கார்ப்பரேஷன் குவாட்டர்ஸில் நிற்குது... ஹார்லி டேவிட்சன்!

Added : மே 24, 2017
Share
Advertisement
கார்ப்பரேஷன் குவாட்டர்ஸில் நிற்குது... ஹார்லி டேவிட்சன்!

தனக்குத் தெரிந்த ஏழை மாணவிக்கு, அவினாசி ரோட்டிலுள்ள ஒரு கல்லூரியில், 'அட்மிஷன்' வாங்கித் தருவதற்காக, கல்லூரி நிர்வாகி ஒருவரைச் சந்திக்கச் சென்றிருந்தாள் சித்ரா; தகவலறிந்து அங்கே வந்து சேர்ந்தாள் மித்ரா. அடர்ந்த மர நிழலின் கீழே இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.
''எங்க பார்த்தாலும், ஸ்கூல், காலேஜ் அட்மிஷன் பிரச்னை தான்... பதில் சொல்லியே மாளாதுன்னு கல்லூரி நிர்வாகிங்க பல பேரு, வெளிநாட்டுக்குப் போய் உட்கார்ந்துக்கிட்டாங்க; ஜூன் கடைசியில தான் வருவாங்க போலிருக்கு,'' என்று நொந்து கொண்டாள் சித்ரா.
''இது வருஷா வருஷம் நடக்கிறது தான்க்கா... இங்க யாரையாவது ஒருத்தரை பொறுப்பா உட்கார வச்சிட்டு, யார் யாருக்கு, 'சீட்' கொடுக்கலாம்னு ஒரு, 'லிஸ்ட்' போட்டுக் கொடுத்துட்டுப் போயிருவாங்க,'' என்றாள் மித்ரா.
''சில காலேஜ்களுக்கு வெறும் பேரு தான் இருக்கு... காலிப் பெருங்காய டப்பா மாதிரி; அந்த பேரை வச்சே, வசூல் தட்டி எடுக்குறாங்க. பசங்கள்ட்ட கேட்டா, 'எந்த டீச்சரும் உருப்படியா, 'கிளாஸ்' எடுக்க மாட்டாங்க, நாமளாத்தான் படிச்சிக்கிறணும்'கிறாங்க,'' என்றாள் சித்ரா.
''பழம்பெரும் பள்ளின்னு பெருமையடிக்கிற பல ஸ்கூல்களும் இப்பிடித்தான் இருக்கு... பேரை வச்சு ஓட்றாங்க; பி.எட்., படிச்சவுங்களைத்தான், டீச்சராப் போடணும்னு, 'நாம்ஸ்' இருக்கு; ஆனா, பெரும்பாலான ஸ்கூல்கள்ல, டிகிரி முடிச்சவுங்களைத்தான் டீச்சராப் போட்ருக்காங்க,'' என்றாள் மித்ரா.
இருவரும் பேசிக்கொண்டே, கல்லூரி வளாகத்தில் இருந்த கேண்டீனுக்கு நடந்து சென்றனர். அங்கு, 'ரோஸ் மில்க்'கை வாங்கி, சுவைத்துக் கொண்டே பேச்சைத் தொடர்ந்தனர். சித்ரா தொடர்ந்தாள்...
''காலேஜ்ல 'சீட்' வாங்குறதுக்கும், படிக்கிறதுக்கும் இவ்ளோ சிரமப்படுறோம்; நோகாம நொங்கு திங்கிறது மாதிரி, போலியா சர்ட்டிபிகேட் வாங்கி, பல பேரு, 'கவர்மென்ட்' வேலையில இருக்காங்க; நம்ம ஊர்ல, டாஸ்மாக்லயும், அறநிலையத்துறையிலயும் வேலை பாக்கிறவுங்கள்ல பல பேரு போலி, 'சர்ட்டிபிகேட்'தான் கொடுத்திருக்காங்க. எல்லாத்தையும், 'செக்' பண்ணுனா, பல பேரு மாட்டுவாங்க.''
''ஆமாக்கா... பேரூர் கோவில்ல போலி, 'சர்ட்டிபிகேட்' வேலை பார்த்த ரெண்டு பேரும் தப்புப் பண்ணுனது உறுதியாச்சு; நடவடிக்கை எடுக்கலை; அவுங்க, 'அப்பீல்' போயிட்டாங்க.''
''அவுங்களைக் காப்பாத்தி விட்ட பெரிய ஆபீசர், இந்த மாசத்தோட, 'ரிட்டயர்டு' ஆகப்போறாரு... தெரியும்ல.''
''அவரு, 'ரிட்டயர்டு' ஆகப்போறது மட்டும் தான், உனக்குத் தெரியும்; அதுக்குள்ள அவரு என்னென்ன வழிகள்ல எல்லாம் வசூலைப் போட்டுட்டு இருக்கார்னும் எனக்குத் தெரியும். கோவில் இ.ஓ.,க்கள் எல்லாம், இவரு கேக்குற காசுக்கு, எந்த உண்டியல்ல கை வைக்கிறதுன்னு தெரியாம, புலம்பித் தீர்க்குறாங்க.''
''வசூல்னதும் சரவணம்பட்டி ஏரியாவுல, தனிக்காட்டு ராஜாவா வழிப்பறி பண்றது மாதிரி, வசூல் பண்ற ஒரு எஸ்.ஐ., ஞாபகம் வந்துச்சு; தண்ணி டேங்க் ரோடு, காந்தி மாநகர்ல ராத்திரி பன்னெண்டு, ஒரு மணிக்கெல்லாம் வண்டிகளை மறிச்சு, ஹெல்மெட் போடாமலும், தண்ணி போட்டும் வண்டி ஓட்றவுங்களை நிறுத்தி, வண்டியைப் புடுங்கி வச்சுக்கிறாராம்,'' என்றாள் மித்ரா.
''நல்ல விஷயம் தான... ஒரு எஸ்.ஐ., செய்ய வேண்டிய கடமையத்தான அவரு செய்யுறாரு,'' என்று குறுக்கே புகுந்தாள் சித்ரா.
''நல்லா செஞ்சாரு... முழுசாக் கேளு... அவரு, 'டிராபிக்' எஸ்.ஐ.,யே கிடையாது; 'எல் அண்ட் ஓ' பாக்குறவரு. அவுங்க வண்டிகளை 'செக்' பண்ணலாம்; சார்ஜ் ஷீட் போடலாம்; 'பைன்' போட முடியாது; ஆனா, இவரு ஹெல்மட் போடலைன்னா, நுாறு ரூபா, 'டிரங்க் அண்ட் டிரைவிங்'னா ரெண்டாயிரம், மூவாயிரம் புடுங்குறாராம்; எதுக்கும் சார்ஜ் ஷீட், ரசீது எதுவும் தர்றதில்லை,'' என்றாள் மித்ரா.
''அவரு யூனிபார்மைப் பார்த்துட்டுக்கூட யாரும் கேள்வி கேக்குறதில்லையா?'' என்று கேட்டாள் சித்ரா.
''அந்த கூத்தை ஏன் கேக்குற... அங்க வாங்கி, இங்க வாங்கி, கடைசியில விஜிலென்ஸ் போலீஸ்காரர் ஒருத்தர்ட்டயே இந்த மாதிரி வசூல் பண்ணிருக்காரு; அவரு, இப்போ, பெரிய ஆபீசர்ட்ட போட்டுக் கொடுத்துட்டாராம். என்ன ஆக்ஷன் எடுக்கப் போறாங்கன்னு தெரியலை,'' என்றாள் மித்ரா.
கேண்டீன் கல்லாவில் இருந்தவர், 'கதிர்வேலு, அந்த டேபிளைக் கவனி' என்று உத்தரவு போட்டுக் கொண்டிருக்க, பில்லை கொடுத்து விட்டு, இருவரும் வெளியே சென்றனர். வண்டியை எடுத்துக்கொண்டு, அவினாசி ரோட்டிலிருந்து விலகி, காமராஜ் ரோட்டில் வண்டியைச் செலுத்தினாள் மித்ரா. தி.மு.க., போராட்ட போஸ்டரைப் பார்த்ததும், ஏதோ நினைவுக்கு வந்தவளாய்க் கேட்டாள் சித்ரா.
''என்ன மித்து... அ.தி.மு.க., தான் ரெண்டு, மூணாப் பிரிஞ்சு கிடக்குதுன்னு பார்த்தா, நம்ம ஊருல தி.மு.க.,வே அஞ்சு ஆறா பிரிஞ்சிருக்கும் போல; வைரவிழா கொண்டாடுறோம்னு, கோயம்புத்தூருக்குள்ளேயே ரெண்டு, மூணு கோஷ்டியாப் பிரிஞ்சு, கூட்டம் நடத்திட்டு இருக்காங்க.''
''ஆமாக்கா... பதவியிலேயே இல்லாத வீரகோபால் கோஷ்டி சார்புல, ஆர்.எஸ்.பாரதியை வச்சு ராஜவீதியில கூட்டம் போட்டாங்க; அதுக்கு முன்னாலயே, பழ.கருப்பையாவைக் கூப்பிட்டு வந்து, ஆர்.எஸ்.புரத்துல பொங்கலூர் கோஷ்டி, தனியா கூட்டம் போட்டாங்க. எங்கேயுமே பெருசா கூட்டமில்லை.''
''இப்பிடி தனித்தனியா நடத்துனா, கூட்டம் எப்பிடி வரும்... வாட்டம் தான் வரும்.''
''கோவை தி.மு.க.,வுக்கு அது உடன் பிறப்பாச்சே; சிட்டிக்குள்ள ஆயிரம் பிரச்னை இருக்கு; இதுவரை ஒரு போராட்டமாவது அறிவிச்சிருப்பாங்களா?'' என்றாள் மித்ரா.
''நீ போராட்டம்னு சொன்னதும் தான், ஞாபகம் வந்துச்சு... இதே சிங்கநல்லூர் பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல, மூடப்பட்ட 'பார்'ல 'இல்லீகல்'லா சரக்கு விக்கிறாங்கன்னு, மக்களே புகுந்து அடிச்சு நொறுக்கிட்டாங்களே. அப்போ என்ன நடந்துச்சு தெரியுமா?'' என்று சித்ரா சொல்லும்போதே, இடையில் புகுந்த மித்ரா, 'மக்களே சரக்கு பாட்டிலை அள்ளிட்டுப் போயிட்டாங்களா' என்று கேட்டாள்.
''பொறுமையாக்கேளுடி... கடையில இருந்த சரக்குகளை நொறுக்குன கையோட, அங்க இருந்த, 'ஷெட்'டையும் உடைச்சு எறிஞ்சுட்டாங்க. அதுல, 'ஆங்கிள், கேல்வனைசிங் ஷீட்' எல்லாம் புதுசா இருந்திருக்கு. அதைப் பார்த்த லேடி எஸ்.ஐ., ஒரு வாடகை வண்டியைக் கூப்பிட்டு, தன்னோட வீட்டுக்கு எடுத்திருக்காங்க; ஆனா, விஷயம் அதுக்குள்ள உளவுத்துறை மூலமா, 'இன்ஸ்.,' காதுக்குப் போயிருச்சாம்,'' என்றாள் சித்ரா.
''அருமையான உளவுத்துறை; அவரு, எஸ்.ஐ.,யை சத்தம் போட்டாரா?'' என்று ஆர்வமாய்க கேட்டாள் மித்ரா.
''அங்கதான், 'ட்விஸ்ட்'டே இருக்கு... அவரு, அங்க இருந்த போலீசை போன்ல கூப்பிட்டு, 'அதை வண்டியில எடுத்துப்போட்டு, என் வீட்டுல இறக்கீருய்யா'ன்னுட்டாராம்... இது எப்பிடி இருக்கு?'' என்று சிரித்தாள் சித்ரா.
''இந்த மாதிரி, 'இல்லீகல் பார்'களைத் தடுக்குறதுக்கு போலீஸ் ஒண்ணும் செய்ய மாட்டேங்குது; ஆனா, போராட்டம் நடத்துற மக்கள் மேல மட்டும் கேஸ் போடுறாங்களே,'' என்றாள் மித்ரா.
''காந்திபுரத்துல முன்னாடி, 'பார்' இருந்த ஓட்டல்கள்ல, இப்போ இல்லை; ஆனா, போர்டை எடுக்காம, யாராவது வந்தா, அங்க இருக்குற ரூம்களுக்குக் கூப்பிட்டுப் போயி, ஒரு, 'பெக்' 150 ரூபா, 200 ரூபான்னு விக்கிறாங்களாம்; பஸ்சுல போறப்ப, ரெண்டு பேரு பேசிட்டுப் போனதைக் கேட்டேன்,'' என்றாள் சித்ரா.
மாநகராட்சி அறிவிப்புப் பலகையைப் பார்த்ததும், பேச்சு திசை மாறியது.
''அக்கா... கார்ப்பரேஷன் ஆபீஸ்ல இருந்து ஒவ்வொருத்தரா கழன்டு போறாங்க; முதல்ல ஏ.சி.எச்.ஓ., ரிசைன் பண்ணிட்டாரு; இப்போ பி.ஆர்.ஓ., மெட்ராஸ்க்கே தலை தெறிக்க ஓடிட்டாரு; ஜே.என்.என்.யு.ஆர்.எம்.,ல இருந்த ரெண்டு ஏ.இ.இ.,யும் அவுங்க டிபார்ட்மென்ட்டுக்கே போயிட்டாங்க. ஆனா, இங்க இருக்குற, 'குப்பை இன்ஜினியர்'களை மட்டும் நகர்த்தவே முடியலை,'' என்றாள் மித்ரா.
''கரெக்ட் மித்து... குப்பைத் தொட்டியில இருந்து, குப்பை லாரி வாங்குனது வரைக்கும் காசு அடிச்ச, 'குப்பை' இன்ஜினியர், இப்போ புதுத்திட்டம் ஒண்ணுல வாங்குன கமிஷன்ல, 'ஹார்லி டேவிட்சன்' வண்டியை, ஏழரை லட்சம் ரூபாய்க்கு வாங்கி, தன்னோட குவாட்டர்ஸ்லயே நிறுத்திருக்காரு,'' என்றாள் சித்ரா.
''அவரு கையில தான், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தையும் கொடுக்குறாங்க; இருநுாறு... கோடி... அது முடியுறதுக்குள்ள எப்பிடியும் 'ஆடி' காரு வாங்கிருவாரு... என்ன கொடுமை சரவணன்,'' என்று சிரித்தாள் மித்ரா. சிக்னலில் வண்டியை நிறுத்த வேண்டியிருந்ததால், இருவரும் பேச்சையும் நிறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X