ஓட்டு போட்டாங்க நம்பி... ஓரமா ஒதுங்கிட்டாரு எம்.பி.,!

Added : மே 24, 2017
Share
Advertisement
ஓட்டு போட்டாங்க நம்பி... ஓரமா ஒதுங்கிட்டாரு எம்.பி.,!

சாய்பாபா கோவில் அருகிலுள்ள மாநகராட்சி புது பஸ் ஸ்டாண்ட்டில், ஊட்டி செல்லும் தோழியை வழி அனுப்புவதற்காக வந்திருந்தாள் மித்ரா; அங்கே சித்ராவும் வந்து சேர்ந்தாள்; இன்னும் தோழி வரவில்லை. இருவரும், பஸ் ஸ்டாண்டை நடந்தே வலம் வரத்துவங்கினர்.
''அக்கா! ஊட்டிக்கு எவ்ளோ அழகான பஸ் போகுது பாரு...பத்து நாளைக்கு இந்த ஸ்டிரைக் நீடிச்சா, அப்புறம் கவர்மென்ட் பஸ்சே வேண்டாம்னு மக்களே தெருவுல இறங்கி ஸ்டிரைக் பண்ண ஆரம்பிச்சிருவாங்க'' என்றாள் மித்ரா.
''கரெக்ட் மித்து...இப்பதான், முத முதலா, நல்ல பஸ்சுல அந்த ஜனங்க போறாங்க'' என்றாள் சித்ரா.
''டிக்கெட்டு தான், ரெண்டு மடங்கு ஜாஸ்தி'' என்றாள் மித்ரா.
''கவர்மென்ட் பஸ்சுல மட்டும் என்ன வாழுதாம்...நேத்தெல்லாம், சிட்டிக்குள்ள பல ரூட்கள்ல, நம்பரே இல்லாம கவர்மென்ட் டவுன்பஸ்களை இயக்குனாங்க. எல்லா வண்டிகள்லயும் 'ஸ்பெஷல் பஸ்'சுன்னு ஒரு ஸ்டிக்கரை ஒட்டிட்டு, நாலு மடங்கு அதிகமா கட்டணம் வாங்குனாங்களே'' என்றாள் சித்ரா.
''பஸ், ரூட்டுன்னதும் வேற ஒரு விஷயம், ஞாபகத்துக்கு வந்துச்சு; நம்ம ஊர்ல, மினி பஸ்களுக்கு புதுசா ரூட் வாங்கணும்னாக் கூட, கையெழுத்து போடுறதுக்கு, மாவட்ட ஆபீசர், பெருசா 'அமவுண்ட்' எதிர்பார்க்குறாராமே'' என்றாள் மித்ரா.
''மருதமலையில 'ரிட்டயர்டு' ஆன குருக்களுக்கு, ஓய்வு கொடுக்காம, பணி நீட்டிப்புக் கொடுக்கவே, பல லட்ச ரூபா வாங்கிருக்காரு, அறநிலையத்துறை ஆபீசரு; நீ சொல்றது, பெரிய வேலையாச்சே'' என்றாள் சித்ரா.
''ஓய்வு கொடுக்காம இருக்குறதுக்கு, துட்டு வாங்குன ஆபீசரே, இந்த மாசக்கடைசியில 'ரிட்டயர்டு' ஆகப் போறாரு தெரியுமா?'' என்றாள் மித்ரா.
''எனக்கென்னவோ, அவரு ஒழுங்கா 'ரிட்டயர்டு' ஆவார்னு தோணலை; கோவில் நகைகளை சரி பார்க்குற பொறுப்புகள்ல அவரு இருந்தப்போ, ஏதோ 'தப்பு' நடந்திருச்சாம்; அந்த விசாரணை இன்னும் முடிஞ்ச பாடில்லை; அநேகமா, அவரு 'ரிட்டயர்டு' ஆவுறதுக்குள்ள 'சஸ்பெண்ட்' ஆயிருவார்னு, டிபார்ட்மென்ட்ல பேசிக்கிறாங்க'' என்றாள் சித்ரா.
தோழி வருவதற்கு அரை மணி நேரமாகும் என்று அலைபேசியில் தகவல் வர, இருவரும் நடந்து கொண்டே வெளியில் வந்தனர். வண்டியை எடுத்துக்கொண்டு, கவுண்டம்பாளையம் திசையில் சென்றனர். டாஸ்மாக் குடோனிலிருந்து, லாரிகள் வெளியே வந்து கொண்டிருந்தன; அதைப் பார்த்த மித்ரா கேட்டாள்...
''அக்கா...டாஸ்மாக் கடைகளுக்கு எதிரா போராட்டம் தீவிரமாயிட்டே இருக்கு, கவனிச்சியா; முக்கியமான விஷயம் என்னன்னா, ஆளுங்கட்சிக்காரங்களே, காசைக்கொடுத்து கடைகளுக்கு எதிரா போராட்டம் நடத்த வைக்கிறாங்களாம்''
''இதென்னடி புதுக்கதையா இருக்கு!''
''உண்மைதான்க்கா...கணபதி ஏரியாவுல, பல கடைகளை மூடிட்டதால, ஒரு கடை 'பார்'ல 'இல்லீகல் சேல்ஸ்' பிச்சுக்கிட்டுப் போகுதாம்; புதுக்கடை வந்துட்டா, அதுக்கு ஆபத்து வந்துரும்னு, 'பார்' நடத்துற ஆளுங்கட்சிக்காரரே, சில பேருக்கு சரக்கை ஊத்தி விட்டு, போராட வச்சிருக்காரு''
''இதே மாதிரித்தான் மித்து...சவுரிபாளையத்துல, ஆளுங்கட்சி மீசைக்காரருக்குச் சொந்தமான இடத்துலயே கடை, 'பார்' ரெண்டும் இருக்கு. அந்த 'பார்'ல நடக்குற 'இல்லீகல் சேல்ஸ்'ல மட்டும், அந்த மீசை 'மாஜி'க்கு தினமும் ரெண்டாயிரம் ரூபா மாமூல் போகுதாம்; பக்கத்து வார்டுல, 'சாராயக்கடையே என் வார்டுல கிடையாது'ன்னு மீசைய முறுக்குற ஆளுங்கட்சி பேச்சாளருக்கு மாதாந்திர மாமூல் போறதா பேசிக்கிறாங்க'' என்றாள் சித்ரா.
''இப்பல்லாம், காலங்காத்தால ஆறரை மணிக்கே, டாஸ்மாக் கடையத் திறந்திர்றாங்க; ஆனா, எந்த போலீசும் கண்டுக்கிறதே இல்லை; யாராவது, மதுக்கடைக்கு எதிரா போராட்டம் நடத்த வர்றாங்கன்னா, உடனே தடியைத் துாக்கிட்டு, அடிக்க வந்துர்றாங்க; நல்ல கவர்மென்ட்டு...நல்ல போலீசு'' என்று கரித்துக்கொட்டினாள் மித்ரா.
ரோட்டோரம் இருந்த இளநீர்க்கடையில் வண்டியை ஓரம் கட்டினாள் மித்ரா. இருவரும் ஆளுக்கொரு இளநீரை வாங்கி, உறிஞ்சிக் கொண்டிருக்க, பக்கத்தில் இளநீர் குடித்துக் கொண்டிருந்த, ஆளுங்கட்சி கரை வேட்டிக்காரர்கள் இருவர், எம்.பி.,யை தாறுமாறாகத் திட்டிக் கொண்டிருந்தனர். நக்கலாய் சிரித்தபடி, குரலைத் தாழ்த்தியபடி கேட்டாள் சித்ரா...
''ஏன்டி மித்து...கோயம்புத்துார்ல இருந்து, இன்டஸ்ட்ரிக்காரங்களும், ரயில்வே 'ஆக்டிவிஸ்ட்'டுகளும், நம்ம ஊருக்கு புதுசா விமானத்தைக்கொண்டு வரணும்; விமான நிலையத்தை 'எக்ஸ்பேன்சன்' பண்ணனும்; புது ரயில்கள் வேணும்னு டில்லி வரைக்கும் போய் போராடிட்டு இருக்காங்க. நம்ம ஊரு மக்கள் எல்லாம் ஓட்டுப்போட்டு ஜெயிக்க வச்சாங்களே நம்பி...எங்க போனாரு அந்த எம்.பி.,?''
''எப்பிடியாவது 'மாவட்டமா' ஆகணும்னு, போயஸ் கார்டன்லயே கதியா கடந்தாரு நம்ம நாகராஜசோழன்; கதை ஆவலை...ஓரமா ஒதுங்கிட்டாரு. இப்போ 'மாவட்டமா' ஆனவரும், சென்னையிலேயே இருந்து, தன்னோட வேலைகளைத்தான் பாத்துட்டு இருக்காரு; கட்சி வேலையப் பாக்குறதே இல்லைன்னு கட்சிக்காரங்க புலம்பித் தீர்க்குறாங்க. இதுல மாவட்டம் எப்பிடி இவரைக் கேக்க முடியும்?''
''இவரைக் கேக்காட்டாலும் பரவாயில்லை; எந்தப் பொறுப்புலயுமே இல்லாத இவரோட மகனையாவது, கொஞ்சம் தட்டி வைக்கலாம்; கோவில்பாளையம் பஞ்சாயத்துல, அவரோட ஆதிக்கம் தாங்க முடியலையாம்; அப்பா பதவியை வச்சு, ஊருக்கு எந்த நல்லதும் செய்யலையாம்; ஆனா, கமிஷன் அடிக்கிறதுல 'கில்லி'யா இருக்காராம். கேக்குறது கொஞ்ச நஞ்சமில்லையாம்; நாப்பது பர்சண்டேஜ் கமிஷனாம்''
''கமிஷன்னு சொன்னா, எனக்கு கார்ப்பரேஷன் ஞாபகம் வந்துரும்; அங்க இப்போ, இன்ஜினியர்களுக்குள்ள பெரிய அதிகாரப் போட்டி நடந்துட்டு இருக்கு... 'போர்மென்' வேலைக்கு மட்டுமே தகுதியான ஒருத்தரை, இ.இ.,யாப் போட்டது தப்புன்னு, மத்த இன்ஜினியர்கள் எல்லாரும் சேர்ந்து, மினிஸ்டர் வரைக்கும் புகாரைக் கொண்டு போயிருக்காங்க; அவரும் விசாரிக்கிறதா சொல்லிருக்காராம்'' என்றாள் மித்ரா.
''டவுன் பிளானிங்கைக் கவனிக்கிற லேடி இன்ஜினியரைக் கூப்பிட்டு, 'உங்களைப் பத்தி நிறையா 'கம்பிளைண்ட்' வருது; அப்பாவி மக்கள்ட்ட பணம் பறிக்கிற வேலைய விடுங்க'ன்னும் சத்தம் போட்டாராமே'' என்றாள் சித்ரா.
''பணம் பறிக்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும்; சிட்டிக்குள்ள புதுசா திறக்கிற எந்த 'கமர்சியல் பில்டிங்'லயும், 'பார்க்கிங்' விடுறதே கிடையாது; இந்தம்மாதான் அதெல்லாம் பார்த்து 'ஆக்ஷன்' எடுக்கணும்; குறிப்பா, பெரிய பெரிய ஹாஸ்பிடல்கள் முன்னால ரோட்டுல, வண்டிகளே போக முடியாத அளவுக்கு, 'பார்க்கிங்' ஆக்கிரமிப்பு இருக்கு; அதுக்கெல்லாம் இப்பவாவது நோட்டீஸ் கொடுக்கலாம்ல'' என்றாள் மித்ரா.
''திருச்சி ரோட்டுல, குழந்தைகள் ஹாஸ்பிடலை, ஓடைய மூடிக் கட்டிருக்காங்களாம்; இன்னொரு பெரிய ஹாஸ்பிடலுக்குள்ள 'ரெவின்யூ டிபார்ட்மென்ட்'டுக்குச் சொந்தமான நிலமே இருக்குதாம்'' என்றாள் சித்ரா.
''நீ சொல்ற அந்த ஹாஸ்பிடல் டாக்டரோட படிப்பைப் பத்தியே, மத்த டாக்டர்கள் 'டவுட்' கிளப்புறாங்க; டி.சி.எச்., முடிச்சதா அவரு 'போர்டு'ல போட்ருக்காராம்; ஆனா, மெடிக்கல் கவுன்சில் 'வெப்சைட்'ல பார்த்தா, அந்தப் படிப்பு படிச்சதா பதியவே இல்லை'' என்றாள் மித்ரா.
''அவரு மட்டுமா...சிட்டிக்குள்ள நிறைய டாக்டர்கள், வெறும் எம்.பி.பி.எஸ்., முடிச்சிட்டு, டி.சி.எச்., எம்.டி.,ன்னு போர்டு போட்டுக்கிறதா ஒரு புகார் இருக்கு'' என்றாள் சித்ரா.
பஸ் ஸ்டாண்டுக்கு வந்து விட்டதாக தோழியிடம் இருந்து அழைப்பு வரவே, வண்டியைத் திருப்பினாள் மித்ரா. செல்லும் வழியில் ஜீவா நகர் போர்டைப் பார்த்ததும் கேட்டாள் மித்ரா.
''அக்கா...ஜீவா நகர் மக்களுக்கு மாற்று வீடுகள் கொடுக்க விடாமத் தடுக்குறாங்கன்னு பேசிட்டு இருந்தோமே; வெள்ளலுார் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பாளர்களுக்கே, இன்னும் வீடுகளை ஒதுக்காம, குடிசை மாற்று வாரியத்துக்காரங்க இழுத்தடிக்கிறாங்களாம்; என்ன காரணம்னே தெரியலன்னு கார்ப்பரேஷன்காரங்க கொந்தளிக்கிறாங்க'' என்றாள் சித்ரா.
''இந்தி திணிப்பு, 'நீட்'டுக்கு எதிரா போராட்டம் நடத்துற தி.மு.க.,காரங்க, 'எங்க ஆட்சியில கொண்டு வந்த திட்டத்தை எட்டு வருஷமா ஏன் முடிக்கலை'ன்னு போராட மாட்டாங்களா?'' என்றாள் மித்ரா.
''நீ வேற...அவுங்களுக்குள்ளேயே ஆயிரம் கோஷ்டி; மாணவர் அணி நடத்துற போராட்டத்துக்கு இளைஞர் அணிக்காரங்க வர்றதில்லை; நேத்து செல்வபுரத்துல நடத்துன 'நீட்' எதிர்ப்பு கருத்தரங்கத்துக்கு அம்பது பேரு கூட வரலையாம்'' என்றாள் சித்ரா.
டிராபிக் அதிகமாகவே, பேச்சை நிறுத்தி விட்டு, வண்டி ஓட்டுவதில் கவனமானாள் மித்ரா. பஸ் ஸ்டாண்டை நோக்கி பறந்தது வண்டி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X