தமிழ்நாடு

ரூ.11.5 கோடியில் பிரமாண்ட "ஸ்டார்' கற்கள் கொண்டு மீன்பிடி துறைமுக "வார்ப்' பலப்படுத்தும் பணி தீவிரம்

Added : பிப் 03, 2011
Share
Advertisement

கடல் சீற்றத்திற்கு பாதிக்காத வகையில், சென்னை மீன் பிடி துறைமுக "வார்ப்' பகுதியை 11.5 கோடி ரூபாய் செலவில் பலப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக பிரமாண்ட "ஸ்டார்' கற்கள் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. சென்னை மக்களின் மீன் தேவையை பூர்த்தி செய்வதோடு, வெளிநாடு ஏற்றுமதி மூலம் அன்னிய செலாவணியை ஈட்டித் தருவதில், சென்னை காசிமேடு மீன் பிடி துறைமுகம் பெரும் பங்கு வகித்து வருகிறது. ஆயிரத்துக்கும் மேலான விசைப் படகுகள், ஏராளமான பைபர் படகுகள் மூலம் மீன் பிடி தொழில் மும்முரமாக நடந்து வருகிறது. இங்கிருந்து வெளி மாநிலங்களுக்கு மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இத்துறைமுகத்தின் விசைப் படகுகள், பைபர் படகுகள் துறைமுக "வார்ப்' பகுதியில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இந்த "வார்ப்' பகுதி அப்பகுதி மக்களின் பொழுது போக்கு இடமாக மட்டுமின்றி, சினிமா படப்பிடிப்பு தளமாகவும் விளங்கி வருகிறது. கடந்த 2004ல் நடந்த சுனாமி பேரழிவின் போது, துறைமுக பகுதி மிகவும் சிதிலமடைந்தது. "வார்ப்'பைச் சுற்றிப் போடப்பட்ட
தடுப்புக் கற்கள் சரிந்து கடலுக்குள் மூழ்கின. இதனால் போதிய ஸ்திரத்தன்மை இன்றி "வார்ப்' ஒற்றையடிப் பாதை போல மாறிப் போனது. இதைத் தொடர்ந்து துறைமுக வார்ப்பை பலப்படுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டது. வார்ப் முழுவதும் கான்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 11.5 கோடி ரூபாயில் வார்ப்பை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக, ஒவ்வொன்றும் 15 டன் எடை கொண்டதாக, 850 ராட்சத நட்சத்திர கற்கள் (ஸ்டார் கற்கள்) தயாரிக்கப்பட்டன. ஏற்கெனவே உள்ள நட்சத்திரக் கற்களையும் சேர்த்து துறைமுக வார்ப், 125 மீட்டர் தூரம் பலப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப் பணிகள் மார்ச் மாதத்தில் நிறைவடையும் என தெரிகிறது. ஆனால், மீன்பிடி துறைமுகத்தை 20 கோடி ரூபாயில் மேம்படுத்தும் திட்டம் இன்னும் கிடப்பில் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


"ஸ்டார்' அந்தஸ்து ஏன்? : சென்னையில் கடலரிப்பு தடுப்பு பணிக்கு ஆரம்பத்தில் வீராணம் குழாய்கள் பயன்படுத்தப்பட்டன. பின், பாறாங்கல் கொண்டு தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. இது கடல் சீற்றத்தை ஓரளவு தான் தாக்குப் பிடிக்கிறது. சுனாமியின் போது இவை பெரும்பாலும் சரிந்து போயின. "டெட்ரோபாட்' எனப்படும் நட்சத்திரக் கற்கள் நான்கு முனைகள் கொண்டவை. இவை ஸ்டார் போன்ற வடிவில் உள்ளதால், ஆக்ரோஷ அலைகள் தாக்கி சரிந்தாலும், மற்றொரு கல்லுடன் பின்னிப் பிணைந்து விடுமே தவிர, கடலுக்குள் சரிந்து விடாது. அதற்கேற்ப தொழில் நுட்பத்துடன் தயாராவதால் தான் நட்சத்திரக் கற்களுக்கு "ஸ்டார்' அந்தஸ்து கிடைத்துள்ளது.


- ஆர்.குமார் -


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X