வேண்டும் குழந்தை வளர்க்கும் ஞானம்

Added : மே 29, 2017
Advertisement
வேண்டும் குழந்தை வளர்க்கும் ஞானம்

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு பெரும் பொறுப்பாகும். இது இயல்பாகவே பெற்றோரிடத்தில் இல்லாத போது, தேடிச்சென்று அடைய வேண்டிய ஞானமாகும். இது குழைவாக இருக்கும் களிமண்ணால் உறுதியான சிலை செய்வது போன்றது. களிமண்ணை அச்சில் வார்த்து சுட்டுவிட்டால் உறுதியாவது போல், குழந்தைகளுக்கு மிகச் சிறிய வயது முதலே நற்பண்புகள், நல்லொழுக்கம், ஆன்மிகம் ஆகியவற்றை அறியச் செய்து நெறிப்படுத்தினால், அவர்கள் மிக நல்ல மனிதர் களாக உருவாவது உறுதி. ஒருகுழந்தையை முழுமையான மனிதனாக உருவாக்க வேண்டிய கடமை, பெற்றோர்கள் கைகளில் தான் இருக்கிறது.

குழந்தைகளின் குணங்கள் குழந்தைகளிடம் இயல்பாகவே உள்ள பல நற்குணங்கள் வளர்த்து விடப்பட வேண்டியவை. அவற்றுள் ஒன்று விளையாட்டு. நம் சமூகத்தில் அதிகம் விளையாடும் குழந்தை கண்டிக்கப்படுகிறது. ஒரு குழந்தையின் ஆக்கம் அதிகரித்து அதன்மூலம் அக்குழந்தையின் தனித்துவம் வளரத் துவங்கும், மாறாக விளையாட்டுத் தன்மை முடக்கப்பட்டால் அக்குழந்தை தன் தனித்துவத்தை இழந்து, மந்தையில் உள்ள ஆடு போல் செயல்படத்துவங்கும்.

இயற்கை விளையாட்டு: மனித மனதின் சராசரி வயது 13 தான் என்று மனவியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். இதில் பெரிய மேதைகளும், அறிஞர்களும் அடங்குவர். ஏனென்றால், சமூகத்திற்கேற்றார்போல் குழந்தை களை கட்டுப்படுத்தும் போது அவர்களுடைய தனித்தன்மை கொல்லப்படுகிறது. அதனால், அவர்கள் தங்களுடைய தனித்தன்மையை உபயோகிக்காமல், ஆணைகள் மூலம் செயல்படும் இயந்திர மனிதனைப் போல், சமூகத்தில் மற்றவர்கள்செய்வதைப் பின்பற்றியே செயல்கள் செய்கின்றனர்.குழந்தையை இயற்கையுடன் இணைந்து விளையாட அனுமதியுங்கள். வெயில், மழை, மணல், மரங்கள் நன்மைதான் தருகிறது. இயற்கையான சூழலில் வேலை பார்க்கும் விவசாயி போன்றவர்கள் வயதானாலும் திடகாத்திரமாக
இருப்பதைப் பார்க்கிறோம். கிரிக்கெட், கால்பந்தாட்ட வீரர்கள் வெயிலில் விளையாடியதால் ஓய்ந்து போய்விடவில்லை. வெயிலில் போனால் தலைவலி வரும், மழையில் நனைந்தால் காய்ச்சல் வரும் என்றால், வெயிலில் போகும் அனைவருக்கும் தலைவலி வருகிறதா, மழையில் நனையும் அனைவருக்கும் காய்ச்சல் வருகிறதா.

அளவில்லா சொந்தம் : குழந்தைகள் தனக்கு ஒரு விஷயம் தெரியவில்லையென்றால் தெரியவில்லை என்று ஒப்புக்கொள்வதால் அவர்களால் வேறு வழியில் சிந்திக்க முடிகிறது.
பெரியவர்கள் போல் அவர்கள் தங்கள் அறியாமையை மூடி மறைப்பதில்லை. தெரியாத
விஷயங்களைத் தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறார்கள். அதனால் தான் நம்மிடம் பல கேள்விகள் கேட்கிறார்கள். நாம் நமக்கு தெரிந்ததை அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும். தெரியாவிட்டால் எனக்குத் தெரியவில்லை கேட்டுச் சொல்கிறேன் என்று அவ்விஷயத்தை பற்றி தெரிந்து கொண்டு சொல்லலாம்.குழந்தைகள் நம்மிடமிருந்து வருவதில்லை, நம் மூலமாக
இவ்வுலகிற்கு வருகிறார்கள். ஆகையால் பெற்றவர்கள் குழந்தையின் மேல் அளவுக்கு
அதிகமாக சொந்தம் கொண்டாடுவது தவறு அவர்களிடம் நம் கருத்துக்களையும், எதிர்பார்ப்புக்களையும் திணிப்பதும் தவறு.

நல்ல எண்ணங்கள் : மனநல வல்லுனர்களின் கூற்றுப்படி குழந்தைகளின் மனது, ஏழு வயதிலேயே பக்குவப்பட்டு விடுகிறது. அப்பொழுதிலிருந்து அவர்களுடைய ஆழ்மனப் பதிவுகள் மூலம் அவர்கள் செயல்படத் துவங்கி விடுகிறார்கள். ஆகவே, மிகச் சிறு வயதிலிருந்தே குழந்தைகளின் மேல் மதிப்பும், அன்பும் வைத்து அவர்களது மனதில் நல்ல எண்ணங்களை விதைகளை விதைக்க வேண்டும்.தீய எண்ணங்களின் அறிகுறி தெரிந்தால், அவற்றைக் களைய வேண்டும். இவையாவும் வகுப்பில் பாடம் சொல்வதைப் போல் சொல்லிக்கொடுக்க முடியாது. நாம்தான் முன் மாதிரியாக இருந்து வாழ்ந்து காட்ட வேண்டும்.

அன்புடன் கண்டிப்பு : குழந்தைகள் மனதளவில் சமநிலையில் இருப்பதற்கு பல விஷயங்களை நாம் கடைபிடிக்க வேண்டும். குழந்தைகளோடு அன்பு, கருணை, உற்சாகம்,
சந்தோஷம் போன்ற நற்குணங்களோடு மட்டுமே பேசிப் பழக வேண்டும். கண்டிக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் உறுதியுடன் ஆனால், அன்புடன் கண்டிக்க வேண்டும்.குழந்தைகள் தோல்விகளைக் கண்டு துவளாமல் இருக்கக் கற்றுக் கொடுங்கள். அத்தகைய சந்தர்ப்பங்களில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கற்றுக் கொடுங்கள். ஆண் குழந்தைகளும், பெண் குழந்தைகளும் சேர்ந்து விளையாட அனுமதியுங்கள். எதிர்மறை உணர்வுகள் (கோபம், அழுகை) மனதிற்குள்ளேயே வைத்திராமல் அதை எப்படி யாரிடம் வெளிப்படுத்துவது என்று கற்றுக் கொடுங்கள். ஆண் குழந்தைகள் அழுதால் தடை சொல்லாதீர்கள்.

புதிய அனுபவங்கள் : குழந்தைகளுக்கு வெவ்வேறு விதமான புதிய அனுபவங்களைக் கற்றுக் கொடுங்கள். உதாரணமாக ஆறு, குளம், கடலில் குளிப்பது, மலையேறுதல், பயணம் செய்தல், தோட்டமிடுதல், யோகாசனம் போன்றவை. குழந்தைகளுக்கு ஒவ்வொரு விஷயத்தையும் விளக்கி விளக்கிச் சொல்லிக் கொடுக்காமல், அவர்களாகப் புரிந்து கொள்ள உதவுங்கள். குழந்தைகள் கட்டுக்கடங்காமல் மிக அதிகமாக துருதுருவென்று இருந்தால், பெற்றோர்கள் வீட்டில் தியானம் செய்வது நல்லது. தியானத்தின் மூலம் வீட்டில் பரவும் அமைதி குழந்தைகளையும் அமைதிப்படுத்தும்.

நடமாடும் இயந்திரங்கள் : தற்சமயம் பள்ளிகள் குழந்தைகளுக்கு கல்வி போதிக்கும் நோக்கம் என்ன, மாணவர்கள் பல விஷயங்களைப் பற்றியும், தெளிவான ஞானம் பெற வேண்டும் என்ற நோக்கமா, அல்லது மிக அதிகமான மாணவர்கள் மிக அதிகமான மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் புகழ் பரவி அதன் மூலம் நுாற்றுக் கணக்கானவர்கள் தங்கள் பள்ளியில் வந்து சேர்ந்து தாங்கள் மேலும் பல கிளைகள் திறக்க வேண்டும் என்பதுவா?இரண்டு மதிப்பெண் கேள்விக்கு எப்படி பதில் எழுத வேண்டும், ஐந்து மதிப்பெண் கேள்விக்கு எப்படி பதில் எழுத வேண்டும். என்று தானே பழக்கப்படுத்துகிறார்கள். கல்லுாரியிலோ என்ன பாடத்திட்டம் படித்தால் எந்தத் துறையில் என்ன சம்பளத்தில் வேலை கிடைக்கும் என்ற நோக்கத்தோடு தான் மாணவர்கள் படிக்கவே ஆரம்பிக்கிறார்கள். கல்வி என்பது மதிப்பெண்களுக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் தேவையான ஒன்றாகத் தான் கருதப்படுகிறது.எனவே, அன்பு, கருணை, சந்தோஷம், நல்லிணக்கம் கடவுள்தன்மை போன்ற நற்குணங்கள் இல்லாத வரட்டுக் கல்வி கற்று
நடமாடும் இயந்திரங்களாகப் பலரும் இருக்கிறார்கள்.

உணர்வுகளை ஊட்டுங்கள் : தாய்மை என்பது ஒரு சிறந்த கலை. குழந்தை வயிற்றில் இருக்கும் பொழுது மிகவும் சந்தோஷமாகவும் மனநிறைவுடனும் உற்சாகத்துடனும் இருக்க வேண்டும். உங்களின் ஒவ்வொரு மனநிலையும் குழந்தையின் டி.என்.ஏ.,வில் பதியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தாய்மையைக் கொண்டாடுங்கள், மாறாக உடம்பை நோகச் செய்யும் சுமையாகக் கருதாதீர்கள். கருவுற்றிருக்கும் போதும், பின்னரும் எதிர்மறை உணர்வுகளான கவலை, பயம், கோபம், பொறாமை பதட்டம் ஆகியவற்றைத்தவிருங்கள்.தாயானவர் தன் உடலிலிருந்து பாலை மட்டும் ஊட்டவில்லை உணர்வுகளுடன் கூடிய சக்தியை யும் ஊட்டுகிறாள். எனவே எப்பொழுதும் நல்லுணர்வுகளுடன் இருங்கள். இயற்கையாகவே தாய்க்கும் சேய்க்கும் இடையே சக்திப் பரிமாற்றமும் சக்திப் பிணைப்பும் உண்டாகிறது. தகுந்த வயது வரைக்கும் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அது குழந்தையின் தனித் தன்மையையும் ஆளுமையும் வளரச்செய்யும்.

-- ஜெ.விக்னேஷ் சங்கர்
மனநல ஆலோசகர், மதுரை
99525 40909

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X