போலீஸ் கேபிளில்... திருட்டு கனெக்ஷன்... முரட்டு கலெக்ஷன்!

Added : ஜூலை 04, 2017
Share
Advertisement
போலீஸ் கேபிளில்... திருட்டு கனெக்ஷன்...  முரட்டு கலெக்ஷன்!

ஊரிலிருந்து வந்திருந்த பெரியம்மாவுடன் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் சென்றிருந்தாள் மித்ரா. சுவாமி கும்பிட்ட பின்னும், பெரியம்மா சிறிது நேரம் அங்கே இருக்க விரும்பவே, அவரை விட்டு விட்டு சித்ராவும், மித்ராவும் வெளியே வந்தனர்.
''அக்கா! கோவில்ல இருக்குறதால அறநிலையத்துறை நியூஸ் ஒண்ணு... ஒன்றரை கோடி கொடுத்து, கோவைக்கு வந்த பெரிய ஆபீசர், போட்டதை எடுக்கணும்னு, களத்துல தீவிரமா குதிச்சிட்டாராம். சத்தி பண்ணாரி கோவில்ல, மூணு கடைகளுக்கு ஏலத்துல வாடகைய குறைச்சிட்டாராம்,'' என்றாள் மித்ரா.
''அது முடியாதே... ஜி.ஓ., போடணுமே,'' என்று குறுக்கே புகுந்
தாள் சித்ரா.
''ஆனா போடலை... இந்த, 'ரிஸ்க்'குக்காக, பத்து லட்சம் ரூபா வாங்கீட்டாராம்; ராஜ வசூல்,'' என்றாள் மித்ரா.
இருவரும் இளநீர் குடித்து விட்டு வரலாமென்று, பேசிக்கொண்டே நடந்தனர். ஆளுங்கட்சி கொடியுடன் கூடிய ஒரு வாகனத்திலிருந்து இறங்கிய கரை வேட்டியையும், அவரது குடும்பத்தினரையும் கோவில் அலுவலர்கள் பெரிய கும்பிடு போட்டு, கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.
''ஆளுங்கட்சி ஆளுங்க, பொறுப்பு வேணும்னு ஏதாவது ஒரு குழுவுல உறுப்பினரா ஆயிர்றாங்க; ஆனா, குழு கூட்டத்துல கூட கலந்துக்கிறதில்லை. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தோட தலைவர் முருகன், போன வாரம் இங்க வந்து கூட்டம் நடத்துனப்போ, 'ஏன் ஆதி திராவிடர் நலக்குழு உறுப்பினர் யாருமே வரலை'ன்னு கேட்ருக்காரு,'' என்று மித்ரா சொல்லும்போதே, குறுக்கிட்டாள் சித்ரா.
''ஆளுங்கட்சி ஆளுங்களுக்கு, 'சப்போர்ட்'டா நம்ம மாவட்ட ஆபீசர், ஏதாவது சொல்லிருப்பாரே.''
''கரெக்ட்க்கா...அவுங்க பிஸி; வர மாட்டாங்கன்னு சொல்லிருக்காரு. அதுக்கு ஆணையத் தலைவரு, 'அப்பிடிப்பட்டவுங்களை ஏன் குழுவுல வச்சிருக்கீங்க; துாக்குங்க'ன்னு சொல்லீட்டாராம்'' என்றாள் மித்ரா.
''அதே மீட்டிங்ல, 'நம்ம மாவட்டத்துல இருக்குற பள்ளிகள்ல 25 சதவீத இட ஒதுக்கீடு தர்றாங்களா'ன்னு சேர்மன் கேட்ருக்காரு. அதுக்கு, எஜூகேஷன் ஆபீசரு, ஏனோதானோன்னு பதில் சொல்லிருக்காரு. சேர்மன் கடுப்பானதும், 'அவரு ஊருக்குப் புதுசு'ன்னு மாவட்ட ஆபீசர், 'சப்போர்ட்' பண்ணிருக்காரு.''
''ஊருக்குப் புதுசுன்னா, இதெல்லாம் தெரியாதா?''
''இதையே தான், சேர்மனும் கேட்ருக்காரு. எந்தெந்த ஸ்கூல்ல எவ்வளவு ஸ்டூடன்ட்சை சேத்திருக்காங்கன்னு இன்னும் 15 நாள்ல லிஸ்ட் தரலைன்னா, கடுமையா நடவடிக்கை எடுப்பேன்னு, எஜூகேஷன் ஆபீசரை எச்சரிச்சிட்டுப் போயிருக்காரு,'' என்றாள் சித்ரா.
''அவரை விட மெட்ரிக் ஸ்கூல் ஆபீசரா இருக்குற லேடி ஆபீசர் மேல தான் ஏகப்பட்ட, 'கம்பிளைண்ட்' சொல்றாங்க. அந்தம்மா தான், கோவை, நீலகிரி, திருப்பூர்னு மூணு மாவட்டத்துக்கு ஆபீசரா இருக்காங்க. ஆனா, கோயம்புத்துார்ல ஒரு ஸ்கூலையும் ஆய்வு பண்றதே இல்லை,'' என்றாள் மித்ரா.
''அவுங்களா... அந்தம்மாவுக்கு, 'அப்படியா ஆபீசர்'னு ஒரு பட்டப்பேரே வச்சிருக்காங்க. ஏன்னா, எந்த ஸ்கூலைப் பத்தி, என்ன புகார் சொன்னாலும் 'அப்படியா'ன்னு மட்டும் ஆச்சரியமாக் கேப்பாங்களாம்,'' என்றாள் சித்ரா.
ஆளுக்கொரு இளநீரை வாங்கிக் குடித்து விட்டு, மீண்டும் கோவிலுக்கு அருகில் நின்று கொண்டே பேச்சைத் தொடர்ந்தனர்.
''இப்பல்லாம் எந்த ஓட்டல்லயுமே, எந்த சாப்பாட்டையும் நம்பி வாங்கிச் சாப்பிட முடியலைக்கா...போன வாரம், என் பிரண்டு ஒருத்தி, ஒரு பெரிய ஓட்டல்ல சாப்பிட்டுட்டு, 'புட் பாய்சன்' ஆகி, ரெண்டு நாள் 'அட்மிட்' ஆயிருந்தா,'' என்றாள் மித்ரா.
''நம்ம ஊருல 'ஃபுட் டிபார்ட்மென்ட்'ல இருக்குற ஆபீசருங்க அப்பிடி இருக்காங்க. அதுலயும் இப்போ இருக்குற டாக்டர், வசூல்ல கில்லிங்கிறாங்க,'' என்றாள் சித்ரா.
''இளைய தளபதி பேரு... கில்லின்னு பட்டப்பேரா?'' என்று சிரித்தாள் மித்ரா.
''அவரே தான்... சிட்டியில இருக்குற ஒரு 'மால்'ல, தனக்குத் தெரிஞ்ச ஒரு லேடிக்கு கடை போடுறதுக்கு, அந்த 'மால்' மேனேஜர்ட்ட, 'ரெக்கமண்ட்' பண்ணிருக்காரு. அவுங்க முறைப்படி, அதை, 'பிராசஸ்' பண்றதுக்குள்ள, அந்த லேடி பொறுமையிழந்து, இவர்ட்ட பொங்கிட்டாங்க போல. உடனே, 'புட் இன்ஸ்பெக்டரு' ஒருத்தரை அங்க அனுப்பி, 'சேம்பிள்' எடுத்துட்டு வரச் சொல்லீட்டாராம்.''
''அச்சச்சோ...அப்புறம் என்னாச்சு?''
''அந்த 'மால்' மேனேஜரு, பதறிப்போய், அந்த லேடிக்கு போன் பண்ண, அதை வாங்கிப் பேசுன அவுங்க, 'ஹஸ்பெண்ட்', 'ஏன்யா ஒரு மாசமா எங்களை நாயா அலைய விட்டதுக்குப் பார்த்தியா'னு மெரட்டிருக்கான். மேனேஜர், 'உடனே கடை போட்டுத் தர்றேன் சார்; இந்த இன்ஸ்பெக்டரை கிளம்பச் சொல்லுங்க'ன்னு கேட்ருக்காரு.''
''அட்ரா சக்கை... அட்ரா சக்கை!''
''உடனே, அந்தாளு, அதே போன்ல, அந்த 'புட் இன்ஸ்பெக்டர்'ட்ட போனைக் கொடுக்கச் சொல்லி, 'நீங்க சேம்பிளை வச்சிட்டுப் போங்க; நான் டாக்டர்ட்ட பேசிக்கிறேன்'னு சொல்லிருக்காரு. பாவம் அந்த இன்ஸ்பெக்டர்; புலம்பிட்டுப் போயிருக்காரு. இந்த உரையாடல், போன்ல 22 நிமிஷத்துக்கு, 'ரிக்கார்டு' ஆயிருக்கு'' என்றாள் சித்ரா.
''டாக்டர்னதும் ஞாபகம் வந்துச்சு... 'டாக்டர்ஸ் டே' அன்னிக்கு, ஜி.எச்., டாக்டர்கள் 17 பேருக்கு சிறந்த டாக்டர்கள் விருது கொடுத்தாங்களே; அதுல ரெண்டே ரெண்டு பேரு தான், டிஎம்இ ஆபீசுல இருந்து 'ரெக்கமண்ட்' ஆகி வந்தவுங்களாம்; உண்மையிலேயே அவுங்க ரெண்டு பேரும் நல்ல டாக்டர்கள் தான்; மத்த 17 பேருல நாலஞ்சு பேரைத் தவிர, மத்தவுங்க மேல ஏகப்பட்ட 'கம்பிளைண்ட்' இருக்காம்,'' என்றாள் மித்ரா.
''இதுவும் ஆளுங்கட்சி ரெகமண்டேஷன்ல கொடுத்திருப்பாங்க,'' என்றாள் சித்ரா.
''இப்பிடித்தான் ஆளுங்கட்சியில யாரையோ பிடிச்சு, பணத்தைக் கொடுத்து, கோயம்புத்துாரு சிட்டிக்கான இன்ஜினியர், ஜேஎன்என்யுஆர்எம் திட்டத்தை கண்காணிக்கிற இன்ஜினியர்னு ரெண்டு 'வெயிட்'டான பொறுப்புகளை, வாங்கிட்டு வந்தாரு 'டைகர் பிஸ்கெட்' இன்ஜினியரு. ஒரு வேலையும் உருப்படியா செய்யாததால, படிப்படியா ரெண்டு பொறுப்புல இருந்தும் கழட்டி விட்டுட்டாங்களே.''
''அது தான் பழைய மேட்டராச்சே... இப்போ என்ன ஆச்சு?''
''பதவி போனதும் கொதிச்சுப்போன 'டைகர்', மேலதிகாரிகளுக்கு 100, 150 எஸ்.எம்.எஸ்., அனுப்பிருக்காரு; ஒருத்தரும், 'ரிப்ளை' பண்ணலை; ஒரு கட்டத்துல, 'எனக்கு போஸ்ட்டிங் போடலைன்னா, நான் தற்கொலை பண்ணிருவேன்'னு மெரட்டிப்பார்த்தாராம். அதுக்கும் பலன் இல்லியாம்.''
''இப்போ போட்ருக்குற இன்ஜினியரு தான், 2,300 கோடி ரூபா, ஜேஎன்என்யுஆர்எம் திட்டத்தையும் முதல்ல இருந்து பார்த்தாரு. அந்த திட்டத்தோட வேலைக, என்ன லட்சணத்துல நடந்திருக்குன்னு தெரியுமே; அதே இன்ஜினியரை இப்போ 'ஸ்மார்ட் சிட்டி'க்கு போடுறாங்க; மறுபடியும், குளம், குப்பைன்னு காசு அடிக்கிற வேலையப் பார்க்காம, ஏதாவது உருப்படியா செஞ்சா நல்லது,'' என்றாள் சித்ரா.
''அக்கா... இதுவும் கார்ப்பரேஷன் மேட்டர் தான். தெற்குல ஆளுங்கட்சிக்காரங்களோட செல்லப்பிள்ளையா வலம் வர்ற கார்ப்பரேஷன் மண்டல ஆபீசருக்கு, மேற்கையும் சேர்த்துப் பாருங்கன்னு போனஸ் கொடுத்திருக்காங்க; பாவம்... ரெண்டே ரெண்டு கைய வச்சிட்டு, எப்பிடித்தான், ரெண்டு மண்டலத்தை அவரு கவனிக்கப் போறாரோ?'' என்றாள் மித்ரா.
''தெற்கு மேற்குன்னு பேசவும், எனக்கு சிட்டிக்குள்ள வடக்குல இருக்குற முத்தான உடன் பிறப்பு ஞாபகம் வந்துச்சு. அவரு, ஆளுங்கட்சியில முக்கியமான ஆளுங்களோட நெருக்கமா இருக்காரு; ஒண்ணா, 'வாக்கிங்' போறாருன்னு தளபதிட்ட யாரோ ஆதாரத்தோட போட்டுக் கொடுத்துட்டாங்களாம்; அநேகமா, இந்த வாரமே அவர்ட்ட இருந்து 'பொறுப்பை' புடுங்கிருவாங்கன்னு ஒரே பேச்சா இருக்கு,'' என்றாள் மித்ரா.
''இல்லியே... நம்ம ஏற்கனவே பேசுன மாதிரி, கார்த்திக்கை ஒரு மாவட்டத்துக்குப் போட்டது மாதிரி, மத்த மூணு மாவட்டத்தையுமே மாத்தப்போறதா ஒரு தகவல் ஓடுது,'' என்றாள் சித்ரா.
''எஸ்.பி.,யை ஒரு வழியா மாத்திட்டாங்க; சி.ஓ.பி., யை மாத்துவாங்களா?'' என்றாள் மித்ரா.
''தெரியலை; ஆனா, சிட்டி போலீஸ்ல ஒரு 'சீக்ரெட்' மேட்டர் கேள்விப்பட்டேன்; சிட்டிக்குள்ள போலீஸ் கேமராவுக்காகப் போட்ருக்குற, 'ஓஎப்சி' கேபிள்ல, ஒரு, 'கோர்' மட்டும் தான், 'யூஸ்' ஆகுதாம்; மீதியிருக்குற 11 'கோர்'கள்ல அஞ்சு 'கோர்'களை, அரசு கேபிள் கார்ப்பரேஷனுக்கு எதிரா தனியார் நடத்துற கேபிள் நிறுவனங்களுக்குக் கொடுத்துட்டாங்களாம்; அதுக்காக, பெரிய தொகை கை மாறிருக்காம்'' என்றாள் சித்ரா.
''போலீஸ் கேபிளில் திருட்டு கனெக்ஷன்; முரட்டு கலெக்ஷன்,'' என்று சித்ரா சிரிக்கும்போதே, கோவிலை விட்டு பெரியம்மா வெளியே வந்தார். மீட்டர் ஆட்டோவை அழைக்க அலைபேசியை எடுத்தாள் மித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X