பெங்களூரு: நோயாளியை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் செல்வதற்காக, ஜனாதிபதியின் கான்வாயை நிறுத்திய போக்குவரத்து போலீஸ்காரரை, பொது மக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், மெட்ரோ ரயில் பசுமை வழித்தட போக்குவரத்தை துவக்கி வைப்பதற்காக, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பெங்களூரு வந்திருந்தார். ஜனாதிபதியின் கான்வாய், கவர்னர் மாளிகை நோக்கி வரும் வழியில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில், போக்குவரத்து போலீஸ், எஸ்.ஐ., நிஜலிங்கப்பா ஈடுபட்டு இருந்தார். அப்போது, ஏற்பட்ட வாகன நெரிசலில், நோயாளியை ஏற்றி வந்த ஒரு ஆம்புலன்ஸ், மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் சிக்கியது. இதைப்பார்த்த நிஜலிங்கப்பா, ஜனாதிபதியின் கான்வாயை நிறுத்தி, ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தினார்.
ஆம்புலன்ஸ் செல்வதற்காக, தைரியமாக, ஜனாதிபதியின் கான்வாயை நிறுத்திய நிஜலிங்கப்பாவை, பொது மக்கள் பாராட்டினர். ஜனாதிபதி வரும் நேரத்தில், சாமர்த்தியமாக செயல்பட்ட, எஸ்.ஐ., நிஜலிங்கப்பாவை, பெங்களூரு நகர போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டி, பரிசு வழங்கினர்.