தலைமுடியை பாதுகாக்க என்ன வழி| Dinamalar

தலைமுடியை பாதுகாக்க என்ன வழி

Added : ஜூலை 03, 2017
தலைமுடியை பாதுகாக்க என்ன வழி

தலைமுடி 'கருகரு'வென்று இருந்தால் அந்த மகிழ்ச்சியே தனிதான். அதே நேரத்தில் தலைமுடி கொட்டத் தொடங்கிவிட்டால், கப்பல் கவிழ்ந்த மாதிரி கவலைப்படுகிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர் களுக்குத்தான் இந்தக் கட்டுரை.

சராசரியாக ஒருவருக்குத் தினமும் 0.5 மில்லி மீட்டர்நீளத்துக்குத் தலையில் இருக்கும் ஒவ்வொரு முடியும் வளர்கிறது. ஒரு தலைமுடியின் அதிகபட்ச ஆயுள் காலம் 94 வாரங்கள்.
வயதாக ஆக தலைமுடியின் ஆயுள் 17 வாரங்கள் வரைக் குறைந்துவிடும். குழந்தைகளாக இருந்தாலும் சரி வாலிபர்களாக இருந்தாலும் சரி, முடியின் வாழ்க்கையில் மூன்று
கட்டங்கள் இருக்கின்றன. இவற்றில் முதல் கட்டம் வளர்ச்சிப் பருவம். இந்தப் பருவத்தில் முடி வளர்ந்து கொண்டிருக்கும். அடுத்த கட்டம் தேக்கம். இந்தக் கட்டத்தில் முடி வளராது. அடுத்த கட்டம் முடி உதிரும் பருவம். இந்தப்பருவத்தில் முடி உதிரத் தொடங்கும். இது ஒரு சக்கரச் சுழற்சிபோல நிகழ்கிறது. ஒரு முடி உதிர்ந்து கொண்டிருக்கும்போது மற்றொரு முடி வளர்ந்து கொண்டிருக்கும். இதனால்தான் ஒரே நேரத்தில் எல்லா முடிகளும் உதிர்வதில்லை. தினமும் 75 லிருந்து 150 தலை முடிகள் உதிர்வது இயற்கை.முடி கொட்டுவதற்கு என்ன காரணம்
தலைமுடி கொட்டுவதற்கு முக்கியக் காரணம் ஊட்டச்சத்து குறைபாடு. இதிலும் குறிப்பாக, இரும்புச் சத்து, துத்தநாகச் சத்து, கால்சியம் சத்து, பயாட்டின் சத்து, புரதச் சத்து முதலியவை குறையும்போது முடி கொட்டும். டைபாய்டு, மலேரியா, அம்மை, மஞ்சள்காமாலை போன்ற
கடுமையான நோய்களால் பாதிக்கப் படும்போதும் முடி கொட்டும். ரத்தம், மூட்டு தொடர்பான நோய்கள் இருந்தால், தலையில் பொடுகு இருந்தால், பேன் மற்றும் ஈறுகள் இருந்தால் முடி கொட்ட வாய்ப்புண்டு. கரப்பான் நோய், காளான் நோய் போன்றவை முடி உதிர்வதைத் துாண்டும். தலைமுடி கொட்டுவதற்குப் பரம்பரையும் ஒரு முக்கியக் காரணம்தான். தைராய்டு ஹார்மோன் குறைபாடு காரணமாகவும் முடிகொட்டுகிறது. சில மாத்திரை, மருந்துகளாலும் முடி கொட்டலாம். சிலருக்குத் தேர்வு நேரங்களில் ஏற்படும் மன அழுத்தம் காரணமாகவும் முடி கொட்டுவதுண்டு. இந்தக் காரணங்களைத் தவிர்த்தால் அல்லது சிகிச்சை பெற்றால், முடி கொட்டுவது நிற்கும்.

இளநரை ஏற்படுவது ஏன் : வயதாக ஆக தலைமுடிநரைப்பது இயல்பு. சிலருக்கு இளமையிலேயே தலைமுடிநரைத்துவிடுகிறது. இதற்கு வம்சாவளி ஒரு முக்கியக் காரணம். பெற்றோருக்கு இளநரை ஏற்பட்டிருந்தால், குழந்தைகளுக்கும் இளநரை ஏற்படும் வாய்ப்பு பெருகும். மன அழுத்தம், பரபரப்பான செயல்பாடு, கவலை, கோபம், சோகம் போன்ற மனம் தொடர்பானவை இளநரை ஏற்படுவதை ஊக்குவிக்கும். தலைமுடி 'கரு கரு'வென முளைக்க வேண்டுமானால், மெலனின் எனும் நிறமிப் பொருள் சரியான அளவில் நம் உடலில் உற்பத்தியாக வேண்டும். இதற்குப் புரதச் சத்து, கால்சியம் சத்து, வைட்டமின் - டீ5 போன்றவை தேவை.
ஆகவே, இளமையில் சத்துக் குறைபாடு ஏற்படுமானால், தலைமுடி நரைத்துவிடும். இளநரை ஏற்படுவதைத் தவிர்க்க பால், பருப்பு, முளைக்கட்டிய பயறுகள், பச்சைநிறக் காய்கறிகள் சாப்பிடுவதை அதிகப்படுத்துங்கள். தலைக்குத் தினமும் மசாஜ் கொடுங்கள். தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். நன்றாகத் துாங்கி ஓய்வெடுங்கள்.

பொடுகுக்குத் தீர்வு : தலைச் சருமத்தில், 'சீபம்' எனும் எண்ணெய்ச் சுரப்பு அதிகமாகும்போது, பொடுகு தோன்றுகிறது. செத்துப்போன தோல் செல்கள் எண்ணெய்ச் சுரப்பில் ஒட்டிக்கொண்டு வெள்ளைநிறப் பக்குகளாக வெளியேறுவதைப் 'பொடுகு' என்கிறோம். இது எண்ணெய்ச் சருமம் கொண்டவர்களுக்கு அதிக அளவில் தொல்லை கொடுக்கும். 'மலசேஜியா குளோபோசா' எனும் காளான் கிருமிகளாலும் பொடுகு தோன்றலாம். மருத்துவர் ஆலோசனைப்படி தகுந்த மருந்து கலந்த ஷாம்பூ போட்டுத் தலைக்குக் குளித்து, தலைமுடியைச் சுத்தமாகப் பராமரித்தால், பொடுகுத் தொல்லை குறையும்.

தலையில் பேன் : தலைமுடியைச் சுத்தமாகப்பராமரிக்காமல் இருப்பது,வீட்டிலோ, வெளியிடங்களிலோ ஏற்கனவே தலைப்பேன் உள்ள நபருடன் நெருக்கமாகப் பழகுவது போன்றவை பேன் தொல்லையை ஏற்படுத்தும். பள்ளி மற்றும் கல்லுாரி விடுதிகளில் தங்கியிருப்பவர்களிடம் பேன் தொல்லை அதிகம். பேன் உள்ளவர் பயன்படுத்திய சீப்பு மூலம் மற்றவர்களுக்குப் பேன் பரவிவிடும். தலையை அடிக்கடி சொறிய நேர்ந்தால், அது தலையில் பேன் வந்துவிட்டது என்பதற்கு ஆரம்ப அறிகுறி. உடனே இதற்குச் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இரவில் படுக்கப் போகும்போது, பேன் கொல்லி தைலத்தைத் தலைமுடி முழுவதும் பூசி, தலையில் துண்டு கட்டிப் படுத்து, காலையில் ஏதேனும் ஒரு தரமான ஷாம்பூ தேய்த்துக்குளித்துவிட வேண்டும். ஒரு வாரம் கழித்துமீண்டும் ஒருமுறை இதுபோல் குளிக்க வேண்டும்.

நவீன சிகிச்சை என்ன : இப்போதெல்லாம் வழுக்கை விழுந்த இடத்தில் முடி முளைக்க வைக்க 'முடி மாற்றுச் சிகிச்சை' எனும் நவீன சிகிச்சை உள்ளது. பின்னந்தலையில் இருக்கின்ற முடியை வேரோடும், தோலோடும் எடுத்து வழுக்கை விழுந்துள்ள இடத்தில் நாற்று நடுவதைப்போல நடவேண்டும். இவ்வாறு நடப்பட்ட இடத்தில் மூன்றாவது வாரத்தில் முடி உதிர்ந்துவிடும். என்றாலும் பயம் தேவையில்லை. அடுத்த மூன்றாவது மாதத்தில், முடி உதிர்ந்த இடத்தில், புதிதாக முடி முளைக்கத் தொடங்கிவிடும்.

தலைமுடியைப் பாதுகாக்க... : அனைத்து ஊட்டச் சத்துகளும் அடங்கியுள்ள உணவைத் தினமும் சாப்பிட வேண்டும். குறிப்பாக,பால், முட்டை, கீரைகள்,பழங்கள் சாப்பிடுவது தலைமுடி
வளர்ச்சிக்கு உதவும்.தரமான ஷாம்பூவைப் பயன்படுத்திக் குளிக்க வேண்டும் தினமும் ஷாம்பூ பயன்படுத்தினால் முடியின் எண்ணெய்ப் பசை குறைந்துவிடும். முடி கொட்டிவிடும். ஆகவே, வாரம் ஒருமுறை ஷாம்பூ பயன் படுத்தினால் போதும்.தலைக்குக் குளித்ததும் தலைமுடியை இயற்கையாக உலர்த்துங்கள். 'டிரையர்' பயன்படுத்தி முடியை உலர்த்துவதைத் தவிருங்கள். தலைக்குத் தினமும் எண்ணெய் தேய்க்க வேண்டும்.சிலர் சிந்திக்கும்போது, தொலைக்காட்சி பார்க்கும்போது, தலைமுடியை ஒரு கையால் பிய்த்துக்கொண்டே இருப்பார்கள். இது ஒரு 'மேனரிஸம்'. முடிந்தவரை இந்தப் பழக்கத்தைத் தவிர்க்கப் பாருங்கள்.தலை சீவ மென்மையான சீப்பைப் பயன்படுத்துங்கள்.அடுத்தவர்கள் பயன்படுத்திய சோப்பு, சீப்பு, ஷாம்பூ போன்ற வற்றை நீங்கள் பயன்படுத்தாதீர்கள்.கொத்துக் கொத்தாக தலைமுடி கொட்டினால் உடனடியாக
மருத்துவரை ஆலோசியுங்கள்.

டாக்டர் கு. கணேசன்
மருத்துவ இதழியலாளர்
ராஜபாளையம்
gganesan95@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X