அரசு வணிகம் செய்தால் அனர்த்தம் விளையும்| Dinamalar

அரசு வணிகம் செய்தால் அனர்த்தம் விளையும்

Added : ஜூலை 01, 2017 | கருத்துகள் (4)
Share
  அரசு வணிகம் செய்தால் அனர்த்தம் விளையும்

'அரசு வணிகம் செய்தால் அனர்த்தம் விளையும்'சாணக்கியர் - அர்த்தசாஸ்திரம்சாணக்கியர், 2000 ஆண்டு முன்பே தீர்க்க தரிசியாக இதைக் கூறினார்.தமிழ்நாடு போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் ஓடுகிறது; பஸ் டிக்கெட் விற்பனை, வருமானத்தில், 51 சதவீதம், சம்பளமாகவே போகிறது.தேவைக்கு மேல் ஆளெடுப்பு; ஒவ்வொரு ஆளெடுப்புக்கும் கல்லா கட்டுவது. இது தான் அத்துறையினரின் தொழில்.
இதனால், இன்று நஷ்டத்துக்கு மேல் நஷ்டம்; பல பஸ் வழித்தடங்கள்நிறுத்தப்பட்டுள்ளன; ஓட்டை பஸ்கள், எல்.எஸ்.எஸ்., ஆக ஓடுகின்றன.இந்தியாவில், மூன்று அதிக கடன் உள்ள அரசு நிறுவனங்களில் ஒன்று என்ற அவப்பெயரை, தமிழ்நாடு மின் வாரியம் சம்பாதித்திருக்கிறது. 2014ல், 80 ஆயிரம் கோடி ரூபாய் கடன் எட்டியது.
இந்தாண்டு இது, லட்சம் கோடியைத் தாண்டி விடும். கொள்முதலில் இருந்து, சப்ளை வரை ஊழல்; சோலார், காற்று மின்சாரம் இயந்திரங்கள் போடுபவருக்கும், எண்ணற்ற தடங்கல்கள்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிர்வாகம் செய்யும், பால் வளத்துறையின் ஆவினை எடுத்துக் கொள்வோம். தனியார் பாலில் விஷம் என, நஞ்சை கக்கினார்.
'தனியார் பாலில், ரசாயனம் கலக்கப்படுகிறது; இதனால் குழந்தைகளுக்கு கேன்சர் வரும்; பாலை வெளியே வைத்து, ஐந்து மணி
நேரத்தில் கெட்டுப் போனால், அது தான் ஆவின் பால்'என்றார்.

சென்னையில் பதப்படுத்தப்பட்ட ஆவின் பால், வெவ்வேறு பகுதிகளில் விற்பனை செய்வதற்காக, இரவு, 11:00 மணியில் தொழிற்சாலையில்
இருந்து, 'டெலிவரி' செய்யப்படுகிறது.ரோடு ஓரங்களில் 'கிரேடு'களில் பால் இறக்கி போடப்பட்டு, காலை, 8:00 மணி வரை விற்கப்படுகிறது. ஒன்பது மணி நேரம் வெளியில் இருந்தும் கெடவில்லை என்றால் என்ன காரணம்? உண்மை நிலையை யோசிக்க உங்கள், 'சாய்சு'க்கு விட்டு விடுகிறேன். ஒன்பது மணி நேரம், ஆவின் பால் வெளியில் வைக்கப்படுவது அமைச்சருக்கு தெரியுமா?
தனியார் நிறுவனங்கள், தங்கள் பால் கெடாமல்இருக்க, பாலை, குளிர்பதனவண்டிகளில் அனுப்புகின்றன.தனியார் பாலில் ரசாயனம் கலக்கப்படுகிறது என்பதை, கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் கூறுவதாகவும், தனியார் பால்களின், 'சாம்பிள்' புனே பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பியுள்ளதாகவும், 'ரிசல்ட்' வந்த உடனே நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் கூறினார்.
'தனியார் நிறுவனங்கள், தங்கள் பாலில் ரசாயனம் கலக்கவில்லை என நிரூபித்தால், நான் பதவியை ராஜினாமா செய்கிறேன்' என்றார்; 'தற்கொலை செய்து கொள்ளவும் தயார்' என்றார்.
புனே பரிசோதனைக் கூடமோ, '2016க்கு பின், தமிழகத்திலிருந்து எந்த பால் சாம்பிளும் வரவில்லை' என, மறுத்து விட்டது.

இறுதியில், 'முதல்வர் நடவடிக்கை எடுப்பார்' என நழுவிவிட்டார்; ஏனெனில், ஆதாரம்எடுக்க முடியவில்லை.ஆறு மாதங்களாக, ஆவினில் நடக்கும், சின்ன சின்ன மாற்றங்களையும், பூதக்கண்ணாடி வைத்து, மிகப்பெரும் சாதனை போல் காட்டி, மூன்று நாளுக்கொரு முறை விழா நடத்தி,
பத்திரிகைகளுக்கு செய்தி அனுப்பி, விளம்பரம்தேடிக் கொண்டது தான் மிச்சம்!எந்த விதமான சான்றும் இன்றி, இவர் அள்ளி தெளித்த குற்றச்சாட்டை, தனியார் பால் நிறுவனங்கள் கண்டித்தன. தனியார் பால் நிறுவனங்களின் எதிர்ப்பு அறிக்கைக்கு பின், 'சில தனியார் நிறுவனங்கள் தப்பு செய்வதில்லை; பல தப்பு செய்கின்றன' என்றும், மறு அறிக்கை கொடுத்தார்; மறுப்பு வலுப்பெற, அதற்கு அடுத்த அறிக்கையில், 'சில நிறுவனங்கள் மட்டுமே கலப்படம் செய்கின்றன' என்றார்.அதுமட்டுமல்லாமல், தனியார் நிறுவனங்கள், தயிரிலிருந்து பால் தயாரிக்கின்றன என்றார். தயிரிலிருந்து எப்படி பால் தயாரிக்க முடியும்? அடிப்படை கூட தெரியாமல் பேசிய அவரை என்னவென்று சொல்வது! பால் விலையை விட, தயிர் விலை கூடுதல்;
அப்படி இருக்கையில்,நஷ்டத்தை நோக்கி, யாரும் பயணிப்பரா?தயிரிலிருந்து, பால் தயாரிப்புக்கான உலக காப்புரிமை, அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மட்டுமே சொந்தம் என, கொடுக்கப்பட வேண்டும். இவரே உணவுத் துறை அமைச்சராக இருந்தால், தோசையிலிருந்து, தோசை மாவு, பூரியிலிருந்து கோதுமை மாவு, சமைத்த ஆட்டுக்கறியில் இருந்து, ஆடு தயாரித்து, உலக அளவில் புகழ் பெற்றிருப்பார்.
'உலக மகா விஞ்ஞானி'களின் வரிசையில், இவரும் ஒருவராகி இருப்பார்!இவரின் இத்தகைய பேச்சுக்கள், இவருடைய உண்மையான உள்நோக்கம் என்ன என்ற சந்தேக கேள்விகளை
எழுப்புகின்றன.'அமுல்' நிறுவனம்,
சிறப்பாக இயங்கும் கூட்டுறவு நிறுவனம். விவசாயிகளுக்காக, விவசாயிகளால் நடத்தப்படும் நிறுவனம். அங்கே, அரசு
அதிகாரிகளோ, அமைச்சர்களோ நிர்வாகம் செய்வதில்லை.உலக வங்கியிலிருந்து, 'அமுல்' நிறுவனத்தைக் கண்காணிக்க வந்திருந்த ஜப்பான் நாட்டு பிரதிநிதி, அதன் செயல்பாடுகளைக் கண்டு வியப்படைந்தார். 10 நாள் கண்காணிப்பு முடிந்து, நாடு திரும்புவதற்கு முன், 'உங்கள் நாட்டில், நல்ல திறமைசாலிகள் இருந்தும், நாடு ஏன், உங்கள் நிறுவனத்தை போல் முன்னேறவில்லை?' என, கேள்வி கேட்டாரே பார்க்கணும்... அதிகாரிகளால் பதில் சொல்ல முடியவில்லை!
அந்த பிரதிநிதியே, 'உங்கள் நாட்டில் அறிவாளிகளும், திறமைசாலிகளும் கொட்டி கிடக்கின்றனர்; ஆனால், திறமையற்ற, மெத்தனமான அரசு தலைமை பொறுப்பு அதிகாரிகளும், ஊழல் செய்யும் அரசியல்வாதிகளும் தான், உங்கள் நாட்டின் கொடிய சாபம்...' என்றார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன், டேங்கர் மூலம்
ஆவினுக்கு பால் சப்ளை செய்தவர், பாதிப் பாலை வெளியே எடுத்து விட்டு, மீதிக்கு தண்ணீர் ஊற்றி, ஆவினிடம் கொடுத்தார். கொள்முதல் பிரிவு, உற்பத்தி பிரிவு, தரக் கட்டுப்பாடு, விற்பனை
எல்லைப் பிரிவுகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டு, தண்ணீர் கலந்து, தரம் குறைந்த பால், ஆண்டுக்கணக்கில் மக்களுக்குக் கொடுக்கப்பட்டது.இன்றைக்கு பால் வளத்துறை அமைச்சர், புத்தரைப் போல் பேசுகிறார். தண்ணீர் கலந்து விற்றவர், அ.தி.மு.க., வைச் சேர்ந்தவர் என்பதால், 'அவருக்கு தெரியாமல், டிரைவர், தண்ணீரை கலந்திருக்கிறார்' என, 'டிவி'யில் பேட்டி கொடுத்து தப்பித்து, இப்போது தத்துவம் பேசுகிறார்.
போக்குவரத்து கழகம் மற்றும் மின் வாரியத்தைச் சேர்ந்த அதிகாரிகளும்,அரசியல்வாதிகளும் அவர்கள் துறையை மட்டும் கெடுத்து, சாதனை செய்தனர்.
ஆனால், தயிரிலிருந்து, பால் தயாரிக்கும் கலை தெரிந்த,விஞ்ஞான அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, புதிய சாதனை ஏற்படுத்த துடிக்கிறார். தன்னை சார்ந்த ஆவினையும் கெடுத்து, தனியார் பால் துறையையும், உபயோகிப்பாளரையும், உற்பத்தியாளர்களையும் முதுகில் குத்துகிறார்.
கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குக்கு பதிலளித்த, தமிழக சுகாதார துறை செயலர், 2011ல் இருந்து, இன்று வரை, 800க்கு மேற்பட்ட சாம்பிள்கள் தனியார் பால் நிறுவனங்களில் இருந்து எடுக்கப்பட்டதாகவும், ஒன்றிலும் ரசாயன கலப்பு
இல்லை என்றும் கூறி விட்டார்.அப்படியென்றால், அமைச்சரின் குற்றச்சாட்டின் உண்மையான காரணம் அவருக்குமட்டுமே தெரியும் என்றாகிறது.

இதை விடுங்கள்...அமைச்சர் குறை சொல்லியும், ஒன்றிரண்டு பால் நிறுவனங்களை தவிர, மீதி கம்பெனிகள் ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை? பால்வளத் துறை அமைச்சர் பதவியின் அதிகாரத்தின் கீழ், ஆவின் மட்டு
மல்லாது, பிற தனியார் பால் கம்பெனிகளும் வருகின்றன.போட்டியாளரே தீர்ப்பு சொல்லும் இடத்தில் இருப்பதனால், தனியார் நிறுவனங்கள் ஒன்றிரண்டு தவிர, மீதி நிறுவனங்கள், பதில் சொல்ல தயங்குகின்றன அல்லது
தொந்தரவு செய்வர் என, பயப்படுகின்றன.சமீபத்தில், 'ரிலையன்ஸ், நெஸ்லே' கம்பெனியின், 'டெய்ரி வைட்டனரை' ஆய்வு செய்ததாகவும், அதில்,
காஸ்டிக் சோடா மற்றும் பிளீச்சிங் பவுடர் இருப்பதாகவும், அமைச்சர் கூறுகிறார்;
ஆய்வகபரிசோதனை ரிப்போர்ட்டில், அப்பொருட்கள்இருப்பதாக கூறப்படவில்லை.மேலும், அந்த ஆய்வகமே, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., என சொல்லப்படும், இந்திய
அரசின் உணவுப் பரிசோதனை ஆய்வகத்தில் அங்கீகரிக்கப்படவில்லை என, தெரிகிறது. பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை, ஆதாரம் இல்லாமல் சொல்லி விட்டு, தன்னை நியாயப்படுத்த, எவரையாவது பலி கடா ஆக்க முயற்சி செய்கிறார்.
தமிழகத்தில், ௨ கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது; பக்கத்து மாநிலமான கேரளாவின் பாதி தேவையை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் பூர்த்தி செய்கின்றனர்.
அமைச்சரின் பேச்சு பால் உபயோகிப்போரையும், உற்பத்தியாளரையும் பாதிக்கிறது; பக்கத்து மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், நம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாலை, தரக்குறைவாக நினைக்க வழி செய்துள்ளார்.
ஆந்திராவும், தெலுங்கானாவும், தொழில் முனைவோரை ரத்தினக் கம்பளம் போட்டு வரவேற்கின்றன. இங்கு, தொழில்முனைவோருக்கு அரசு இயந்திரம் உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை; உபத்திரவம்செய்யாமல் இருந்தால் நல்லது.கை அரிக்காமல், உபத்திரவம் செய்யாமல், இனியாவது இருப்பரா அமைச்சர்கள்?
ஜப்பான் பிரதிநிதி சொன்னது போல அரசியல்வாதியும், அதிகாரியும் இல்லையென்றால், நிறுவனம், உபயோகிப்பாளர், உற்பத்தியாளர் அனைவருக்கும், நல்லது நடக்கும்.
ஆவின் என்ற நிறுவனத்திலிருந்து, அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் வெளியேற்றப்பட வேண்டும். விவசாயிகளே அவர்கள் பிரதிநிதிகளை வைத்து, அமுல் நிறுவனத்தை போல் நடத்த வேண்டும்
அல்லது ஆவின் நிறுவனம் மூடப்பட வேண்டும்.ஏர் - இந்தியா நிறுவனத்திற்கு, சர்வதேச விமான போக்கு வரத்து மார்க்கெட் பங்கு விகிதம், 2 சதவீத அளவில் உள்ளது. 2014ல், உலக அளவில் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் பட்ட நஷ்டத்தில், 20 சதவீதம், ஏர் இந்தியாவுக்கு மட்டுமே சொந்தமானது.
இன்று, மத்திய அரசு, அரசு நிறுவனமாக இருந்த ஏர்இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது; தைரியமான முடிவு இது. அதேபோல், மாநில அரசும், ஆவின் குறித்து புத்திசாலித்தனமாகமுடிவெடுப்பது நல்லது.சாணக்கியர் சொன்னது போல், அரசு வணிகம் செய்தால், அனர்த்தம் விளைகிறது!
ஆர். நரசிம்ம கண்ணன், சமூக சிந்தனையாளர், இ-மெயில்:rnklavan@yahoo.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X