நம்பிக்கைகள் நடத்தி வைக்கும்!

Added : ஜூன் 19, 2017
Advertisement
நம்பிக்கைகள் நடத்தி வைக்கும்!

தன்னம்பிக்கை இல்லாதவனின் வாழ்க்கை, காலால் நடப்பதற்கு பதிலாக தலையால் நடப்பதை போன்றது' என்கிறார் எமர்சன். 'நானாவது முன்னேறுவதாவது' என்ற எண்ணம் நமக்குள் தோன்றச் செய்யாமல் இருப்பதில்தான்முன்னேற்றம் இருக்கிறதென உளவியல் ஆய்வாளர்கள்
சொல்கிறார்கள்.

''நம்பிக்கையை
நீங்கள் எங்கு வைத்தீர்கள்?
நரியின் கொம்பில் வைத்தீர்கள்
புலியின் பல்லில் வைத்தீர்கள்
ராசிக்கல்லில் வைத்தீர்கள்
ஜோசியரின் சொல்லில் வைத்தீர்கள்
ஜாதக ஏட்டில் வைத்தீர்கள்
கிளியின் கூட்டில் வைத்தீர்கள்
நம்பிக்கையை நீங்கள்
உங்களுக்குள் வைத்தீர்களா?''

என்று கேட்கிறது ஒரு கவிதை. பாஸ்டர் என்பவர், ''சிலர் தங்கள் முன்னேற்றத்தில் மிக உறுதியான எண்ணத்துடன் ஓர் ஆலமரம் போலிருப்பர். மிகப்பெரும்
புயலாக பிரச்னை வீசினால், வேரோடு சாய்த்து விடுவர். சிலர் நாணல் போல் பிரச்னைகள் எப்படி புயலாக வீசினாலும், இது இயல்பு என அதற்கேற்றபடி வளைந்து தெளிந்து கொடுத்து மீண்டும் தன் எண்ணத்தில் உறுதியில் நிமிர்வர்,'' என்பார்.

ஆங்கில கவிஞர் ஒருவர்கூறுகிறார்.

'தோற்று விடுவோமோ என்று நீ கருதுவாயானால் நிச்சயமாக தோற்றவனே',
உன்னால் ஒரு செயலையும் செய்ய முடியாது என்று நினைப்பாயானால் அக்
காரியத்தை ஒருக்காலும் உன்னால் செய்ய முடியாது. உங்களால் முடியாதென்று நீங்கள் கைவிட்டதை எங்கோ, யாரோ செய்து முடித்திருப்பார்கள். ''தலைவிதியல்ல; தன்னம்பிக்கையே உங்களை உருவாக்குகிறது'' என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

வெற்றி சூத்திரம் : ஒருகாரியத்தை ஆரம்பிக்க உங்கள் மனம் முடிவெடுத்தவுடன் நீங்கள் செய்ய வேண்டியது; முதலில் அது சம்பந்தப்பட்ட துறைக்குரிய விபரங்களை சேகரியுங்கள். பின்னர் அந்த விபரங்களை பற்றி ஆராயுங்கள். ஆராய்ந்த பின் தீர்மானமாக ஒரு முடிவுக்கு வாருங்கள். அந்த முடிவை திடமான நம்பிக்கை யுடன் செயல்படுத்துங்கள்.இது ஒரு வெற்றி சூத்திரம். இதைப்பயன்படுத்தி உங்கள் செயல்களை திட்டமிட்டு செய்து பாருங்கள். தன்னம்பிக்கையுடன் அதை செயல்படுத்துங்கள். எந்த ஒரு காரியத்தை செய்யும்போது, அதைப்பற்றிய மனச்சித்திரம் ஒன்றை அழுத்தமாக உருவாக்கிக்கொண்டால், அதன் விளைவுகள் சிறப்பாக அமைகின்றன. 'முடியும்' என்ற நம்பிக்கையில்லாமல் எந்த காரியமும் முடிவதில்லை.
'முடியும்' என்ற எண்ணமும், கிடைக்கும் என்ற நம்பிக்கையும் மனிதனுக்கு இருக்கிற மிகப்பெரிய சக்திகளாகும். இந்த நம்பிக்கைகள் செய்கின்ற காரியத்தில் ஊக்கத்தை தோற்றுவிப்பதோடு காரியம் நிகழ்வதற்கு சாதகமாக சூழ்நிலையினையும் உங்களுக்கு உருவாக்கி கொடுக்கிறது. பிரிஸ்டல் என்கிற சிந்தனையாளர், தான் எழுதியுள்ள புத்தகம் ஒன்றில் ஒரு சம்பவத்தை குறிப்பிட்டுள்ளார்.கடலில் மீன் பிடிப்பதற்கு பலரும் செல்கிறார்கள். சிலருக்கு மீன் நிறைய கிடைக்கிறது. வேறு சிலருக்கு அவ்வாறு நிறைய கிடைப்பதில்லை. கடலில் ஒரே இடத்தில் இவர்கள் மீன்
பிடிக்கிறார்கள். ஒரே சமயத்தில் மீன் பிடிக்கிறார்கள். ஒரே மாதிரியான உணவை கடலில் வாரி இறைத்துத்தான் மீன்களை பிடிக்க முயற்சிக்கிறார்கள். ஆயினும் சிலருக்கு மட்டும் மீன் நிறைய கிடைக்கிறது. சிலருக்கு அவ்வாறு கிடைப்பதில்லை.

நம்பிக்கையே வாழ்க்கை : சிலருக்கு தொடர்ந்து நிறைய கிடைத்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்று கேள்வி கேட்கின்ற பிரிஸ்டல் யார், யாருக்கு மீன் எப்போதும் நிறைய கிடைக்கிறதோ, அவர்களிடம் தனிமையில் சென்று பேசிப் பார்த்திருக்கிறார்.
அவர் சொன்ன ஒரு விஷயம் அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 'நாங்கள் நிறைய மீன்கள் கிடைக்க வேண்டும் என்ற ஆசையுடன் மட்டும் செல்வதில்லை. நிறைய கிடைக்கும் என்ற நம்பிக்கை யுடனும் செல்கிறோம்'.மீன் அதிகமாக கிடைக்காதவர்களிடமும் பிரிஸ்டல் பேசிப் பார்த்திருக்கிறார். அவர்களுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இருக்கவில்லை என்பதை அவர் தெரிந்துக்கொண்டார்.வாழ்க்கை என்பது நம்பிக்கை யின் மீதுதான் கட்டப்படுகிறது. இந்நம்பிக்கை செயல்படவேண்டுமானால் 'என்னால் முடியும்' என்ற எண்ணத்தோடு தான் நீங்கள் எந்த காரியத்தையும் தொடங்க வேண்டும்.நான் சிலரை பார்த்திருக்கிறேன். ஆக்க ரீதியான கோஷங்களை மேஜையின் முன்னால் எழுதி வைத்திருப்பார்கள். இந்த கோஷங்களை திரும்ப திரும்பப் பார்க்கும்போதும், படிக்கும் போதும் அவர்கள் மனதில் அவை சித்திரமாக படிந்து, செயல்பட அவை அவர்களை ஊக்கப்படுத்துகின்றன.எப்படி பார்த்தாலும் 'முடியும்' என்ற நம்பிக்கையும் அது மனதில் பதியும்போது ஏற்படும் அழுத்தமும் காரிய சாதனைக்கு துணையாயிருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. நடக்கும் என்று நம்பினால் நடக்கும், முடியும் என்று முயன்றால் முடியும்.விதைக்கிறவனே அறுக்கிறான். உழைக்கிறவனே ஊதியம் பெறுகிறான். கேட்கிறவனுக்கே கிடைக்கிறது. உழைக்காமல் எந்தக்காரியமும் நடப்பதில்லை. பலன் கிடைக்க வேண்டுமென்று எண்ணுகிறவன் பாடுபடுகின்றவனாகவும் இருக்க வேண்டும்.

வள்ளுவன் வாக்கு

'மெய்வருத்தக்கூலி தரும்' என்கிறார் வள்ளுவர். உடலை வருத்தினால் அதற்குரிய கூலி கிடைக்கும் என்கிறார் அவர். உழைத்தால் உழைப்பதற்கேற்ற ஊதியம் கிடைப்பது உறுதி
என்கிறார் திருவள்ளுவர். விதியைக்கூட புற முதுகிட்டு ஓடச்செய்துவிட முடியும் என்று வள்ளுவர் சொல்கிறார். சோம்பல் இல்லாமல் தொடர்ந்து முயற்சியை மேற்கொள்கின்றவர்கள் விதியையும் ஓடஓட விரட்டுகின்ற சக்தி படைத்தவர்கள் ஆகி விடுகிறார்கள் என்பது
வள்ளுவரின் கூற்று.

'ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றி
தாழாது உஞற்று பவர்'

என்பது குறள்.எண்ணத்தில் உறுதி இருந்தால் எண்ணிய விஷயங்கள் ஈடேறு கின்றன. நீங்கள் எண்ணுகிறபடியே எல்லாம் நடக்கும். உங்களுடைய எண்ணத்தில் மட்டும் நீங்கள் உறுதியாக இருந்தால் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார். ஆக, ஒன்று நடக்க வேண்டுமென எண்ணுவது மட்டும் போதாது. அந்த எண்ணத்தில் அழுத்தமான உறுதி நமக்கு இருக் வேண்டும்.
'எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின்'

எண்ணத்துக்கு உரியவர்கள் உறுதியான மனப்பான்மை உடையவர்களாக இருந்தால், அவர்கள் எதை எண்ணுகிறார்களோ, அது நிச்சயம் நடக்கும் என்பது வள்ளுவர் வாக்கு.
இந்த கண்ணோட்டத்தோடு வரலாற்றை படித்தால், பல உண்மைகள் தெளிவாகும். உலக அளவில் சாதனைகள் புரிந்தவர்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவர்கள் என்று எண்ண வேண்டாம். நம்மை சுற்றிலும் இருக்கிற சாதனையாளர்கள் அனைவரும்கூட,
நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டு வெற்றி பெற்றவர்களே.மரக்கட்டைகளாலான வீட்டில் குடியிருந்த ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியாகி வெள்ளை மாளிகையில் குடியேறிய வரலாறு அமெரிக்காவில் மட்டும் நிகழக்கூடிய சம்பவம் என்று நாம் கணக்கு போட
வேண்டியதில்லை.ஆகவே எண்ணங்களுக்குள்ள வலிமையை நீங்கள் முதலில் நம்ப வேண்டும். பிறகு உங்கள் எண்ணத்தை செயல்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு
ஏற்பட வேண்டும். இந்த நம்பிக்கை வலிமையாகும்போது, நீங்கள் தானாகவே முயற்சிகளில் ஈடுபடுகிறீர்கள். முயற்சி தொடர தொடர பலன்கள் கிடைக்க ஆரம்பிக்கின்றன. பலன்கள் புதிய நம்பிக்கைக்கு அஸ்தி வாரமாகின்றன. இதுவே ஒரு சக்கர செயல் முறையாகி மேலும் மேலும் வெற்றிகளை குவிக்கும் சக்தி யாக மாற்றம் பெற்று விடுகிறது.எவ்வளவு பாதக மான சூழ்நிலைகளை எதிர்நோக்க வேண்டி இருந்தாலும், ஒரு போதும் அவநம்பிக்கை கொள்ளாதீர்கள். 'முடியாது' என்று சொல்வதற்கு புத்திசாலித்தனம் தேவையில்லை. திறமை தேவையில்லை. முயற்சி தேவையில்லை. உழைப்பு தேவையில்லை.நம்பிக்கையால் மலைகளை அசைக்கலாம். கடல்களை தாண்டலாம். கற்பனைகளை நிஜமாக்கலாம். எண்ணியதை ஈடேற்றிக்கொள்ளலாம். நினைத் ததை முடிக்கலாம். எந்த மனிதனுடைய ஆற்றலும் வெளியிலிருந்து அவனுக்கு கிடைப்பதில்லை.

உங்களால் முடியும் : அவனுக்குள்ளிலிருந்துதான் அதை அவன் பெறுகிறான். அதை பெறுகின்ற ஆசையும் முயற்சியும் அவனுக்கு இருக்க வேண்டும். உங்களால் முடியும் என்று நீங்கள் நம்புங்கள். ஆரம்பத்தில் லேசாக உருவாகும் இந்த நம்பிக்கை காலப்போக்கில் பலமடைய தொடங்கிவிடும்.இப்படி நம்பியவர்கள் மட்டுமே தான் வாழ்க்கையில் முன்னேறி இருக்கிறார்கள். அமெரிக்காவில் ஜான் கென்னடி ஜனாதிபதியாக இருந்தபோது, அவரை சந்திக்க ஒரு இளைஞர் வந்தார். எதிரில்இருந்து இளைஞரை பார்த்து கென்னடி கேட்டார். 'எதிர்காலத்தில் என்ன ஆகலாம் எனத்திட்டமிட்டிருக்கிறீர்கள்'. அந்த இளைஞர் 'பளிச்'சென்று பதில் சொன்னார். 'இப்போது நீங்கள் அமர்ந்திருக்கும் இந்த ஜனாதிபதி இருக்கையில் நான் அமர்வேன் என்ற நம்பிக்கையோடு இருக்கிறேன்'. ஆம்! அந்த இளைஞர்தான் ஜனாதிபதியாக இருந்த பில் கிளிண்டன்.
ஆம். 'முடியுமா என்பது மூடத்தனம் முடியாது என்பது கோழைத்தனம் முடியும் என்பதே மூலதனம்'

முனைவர் இளசை சுந்தரம்
மதுரை. 98430 62817

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X