம். குட்டி எம்.எல்.ஏ., ஒருத்தரு, அவரை மெரட்டுறது தான் காரணம்கிறாங்க,'' என்றாள் மித்ரா.
அடுத்த பேச்சை ஆரம்பிப்பதற்குள் பில் வந்தது; இடத்தைக் காலி செய்தனர் இருவரும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X