வரப்புயர... வாழ்வு உயரும்| Dinamalar

வரப்புயர... வாழ்வு உயரும்

Added : ஜூன் 05, 2017 | கருத்துகள் (3)
Advertisement
வரப்புயர... வாழ்வு உயரும்

இந்தியா ஒரு விவசாய நாடு. இந்தியா உணவு உற்பத்தியில் சிறந்த நாடு என பள்ளியில் படிக்கும் போது அறிந்திருப்போம். அது மட்டுமல்ல.. நாம் அடுத்த ஊர்களுக்கு பஸ்சில் பயணிக்கிற போது வயல்களும், தோப்புகளும், ஏரிகளும், குளங்களும், ஆறுகளும் தான் நம் கண்களுக்கு விருந்தாக அமையும். விவசாயம் தலைசிறந்திருந்த காலம் அது. நான் ஒரு விவசாயி என கூறுவதை மக்கள் பெருமையாக நினைத்த காலம் அது. ஒவ்வொரு வீடுகளிலும் மாடுகளும், ஆடுகளும் வளர்க்கப்படும்.

'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்
மற்றெல்லாம்தொழுதுண்டு பின் செல்பவர்'

என திருவள்ளுவர் குறிப்பிட்டு உள்ளார். இதன் பொருள் உழவுத்தொழில் செய்யும் உழவர்களே உலகில் உயர்ந்தவர்கள் மற்ற தொழில் செய்பவர் எல்லாம் உழவர்களை வணங்கி உழவின் பயனால் கிடைத்தவற்றை உண்டு வாழ்பவர்கள் என்பதாகும். அப்படிப்பட்ட விவசாயத்தின் நிலை இன்று கேள்விக்குறியாக உள்ளது வேதனைப்பட வேண்டிய விஷயமாகும். இந்தியாவின் முதுகெலும்பு விவசாயி என்றார்கள். முதுகுக்கு பின்னால் இருப்பதாலோ என்னவோ பலர் கண்களுக்கு அவர்களின்துன்பங்கள் மட்டும் தெரிவதில்லை.

போராட்ட வாழ்க்கை : இன்று நாள் தோறும் நாட்டின் பல பகுதிகளில் விவசாயிகளின் துன்பங்கள், அவர்களின்போராட்டங்கள் வெளியாகின்றன. இதை கண்டு நாம் ஒவ்வொருவரும் வேதனைப்பட வேண்டும். ஏர் பிடிப்பவன் இல்லையென்றால் இந்த உலகம் என்றோ பட்டினி யால் அழிந்திருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.பணம் சம்பாதிக்க ஆயிரம் தொழில்கள் இருக்கலாம். ஆனால் உணவை சம்பாதிக்க விவசாயம் மட்டும் தான் இருக்கிறதுஎன்பதை மறக்கக் கூடாது. என்னதான் தொழில் நுட்ப வசதி யில் நாம் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், அரிசியை இன்டர்நெட்டில் டவுன்லோடு செய்ய முடியுமா? அல்லது சமூக வலைத்தளங்களோடு வாழ்வதால் மட்டும் நம் வயிறு நிரம்பி விடுமா?

'புரொபைல் பிக்சர்' போதுமா : எல்லோரும் விவசாயம் காப்போம் என 'புரொபைல் பிக்சர்' வைப்பதால் மட்டும் விவசாயம் காக்கப்பட்டு விடுமா? என சிந்திக்க வேண்டும். நாட்டின் நீர் வளம் அழித்து, விவசாய நிலம் அழித்து சோறு போடும் விவசாயியை அழித்து குடிநீருக்கும், சோறுக்கும் பிறரிடம் கையேந்தச் செய்ததுதான் சுதந்திர இந்தியாவில் நாம் செய்த சாதனையா?
பொதுவாக எந்த ஒருபொருளுக்கும் விலையைநிர்ணயம் செய்வது அதன்உற்பத்தியாளர்கள் தான். ஒரு குண்டூசிக்கு கூட விலையை நிர்ணயம் செய்வது அதன் உற்பத்தியாளர்கள் தான். ஆனால் விவசாயி உற்பத்தி செய்த பொருளுக்கு விலையை நிர்ணயம் செய்வது அவரைத்தவிர வேறு யாரோ என்பது நிதர்சனமான உண்மை.

கடவுள் கண்டெடுத்த தொழிலாளி :

'கடவுள் எனும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி விவசாயி' என, கவிஞர் மருதகாசி, விவசாயியின் சிறப்புகளை எடுத்து கூறியிருப்பார். ஆனால் அத்தனை சிறப்புகள் உடைய விவசாயி இன்று படுகின்ற அவலங்களை சொல்லி மாளாது. பிரசவம் என்பது ஒருபெண்ணுக்கு மறுஜென்மம் என்பவர். அவ்வளவு கடினமாக பார்க்கப்பட்ட பிரசவம் கூட இன்று தொழில் நுட்ப வளர்ச்சியால் எளிதாக்கப்பட்டு விட்டது. ஆனால் விவசாயம் செய்வது அதைவிடக் கடினமான செயலாக கருதப் படுகிறது. விவசாயத்திலும், தொழில் புரட்சிகள் வந்திருந்தாலும் கூட விளைவு விவசாயிகளுக்கு சாதகமாக இல்லை.
இயற்கையை சீர்குலைத்தோம்

பல்வேறு காரணிகள் : விவசாயத்தை பாதிக்கின்றன. அதில் முதல் காரணி இயற்கையின் சீர்குலைவு. இயற்கையை சீர் குலைத்ததன் விளைவை நாம் இப்போது அனுபவிக்கிறோம். மரங்களை வெட்டினோம்; ஏரிகளையும், கண்மாய்களையும், குளங்களையும் கூட விட்டு
வைக்காமல் வீடுகளை கட்டினோம்; ஆற்று மணலை அள்ளினோம்; காடுகளை அழித்தோம்; நிலத்தடி நீரை உறிஞ்சினோம்; நம்முடைய நீர் வளத்தை அடுத்தவர்களுக்கு விலை பேசினோம். மக்களும் விவசாயியின் முக்கியத்துவ உணராமல் அவமதிக்கிறோம். ஷாப்பிங் மால்களில் விற்பனையாகிற கார்ப்பரேட் கம்பெனிகளின் குளிர்பானத்தை அதிக விலைக்கு வாயை மூடிக் கொண்டு வாங்குகிறோம். உள்நாட்டில் விளைந்த இளநீரை அது உடலுக்கு நல்லதென்று தெரிந்தும் பேரம் பேசி வாங்குகிறோம்.

அறியாமையில் மக்கள் : பழச்சாறுகளை தவிர்க்கிறோம். பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை குடிக்கிறோம். பிரபலங்கள் விளம்பரம் தந்தால் அந்த பொருள் சிறப்பானதாக இருக்கும் என்ற அறியாமையில் வாழ்கிறோம். மசாலாக்கள் கலந்து பதப்படுத்தப்பட்ட பாக்கெட்டுக்குள் அடைக்கப்பட்டு பல மாதமான பொருட்களை உண்கிறோம். சத்தான காய்கறிகளையும், பழங்களையும் சுத்தமாக புறக்கணிக்கிறோம். எவையெல்லாம் உடலுக்கு கேடு விளைவிக்கும் என தெரிந்தும் தேடிச்சென்று சாப்பிட்டு நோய்களை பெறுகிறோம். ஆனால் நம் உடல் நலத்தை காக்கவும், நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்தவும் விவசாய பொருட்களை புறக்கணிக்கிறோம்.சிகரெட் இல்லாமல் ஒருவரால் வாழ முடியும். ஆனால் சிகரெட் உற்பத்தியாளர் பணக்காரராய் இருக்கிறார். மது இல்லாமல் ஒருவரால் வாழ முடியும். ஆனால் மது உற்பத்தியாளர் பணக்காரராக இருக்கிறார். உணவு இல்லாமல் எவரும் வாழ முடியாது. ஆனால் உணவு உற்பத்தியாளரானவிவசாயி ஏழைகளாகவே உள்ளனர்.விவசாயிகள் தன் உணவாக பழைய கஞ்சியை உண்டு, அடுத்தவருக்கு பிரியாணிஅரிசியை அறுவடை செய்து தருகிறான். அவன் எத்தனை விதைகளை விதைத்துவளர்த்தாலும் அவன் மட்டும் இன்று வரை வளரவேயில்லை.
மரம் வெட்ட கூலி; மரம் வைக்க நிலத்தில் நெல் போட்ட விவசாயியும் நட்டத்தில் வாழ்கிறான். நிலத்தில் கரும்பு போட்ட விவசாயியும் நட்டத்தில் வாழ்கிறான். ஆனால் நிலத்தை பிளாட் போட்ட விவசாயி மட்டும் கொள்ளை லாபத்துடன் வாழ்கிறான். அப்புறம் விவசாயம் எப்படி வளரும்? நம் நாட்டில் மரம் வெட்டுவதற்கு தான் கூலி வழங்கப்படுகிறது. மரம் வைப்பதற்கு இல்லை. விவசாயம் குறித்த வேட்கை இன்றைய தலைமுறையினரிடம் இல்லாதது தான் இதற்கு முக்கிய காரணமாகும். பள்ளிகளிலும், கல்லுாரிகளிலும் விவசாயம் சார்ந்த பாடத்தை ஒரு பாடமாக கற்பிக்க வேண்டும். விவசாயம் செழிக்க புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்திட வேண்டும். இயற்கை வளங்களின் அவசியத்தை எடுத்துரைத்து அதை பேணி காக்க அறிவுறுத்த வேண்டும்.

விவசாயம் போற்றப்பட வேண்டும் : கார் வாங்குவதற்கும், மோட்டார் வாங்குவதற்கும் விளம்பரம் தரும் வங்கிகளும், நிதிநிறுவனங்களும் விவசாயத்தை மேம்படுத்த கடன் உதவி செய்ய வேண்டும். கல்வி நிறுவனங்களில் விவசாயிகளின் குழந்தைகளுக்கு சலுகைகள் வழங்க வேண்டும். ஏரிகள் துார்வாரப்பட வேண்டும். அணைகளில் நீர்மட்டத்தை தக்க வைக்க வேண்டும். ஆற்று மணல் கொள்ளையை அறவே தடுக்க வேண்டும். சீமைக் கருவேல மரங்களை வேருடன் வெட்டி எறிய வேண்டும். எல்லா சீர்திருத்தங்களையும் அரசு செய்யும் என்பதை விட்டு விட்டு, தொண்டு நிறுவனங்களும், தன்னார்வ அமைப்புகளும், கல்விநிறுவனங்களும் மக்களுடன் இணைந்து செய்ய வேண்டும்.

நாட்டை உயர்த்துவோம் : கார்ப்பரேட் நிறுவனங்களை காலுான்ற விடாமல் அந்நிய பொருட்களை அறவே ஒதுக்கி வைத்து விட்டு உள்நாட்டு பொருட்களை உபயோகிப்போம். பன்னாட்டு சந்தையில் நம் நாட்டை உயர்த்துவோம்.அன்று விவசாயத்தில் நம் நாடு செழித்திருந்ததால் தான் செல்வ வளம் ஓங்கி இருந்தது. மாடு கட்டி போராடித்தால் மாளாது என கூறி யானை கட்டி போரடித்த மரபு நம் தாய்நாட்டின் மரபு.படித்து முடித்த மாணவர்கள் பிற தொழில்கள் புரிவதை போல, விவசாயத்தையும் செய்ய முன்வர வேண்டும். இன்றுநம்மிடமிருக்கும் செல்வ வளங்கள் எல்லாம் நம் மூதாதையர்கள் விவசாயம் செய்து நமக்கு வழங்கியவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இளைய தலைமுறையினர் வறுமைக்கோட்டை அழிக்க நினைத்தால் விவசாய நிலங்கள் எல்லாம் கோயில்களாக மதிக்கப்பட வேண்டும். அப்போது தான் நம் வாழ்க்கை தரமும் உயரும்.

-எஸ்.ராஜசேகரன்
முதுகலை ஆசிரியர்
இந்து மேல்நிலைப் பள்ளி
வத்திராயிருப்பு. 94429 84083வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GRM - AJMAN,ஐக்கிய அரபு நாடுகள்
06-ஜூன்-201723:10:03 IST Report Abuse
GRM இளைய தலைமுறையினர்மீண்டும் நிச்சயம் சீர்செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Mayilkumar - cape town,தென் ஆப்ரிக்கா
06-ஜூன்-201711:34:40 IST Report Abuse
Mayilkumar மிகவும் அருமையான பதிவு. நாம் அறுபதிகளிலேயே மண் வளத்தை எரு, பசுந்தாள் உரம் போன்றவற்றை இடாமல் செயற்கை உரங்களை போட்டு வயலையும் அதில் வாழ்ந்து வந்த விவசாயியின் நண்பனான மண்புழுவையும் கொன்றோம். ஆறுகளிலும், குளங்களிலும் பாலிதீன் போன்ற பிளாஸ்டிக் பைகளை போட்டு எல்லா நீராதாரங்களையும் சீர்கெடுத்தோம். இப்போது மழைத்தண்ணீர் பூமிக்குள் போவதில்லை மீண்டும் பிறந்த வீடான கடுக்குள்ளேயே செல்லும் அவதியும் பார்க்கிறோம். முன்னோர்கள் செய்த பாவம் சந்ததியை சேரும் அதுபோல் நாம் செய்த கேடுகள் இன்று தண்ணீரை கூட விலைக்கு கொடுத்து வாங்குகிறோம். வியாபார நிறுவனங்கள் விற்கும் பாட்டில் குடிநீர் அரை லிட்டர் பாலின் விலைக்கு விற்கப்படுகிறது. முன்பெல்லாம் தண்ணீர் பந்தல் என்று இருக்கும் இப்போது குடிநீரையே காசு கொடுத்து வாங்கும் நிலை வந்த பிறகு அதும் இங்கொன்றும் அங்கொன்றுமாக உள்ளது. சுட சுட அம்மா செய்து கொடுத்தால் அந்த உணவு தற்போது ருசிப்பதில்லை அதே உணவை ஒரு உணவகத்தில் அது நான்கு நாட்களுக்கு முன் செய்து மீண்டும் சூடாக்கி கொடுத்தால் இப்போதுள்ளவர்களுக்கு பிடிக்கிறது. ஒரு வேலை காசு கொடுத்து வாகுவதாலோ என்னவோ? மக்கள் மீண்டும் நிச்சயம் நினைவு கூறுவார்கள் மீண்டும் நிச்சயம் எல்லாம் சீர்படும்.
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
06-ஜூன்-201709:50:38 IST Report Abuse
A.George Alphonse This teacher is just giving lecture here as he is teaching in the class.These all problems due to the selfishness of the farmers only.The farmers are became lazy and sold their fertile lands for higher profits to the real estate people for construction of factories, multispeciality hospitals, shopping malls,Cenima theatres and sky touching appartments.These farmers just passing their time in public places of their villages sitting and talking just good for nothing without taking any initiative for storing of rain water,cleaning of riverbeds.lakes.vaikkals, tanks in their villages and fully depending on government and doing porattam for their personnel gain.It is wrong to blame any one and the government for fall and declines of agricultural in our state now.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X