""ஒரே கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் தான். ஆனா, ஒவ்வொருவரும் ஒரு விதமாக இருக்காங்க,'' என்றபடி அக்னி நட்சத்திர வெயிலில், வியர்வை குளியலோடு உள்ளே நுழைந்தாள் சித்ரா.
அதை பார்த்த மித்ரா, ""முதலில் இந்த "ஜில்' மோர் குடிங்க,'' என்றவாறு, பெரிய டம்ளரை நீட்டினாள். அதைக்குடித்ததும், ஆசுவாசப்படுத்திய சித்ராவிடம்,
""எல்லா கட்சியிலேயும் கோஷ்டிப் பிரச்னை இருக்கே. அப்புறம் எப்படி ஒரே விதமாக இருக்கறது,'' என்று மித்ரா கேட்டாள்.
""கட்சியில், ஆட்சியில் இருக்கறது சகஜம் தான்; நான் சொல்றது உள்ளூர் விவகாரம்,'' என்றாள் சித்ரா.
""உள்ளூர் விவகாரமா. எதை சொல்ற?'' என்று, ஆச்சரியத்தோடு மித்ரா கேட்டாள்.
""சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிரா மறியல் நடந்தப்போ, அங்கு வந்த சூலூர் எம்.எல்.ஏ., போராட்டத்தில் உட்கார்ந்திட்டார். பல்லடம் எம்.எல்.ஏ.,வோ,
வேறு பாணியில் நடந்துகிட்டார்,'' என்றாள் சித்ரா.
""ஏன், அவரும் சிக்கலில் போய் மாட்டிக்கிட்டாரா,'' என்று கேட்டாள் மித்ரா.
""நாச்சிபாளையத்தில், வீடுகளுக்கு மின் இணைப்பு கேட்டு, மக்கள் மறியல் செஞ்சாங்க. அங்கிருந்த கட்சிக்காரங்க சிலர், தங்கள் தொகுதி எம்.எல்.ஏ., என்ற முறையில் அவர்கிட்ட தகவல் சொல்லி, வந்து பார்க்க சொல்லியிருக்காங்க. ஆனா அவரோ, நான் அங்கே வந்தா பிரச்னை வேற மாதிரி ஆயிடுமுன்னு சொல்லி, நழுவிட்டாராம்,'' என்றாள் சித்ரா.
""காரணம்பேட்டையில், ஓட்டல்களில் மது விற்பனை செஞ்சவங்க மேல, போலீஸ் நடவடிக்கை எடுத்து, கடுமையா எச்சரிச்சிருக்காங்க தெரியுமா,'' என்று மித்ரா அடுத்த விஷயத்துக்கு தாவினாள்.
""பரவாயில்லையே? நம்ம பேச்சுக்கு மதிப்பு கொடுத்து, சுறுசுறுப்பா களமிறங்கியிருக்காங்களே,'' என்று, சித்ரா பெருமிதத்தோடு சொன்னாள்.
""ஓட்டல்களில் மது விற்பனை நடந்ததே, அப்போது தான் இன்ஸ்பெக்டருக்கு தெரிஞ்சிருக்கு. மூணு ஓட்டல்களிலும் ரெகுலராக, மாமூல் உயர் அதிகாரிக்குப் போயிடுமாம். "இன்ஸ்பெக்டரை நான் பார்த்துக்கறேன்; எனக்கு மட்டும் "கட்டிங்' வந்தா போதும்' என்று அந்த அதிகாரியே தைரியம் சொல்லியிருக்கிறார்.
மாமூல் வசூலித்து, அதிகாரிக்கு கொடுத்து வந்த ஒரு ஊழியர், அதிகாரிக்கு தெரியாமல், "காசு'பார்த்தாராம். இதுவும், இன்ஸ்பெக்டர் ரெய்டுக்கு பிறகு தான் தெரிஞ்சிருக்கு. இதனால, பல்லடம் உட்கோட்டமே ரொம்ப பரபரப்பாயிடுச்சு,'' என்றாள் மித்ரா.
""எம்.எல்.ஏ.,வுக்கு "மவுசு' கூடிப்போனதால, மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர்கள் கூட "டம்மி'ஆகிட்டாங்க,'' என்று சூடு பறக்க, அரசியல் சங்கதியை ஆரம்பித்தாள் சித்ரா.
"அடடா, ஆளுங்கட்சி மேட்டர் போலிருக்கே,'' என்றாள் மித்ரா.
""பொதுவா, ஆளுங்கட்சியோட மாவட்ட செயலாளர் என்றாலே, அமைச்சருக்கு இணையான மரியாதை இருக்கும். எம்.ஜி.ஆர்., காலத்துல துவங்கிய இந்த பழக்கம், இப்ப தான் மாறியிருக்கு. மா.செ., கூட "டம்மி' ஆகிட்டாங்க. "அதிகாரமும், செல்வாக்கும், இப்ப எம்.எல்.ஏ.,க்கள் கிட்டதான் இருக்கு. சின்ன பிரச்னையா இருந்தாலும் முதல்வர் கிட்ட பேசற அளவுக்கு நிலைமை மாறிப்போச்சு; அட்டூழியம் அதிகமாகிடுச்சு'னு, அவங்களே புலம்பிட்டு இருக்காங்க,'' என்றாள் சித்ரா.
""மாவட்டத்துல நிர்வாகம் நடக்கற மாதிரியே தெரியலையே? '' என்றாள் மித்ரா.
""ஆமா, ரொம்ப கரெக்ட். உடுமலை, மடத்துக்குளத்தில் மட்டுமே, அனைத்து வளர்ச்சி பணிகளையும் அமைச்சர் நடத்துறாராம். இதனால், மற்ற தொகுதிகளில், ஆளுங்கட்சி வட்டாரத்தில் "செம' புகைச்சலாம்,'' என்றாள் சித்ரா.
""திருப்பூரில், மூணு நெம்பர் லாட்டரி, கஞ்சா, சட்ட விரோத மதுபான விற்பனை, போலீஸ் ஆசியோட அமோகமா நடக்குது,'' என்று, அடுத்ததாக காக்கிச்சட்டை தகவலுக்கு மித்ரா தாவினாள்.
""அப்பப்ப போலீசும் ரெய்டு பண்ணி, ஆட்களை பிடிக்கறாங்க. இருந்தும் குறையலைன்னா, அவுங்க என்ன பண்ணுவாங்க,'' என்று சித்ரா கேட்டாள்.
""அட, இதற்கு சப்போர்ட் பண்ணறதே, போலீசில் உள்ள சிலர்தானாம். இது பத்தி, ஸ்டேஷனுக்கு புகார் போனாலும், அதை கண்டுக்கறதில்லை. சமீபத்தில், விஜயாபுரத்தில் மூணு நம்பர் லாட்டரி விற்கப்படுவதாக, போலீஸ் கமிஷனரின் காதுக்கே சிலர் போட்டிருக்காங்க. அப்புறம் அந்த இடத்துக்கு போய், ரெண்டு பேரை பிடிச்சுட்டாங்க. ஆனா, முக்கியமானவங்க "எஸ்கேப்' ஆயிட்டாங்களாம்,'' என்று மித்ரா கூறினாள்.
""ஏன் இப்படி நடக்குது,'' என்று மித்ரா கேட்க, "" லாட்டரி, கஞ்சா பிசினஸ் பின்னணியில், சில கட்சி பிரமுகர்கள் இருக்காங்களாம். அவங்களுக்கு விசுவாசம் காட்ட, போலீசார் சிலர், இப்படி நடந்துக்கறாங்க,'' என்றாள் சித்ரா.
""போலீஸ் பத்தின வேற நியூஸ் இருக்கா,'' என்று மித்ரா கேட்டாள்.
""மாநகர போலீஸ் ஸ்டேஷன்களில் ரொம்ப நாளாக குப்பையை கொட்டிகிட்டு, கொடி கட்டி பறந்துகிட்டு இருக்கிறவுங்க "லிஸ்டை', கமிஷனர் அலுவலகம், "டிரான்ஸ் பருக்காக' தயார் செஞ்சுட்டு இருந்தாங்க. டி.சி.,க்கு இதில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லையாம். எப்படி மாத்தினாலும், இந்த ஏழு ஸ்டேஷன்
களுக்குள்ள தானே இருப்பாங்கன்னு, மேடம் நினைக்கிறதா பேசிக்கிறாங்க.
இதை கேட்ட, வைட்டமின் "ப' வில் நனையற போலீஸ்காரங்க சிலர், உற்சாகமா வலம் வர்றாங்களாம்,'' என்று சித்ரா கூறியதும், ""கூவத்தூரில் இருந்தப்ப, "சசி'கும்பலுக்கு ஆதரவா குரல் கொடுத்ததால, தொகுதிக்குள்ள, "குண'மான எம்.எல்.ஏ., கெட்ட பேர சம்பாதிச்சாரு. அதுக்குள்ள "ஓ.பி.எஸ்., பகல் கனவு காணக்கூடாது'னு பேட்டி கொடுத்து, "சத்தமா தட்ட' ஆரம்பிச்சு, மாட்டிக்கிட்டாரு'' , என்று, "விசுவாச' எம்.எல்.ஏ., பற்றி மித்ரா கூறினாள். அதன் பின், வண்டியை ஸ்டார்ட் செய்து, கிளம்பினார் சித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE