சுற்றுச்சூழல் என்பது நம்மைச் சுற்றியிருக்கும் காற்று மண்டலம், நீர் நிலைகள், மரங்கள், விலங்குகள் மட்டுமல்லாது நாம் வசிக்கும் வீடுகள், சந்தைகள், பள்ளிகள், பூங்காக்கள், மருத்துவ
மனைகள் என அனைத்துமே ஒருங்கிணைந்ததுதான் சுற்றுச்சூழல். சுற்றுச்சூழல் என்பது ஓர் உயிரினத்தைச் சுற்றியுள்ள இயற்கைச் சூழலை குறிக்கிறது. மாறியும் மாறாமல் நிலைத்தும் இருக்கின்ற பலவகைத் தோற்றங்களைக் கொண்டுள்ள இயற்கை, மனித வாழ்க்கையிலிருந்து தவிர்க்க முடியாதது.
ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் தினம், ஒரு கருப்பொருளை மையப்படுத்தி ஆண்டுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. இவ்வருடத்திற்கான கருப்பொருள் 'மக்களை இயற்கையோடு இணை' என்பதாகும்.
வாழ்க்கை முறை
நம் முன்னோர்கள் இயற்கை யோடு ஒன்றி பிணைந்து வாழ்ந்துஉள்ளனர், இயற்கை வளங்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் ஊறு விளைவிக்காமலும் அவற்றை பாதுகாக்கும் செயல்களையும் செய்து வந்துள்ளனர். நமது நெல்வயல்கள் அறுவடைக்குத் தயாரான உடன் ஒரு நல்ல தினத்தை பார்த்து அன்றைய தினத்தில் கதிர் அறுவடை மேற்கொள்வர். இரண்டு அல்லது மூன்று கைப்பிடி அளவு கதிர்களை அறுவடை செய்துஅருகிலுள்ள காவல் தெய்வத்தின் பூடங்களிலும் வீட்டின் முன்பும் கட்டி வைப்பர். அது சிட்டுக்குருவி போன்ற பறவைகளுக்கு இரையானது. இன்று இம்முறை நடைமுறையில் இல்லை. சிட்டுக் குருவிகள் குறைந்ததற்கு அலைபேசி கோபுரங்களை காரணமாகச் சொல்கிறோம்.
வீட்டு முற்றங்களில் மாட்டுச்சாணி அல்லது மஞ்சள் கரைத்து தெளித்து அரிசி மாவினால் கோலமிட்டு எறும்புகளுக்கு உணவு அளித்தனர். ஆனால், இன்று வண்ண வண்ண பொடிகளால் கோலம் இடப்படுகிறது. இதனால் யாருக்கு லாபம். குழந்தைகள் விளையாட நுங்கு வண்டி, களி மண் பொம்மைகளை அவர்களே உருவாக்கினர். இன்று பெரும் பாலான விளையாட்டுப் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு ஊறு விளைவிக்கும் பாலிதீனால் ஆனது. முன்பு மிட்டாய்களும், கருப்பட்டிகளும் பனை ஓலை பெட்டியில் பொதிந்து தரப்பட்டன. இவ்வாறு ஒவ்வொரு நடவடிக்கைகளும் இயற்கைக்கு ஆதரவானதாக இருந்தது நம் முன்னோர்களின் வாழ்க்கை முறை. ஆனால், இன்று நவீனமயமாக்கலாலும், தொழில்துறை வளர்ச்சியாலும் இயற்கையை மறந்து இயற்கை வழங்கும் சேவைகளையும் கருத்தில் கொள்ளாமல் இயற்கைக்கு எதிரான நடவடிக்கைகளில் மனிதகுலம் ஈடுபடுகிறது.
இன்றைய சமூகம்
இன்றைய சமூகம் இயற்கை யுடனான தொடர்பற்று உள்ளது. தற்போதுள்ள மாணவர்கள் சிங்கம், ஒட்டகச் சிவிங்கி, காண்டாமிருகம் போன்ற விலங்குகளை அறிந்து உள்ளனர். ஆனால், நமது காடுகளில் உள்ள கருங்குரங்கு,சிங்கவால் மந்தி, காட்டு மாடு போன்ற விலங்குகளை அவர்கள் அறிந்திருக்கவில்லை. நம்மில் பல பேர் நமது மாநில மலரான செங்காந்தள் மலர், மாநில பறவை மரகத பச்சைப்புறா மற்றும் மாநில விலங்கான வரையாட்டை பார்த்து
இருப்பார்களா.
நமது வீட்டுக்கு பின்புறம் உள்ள குளங்களில் உள்ள பறவைகள் மற்றும் சுற்றியுள்ள மரங்கள் குறித்த விபரங்களோ அல்லது புரிதல்களோ இன்றைய தலை முறையினருக்கு இல்லை. வெளிநாட்டு பறவைகள் வேடந்தாங்கல், கூந்தன்குளம் போன்ற சரணாலயங்களில் கூடு கட்டி இனப் பெருக்கம் செய்கின்றன என்ற செய்திகளை படித்திருப்போம். ஆனால், அங்கு கூடு கட்டி இனப்பெருக்கம் செய்வது நமது உள்ளூர் பறவை இனங்கள். திடீரென்று வண்ணமயமான பறவை கூட்டங்களை கண்டவுடன், வெளிநாட்டு பறவைகள் என நினைக்கிறோம். 'ஆஸ்திரேலியா ஆந்தை பிடிபட்டது' என்றுசெய்திகளை பார்ப்போம்; ஆனால், அது நமது ஊரில் பாழடைந்த கட்டடங்களில் வசிக்கும் 'கூகை'. நாம் எந்த அளவுக்கு நம்மை சுற்றியுள்ள உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறோம் என்பதை இது தெரியப்படுத்துகிறது.
என்ன செய்ய வேண்டும்
பள்ளி பாடப்புத்தகங்களில் நமது காடுகளில் உள்ள உயிரினங்களைக் குறித்த பாடங்கள்
வைக்கப்பட வேண்டும். அவ்வப்போது அவர்களைக் காடுகள் மற்றும் அருகிலுள்ள குளங்களுக்கு அழைத்துச் சென்று அங்கு உள்ள தாவரங்கள், விலங்குகள்,
பறவைகள் இன்னபிற உயிரினங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.
இன்றைய நகர மக்களின் வாழ்க்கை இயற்கையுடனான எந்த ஒரு பிணைப்பும் இல்லாமல் உள்ளது. வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஜன்னல்கள் இல்லை, பகல், இரவு அவர்
களுக்கு தெரிவதில்லை. அனைத்து நேரங்களிலும் மின்விளக்குகள் மற்றும் கணினியுடன் அவர்கள் வாழ்வை நடத்துகின்றனர். விடுமுறை தினங்களில் திரையரங்குகள், பேரங்காடி
களுக்குச் சென்று பொழுதை போக்குகின்றனர்.
நம்மில் எத்தனை பேர் குயிலின் பாட்டை ரசித்திருப்போம். மயிலின் ஆடலைக் கண்டிருப்
போம். காடுகளில் உள்ள மந்திகளின் மரத்தாவல்களைக் கண்டதுண்டா, வண்ணத்துப் பூச்சிகளின் வண்ணங்களை ரசித்ததுண்டா, வண்டுகளின் ரீங்காரங்களை கேட்டதுண்டா, இரவில் வெளிவரும் ஆந்தைகளின் கண்களைக் கண்டதுண்டா, பழந்தின்னி வவ்வால்களை பார்த்ததுண்டா, ஆற்றில் துள்ளித்தாவும் மீன், தவளைகளை கண்டிருப்போமா? இவ்வாறு இயற்கை யுடன் எந்த உறவும்இல்லாமல் இருப்பது மிகவும் ஆபத்தான விஷயம்.
அறிந்து கொள்ளுங்கள்
விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் அருகில்உள்ள காடுகள், குளங்கள், வயல் வெளிகள், தேசிய பூங்காக்கள், மிருக காட்சி சாலைகளுக்கு சென்று அங்குள்ளஉயிரினங்களைக் கண்டு
களியுங்கள். நம் மாநிலத்தில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், முதுமலை வன உயிரினசரணாலயம், விருதுநகர் மாவட்டத்தில் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம், கூந்தங்குளம் பறவைகள் சரணாலயம், வேடந்தாங்கல் பறவைகள்
சரணாலயம், வடுவூர் பறவைகள் சரணாலயம், கோடியக்கரை வனவிலங்குகள் சரணாலயம், வல்லநாடு வெளிமான் சரணாலயம் போன்ற 29 வன உயிரின சரணாலயங்கள் உண்டு.
இந்த ஒவ்வொரு சரணாலயங்களிலும் அதற்கே உரித்தான தாவர மற்றும் விலங்கினங்கள் பல உள்ளன. இதுபோக பறவைகள் மிகுந்த எண்ணற்ற நீர்நிலைகள், காடுகள், பழந்தின்னி வவ்வால் தங்குமிடங்கள், உயிரினங்கள் மிகுந்த புல்வெளிகள் என அதிகமான பல்லுயிர் வாழுமிடங்களை நமது மாநிலம் கொண்டுள்ளது.
நீங்கள் இது போன்ற இடங்களுக்கு உங்கள் குழந்தைகளுடன் சென்று அங்குள்ள உயிரினங்கள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.ஒரு உயிரினம் குறித்த தகவல் தெரியும் போது மட்டுமே அதை பாதுகாக்க வேண்டும் என கரிசனம் நமக்கு தோன்றும். இந்த உயிரினங்கள் இருந்தால் மட்டுமே, இப்பூமியில் மனித இனம் வாழ முடியும். 'காக்கை குருவி எங்கள் ஜாதி; நீர் மலையும் கடலும் எங்கள் கூட்டம்' என்ற பாரதியின் பாடலுக்கேற்ப இயற்கையுடன் இணைந்த வாழ்வை, மனிதன் வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.
-மு. மதிவாணன்
ஒருங்கிணைப்பாளர்
அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம் மணிமுத்தாறு. 94880 63750