தேசிய தலைவரை நம்மில் உருவாக்குவோம்!| Dinamalar

தேசிய தலைவரை நம்மில் உருவாக்குவோம்!

Added : ஜூலை 08, 2017 | கருத்துகள் (4)
Share
  தேசிய தலைவரை நம்மில் உருவாக்குவோம்!


தேசிய கீதத்தை இயற்றிய, ரவீந்திரநாத் தாகூர் பார்வையில் தமிழர், தெலுங்கர், மலையாளி, கன்னடர்கள், திராவிடர்களாக தான் தெரிந்தனர். ஆனால், நம் ஒவ்வொருவரின் மனக்கண்களும் இப்போது புண்ணாகி போனதால் தான், திராவிடர்கள் எதிரிகளாக தெரிகின்றனர்.திராவிட இயக்க நுாற்றாண்டு கொண்டாடும் இந்த வேளையில், 'திராவிடம்' என்ற வார்த்தை நலிவடைந்து, 'கோமா' எனப்படும், உணர்வற்ற, செயல்பாடு அற்ற நிலைக்கு சென்று விட்டது.நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் இருந்தே, திராவிடத்தின் மீது, வட மாநில அரசியல்வாதிகள் தாக்குதலை துவங்கி விட்டனர்; அது, இன்றும் தொடர்கிறது.தமிழகத்தில், முதல்வர் கனவுடன் அரசியலுக்கு வரும் ஒவ்வொருவர் மீதும், மாறி மாறி, 'தமிழரா' என்ற தாக்குதல் நடத்துவதால், அது நலிவடைந்து, கோமா நிலையில் உள்ளது.சுதந்திரத்திற்கு முன், தியாகராஜ செட்டியார், டாக்டர் டி.எம்.நாயர், நடேச முதலியார், பனகல் ராஜா உள்ளிட்டோர், தன்னலம் இன்றி, ஜாதி வேறுபாடு, மொழி வேறுபாடு இல்லாமல், வெள்ளையர்களும், வடக்கே இருந்த அரசியல்வாதிகளும், மிரளும் அளவுக்கு ஒற்றுமையாக செயல்பட்டனர்.மலையாளியான, டாக்டர் டி.எம்.நாயர், லண்டனில் இருந்தபடி, கட்சி தலைவராக, தமிழரான, தியாகராய செட்டியாரை செயல்பட செய்துள்ளார். தியாகராய செட்டியார், தெலுங்கர்களுக்கு பதவிகள் வழங்கி, அழகு பார்த்திருக்கிறார்.இப்படி, திராவிடர்களின் அப்போதைய ஒற்றுமை, அனைவரையும் ஆச்சரியம் அடைய செய்துள்ளது.ஒற்றுமையாக இருக்கும் திராவிடர்களை பிரிக்க இன்னமும் பல முயற்சிகள், வடக்கே உள்ள அரசியல்வாதிகளால் மேற்கொள்ளப்படுகின்றன.

திராவிட ஒற்றுமையை குலைக்க, அவர்கள் பயன்படுத்திய முக்கியமான கோடாரி தான், 'மொழி வாரி மாநிலங்கள்!'அப்போதிலிருந்து, இப்போது வரை, மாநிலங்கள் இடையே உள்ள நெடுஞ்சாலைகள், ரயில்வே, கப்பல் போக்குவரத்து, விமான போக்குவரத்து போன்ற, வருவாய் வரக்கூடிய அனைத்து துறைகளையும், தங்கள் கையில் வைத்துக் கொள்கிறது, மத்திய அரசு.ஆனால், இன்று வரை, மாநிலங்கள் இடையே உள்ள நதிகளை தேசியமயமாக்காமல், மாநிலங்களின், குறிப்பாக, தென் மாநிலங்களின் ஒற்றுமையை தடுத்து வருகிறது.நிர்வாக வளர்ச்சி, வசதிக்காக, மொழிவாரி மாநிலங்கள், 1956ல் உருவாக்கப்பட்டது என்றாலும், தமிழர், தெலுங்கர், மலையாளி, கன்னடர் என, திராவிடர்களின் ஒருமித்த குரலை பலவீனப்படுத்தவே, அது ஏற்படுத்தப்பட்டது என்பது, பலருக்கும் தெரியாமல் போனது.கடந்த, 1967ல், தனி மாநில கோரிக்கையை கைவிட்டு, அண்ணாதுரை முதல் முதலில், 'நாம் அனைவரும் தனித்தனி மாநிலமாக பிரிந்து இருந்தாலும், திராவிடர் என்ற சகோதர பாசத்துடன் வாழ்வோம்' என்றார்.
அன்று குனியத் துவங்கிய நாம், இன்று வரை பல நிலைகளில் தாழ்ந்து வாழும் சூழல் உருவாகி உள்ளது.அதன் விளைவு, மத்தியில் எந்த கட்சி ஆட்சி செய்தாலும், அவர்கள், தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளாத பல திட்டங்களை, மாநிலத்தில் எந்த கட்சி, ஆட்சியில் இருந்தாலும், அவர்களை கொண்டே நடைமுறைப்படுத்தும் நிலைமை, தமிழகத்தில் தற்போதும் உள்ளது.இந்த நிலை மாற வேண்டும் என்றால், இங்குள்ள கட்சித்தலைவர்கள் முதல் தொண்டர்கள், பொதுமக்கள் வரை அனைவரும், முதலில், தான் சார்ந்திருக்கும் கட்சியின் செயல்பாட்டையும், சமூக வளர்ச்சிப் பணியையும், பிரித்துப் பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும்.தமிழகத்திற்கு ஒரு பிரச்னை எனும் போது, கட்சி வேறுபாடு இல்லாமல், நாம் இணைந்து செயல்பட கற்றுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் எவ்வளவோ பிரச்னைகள் இருந்தாலும், நம்மை எதிர்நோக்கி இருக்கும் முக்கிய பிரச்னை, தண்ணீர் தான்.அதை தீர்க்க வழி காணாமல், ஒரு கட்சியினர், மற்ற கட்சியினரை குறை சொல்கிறோம். மற்ற மாநிலங்களையும், மற்ற மாநில நடிகர்களையும், குறை சொல்கிறோம்.அந்த மாநில தொழில் நிறுவனங்களையும், பேருந்துகளையும் மடக்கி, போக்குவரத்தை தடை செய்கிறோம். தவிர, தண்ணீர் பிரச்னையை தீர்க்க, முயற்சி ஏதும் செய்யவில்லை.நதிகளை இணைக்க, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அடையாளம் காட்டிய, நீர் மேலாண்மை வல்லுனரான, பொறியாளர், ஏ.சி.காமராஜ், திட்டப்படி தமிழகத்திலாவது நதிகளை இணைத்திருக்க வேண்டும்.நீர்நிலைகளை பாதுகாக்க, ஆறுகள், ஏரிகள், குளம் போன்றவற்றை பராமரியுங்கள் என்றோ, மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என்றோ, போராடக்கூட நாம் யோசிப்பதில்லை.மேலும், ஒரு முறை கூட, இங்குள்ள அனைத்து கட்சியினரும், மாநில, திராவிட பிரச்னைகளை பேசித் தீர்க்க, ஒன்றாக அமர்ந்தது இல்லை.ஆனால், அதற்கு நேர் மாறாக, சக திராவிடர்கள் மீது பழியை போட்டு, அடுத்த நாள், வேறு பிரச்னை சமூக வலைதளத்தில் வந்ததும், அந்த பிரச்னையையும் மறந்து, புதிய பிரச்னையில் ஆழ்ந்து விடுகிறோம்.இதைத் தான், இன்று வரை, தமிழர்களான நாம் திறமையுடன் செய்து வருகிறோம். ஆனால், வட மாநிலங்களை பாருங்கள்...முக்கிய பிரச்னை என்றால், கட்சி வேறுபாடுகள் இல்லாமல், பிரதமர் பதவி வகித்தவர் முதல், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று இல்லாமல், வார்டு உறுப்பினர்கள் வரை ஒரே அணியில் நிற்கின்றனர்.தண்ணீர் பிரச்னை அவர்கள் மாநிலங்களில் வராத அளவுக்கு, மற்றவர்களை குறை சொல்லாமல், திட்டம் போட்டு செயல்படுகின்றனர்.

'நீர்வளத் துறை' என்ற தனி அமைச்சகத்தை உருவாக்கி, ஆறுகள், ஏரிகள், குளங்கள் என, அனைத்து நீர் நிலைகளையும் பராமரித்து, புதிய அணைகளையும், கால்வாய்களையும் அமைக்கின்றனர்.மேலும், அவற்றை சிறப்பாக பராமரித்து, தண்ணீரை சேமித்து, விவசாயத்தை பல மடங்கு பெருக்குகின்றனர். அந்த வகையில், தென் மாநிலங்களில் ஒன்றான, ஆந்திராவின் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் செயல்பாடுகள் சிறப்பானதாக உள்ளன.நீர்நிலைகளை பாதுகாக்க குழு அமைத்து, அந்த குழுவிற்கு, தமிழரான, ஏ.சி.காமராஜின் ஆலோசனைப்படி, ஒரே ஆண்டில், நதிகளை இணைத்து சாதனை படைத்து விட்டார்.அது போல, நம் மாநிலத்தில் ஒரே அணியாக இணைந்து நிற்க முடிகிறதா... முடியவில்லை. காரணம் என்ன... நம் ஒவ்வொருவரையும், அரசியல்வாதிகள் மூளை சலவை செய்துள்ளனர்.அவர்கள் சொல்வதை, வேத வாக்காக ஏற்று, 'அந்த நடிகர் படத்தை பார்க்காதீர்கள்; இந்த நடிகனை விரட்டிஅடியுங்கள்' என, 'வீர' வசனம் பேசுகிறோம்.இதற்கு காரணம், தமிழகத்தில் உள்ள, 'லெட்டர் பேடு' கட்சி தலைவர்கள் கூட, 'முதல்வர்' கனவில் அலைவது தான்.அந்த கனவை, குறிப்பாக வேறு மாநிலத்துக்காரரான, நடிகர் ரஜினி, எங்கே கெடுத்து விடுவாரோ என்ற பயம் அவர்களுக்கு ஏற்பட்டு, அலறுகின்றனர்.திராவிடன் என்ற பாதையில் பயணித்து, ரஜினி எங்கே, அரசியலில் நுழைந்து விடுவாரோ என்ற பயத்தில், 'தமிழகத்தை தமிழன் தான் ஆள வேண்டும்' என, கூப்பாடு போடுகின்றனர்.இப்படி... பயந்து, அலறி, திராவிடர் ஆட்சி, தமிழகத்தில் ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றனர். தமிழர், தெலுங்கர், மலையாளி, கன்னடர் என, பாகுபாடு இல்லாமல், சிறப்பாக ஆட்சி செய்த, நீதி கட்சி ஆட்சியை, ஏன் தமிழக அரசியல் தலைவர்கள் மறந்து போயினர்?அத்தகைய, சிறந்த, திராவிடர் ஆட்சியை, ரஜினியால் கொண்டு வர முடியும் என, நம்புகிறேன்.'தமிழன்' என, தம்பட்டம் அடிக்கும் தமிழக அரசியல் தலைவர்கள், ஜாதி, மதம், இனம் என, ஏதாவது ஒரு வட்டத்தின் உள்ளே தான் நின்று கொண்டிருக்கின்றனர்.அவர்களில், தேசிய, திராவிட, பொதுவான எண்ணம் கொண்ட ஒருவரை நம்மால் அடையாளம் காட்ட முடிகிறதா?அப்படியே, தமிழனை முதல்வராக்கி விட்டாலும், லெட்டர் பேடு கட்சித் தலைவர்கள், 'எங்கள் ஜாதி தான் மெஜாரிட்டியாக உள்ளது; எங்கள் ஜாதி ஆள் தான் முதல்வராக வேண்டும்' என, கொடி பிடிப்பர்.பின், 'எங்கள் பாட்டன், முப்பாட்டன் மன்னர்களாக இருந்தனர். எனவே, சேரன், சோழன், பாண்டியன், பல்லவர் என, அமைச்சர் பதவியையும், அதிகாரத்தையும் பிரித்து கொடுங்கள்' என்பர்.அத்தகையவர்களை தான், தலைவர்களாக நாம் ஏற்றுக் கொண்டிருந்துள்ளோம்; இப்போதும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன், சென்னை மாகாணத்தில் இணைந்திருந்த, தெலுங்கர்கள், மலையாளிகள், கன்னடர்களுக்கு தலைமை இடமாக இருந்தது தமிழகம் தான்.'அனைத்து மொழி பேசும் மக்களும் இங்கு வாழ்கின்றனர்; இவர்களை எப்படி பிரித்து வைப்பது' என நினைக்கின்றன, சில பெரிய கட்சிகள்.இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தாங்கள் ஆட்சி செய்ய முடிகிறது; தமிழகத்தில் மட்டும் கால் ஊன்ற முடியவில்லையே என்ற ஆத்திரத்தில் பிரித்தாள முயற்சிக்கின்றன.இதை உணர்ந்து, திராவிடர்களான நம்மில், ஒரு தேசிய தலைவரை உருவாக்குவோம். தென் மாநிலங்களில் நன்கு அறிமுகமானவரும், சிறந்த மனித நேயராகவும், ஆன்மிகவாதியாகவும் விளங்கும் நடிகர் ரஜினிகாந்தை ஏற்போம்.நடைபெறும் இந்த, திராவிட இயக்க நுாற்றாண்டில்,திராவிட விடிவெள்ளியாக, புதிய திராவிட தலைவனாக, ரஜினியை வார்த்தெடுப்போமே! இ-மெயில்:tvlmakkalparvai@gmail.com. ஜி.பாலகிருஷ்ணன்சமூக ஆர்வலர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X