கனவுகளைக் கைப்பற்றுவோம் - 51| Dinamalar

சிறப்பு பகுதிகள்

நீங்களும் தொழிலதிபராகலாம்

கனவுகளைக் கைப்பற்றுவோம் - 51

Added : ஜூன் 14, 2017
கனவுகளைக் கைப்பற்றுவோம் - 51

விற்பனை என்பது ஒரு கலை. அதில் நுழைய விரும்பும் ஒருவர் கற்பனைத் திறன் படைத்தவராக இருப்பது அவசியம் .விற்பனைத் துறையில் ஒருவர் சிறந்து விளங்கினால் அவர் திட்டமிட்டு தன கற்பனைத் திறனை பயன்படுத்துகிறார் என்று அர்த்தம். இது கவர்ச்சியின் காலம். வியாபார சூழல் மாறும்போது, புதிய யுக்திகள் வேண்டும், அதனை ஒரு கலையால் மட்டுமே கொடுக்க முடியும்.
கோவிலில் பார்த்தால் அங்கு ஐம்பது பேருக்கு மேல் காணப்பட மாட்டார்கள், ஆனால் சொற்பொழிவு நிகழுமிடத்தில் நூற்றுக்கணக்கில் இருப்பார்கள். பொழுதுபோக்கு இடமான கிரிக்கெட் விளையாடுமிடத்தில் பத்தாயிரத்திற்கு மேல் காணப்படுவார்கள். எனவே நம்முடைய கடையும் மக்களை கவர்ச்சி செய்யும் விதமாக அமைந்திருந்தால் தான் மக்கள் அங்கு வருவார்கள். முதலில் நம் கடைக்கு மக்களை ஈர்க்க கவர்ச்சிகரமான விளம்பரம், தோற்றம் அணுகுமுறை மிகவும் அத்தியாவசியம்.
முகப்பும் அமைப்பும்:
கடையின் முகப்பும் அதன் அமைப்பும் கவர்ச்சிகரமாக காணப்படுவதோடு அங்குள்ள தளவாடங்களும் அலமாரிகளும் தூசி படர்ந்திராது தூய்மையாகவும் கண்களைக் கவரும் வண்ணமும் அமைந்திருக்க வேண்டும்.
அலமாரிகளில் சாமான்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டும் கடை தூய்மையற்றும் சாமான்கள் அங்குமிங்கும் சிதறியும் கிடந்தால் சாமான் வாங்க வருபவர்கள் அந்தக் கடையை சந்தேகக்கண் கொண்டு பார்பர் அதனால் அங்கு விற்கப்படும் சாமான்களின் மதிப்புக் குறைய வழி ஏற்படும் ,
சாமான்கள் வகை வகையாகப் பிரிக்கப்பட்டு அவற்றுக்குரிய இடங்களில் வைக்கப்பட்டால் விரைவில் அவற்றை எடுத்துக் காட்ட வசதி ஏற்படுவதோடு ஆண்டுக்கணக்காக அவை கண்ணுக்கு தெரியாது மூலையில் கிடந்து கெட்டுப் போகாமல் பாதுகாக்கவும் முடியும் . அதிகமாக விற்பனையாகும் சாமான்கள் முன்னணியில் மக்களின் கவனத்தைக் கவரும் வகையில் அழகழகாக அடுக்கி வைக்கப்பட வேண்டியது அவசியமாகும் .
கடையானது சாமான் வாங்கவரும் வாடிக்கைக்காரர்களுக்கு மட்டுமல்லாது அங்குள்ள விற்பனையாளர்களுக்கும் வசதியாகவும் காற்றோட்டமுள்ளதாகவும் அமைக்கப்பட வேண்டும் . சில வியாபாரிகள் தங்களுடைய கடைகளை வேண்டுமென்றே அதிக வெளிச்சமில்லாமல் செய்து விடுகின்றனர் , சிறிது குறைவான வெளிச்சத்தில் சாமான்களைக் காண்பித்தால் தான் அவை கவர்ச்சிகரமாகக் தோற்றமளிக்கும் என்பது அவர்களின் எண்ணம். ஆனால் அவையெல்லாம் ஏமாற்று வித்தையேயன்றி வேறில்லை . அவற்றால் கடைக்கு மிகுந்த நஷ்டமே தவிர லாபமில்லை.வர்ணம் , விளக்கு தளவாடங்கள் ஆகியவற்றினால் கடைகளை கவர்ச்சிகரமாக மாற்றுதல் ஆகிய காரியங்களில் ஒரு வியாபாரி கவனம் செலுத்திக் கடையை எவ்வளவு கவர்ச்சிகரமாக வைத்திருக்க முடியுமோ அவ்வளவு கவர்ச்சிகரமாக வைத்திருக்க வேண்டும்.
எண்ணமும் வண்ணமும்:
ஒரு நாள் அமெரிக்காவிலுள்ள சில்லறை வியாபாரி ஒருவரின் மனதில் தீடீரென்று ஒரு எண்ணம் தோன்றியது சாமான்களை அதிக உயரமான அல்லது அதிக தாழ்வான அலமாரிகளில் வைப்பதினால் தமக்கு எவ்வளவு நஷ்டமாகின்றது என்று அவர் தம்மையே கேட்டுக் கொண்டார். அது பற்றி சில சோதனைகள் நடத்திய அவருக்கு அலமாரிகளின் உயரத் தாழ்வானது விற்பனையை எவ்வளவு தூரம் பாதிக்கின்றது என்பது தெரிய வந்தது , சாமான் வாங்க வரும் வாடிக்கைக்காரர்கள் சாமான் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் அலமாரியை நிமிர்ந்தோ அல்லது குனிந்தோ பார்க்கமாட்டார்கள் ஆதலின் சாமான்கள் பார்ப்பதற்கும் எடுப்பதற்கும் வசதியான உயரத்திலுள்ள அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட வேண்டியது அவசியம்
ஒரு வியாபாரி விற்பனையை அதிகரிக்க விரும்பினால் கூடியவரை வாடிக்கையாளர்கள் சாமான்கள் எடுத்து பார்ப்பதை அனுமதிக்க வேண்டும் எனவே சாமான்கள் அவர்கள் கைக்கெட்டும் தொலைவில் வைக்கப்பட வேண்டும் .
கவுன்டரை அதிகமாகப் பயன்படுத்த வேண்டும் , இது வியாபாரத்தை அதிகப்படுத்துவதற்கு ஒரு வழியாகும் . இதைப் பெரும்பாலான வியாபாரிகள் உணராததினால் அவர்களின் வியாபாரம் குறைகிறது . புதிதாகச் சாமான்கள்வரின் அவற்றை அலமாரியில் அடுக்கி வைத்துவிட்டு அலமாரியில் இருக்கும் சாமான்களைக் கௌண்டரில் எடுத்து வைத்து விரைவில் விற்பனையாக வழி செய்ய வேண்டுமேயன்றி புதிய சாமான்களை முதலில் விற்பனை செய்து விட்டுப் பழைய சாமான்களை தங்கிக் கொண்டு வருமாறு செய்து விடக்கூடாது. அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சாமான்களை விடக் கவுன்டரில் வைக்கப்பட்டிருக்கும் சாமான்கள் மக்களின் கவனத்தை விரைவில் கவர்ந்து தங்களை விரைவில் விற்பனையாகும்படி செய்து கொள்கின்றன.
சாமான்களை ஒழுங்கான முறையில் அலங்கரித்து வைத்திருப்பது மிகுந்த விலை மதிப்புள்ள விளம்பரமாகவும் வியாபார உலகிலேயே மிகப் பெரிய விற்பனை முறையாகவும் கருதப்படுகின்றது .
ஒரு கடையை அலங்கரிப்பதற்கு முன் அதனை முன் கூட்டியே ஒரு காகிதத்தில் வரைந்து தெளிவாக திட்டமிட்டு செய்ய வேண்டும் கடையில் பலகாணியில் பிரகாசமான வர்ணங்கள் தீட்டப்பட வேண்டும் மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை அந்தந்த காலத்திற்கேற்ப எவை ஏற்றனவோ அவற்றைக் கொண்டே பலகாணியை அலங்கரிப்பை ஒவ்வொரு நாளும் மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். அவ்விதம் செய்வது தான் கடை உயிரோடிருக்கிறது என்பதன் அறிகுறி .
ஒரு வகை அலங்கரிப்பு மக்களுக்கு பிடிக்காவிட்டால் மற்றொரு வகை அலங்கரிப்பு மக்களை கவரும் . அந்தந்தச் சாமான்களுடன் அவற்றின் முழு விபரமும் விலையும் அடங்கிய கார்டுகள் வைக்கப்பட வேண்டியது அவசியம் . அவ்வாறு செய்தால் விற்பனையாளர்களுக்கு பதில் அந்த கார்டே பேச ஆரம்பித்து விடும் .இவ்வாறு ஒவ்வொரு வியாபாரியும் தங்களுடைய கடையின் அலங்கரிப்பில் அதிகம் கவனம் செலுத்தி தன்னுடைய விற்பனையை அதிகப்படுத்தி வியாபாரத்தை வளம் பெற செய்ய வேண்டியது அவசியத்தின் அவசியம் .
கற்பனை நயம் கல்லா கட்டும்:
கடைகள் நிரம்பிய தெருவில் ஒரு கடையில் விற்பனை நன்றாக நடந்தது மற்ற கடைகளை விடவும் அங்கே வியாபாரம் கூடுதலாக நடக்கும் , அதே நேரம் விலையும் சற்று அதிகமாகவே இருப்பதை மக்கள் உணர்ந்தே இருந்தார்கள் . மற்ற கடைகளுக்குச் சென்றால் குறைந்த விலையில் பொருட்களை வாங்கலாம் என்று தெரிந்தும் ஏன் இங்கே வருகிறார்கள்? உள்ளே சென்று பார்ப்போமே என்று போன பின்பு தான் தெரிந்தது அந்த கடையில் வாங்கிய பொருட்கள் திருப்திகரமாக இல்லையென்றால் பொருட்களுக்குரிய பணம் திருப்பி கொடுக்கப்படும் என்று அறிவிப்பு இருந்தது . அந்தக் கடையின் பொருட்கள் பார்வைக்கு அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது . தெருவில் இருந்தபடியே பொருட்களை பார்க்கும் கண்ணாடி அலமாரிகள் கலை அழகுடன் இருந்தன . பொருட்களும் அதே விதமாக கலை நயத்துடன் காட்சிக்கு அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன பொருட்கள் ஒரு விதமான இணக்கமும் நேர்த்தியும் கலந்து தொகுத்து அடுக்கி வைக்கப்பட்டிருந்தன . அந்த சூழல் ஒரு கற்பனை நயம் கலந்து மனதிற்கு மகிழ்ச்சி கொடுக்க கூடியதாக இருந்தது மற்றொரு முக்கிய காரணம் அங்கிருந்த பணியாளர்கள் பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் இணக்கமாக பேசி உபசரித்து பொருட்களை விற்றார்கள் . அங்கே வாங்கப்படும் பொருட்களை ஒரு விதக் கலைநயத்துடன் பேக்கிங் செய்து கொடுத்தனர் . இந்தக் காரணங்கள் மக்களை கவர்ந்தது என சொல்லவும் வேண்டுமா. தங்களது பொருட்கள் வாடிக்கையாளரின் குணாதிசயத்துக்கும், விருப்பங்களுக்கும் பொருந்துகின்றனவா என்பதையும் அவர் தெரிந்து கொள்வது நல்லது . இவ்வாறான காரியங்கள் செய்வதால் அந்த வாடிக்கையாளரின் ஆதரவை நிரந்தரமாக ஒரு விற்பனையாளர் தக்கவைத்துக் கொள்ள முடியும் .
வாடிக்கைக்காரர்களிடம் கேள்விகள் கேட்டு அவர்கள் கூறுவதைக் காது தாழ்த்திக் கேட்டு அவர்களுடைய நோக்கத்தை அறிந்து அதன் பிரகாரம் விற்பனை செய்ய வேண்டும் அவர்களிடம் எதிர்த்து பேசவோ அலட்சியம் செய்யவோ கூடாது இதனால் ஏராளமான நிரந்தர வாடிக்கைக்காரர்களைப் பெற்றுவிடலாம் . இதன் காரணமாக விற்பனையானது இலகுவான சந்தோசமான விசயமாகிவிடும் .
ஆ. ரோஸ்லின்9842073219aaroseline@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X