மனிதர்களைப் படியுங்கள்| Dinamalar

மனிதர்களைப் படியுங்கள்

Added : ஜூன் 28, 2017 | கருத்துகள் (4)
 மனிதர்களைப் படியுங்கள்

எதிரிகளாகவும் துரோகிகளாகவும் நாம் பார்ப்பவர்களே நம்முடைய வளர்ச்சிக்கு நிச்சய மாக மறைமுக காரணமாகஇருப்பார்கள் என்பதை மறக்க முடியாது. உண்மையில் நமக்கு எதிராக யாராவது பேசினால் அவர்களை தண்டித்தாக வேண்டும், இல்லையெனில் குறைந்தபட்சம் அவர்கள் உறவையாவது துண்டித்தாக வேண்டும் என்றே மனம் நினைக்க ஆரம்பிக்கிறது. அவர்கள் ஏதாவது ஒரு வகையில் நம்முடைய வளர்ச்சிக்கு தடையாக இருப்பார்கள் என்றே மனம் நினைக்க ஆரம்பிக்கிறது. அவர்களைவிட்டு விலகி நிற்க மனம் விரும்புகிறது. இப்படிப்பட்ட மனநிலையில் இருப்பவர்கள் ஒருபோதும் தன் நிலையினையும் தனது வலிமையையும் உணர மாட்டார்கள்.
தன்னோடு இருப்பவர்கள் சொல்லும் பாராட்டையே வேதமாக எண்ணியிருப்பவர்கள் கிணற்றுத் தவளையாகவே வாழ்ந்து விட்டுப் போய்விடுவார்கள். நம்மோடு இருப்பவர்கள் நமது மனம் கோணக்கூடாது என்பதற் காக சொல்லும் ஆறுதலைவிட, நாம் செய்யும் சிறிய தவறுகளைக் கூட உடனடியாக சுட்டிக்காட்டி நம்மை எப்போதும் இயக்கத்தி லேயே வைத்திருக்கும் எதிரிகள் நல்லவர்கள்தான்.
கற்றுக்கொள்வோம்
பொருட்களைப் பயன்படுத்துவது போலவே மனிதர்களையும் பயன்படுத்த தொடங்கியுள்ளோம். நம்மையறியாமல் நாம்வைத்திருக்கும் விலையுயர்ந்த பொருட்களை விட மலிவானவர்களாக மனிதர்களை நினைத்துவிட்டோம். அவர்களை நாம் துாக்கி சுமப்பது அவர்கள் பெற்றவர்களாக இருந்தாலும் அதை சுமையாக கருதும் நிலை நோக்கி பயணிக்கிறோம் என்பதே நாம் அறிந்துகொள்ள வேண்டிய உண்மை. எல்லா மனிதர்களிடமிருந்தும் கற்றுக் கொள்ள வேண்டிய அம்சம் ஏதாவது உள்ளது என்ற எண்ணம் நமக்கு எற்படும்போதுதான்
உறவுகள் மீதும் நண்பர்கள் மீதும் அளவற்ற அன்பு ஏற்படுகிறது. இங்கே அனைவரும் சுயநலவாதிகள் இல்லை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்களிடம் கடுஞ்சொற்கள்
காட்டாமல் ஆறுதலாகவும் அன்பாகவும் பேசும்போது அவர்களை அறியாமல் நம்மிடம் அடங்கி விடுகிறார்கள்.சிலர் எத்தகைய சிக்கலானசூழலாக இருந்தாலும் எளிமையாக வெளியே வந்துவிடுகிறார்கள். வெகுசிலரோ எத்தகைய நல்ல சூழலையும் சிக்கலாக மாற்றிவிடுகிறார்கள். நம்மையறியாமல் நாம் சொல்லும் சொற்களோ, செய்யும் செயல்களோ அடுத்தவர்களைக் காயப்படுத்திவிடுகிறது. எல்லா மனிதர்களிடம் இருந்தும் நல்லவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். நமக்கான படிப்பினைகளும் போதனைகளும் அடுத்தவர் களிடம் இருந்து கற்றுக் கொள்வதில் இருந்தே நமக்கான வளர்ச்சி உறுதி செய்யப்படுகிறது. சின்ன சின்ன விஷயங்கள் என்பது கற்றுக் கொள்ள எளிதாக இருப்பதோடு மட்டுமல்லாமல், அதனை நாம் செயல்படுத்தும்போதே நம்முடைய ஆளுமைத்திறன்கள் வெளிப்பட தொடங்குகிறது. நுால்கள் தாண்டி மனிதர்களிடம் படிக்க ஏராளமானது உள்ளது. பெரிய தலைவர்கள் எல்லாம் நிச்சயமாக தங்களோடு அறிவு நிறைந்த சான்றோர்கள் பலரையும் வைத்
திருந்தார்கள். உண்மையில் அவர்கள் மனிதர்களோடு கலந்து அவர்களின் இயல்பான முகங்களை அறிமுகம் செய்து வைக்கிறார்கள்.பீர்பால், முல்லா, தெனாலிராமன், மரியாதை ராமன் உள்ளிட்ட அனைவரும் மனிதர்களோடு கலந்து, அவர்களின் உணர்வுகளை மன்னர்களுக்கு கடத்துபவர்களாக இருந்தனர். அவர்களை மன்னர்கள் தங்களுக்கு நிகரான மரியாதையோடு நடத்திட ஆணையிட்டு தங்களோடு இணைத்துக் கொண்டனர்.


மனிதனின் தனித்தன்மை


ஆயிரம் நுால்கள் தராதஅனுபவத்தைஒற்றை மனிதன் தந்துவிடுவான்(சதா பாரதி)மனிதர்களால் நிரம்பியது பூமி என்பதைவிட நல்ல மனங்களால் நிரம்பியது என்றால், அதற்கு ஒரு கூடுதல் தகுதி கிடைக்கும். இவ்வுலக உயிரினங்களில் குறைவான சதவிகிதமாக இருந்தாலும் தன்னுடைய அறிவால் இந்த உயிரினக் கூட்டத்திற்கே தலைவனாக இருக்கும் பெருமை மனிதனுக்குரியது. ஆனாலும், மிருகங்களுக்குள் இல்லாத பல அறிவீனமான செயல்களும் பொறாமைகளும்
மனிதர்களிடையே மிக அதிகமாகவே காணப்படுகிறது. நம்மோடு பழகும் மனிதர்களைப் புரிந்து கொள்வது நாம் படித்து பட்டம் பெறுவதைவிட கடினமான ஒன்றாகவே இருந்து வருகிறது.
ஒவ்வொரு மனிதரும் தனக்கே உரித் தான தனித்தன்மையோடும் சுய மரியாதையோடும் இயங்குவது அவசிய மான ஒன்றாக இருந்தாலும், அது
அடுத்தவர்களை பாதிக்காத வகையிலும் இருத்தல் நல்லது.நாம் சொல்வதை நமக்கு கீழே உள்ளவர்கள் கேட்க வேண்டும் என்ற மனப்பான்மையே தவறான ஒன்று. அதைவிட நான் சொல் வதை மட்டுமே கேட்க வேண்டும் என்ற நிலை சர்வாதிகாரத்தின் உச்சகட்டம். சக மனித நேசிப்பு இன்றி நம்மோடு உலவும் மனிதர்களை நாம் நெருங்கிவிட முடியாது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதரும் ஏதாவது ஒரு புதிய
அனுபவத்தை நமக்கு கற்றுக் கொடுத்துவிட்டு செல்கிறார்கள். அது காதல், நட்பு, துரோகம், மகிழ்ச்சி, ஏமாற்றம், நம்பிக்கை என்று ஏதாவது ஒன்றைத் தருகிறது. அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டவற்றை வாழ்நாளில் நாம் பயன்படுத்தி நடந்தாலே வாழ்க்கை ஒரு அழகிய பயணமாக மாறிவிடும்.
சக உயிரி நேசிப்பு

'காக்கை குருவி எங்கள் சாதிநீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்'என்பான் நம் பாட்டன் பாரதி. சக மனித நேசிப்புஎன்பதையெல்லாம் தாண்டி சக உயிரி நேசிப்பு என்பதை தனது வாழ்நாள் கொள்கையாகவே நினைத்தவன். உண்டு, உறங்கிக்கழிவதல்ல வாழ்க்கை. இருக்கும் வரையிலும் இறந்த பின்னரும் பிறர் பாராட்டும்படியான வாழ்க்கை சிலருக்கே சாத்தியமாகிறது. மற்ற வர்கள் வேடிக்கை மனிதர்கள் போலவே வீழ்ந்து போகிறார்கள். தன்னால் இயன்றளவு வாழ்க்கையை பிறருக்கு பயன்படும்படி யாக வாழ்பவர்களே வாழ்வை வென்றவர்களாக வலம் வருகிறார்கள். அற்ப விஷயங்களுக்காக கூட அடுத்தவரோடு சண்டை
போடுபவர்களால் எப்படி உலக சமாதானம் பற்றி பேச முடியும்.


ஜப்பானியர் உழைப்பு


மனித உழைப்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை என்பதை உலகத்திற்கே இன்றளவும் உணர்த்திக் கொண்டிருப்பவர்கள் ஜப்பானியர்கள். தன்னை விட வலிமை வாய்ந்த நாட்டு மக்கள் எல்லோரும் வியந்து பார்க்கும் அளவிற்கு அவர்களின் வளர்ச்சி இருக்கிறது. உண்மையிலே அவர்களைவிட உழைப்பாளர்களாகவும், அறிவில் சிறந்தவர்களாகவும் விளங்கிவரும் நம்முடைய தேசத்தின் மக்கள் பல நேரங்களில் தங்களுக்குள் ஏற்படும் பிளவுகளால் பிரிந்து நிற்கின்றனர். ஆனால் இத்தகைய வலிமை மிக்க தேசத்தை ஒன்றிணைத்து போராட வைத்த பெருமை மகாத்மாவைச் சாரும். அவர் மனிதர்களைப் படித்த மாமேதை. தன்னுடைய வாழ்நாளில் எத்தனையோ துன்பங்களைச் சந்தித்தாலும் அதையும் தாண்டி வரலாற்றில் நிற்கும் மனிதனாக மகாத்மாவாக மாறியதற்கு காரணம், அவர்கள் சந்தித்த
மக்களைப் பற்றி அவருக்கு இருந்த புரிதலே ஆகும்.ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் மனிதர்கள் நம்மைஏதாவது ஒரு வகையில் பாதித்துவிடுகின்றனர். நம்முடைய வாழும் வாழ்க்கை அர்த்தமுடையதாக மாறும்போதுதான் நாம் கடந்த
மனிதர்கள் நம்மை தலைநிமிர்ந்து பார்ப்பார்கள் என்பது உண்மை. பல நேரங்களில் மனக்காயங்களால் நாம் துாக்கி எறியப்பட்டாலும் அவசரப்பட்டு அவர்களுக்கு பதில் சொல்லாமல் நமது செயல்களால், நாம் வாழும் வாழ்க்கையால் அழகிய பதிலை அனைவருக்கும் கொடுக்க முடியும் என்பதே வெற்றி யாளர்களின் வேதம்.


நடிப்பு வாழ்க்கை


மற்றவர்களைப் போலவே நாமும் வாழ வேண்டும் என்ற ஆசையில், நம்முடைய சுயத்தை தொலைத்து வெறும் நடிப்பையே வாழ்க்கையாக நினைக்கிறோம். நமக்கான வாழ்வினை நம்மைத் தவிர வேறு யாராலும் சிறப்பாக வாழ்ந்திட இயலாது என்ற உண்மையை உணர்ந்து கொண்டு
வாழ்தலே அவசியமான ஒன்றாகும்.நண்பர்களின் மீதும் உறவுகள் மீதும் நம்பிக்கை வைப்பதேநமக்கான மிகச்சிறந்த குணமாகும். உங்களில் எத்தனை பேர் முதலில் உங்கள் மீது நம்பிக்கை வைத்து
உள்ளீர்கள். நம்மீதும் நம்முடைய செயல்கள் மீதும் யாருக்கு நம்பிக்கை வருகிறதோ அவர்கள்தான் மற்றவர்களை நம்புவார்கள்.நம்மோடு பழகும் நண்பர்கள் நமக்கு துரோகம் செய்கையில் நமது மனம் அனைவரையும் சந்தேகப்பட ஆரம்பிக்கிறது. அந்த நிலையில்தான் நாம் சற்று கவனமாக செயல்பட தொடங்க வேண்டும். நிச்சயமாக அவர்கள் நமக்கு செய்தது துரோகம் என்று தெரிந்தாலும், அதை அப்படியாக ஏற்று புலம்பிக் கொண்டிருப்பதைவிட அதை ஒரு அழகிய அனுபவமாக மாற்றிக் கொண்டு அடுத்த முறை நமக்குள் அந்த தவறு நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும். மனிதர்கள்
வித்தியாசமாக இருப்பதுதான் அவர் களுடைய குணமே. எல்லோரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்றபடி அவர்களுடைய சிந்தனைகளுக்கு தடைபோட முடியாது. அவர்கள் மீதும் அவர்களுடைய
திறமைகள்மீதும் நம்பிக்கை வைத்து அவர்களை பாராட்டினாலே அவர்களுடைய செயல்கள் இன்னும் வலிமையாக இருக்கும்.-முனைவர் நா.சங்கரராமன்பேராசிரியர்எஸ்.எஸ்.எம்., கலை அறிவியல் கல்லுாரி, குமாரபாளையம்99941 71074

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X