தன்னம்பிக்கை விதைகளை விதைப்போமா...

Added : ஜூன் 30, 2017
Advertisement
தன்னம்பிக்கை விதைகளை விதைப்போமா...

இந்த உலகின் வெற்றியாளர்கள் அனைவருக்கும் பணம் இருந்ததோ இல்லையோ, குடும்பச்சூழல் நன்றாக இருந்ததோ இல்லையோ, ஒன்றே ஒன்று நிச்சயமாக இருந்தது; அது தன்னம்பிக்கை.தன்னம்பிக்கை என்பது ஆற்றல் வாய்ந்த சிறப்பியல்பு; அது உங்களை ஊக்குவிக்கும்; உள்ளாற்றலை மேம்படுத்தும். தன்னம்பிக்கை என்பது உங்கள் திறமையின் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கை. நீங்கள் விழுகிற ஒவ்வொரு முறையும் உங்களை எழுந்து நிற்க செய்வது உங்கள் தன்னம்பிக்கை தான். வெற்றிக்கும், சாதனைக்கும் தன்னம்பிக்கை வேண்டும்.
தன்னம்பிக்கை என்பது ஒவ்வொருவரின் இயல்பு என்றும், இயல்பாகவே தன்னம்பிக்கை இல்லாதவர்கள் அதை உருவாக்கி கொள்ள முடியாது என்றும், எண்ணிக் கொண்டிருந்தால் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.உங்களுக்கு சொந்தமான சிறந்த அம்சங்களில் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையே உங்கள் தன்னம்பிக்கை. உங்கள் தன்னம்பிக்கையே உங்கள் வாழ்வை வடிவமைக்கிறது.

உங்களை நம்புங்கள் : உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும் எனில் முதலில் உங்களை நம்புங்கள். அடுத்து உங்களை சுற்றியிருப்பவரை நம்புங்கள். பிறகு கடவுளிடம்
நம்பிக்கை வையுங்கள்.உங்கள் முதலடியை நம்பிக்கையுடன் நீங்கள் வைப்பீர்களேயானால் உலகத்தின் நெடுஞ்சாலைகளை எல்லாம் நடந்து முடிந்தாகி விடும். உங்கள் வாழ்க்கை என்பது ஒரு நெடும் பயணம். நீங்கள் பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் துாரம் பயணிக்க வேண்டும் என்றாலும் முதல் அடியை எடுத்து வைத்து தான் அப்பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். அந்த முதல் அடியை எடுத்து வையுங்கள். இன்று முதல் நீங்கள் தன்னம்பிக்கையான மனிதர் தான்.
நம்புவதற்கான வழித்தடங்கள் மகிழ்ச்சியையும், வெற்றியையும் பெறக்கூடிய தகுதி
உங்களுக்கு இருப்பதாக நம்ப துவங்குகள். சுயமாக சிந்திக்கவும், செய்து முடிக்கவும், பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், தேவையான ஆற்றல் உங்களுக்கு இருப்பதாகவும் நம்புங்கள். நாம் மற்றவர்களால் ஏற்கப்படுவோம்; மதிக்கப்படுவோம் என்று நம்புங்கள்.நம்மால் எதையும் செய்ய முடியும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் சுயமரியாதை உடையவர் தாம்.
நீங்கள் சுயமரியாதை காட்ட துவங்கி விட்டால் இதுவரை உங்களிடமிருந்த அச்சமும்,
தயக்கமும் உங்களை விட்டு நீங்கி விடும். உங்கள் திறமைகளில் ஆற்றல்களில் நம்பிக்கை உடையவராயிருங்கள். செயலாற்றலில் நான் தான் அதிகம் உள்ளதில் என்னுடையது தான் என்ற நம்பகத்தன்மையை பெறுங்கள்.

நேர்மறை சிந்தனை : தன்னம்பிக்கையை வளர்க்கும் குணம் நேர்மறை சிந்தனைக்கு உண்டு. ஒரு வகுப்பாசிரியர் கண்ணாடி டம்ளரில் பாதி நீர் நிரப்பி எடுத்து வந்தார். பிறகு மாணவர்களிடம்,''இங்கு என்ன இருக்கிறது,'' என்றார். ஒரு மாணவர், ''இந்த டம்ளரின் பாதி தண்ணீரால் நிரப்பப்பட்டிருக்கிறது,'' என்றார். மற்றொரு மாணவர், ''இந்த டம்ளரில் பாதி காலியாக உள்ளது,'' என்றார். இரு மாணவர்களில் யார் தன்னம்பிக்கை மிகுந்தவர்கள் என்பது உங்களுக்கு புரிந்து விடும்.''எது இல்லை என்று சிந்திப்பதை விட்டு விட்டு எது இருக்கிறது,'' என்பதை நினைப்பது தான் ஒருவரது தன்னம்பிக்கையின் அடையாளம்.பொதுவாக மனித மனம் நல்ல விஷயங்களை கவனிப்பதை விட தீய விஷயங்களை கவனிப்பதில் தான் அதிக ஆர்வம் காட்டுகிறது. தன்னம்பிக்கையை சிதைத்து விடுவதை யாரும் புரிந்து கொள்வதே இல்லை.ஒரு பழமொழி உண்டு. 'பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும்' 'நீ எதை எண்ணுகிறாயோ அதுவே நிகழ்கிறது' என்கிறது பகவத்கீதை. நீங்கள் ஒரு விஷயம் குறித்து நல்லதாக நினைக்கும் போது உங்கள் எண்ணங்கள் பிரபஞ்சத்திலுள்ள பேராற்றலை இழுத்து நல்லதையே நடத்தி தருகிறது.உன்னால் முடியும் என்று நீ நினைத்தால் அது சரிதான்.உன்னால் முடியாது என்று நீ நினைத்தால் அதுவும் சரிதான்.

இலக்குகள் : உங்களின் மகத்தான இலக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும் என்பதற்கு மாற்று கருத்து இருக்க முடியாது. பயிற்சிக்காக சிறு சிறு இலக்குகளையும், நீங்களே உருவாக்கி கொள்ளுங்கள். அந்த இலக்குகள் எளிதாக அடைய முடிந்ததாக இருக்கட்டும். இது உங்களுக்கு உபரியான ஆற்றலை தரும்.உதாரணமாக ஒரு மாணவர் 100 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை தேர்விற்காக படிக்க வேண்டும். அப்புத்தகம் படிக்க நான்கு நாட்கள் அவகாசமுள்ளது. இப்போது இதன் சிறு இலக்கு 25 விழுக்காடு பாடங்களை படித்து முடிப்பது தான். நான்கு நாட்களில் முழுப்புத்தகத்தையும் படித்து விட முடியும் என்ற தன்னம்பிக்கையை தந்து விடும். தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டுமானால், நல்லதொரு குறிக்கோளை உருவாக்கிடல் வேண்டும். குறிக்கோள், தன்னம்பிக்கையை வளர்க்கும் என்பதற்கு மாற்று கருத்து இருக்க முடியாது.
இடுப்பிற்கு கீழே முழுவதும் உணர்வற்று போன பின்பும் ஜோனி என்ற பெண் மிகச்சிறந்த ஓவியராக பெயர் எடுத்தார். பெரிய ஓவியராக வேண்டும் என்று ஜோனியிடம் தோன்றிய குறிக்கோளே அவருக்கு தன்னம்பிக்கையை கொடுத்தது.தவழ்ந்து கொண்டிருக்கும் சிறு குழந்தையினுள் தோன்றும், எழுந்து நடக்க வேண்டும் என்ற குறிக்கோள் அல்லது உந்துதலே அக்குழந்தையினுள்எழுந்து நடக்கும் தன்னம்பிக்கையை தருகிறது. காந்தியை இங்கிலாந்து பிரதமர் அரை நிர்வாண பக்கிரி என்று கூறியபோதும், அது பற்றி சிறிதும் கவலைப்படாமல் வட்ட மேஜையின் மாநாட்டில் தன் கருத்துக்களை ஆழமாக பதிவு செய்தார். ஒருவனை தன்னம்பிக்கையாக திகழ வைக்கும் ஆற்றல் நல்ல குறிக்கோளுக்கு எப்போதும் உண்டு. நம்முடைய சிந்திக்கும் முறை நம்முடைய மனதை ஆற்றல் மிகுந்ததாக மாற்றுவதுடன் ஆழ்மனதையும் துாண்டி விடுகிறது. நமது எண்ணங்கள் மாறும் போது நம்மை சுற்றியுள்ள அனைத்தும் நம் தன்னம்பிக்கை
அதிகரிக்கும் விதமாக மாறி விடுகிறது.

திறமை : திறமையும், தன்னம்பிக்கையும் நேர்கோட்டில் பயணிப்பவை. திறமை என்பது நாம் பார்க்கும் துறையில் அடைந்துள்ள செயல் திறன் தான். நம்முடைய திறமையை வளர்த்து கொண்டே ஆக வேண்டும். போட்டி மிகுந்த தன்னம்பிக்கையை அதிகரிக்க மட்டுமல்ல. நீங்கள் வெற்றி பெறவும் தான்.நமக்குள்ள பெரிய வேலைகளை பிரித்து சிறு, சிறு வேலைகளாக மாற்றி ஒவ்வொன்றாக முடித்து வந்தால் நம்முன் தன்னம்பிக்கையையும் அதிகரித்து செயல் திறனும் அதிகரிக்க இயலும். சுயக்கட்டுப்பாடு தன்னம்பிக்கைக்கு எதிரானது அல்ல. அது தன்னம்பிக்கையுடன் இணைந்து பயணிப்பது, தன்னம்பிக்கையை அடையாளங் காட்டுவது, தன்னம்பிக்கையை வளர்ப்பது.தன்னம்பிக்கை, மனதில் நாம் விதைக்கும் எண்ணங்களால் வளரும் பயிர்.

நேர்மை : தன்னம்பிக்கையும் கம்பீரமும் தன்னால் வந்து விடுகிறது. சிங்கத்திற்கும் நரிக்கும் உள்ள வேறுபாட்டை பார்த்தால் அது புரியும் என்கிறார், விவேகானந்தர். சிங்கம் தான் வேட்டையாடிய உணவை தான் உண்ணும். ஆனால் நரியோ மற்ற விலங்குகள் வேட்டையாடிய உணவை திருடி தின்னும் வழக்கம் உள்ளது. அதனால் நரி எப்போதும் தலையை தாழ்த்தி அவநம்பிக்கையுடன் செல்கிறது. ஆனால் சிங்கம் தன்னம்பிக்கையுடன் நடை போடுகிறது. நாளும் தன்னம்பிக்கை விதைகளை விதைப்போம் தன்னம்பிக்கை எனும் சுடரொளி வாழ்வில் மின்ன வாழ்நாள் முழுவதும் மகிழ்வுடன் வாழ்வோம்.

-சு.இலக்குமணசுவாமி,
எழுத்தாளர், மதுரை.
97897 88989.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X