பயணத்தின் மொழி

Added : ஜூலை 05, 2017
Advertisement
பயணத்தின் மொழி

இவ்வுலகத்தின் ஆதியிலிருந்து நாம் தினந்தோறும் ஏதோவொன்றை நோக்கிப் பயணிப்பவர்களாகவே காணப் படுகிறோம். திட்டமிட்டும், திட்டமிடாமலும் நாம் ஏற்படுத்தும் பயணங்கள் அவற்றின் பயன் அல்லது விளைவின் பொருட்டு வேறுபடுத்தப்படுகின்றன. பெரும் குதுாகலம், களிப்பு மற்றும் அலுவல்களை உள்ளடக்கியதாகப் பயணங்கள் அமைகின்றன.பயணம் எவ்வாறான விளைவைக் கொண்டிருந்தாலும், அது அளிக்கும் மகிழ்ச்சிக்கு இணையே இல்லை. காற்றை எதிர்கொண்டபடி செல்லும்வாகனங்களில் நாம் பயணிக் கையில் சொல்லவொண்ணாத பேரின்பம் நம் மனதில் குடி கொள்ளத்தான் செய்கிறது. வழக்கமான நமது சூழலிலிருந்து விடுபட்டு புதிய இடங்களுக்குச் செல்லுதல் சுற்றுலா.சாலைகளில் வாகனம்முன்னோக்கிச்செல்ல நம் நினைவுகள், நம்மை, நாம் இருந்த, வாழ்ந்த, காலத்திற்குள் உள்ளிழுத்துபின் மிதக்க வைக்கும் விந்தை நெடும் பயணங்களில் நமக்கு ஏற்படும். கரும் வானின் பளபளப்பு விண்மீன்களால் இன்னும் கூடியிருக்கும் அந்தி மாலை கடந்த பொழுது, மென் கருமை சூழ்ந்த தார்ச்சாலைகள், விட்டு விட்டு மயக்கும் அடர்பச்சை மரங்கள், பொன்னிறக்கதிர்கள் பட்டுத் தெளியும் மலையுச்சி என்பதாக அமையும் இரவு நேரப் பயணம் நாம் காணப்போகும் சுற்றுலா இடங்களுக்கான முன் தயாரிப்பை மனதினுள் வழங்கும்.

பயணமும் வரலாறும் : உள்ளுர் சுற்றுலா, தேசிய சுற்றுலா, உலகச்சுற்றுலா என வகைப்படினும் நம் உள்ளமும், சிந்தையும் களவு போகும் தருணங்களை இயற்கையே நமக்கு வழங்குகின்றது.
பயணங்கள் என்பவை ஒரு இன வரலாற்றின் அடி நாதமாக விளங்குகின்றன. கொலம்பசின் பயணம் அமெரிக்காவையும், வாஸ்கோடகாமாவின் பயணம் இந்தியாவையும், இவ்வுலகிற்குக் காட்சிப்படுத்தியது. உலகவரலாற்றின் பக்கங்களில்இத்தகைய பயணங்களும், பயணக் குறிப்புகளும் ஓர்நாட்டின்வளத்தினை, பூர்வீகத்தினை, ஆட்சி முறையினை, மக்கள் வாழ்வு நிலையை அறிய உதவும் சான்றாகி சிறப்பு பெறுகின்றன.

புதியன அறிதல் : உலகில் உள்ள பொருட்களைச் சார்ந்ததான வாழ்க்கையில், காட்சியும் அதனுாடான அனுபவங்களும் ஆராயும் தன்மைக்கு நம்மை உட்படுத்துகின்றன. கற்ற கல்வியைச் சோதிக்கும் போது அறிவு தோன்றுகிறது. புலன் காட்சி அறிவே இவ்வுலகில் நாம் சிறப்புற வாழவும், இவ்வுலகைப் புரியவும் அவசியமாகிறது. களிப்பினைத் தரக்கூடிய பயணங்கள் அதன் காரணமாகவே சிறப்பினைப் பெறுகிறது, அறிவை புத்துணர்வாக்கவும், மனதை இயல்பில் கொண்டு செலுத்தவும் துடுப்பாக இவை அமைகின்றன.

பயணமும் தமிழும் : சுற்றுலா, செலவு, சேத்ராடனம், பிரயாணம் என்பன “பயணம்” எனும் பொருள் தரும் வேறு பெயர்கள். பயண இலக்கியங்கள் தமிழில் அதிகம் காணப் படுகின்றன என்பதே பயணத்தின் உவப்பினைத் விளக்கும். பயணத்தின் வாயிலாக பிற பகுதி பற்றிய செய்திகள், மக்கள் பழக்கவழக்கம், நாகரிகம், காலநிலை, பண்பாட்டை அறிந்து கொள்ள முடிகிறது தமிழ்
இலக்கியங்களில் காப்பியங்களில் பயணம் அதிகமாகக் குறிக்கப்பட்டு உள்ளது, வணிகம், துாது, சுற்றுலா, போர் போன்றதின் பொருட்டு தலைவன் பயணத்தை மேற்கொள்வதாகக் காப்பியங்களில் சுட்டப்பட்டு உள்ளது.

காப்பியங்களில் பயணம் : கண்ணகி, கோவலனின் மதுரைப் பயணம் பற்றிக்குறிப்பிடும் சிலப்பதிகாரம், கடவுளை வணங்கியபின் பயணம் செய்தலைக் குறிப்பிடுகிறது. வயல் வழிச் செல்லும்போது உயிர்களைக் காக்கும் முறையும் குறிக்கப்பட்டு உள்ளது. மணிமேகலையில் தருமதத்தனின் பயணமும், சீவக சிந்தாமணியில் சீவகனின் பயணமும் மிகுந்த ஆர்வத்தையும், களிப்பினையும் துாண்டுவன. காப்பியத் தலைவனின் பயணமானது, தலைவனுக்கு ஏற்படும் நிகழ்வுகள் ஊடாக அவனது வாழ்க்கைப் பயணம் செல்லுவதையும், வாழ்க்கை அனுபவத்தையும் வழங்குகிறது. காப்பிய மாந்தார்களின் பயணம் நன்மை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டதும். வாழ்க்கைச் சூழல்களை எதிர்கொண்டு போராடி வென்றெடுப்பதும் ஆகும்.தமிழில் மணிமேகலை, சீவக சிந்தாமணி ஆகிய இரு காப்பியங்களில் மட்டுமே கடல் வழிப்பயணம் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.ஆற்றுப்படை நுாலானதிருமுருகாற்றுப்படையில், காந்தள் மலர்களை மாலையாகத் தலையில் அணிந்துள்ள முருகப்பெருமானை வர்ணிக்கும் புலவர் நக்கீரனார், மலைகள், மரங்கள் மற்றும்மலர்களை நேரில் கண்டுசுவைபட எழுதியுள்ளது,
அவர்களின் இயற்கை கண்டு இன்புறும் பாங்கை வெளிப் படுத்துகிறது.கம்பராமாயணத்தில், கதை நிகழும் இடங்களையும், மலைகள், ஆறுகளோடு ஒற்றுமைப்படுத்தியிருக்கும் கம்பர்,
“பூவிரி பொலன் கழல்,
பொரு இல் தானையான்
காவிரி நாடு அன்ன
கழனிநாடு ஓரிஇ
தாவர சங்கமம் என்னும்
தன்மைய
யாவையும் இரங்கிட கங்கை
எய்தினான்''

என்று பாடுகிறார்.

இலட்சிய பயணம் : பயணம் என்பது வாழ்க்கையை யும் கற்றுத்தருகிறது என்பதாலேயே, சமூகம் குறித்த சிந்தனைகளுடன் அவர்களுக்கான எல்லை வகுத்து, வாகனங்களில் சுற்றுப்பயணம் செய்து தங்கள் நோக்கத்தை தாங்கள் கடந்து போகும் ஊர்களெங்கும் பரப்பிச் செல்லும் இளைஞர்கள், மற்றும் சாதனையாளர்களைக் காணமுடிகிறது.வாழ்வென்பது ஒரு பயணம் எனில், அது ஆனந்தத்தைமட்டுமல்ல, ஆக்கத்தினையும் நமக்கு வழங்குகிறது.

இயற்கையைக் கவனி : விடுமுறைக் காலங்களில் வழக்கமான பொழுது போக்கு இடங்களிலிருந்து விடுபட்டு, நம் வரலாறும் இயற்கையும் இணைந்திருக்கும் இடங்களுக்குச் சென்று வரலாம்.நத்தம் பகுதி சிறுமலை அடிவாரங்கள், கல்லுப்பட்டி அருகிலுள்ளதேவன் குறிச்சி மலை, போடி மலைப்பகுதி, மேகமலை, பொள்ளாச்சி மலைப்பகுதிகள், நெல்லை செங்கோட்டையைச் சுற்றிய வனப்பகுதிகள் போன்ற பகுதிகளில் உரிய அனுமதி பெற்று செல்லலாம்.
காட்டுயிர்களுக்கு எவ்வித இடையூறும் செய்யாமல், அதன் இருப்பையும், வாழ்விடங்களையும், சூழலுக்கேற்ப தன்னையும், உணவு முறையையும் வைத்து வாழும் அழகை இயற்கையின் பாங்கை எண்ணி மகிழவும், வாழ்க்கை அனுபவமாகவும் அது இருக்கும். ஆதியில் நாடோடியாக இருந்த மனிதன் ஆற்றங்கரையினில் குடியிருந்து நாகரிகம் வளர்த்தான் என நாம் அறிவோம்.
பயணங்கள் நம்மை இந்த வாழ்வோடு இயைபுற இணைக்கும் மலர்ச்சங்கிலிகளால் ஆனவை. வாழ்தலின் இனிமையையும், உணர்ந்து கொள்வதற்கான அவகாசத்தையும் அவை நமக்கு வழங்கியபடியே இருக்கின்றன. பயணிப்போம், இசைவான இயற்கைச் சாலையின் வழியாகவும்... உள்ளங்களின் ஊடாகவும் உலகத்தின் ஊடாகவும்!

அ. ரோஸ்லின், ஆசிரியை
அரசு மேல்நிலைப்பள்ளி, வாடிப்பட்டி,
kaviroselina997@gmail.com

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X