கோபத்தை அடக்கி ஆள்வோம்!| Dinamalar

கோபத்தை அடக்கி ஆள்வோம்!

Added : மே 26, 2017
கோபத்தை அடக்கி ஆள்வோம்!

குடி குடியைக் கெடுக்கும்; கோபம் குலத்தையே அழிக்கும். ஒருமுறை கோபம் கொண்டால், பலமுறை துன்பம் நேரிடும். ஒரு தனிமனிதன் மீது வைத்த நம்பிக்கைகளையும் பொறுமைகளையும் இழக்கச் செய்யும், நம்மைச் சுற்றி உள்ள உறவுகளை வெறுக்கச்செய்யும், கோபம் மனிதனின் எதிரி, மனிதனின் ஆயுளைக் குறைக்கும் சைத்தான்.
'கோபம் என்பதே பாவம் தான்” கோபம் மனிதனின் சாபக்கேடு அதனால்தான் ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்றனர். இவ்வாறு கோபத்தினைப் பற்றி பலவாறு கூறப்பட்டாலும், தன்னுடைய பங்குக்கு திருவள்ளுவர் 'வெகுளாமை' என்னும் அதிகாரத்தில் பத்துக் குறளிலும் கோபத்தினால் நேரும் துன்பங்களைப் பற்றி அழகாகக் கூறியிருக்கிறார். அளவுக்கு மீறி சினம் கொண்டவர் உயிருடன் இருப்பினும் செத்தவராகவே கருதப்படுவர் ('இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை”) கோபத்தை துறந்தவர் உயர்ந்தவராகவே
போற்றப்படுவர் என்றும் கூறுகிறார்.

ரவுத்திரம் பழகு : கோபம் நம்மையே அழித்து விடும் என்று தெரிந்த பின்பும் கோபம் கொள்ளாமல் இருக்கின்றோமோ? இல்லையே; ஆனாலும் 'ரவுத்திரம் பழகு” என்கின்றார் பாரதி. காரணம் 'பாதகம் செய்பவரைப் பார்த்தால் பயங்கொள்ளல்; ஆகாது பாப்பா. மோதி மிதித்து விடு பாப்பா. அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா' என்று சொல்கிறார் என்றால், அர்த்தம் என்ன? தேவையான நேரங்களில் தவறு நடக்கின்ற இடத்தில் அதைத்தட்டிக் கேட்பதற்கு கோபம் கொள்வதில் தவறில்லை என்றுதானே அர்த்தம்.சிலர் எதற்கெடுத்தாலும் கோபம் கொள்வர். கணவன், மனைவியிடம் காரணமில்லாமல் கோபம் கொள்வதுண்டு. சாப்பாட்டில் உப்பில்லை என்றால் அதற்கொரு கோபம். குழம்பில் காரம் அதிகம் என்றால் அதற்கொரு கோபம். இது தேவையில்லாத ஆணாதிக்கத்தின் கோபம். கணவன் மனைவியிடம், மனைவி-பிள்ளைகளிடம், கோபப்பட்டு கடைசியாக அந்தக் கோபம் கடைக்குட்டிப் பிள்ளையிடம் போய் அழுகையில் முடியும், தேவை
இல்லாத கோபத்தால் குடும்பமே அன்று சோகத்தில் மூழ்கி விடும்.

கோபமும், மோகமும் : மனிதனுக்கு கோபமும் மோகமும் கூடப்பிறந்தது. நியாயமான கோபம், தேவையில்லாத கோபம் , அதிகார கோபம், எதற்கெடுத்தாலும் கோபம் என்று இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ஆணவமும், செருக்கும், அகங்காரமும், என்னை வெல்ல இந்த உலகில் யாருமில்லை என்ற திமிரின் முழுவடிவமே கோபம். நாம் கோபப்படுவதால் பயன் எதுவும் உண்டா? என்றால்? இல்லையே உடம்புக்குத் தீமை விளைவிக்கும் கோபத்தை முனிவர்களே விடவில்லையே.ஞானப்பழத்தினால் முருகனுக்கு கோபம் வர, சிவபெருமான் குடும்பத்தில் குழப்பம் உண்டாகி விட்டது. அந்தக் கோபம் நியாயமானதே. ராவணனின் அதிகாரக்கோபமும், மோகமும் அவனை அழிவுப் பாதைக்கு கொண்டு சென்றது, அவன் பெற்ற வரத்தால் பயன் என்ன? அவனுடைய பேராசையின் உச்ச நிலையில் ஆசைப்பட்ட பொருள் கிடைக்காத பட்சத்தில் எப்படியாவது அதை அடைந்தே தீரவேண்டும் என்ற எண்ணத்தில் அது கோபமாக மாறிப் பல்லாயிரம் உயிர்களைக் கொன்று, அழிவுப்பாதைக்கு வழிவகுக்கிறது. தீரவிசாரிக்காமல் தீர்ப்பு வழங்கிய பாண்டிய மன்னன் மீது கண்ணகி கோபம் கொண்டதால் மதுரை மாநகரமே அழிந்தது. தவம் இருந்து வரம் பெற்ற முனிவர்கள் அதனைச் சரியான முறையில்
பயன்படுத்தினார்களா? வரத்தை வாங்கிக்கொண்டு கோபத்தால் சாபம் தான் கொடுத்திருக்கிறார்கள்; முனிவர்கள் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது அவர்கள் விடும் சாபம்தான்.

தாய்மை பூமி : கணவர் தண்ணீர் கேட்டவுடன் எடுத்துக் கொடுக்கவில்லை என்ற கோபத்தில் மனைவியை அடிக்க அவள் சுவரில் அடிபட்டு இறந்து போனாள் என்ற செய்தியை படிக்கும் போது மனம் வேதனைப்படுகிறது. தாய்மையை முன்னிறுத்தும் தவ பூமியில் நடக்கும் அநியாயங்களை வார்த்தைகளால் வடிக்க முடியாது. கோபத்தால் வாழ்க்கை நிலைகுலைந்து போனவர்கள் பலர். அறிவை மறைக்கும் கோபம் அழிவை நோக்கிச் செல்லும். கோபம் என்னும் உளி, உடம்பு என்னும் பானையை அடிக்க அடிக்க, அது ஓட்டை விழுந்து உருப்படாமல் போய் விடுகின்றது. மனிதனைப் போல ஐந்தறிவு படைத்த உயிரினங்களுக்கும் கோபம் வருகின்றது.
ஆண்டவன் படைப்பில் மனிதனுக்குக் கிடைத்த பெரும் பொக்கிஷம் சிரிப்பு. அதைத்தான் மனிதன் இன்று மறந்துவிட்டான். அதனால் தான் சிரிப்பிற்கு நகை என்று பெயர். சிரிப்பு என்னும் அணிகலனை அணிந்து கொள் மனிதா! நீ அழகாய் இருப்பாய். கோபத்தால் ஆயுள் குறைந்து அழிந்தவர்கள் அளவில்லாதவர்கள். சிரிப்பால் மகிழ்ந்து வாழ மனிதனால் மட்டுமே முடியும்.
நம் வீட்டில் வளர்க்கும் நாய் நம்மைப் பார்த்துச் சிரித்தால் எப்படி இருக்கும். மனிதா, உன் சிரிப்பில் அன்பு இருக்க வேண்டும், மனிதம் இருக்க வேண்டும். தீய குணமான கோபத்தை
கவுரவர்களுக்கு, அதிகம் சகுனி போதித்ததால் மண்ணை ஆளாமல் மாய்ந்து போயினர்.

காணாமல் போகும் குணம் : மனிதனிடம் உள்ள நல்ல குணத்தையெல்லாம் ஒரு நிமிடத்தில் கோபம் குடித்துவிடும். பாரதப் போர் முடிந்து, கவுரவர்கள் இறந்த பின்பும், பொறுமை காத்த
பாண்டவர்கள் மனைவியருடன் பெரியப்பா திருதராட்டினனை கண்டு ஆசி பெறச் சென்றனர்.
முதலில் தருமன் வணங்கினான். இரண்டாவதாகப் போக இருக்கும் பீமனுக்கு பதிலாக அவனைப் போல இரும்புச் சிலையைச் செய்து திருதராட்டினன் முன் நிறுத்துகின்றார். அந்தச் சிலையை பீமன் என நினைத்து மார்புடன் கட்டித் தழுவுவது போல், ஒரு லட்சம் யானைகளின் வலிமையுள்ள திருதராட்டினன், கோபத்தில் தன் கைகளால் பிசைந்து அதனைச் சுக்கல் சுக்காக நொறுக்கினான். புத்திர சோகம் அங்கே கோபமாக மாறி, வயதில் சிறியவனான, தன் மகன் போன்ற பீமனைக் கொல்ல நினைக்கின்றான். அதேபோல காந்தாரியும் இத்துணை அழிவிற்கும் கண்ணனே காரணம் என்று நினைத்து கிருஷ்ணருடைய விருஷ்னி குலம் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு அழிந்து போகட்டும் என்று சபிக்கின்றாள். கோபத்தின் உச்சநிலை சாபம்; அது
மனித குலத்தின் பாவம். பெரியவர்கள் கோபம் கொள்ளாமல் இருந்திருந்தால் நாடும், வீடும் நலம் பெற்றிருக்கும். எல்லோருக்கும் வழிகாட்டியாக இருக்க வேண்டிய பெரியவர்கள், ஏன் பிள்ளைகளை தட்டிக் கொடுத்து வளர்க்கவில்லை. அரசகுலத்தின் அதிகாரம் கோபமாக கண்ணை மறைத்துவிட்டது. கோபம் கண்ணை மூடும் வாயைத் திறந்துவிடும் என்பார்கள். கண் தெரியாத திருதராட்டினனுக்கு உடம்பெல்லாம் கோபம் ஆகி போனதால், பீமன் உடம்பை நெறித்து கொல்ல நினைக்கின்றான்.

கோபம் குடியேறிய வீடு : உலகின் அறியாமையை நோக்கி அறிவு சிரிக்கிறது. ஒவ்வொருவர் வீட்டிலும் கோபம் குடியேறிவிட்டது. அன்பெனும் பிடியுள் அகப்பட்டு, மனிதனே! இன்பமுற வாழ்வதற்கு இனி ஒரு விதி செய்ய வேண்டும். வாழ்வு வளம்பெறும். ஒரு சிஷ்யன் குருவிடம், நான் சொர்க்கத்திற்குப் போக வழி சொல்லுங்கள் என்று கேட்டானாம், அதற்கு அந்த குரு, நான் போனப்பிறகு தான் போக முடியும் என்றாராம். சிஷ்யன் கோபமாக மனதுக்குள்ளே 'இந்த குருவிற்கு ஆணவம் கொஞ்சம் கூடக் குறையவில்லையே. இவர் போனப் பிறகு தான் நான் போக முடியும் என்றால் இவர் பெரிய கடவுளோ?' என்று நினைத்துக் கொண்டிருக்கும்
பொழுது, குரு சிஷ்யனைப் பார்த்து 'என்ன பேசாமல் அமைதியாக இருக்கின்றாய்.
உன்னிடத்தில் இருக்கும், 'நான்', எனது என்னுடையது என்ற அகங்காரம் உன்னைவிட்டு என்று போகுமோ அன்று நீ சொர்க்கத்திற்குப் போவாய்' என்றுசொன்னாராம். அதுபோல ஒவ்வொரு மனிதனிடமும் நான் எனும் ஆணவம் இருப்பதால்தான், கோபம் நம்மிடம் குடிகொண்டிருக்கிறது.கண்ணால் கெட்டது -விட்டில்பூச்சி, காதால் கெட்டது அசுவனப் பறவை, மூக்கால் கெட்டது - வண்டு, வாயால் கெட்டது - மீன், உடம்பால் கெட்டது - யானை. இந்த ஐம்புலனாலும் கோபம் அடக்கி ஆள்வதால் மனிதன் அழிந்து போகின்றான். அன்பால் அகிலத்தையும் ஆள முடியும். மகிழ்ச்சியாக வாழவும் முடியும். மனிதா, உன் கோபத்தை நீ அடக்கி ஆள பழகிக்கொள். வாழ்வு சிறக்கும்.

முனைவர் கே. செல்லத்தாய்
தமிழ்த்துறைத் தலைவர்
எஸ்.பி.கே. கல்லுாரி
அருப்புக்கோட்டை.
94420 61060

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X