பொது செய்தி

தமிழ்நாடு

வைகை அணைையை தூர் வாருவோம்

Added : ஜூன் 21, 2017 | கருத்துகள் (4)
Advertisement
வைகை அணைையை தூர் வாருவோம்

ஆண்டிபட்டிக்கு அருகே நரசிங்கபுரத்தில்,வைகை ஆற்றின் குறுக்கே 3 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பில், காமராஜர் ஆட்சியில், வைகை அணை கட்டப்பட்டு 1959 ஜூன் 21ல் திறக்கப்பட்டது. 111 அடி உயரம் கொண்டது.

அணை நீர்த்தேக்கம் 71 அடி. இருபுறமும் மண் மலைகளை இணைத்து 1,035 அடிக்கு கருங்கற்கள் சிமென்ட் கான்கிரீட் கலவையில் அணை கட்டப்பட்டது. வலது பக்கம் 8,860 அடி நீளம், இடது பக்கம் 1,780 அடி நீளம் கொண்டது. 7 அணை மடைகள், உபரி நீர் வெளியேற 7 மடை கண்கள் கொண்டு அமைக்கப்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலையை அரணாக கொண்டது வைகை அணை. வருஷநாடு, மூல வைகை, தேனி முல்லையாறு, போடி கொட்டக்குடியாறு, முல்லை பெரியாறு, பெரியகுளம் வரட்டாறு ஆகியவை வைகையின் முக்கிய நீராதாரம். வருஷநாட்டில் இருந்து வைகை அணை அருகே குன்னுார் வரை 30 கிலோ மீட்டர் துாரம் சமவெளியில் நீர் பாய்ந்து வைகை அணையை அடைகிறது.

வைகையின் நீர்ப்பிடிப்பு பகுதி 5,980 ஏக்கர். அணை கட்டும்போது 6,879 மில்லியன் கன அடி வரை நீர் தேக்கப்பட்டது (ஒரு கன அடி 25.39 லிட்டர். 10 லட்சம் கன அடி என்பது ஒரு மில்லியன் கன அடி). நீர் வரத்து 2,253 ச.கி.மீ., வைகை ஆற்றின் நீளம் 258 கி.மீ. பாசனப் பரப்பு 7031 ச.கி.மீ., மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் வைகை அணை உள்ளது.

மழைக்காலம் மற்றும் வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் மட்டும் வைகை ஆற்றில் நீர்ப்பெருக்கு ஏற்படும். அணையில் இருந்து 288 கி.மீ., துாரம் பயணித்து ராமநாதபுரம் மாவட்டம் பெரிய கண்மாயை நிரப்பி உபரி நீர் வங்காள விரிகுடாவின் பாக் ஜலசந்தியை அடைகிறது.


'வண்டல்' ஆபத்து


முல்லை பெரியாறு அணை மலைகளின் சூழலில் அமைந்துள்ளதால் வண்டல் மண் சேராது. வைகை அணை சமவெளியில் அமைந்துள்ளதாலும், வருஷநாட்டில் இருந்து அணை வரை சமவெளியில் வைகை ஆறு ஓடுவதாலும் வண்டல் இயற்கையாகவே அணைக்கு வந்து சேர்கிறது. அணை திறக்கப்பட்டு 57 ஆண்டுகள் கடந்து விட்டது. இதன் விளைவு அணைக்குள் 1,134 மி.க.அ., வரை வண்டல் சேர்ந்திருப்பதாக 2013ல் அண்ணா பல்கலை நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

அணைக்குள் வண்டல் மண் சேர்வது புற்றுநோய்க்கு சமமானது என பொதுப்பணித்துறை வல்லுனர்கள் கூறுகின்றனர். வண்டல் மண் அள்ள வேண்டும் அல்லது புதிய அணையை 1,460 கோடி ரூபாய் மதிப்பில் கட்ட வேண்டும் என ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.


'வாப்காஸ்' ஆய்வு


வைகை அணையில் வண்டல் மண் அகற்றுவது குறித்து மத்திய அரசு சார்பில் 'வாப்காஸ்' (வாட்டர் அண்ட் பவர் கல்சல்டன்ஸி லிமிடெட்) 2015ல் ஆய்வு நடத்தியது. சராசரியாக 1.33 மீட்டர் அளவுக்கு அணைக்குள் வண்டல் படிந்திருப்பதாக தெரிவித்தது. தலா 66 கோடி ரூபாய் மதிப்பில் மூன்று கட்டங்களாக ஒன்பது ஆண்டுகளுக்குள் வண்டல் மண்ணை முற்றிலும் அகற்றலாம்
என பரிந்துரைத்துள்ளது. நீர் நிலைகளில் இருந்து விவசாய தேவைக்கு வண்டல் மண் அள்ள
அரசு அனுமதிக்கிறது.


வண்டல் 'அரசியல்'


வைகை அணை வண்டலை 2012ல் அகற்ற, அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம் முயற்சி எடுத்தார். தென் மாநிலம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்த தனியார் கனிம வள நிறுவனங்கள் ஆர்வம் காட்டியது. அணையில் அள்ளப்படும் வண்டல் மண்ணை அங்கேயே வைத்து தரம் பிரித்து, வண்டல் மண் விவசாயத்திற்கும், ஆற்று மணல் மற்றும் கூழாங்கற்கள் கட்டுமானத்துக்கும் பயன்படுத்த திட்டமிட்டன.

'வண்டலில் வளமான வாழ்வு' இருப்பதை உணர்ந்த நிறுவனங்களுக்குள் போட்டி நிலவியது. தமிழக தனியார் கனிம வள நிறுவனங்கள், வெளி மாநில நிறுவனங்களுக்கு வண்டலை அள்ள விடாமல் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி முடக்கினர். எனினும் இவர்களுக்குள் ஏற்பட்ட 'உள்குத்து' வேலைகளால் வண்டல் அள்ளும் திட்டம் பல ஆண்டுகளாக தரிசாகவே கிடக்கிறது. வண்டலை அகற்றும்படி 1980ல் இருந்து விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


என்ன செய்யலாம்


வண்டல் மண் அள்ள 2012ல் அரசு அனுமதி வழங்கியதையடுத்து மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட விவசாயிகள் 1200க்கும் மேற்பட்டோர் வைகை அணை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். வண்டல் அள்ள 198 கோடி ரூபாய் ஒதுக்கும்படி மதுரை கோட்ட பொதுப்பணித்துறை நீர் வள ஆதார அமைப்பு அரசிடம் பரிந்துரை செய்துள்ளது.

இப்பணியை 2017 - 20, 2021 - 24, 2025 - 28 என மூன்று பகுதியாக மேற்கொள்ள இலக்கு நிர்ணயித்துள்ளது. அணையில் இருந்து 10 கி.மீ., தொலைவில் இருக்கும் விவசாயிகளின் நிலங்களில் வண்டல் அள்ளும் ஒப்பந்ததாரர் மூலம் இலவசமாக கொட்டுவதா, 10 கி.மீ., தொலைவிற்கு மேல் உள்ள விவசாயிகள் தங்களின் சொந்த செலவில் எடுத்து செல்ல அனுமதிப்பதா, முதற்கட்டமாக
அள்ளப்படும் வண்டலை, அணையின் நீர்ப்பிடிப்பு அல்லாத பகுதியில் குவித்து வைத்து பின் எடுத்து செல்வதா என்பது குறித்து பொதுப்பணித்துறை அரசின் உத்தரவுக்காக காத்திருக்கிறது.


கைப்பிடி மண்


வைகை அணை நீர் மட்டம் 71 அடி. நீர் தேக்கப் பகுதியில் 24 அடி வரை சேறும், சகதியுமாக
உள்ளது. வைகை அணைக்குள் வைகை ஆறு பள்ளமான பகுதியில் ஓடுகிறது. எனவே ஆற்றின்
இருபுறமும் பக்கவாட்டு பகுதியில் இருந்து வண்டல் அகற்றப்படும்போது நீர்ப்பிடிப்பு பகுதி விரிவடையும். ஆனால் அணை கட்ட ஆற்றின் இருபுறமும் நிலம் கொடுத்தவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். அணையில் நீர் இல்லாதது ஆக்கிரமிப்பு விவசாயிகளுக்கு லாபம். இவர்கள், அணைக்குள் துார் வார எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இவர்களுக்கு பயந்து நீர் தேக்கம் பகுதியை தவிர்த்து நீர் தேங்காத பகுதியில் வண்டல் அள்ளுவதால் பயனில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


'துார் வாரும் திட்டம் நிறைவேற 56 லட்சம் லாரிகள் தேவைப்படும்'


பெரியாறு வைகை வடி நில மதுரை கோட்ட செயற்பொறியாளர் எஸ்.சுதந்திர அமல்ராஜ் (ஓய்வு):

அணைகளின் நீர் கொள்ளளவு குறித்து சென்னை பூண்டியில் உள்ள 'வாட்டர் ெஷட் மேனேஜ்மென்ட் போர்டு' ஆய்வு செய்கிறது. இது, வைகை அணை நீர் கொள்ளளவு குறித்து 1976, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் ஆய்வு செய்தது.

அடுத்தடுத்த ஆய்வுகளின் முடிவுகள் அணைக்குள் வண்டல் கூடுதலாக சேர்ந்திருப்பதை கண்டறிந்தது. 2013ல் அண்ணா பல்கலை சார்பில் வைகை அணை நீர் கொள்ளளவு குறித்து ஆய்வு செய்தது. இதன்படி அணை கட்டும்போது நீர் கொள்ளளவு 6,879 மி.க.அ.,யாக இருந்தது. 2013ன் ஆய்வில் 5,745 மி.க.அ.,யாக குறைந்துள்ளது. இதன் வேறுபாடு 1,334 மி.க.அ., என்ற அளவில் உள்ளது. அதாவது 1.01 டி.எம்.சி., அளவுக்கு வண்டல் சேர்ந்துள்ளது. இதன்படி 16.47 சதவிகிதம் தண்ணீர் அளவு குறைந்துள்ளது.

அணையின் தண்ணீர் அளவுக்கு ஈடாக வண்டல் அளவு இருக்கும். வண்டல் அளவு குறையும் போது அதே அளவுக்கு தண்ணீர் அளவு அதிகரிக்கும். அணைக்குள் ஆண்டு தோறும் வண்டல் கூடி கொண்டே செல்கிறது. மேட்டூர் அணையில் வண்டல் சேர்ந்தாலும், அணையை மேலும் 10 அடிக்கு உயர்த்தி கட்டும் வகையில் பிரிட்டீஷார் அணையை வடிவமைத்துள்ளனர்.

வைகை அணை சமவெளியில் இருப்பதால் துார் வாருவது கட்டாயம். 1000 மி.க.அ., அளவுக்கு துார் வாரம்போது கிடைக்கும் வண்டல் மண்ணை ராமநாதபுரம் பெரிய கண்மாய் போல் இரண்டு கண்மாய்களில் கொட்டினால் நிரம்பி விடும்.

வைகை அணையில் அள்ளப்படும் வண்டல் மண்ணை கொட்ட இடம் தேர்வு செய்ய வேண்டும். லாரிகளில் அகற்றும்போது, லாரி ஒன்றுக்கு இரண்டு யூனிட் (200 கன அடி) வண்டல் வீதம் 1130 மி.க.அ.,க்கு 56 லட்சம் லாரிகள் தேவை. விவசாயிகள் தங்களின் தேவையான அளவு மட்டுமே வண்டல் அள்ளுவர். அதுவும் வசதியுள்ள விவசாயிகள் மட்டுமே வண்டல் அள்ள முன் வருவர்.


போராட்டம் உறுதி


நடைமுறை சிக்கல்களை தீர்த்து, தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளுடன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இதற்காக ஐந்து மாவட்ட விவசாயிகள் சார்பில் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பழனிச்சாமி

மாநில தலைவர், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம்மக்கள் இயக்கமாக மாற்றுவோம்


மேட்டூர் அணையில் இருந்து வண்டல் அள்ள விவசாயிகளுக்கு அரசு அனுமதி வழங்கிஉள்ளது. எனவே வைகையில் இருந்தும் அள்ள அனுமதி வழங்க வேண்டும் அல்லது அரசு சார்பில் துார் வார நடவடிக்கை எடுக்க வேண்டும். துார் வாரும் போது அணையின் இரண்டு மாதத்திற்கு தேவையான தண்ணீரை சேமிக்க இயலும். துார் வாரும் பணியை மக்கள் இயக்கமாக மாற்றுவோம்.

பெருமாள்

தேசிய செயலாளர் பாரதீய கிசான் சங்கம்73 கிராமங்கள் தேர்வு


வைகை அணை துார் வாரும் பணியை தலா 66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்க அரசு அனுமதிக்காக கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. அரசு உத்தரவுக்கு பின் 2017 - 18 ம் ஆண்டு முதற்கட்ட பணி துவங்கும். சேகரிக்கப்படும் வண்டல் மண் 73 கிராமங்களில் உள்ள விவசாயிகளின் நிலத்தில் கொட்ட அரசின் வழிகாட்டுதல்படி முடிவு செய்யப்படும்.

சுப்பிரமணியன்

செயற்பொறியாளர்

பெரியாறு வைகை வடி நில மதுரை கோட்டம்வறட்சியை பயன்படுத்திவண்டல் மண் அள்ளலாம்


மத்திய அரசின் நதிநீர் இணைப்பு கமிட்டி உறுப்பினர் ஏ.சி. காமராஜ் கூறியதாவது:

வைகை அணை மொத்த கொள்ளளவு 72 அடி(ஆறு டி.எம்.சி.,). இதில் ஒரு டி.எம்.சி., அளவுக்கு வண்டல் மண் உள்ளது. வண்டல் மண்ணை அள்ள 182 கோடி ரூபாயில் திட்டம் செயல்
படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் வறட்சியில் தண்ணீர் இல்லாததை பயன்படுத்தி துார் வாருவது நல்லது. தண்ணீர் இல்லாத பகுதிகளில் மணல் அள்ளும் இயந்திரங்களை கொண்டு வண்டல் மண்ணை அள்ளலாம். தண்ணீரில் மூழ்கும் நவீன இயந்திரங்களை கொண்டு வண்டல் மண்ணை தண்ணீருடன் வெளியேற்றலாம். இதன் மூலம் ஆற்றில் தண்ணீர் செல்லுமிடங்களுக்கு வண்டல் மண்ணும் அடித்து செல்லப்பட்டு விடும். வண்டல் மண்ணை அனைத்து விவசாயிகளும் எடுத்து செல்ல அரசு அனுமதியளிக்க வேண்டும் என்றார்.


பொதுமக்களே... அணையை துார்வார இணைவோம்


கனமழை பெய்தால், வைகை அணையில் முழுமையாக நீர் தேக்க ஒரே வழி துார்வாருவது தான். பல்லாண்டாக இழுத்துக்கொண்டிருக்கும் இப்பிரச்னைக்கு முடிவு கட்ட பொதுமக்கள் ஒரு இயக்கமாக ஒன்றிணைய வேண்டும். பொதுமக்கள், கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் குழுக்களாக சேர்ந்து துார் வார களமிறங்க வேண்டும்.

அனைவரும் ஒன்றிணைந்து இரவு, பகல் பாராது குழுக்களாக களமிறங்கினால் வண்டல் மண்ணை வெளியேற்றி விடலாம். இதுபோன்ற மக்கள் இயக்கம் உருவாக தேனி, மதுரை கலெக்டர்கள் ஒத்துழைக்க வேண்டும். அரசும் அனுமதி வழங்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22-ஜூன்-201717:13:28 IST Report Abuse
நாஞ்சில் நாடோடி ஒரு அணையை பராமரிக்க கூட அரசால் இயலவில்லை...
Rate this:
Share this comment
Cancel
babu - Nellai,இந்தியா
22-ஜூன்-201712:23:54 IST Report Abuse
babu " பொதுமக்கள், கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் குழுக்களாக சேர்ந்து துார் வார களமிறங்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து இரவு, பகல் பாராது குழுக்களாக களமிறங்கினால் வண்டல் மண்ணை வெளியேற்றி விடலாம் " இதனை கேட்க நன்றாக உள்ளது. எவராவது வருவார்களா............. நிறைய படித்த, கொஞ்சம் படித்த, படிக்காத எல்லாருக்கும் வெளி நாடு போகணும், கை நிறைய சம்பாதிக்கணும், வெளி நாட்டில் வெள்ளை அடிச்சு, கழிவறை கழுவும் வேலை பார்த்தாலும் விடுமுறைக்கு என் தாய் நாட்டிற்கு வந்து அங்கிருந்து வாங்கிட்டு வந்த பொருட்களை வைத்துக்கொண்டு ஏழை மக்கள் முன் பந்தா காட்டுதல், நம் தாய் மண்ணை கேவலமாக பேசுதல் போன்ற இழிவான செயல்களை செய்வதை தானே வாடிக்கையாக கொள்வார்களே தவிர நம் மண்ணை தூர்வார எவரும் வர மாட்டார்கள்...............இதனால் நமது அரசும் கண்டும் காணாதது போலவே உள்ளது.... ஊர் கூடி உண்ண வேண்டும் என்பதை மறந்து இப்பொழுது ஊரை விட்டு ஓட வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் வளர்ந்து விட்டது. இதற்கு காரணம் வேலையில்லை என்பது தான். சென்னை போன்ற பெருநகரங்களில் தான் வேலை வாய்ப்பு என்றால் பேசாமல் அமைதியாக அனைத்து ஊர்களையும் மதுரை, கோவை, நெல்லை என்பதற்கு பதிலாக சென்னை, சென்னை, சென்னை என்றே அழைக்கலாமே..... அப்படியாவது எங்கள் ஊர் பக்கம் வேலை வாய்ப்பு பெருகும் என்ற ஒரு நம்பிக்கை தான் எங்களுக்கு......?
Rate this:
Share this comment
Cancel
Prabaharan - nagercoil,இந்தியா
22-ஜூன்-201710:56:11 IST Report Abuse
Prabaharan ஒவ்வொரு வருடமும் தூர் வாரினால் இந்த அளவு பிரச்னை இருக்காது. பிரச்னையை தினம் ஆக்கினால் தானே காசு பார்க்க முடியும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X