மெல்லிசையை...நெஞ்சம் மறப்பதில்லை : நாளை இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் நினைவு நாள்| Dinamalar

மெல்லிசையை...நெஞ்சம் மறப்பதில்லை : நாளை இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் நினைவு நாள்

Added : ஜூலை 13, 2017 | கருத்துகள் (2)
மெல்லிசையை...நெஞ்சம் மறப்பதில்லை : நாளை இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் நினைவு நாள்

எம்.எஸ்.விஸ்வநாதன் என்ற இசை இமயம் 2015 ஜூலை 14ல் மறைந்திருந்தாலும், அவரது இசை எத்தனை ஆண்டுகள் மறைந்தாலும் மறையாது. நிகழ்வுகள் என்று எதுவாகயிருந்தாலும் எம்.எஸ்.வி., யின் இசையை கேட்கலாம். 'நீராடும் கடலுடுத்த நில மடந்தை கெழிலொழுகும்,' என்ற தமிழ்த்தாய் பாடல் எம்.எஸ்.வி., யின் இசையில் உருவானதே. உள்ளத்தால் உணர்வால் நம்மை மயக்க வைக்கும் அற்புத சக்தி எம்.எஸ்.வி., இசைக்கு உண்டு. அத்தகைய அற்புத சக்தி அந்த ஹார்மோனியம், தபேலா, கிதார், வயலின், ஷெனாய் போன்ற இசை கருவிகளுக்கு உண்டு. அவரது இசையால் நாம் மட்டுமின்றி அந்த இசை கருவிகளும் ஒருவித மயக்க நிலைக்கு சென்றிருக்கக்கூடும். ஒரு பாடலை நுாறு முறை கேட்டிருந்தாலும் மீண்டும் கேட்கும் போது, அவர் அதே பாடலில் ஏதோ ஒன்று செய்திருக்கிறார் என்று புதிதாக நம்மால் உணர முடிகிறது.
எம்.ஜி.ஆர்., முதல் முறையாக கதாநாயகனாக நடித்த படமும், எம்.எஸ்.வி., முதல் முறையாக இசையமைத்த படமும் ஒன்றே. படத்தின் பெயர் ஜெனோவா. 1953ல் வெளியானது. இந்த
படத்திற்கு தயாரிப்பாளர் ஈபச்சன், எம்.எஸ்.வி.,யை ''இசையமைப்பாளர்,'' என்றார். ''இந்தப் புதுப்பையன் என் படத்திற்கு இசையமைப்பாளரா?,'' என ஆச்சரியமாககேட்டார் எம்.ஜி.ஆர்.,
''எம்.எஸ்.வி., தான் இசை யமைப்பாளர்,'' என எம்.ஜி.ஆரிடம் உறுதியாக சொல்லி விட்டார் ஈபச்சன். எம்.ஜி.ஆர்., சொல் செயலிழந்தது என்பதுஎம்.ஜி.ஆரின் திரையுலகவரலாற்றில், இதுவே முதலும், கடைசியாகவும் இருக்க முடியும். படத்தின் பாடல்களை கேட்ட எம்.ஜி.ஆர்., ஆச்சரியப்பட்டு போனார். இவ்வளவு அருமையான பாடல்களை தந்த ஒருவரை இழக்கப் பார்த்தோமே என்று வருந்தி எம்.எஸ்.வி.,யை அவரது வீட்டிற்கே சென்று மனதாரபாராட்டினார். ''இனிமேல் என்னுடைய படத்திற்கு நீ தான் இசையமைப்பாளர்,'' என வாழ்த்தி விட்டு வந்தார்.

திரையுலக ஜாம்பவான்கள் : எம்.எஸ்.வி., இசை அமைப்பாளராக நுழைந்த காலம் அவ்
வளவு எளிதானது அல்ல. எஸ்.வி. வெங்கட்ராமன், ஜீ.ராமநாத அய்யர், கே.வி.மகாதேவன், டி.ஆர்.பாப்பா, சுதர்சன் மாஸ்டர் போன்றவர்கள் இசையில் கோலோச்சிய காலம். சிங்கங்களின் முன் நின்ற சிறு முயல் போல் எம்.எஸ்.வி., இருந்தார். எனினும் திறமைக்கு வயது ஒரு தடை அல்ல என்பர். காலத்தால் அழிக்க முடியாத இசைக் காவியங்களை டி.கே.ராமமூர்த்தியுடன் இணைந்து கானங்களாக உருவாக்கிக் கொண்டிருந்தார். தமிழ் திரையுலகம் மட்டும்
அல்லாமல், இந்தி திரையுலகமும், இவர்களை திரும்பி பார்க்கதுவங்கின. நவுஷத், சங்கர் ஜெய்கிசன், ரோசன், சி.ராமச்சந்திரா, மதன் மாளவியா, சலீல் சவுத்ரி, ரவி, ஓ.பி.நாயர், கல்யாண்ஜி ஆனந்ஜி, எஸ்.டி.பர்மன், ஆர்.டி.பர்மன், லட்சுமி காந்த் பியரிலால் போன்ற இந்தி இசையமைப்பாளர்கள், இவரது இசையை உன்னிப்பாக உற்று நோக்கினர். சில தமிழ்ப்படங்கள் இந்தியில் மறு தயாரிப்பாக உருவாக்கப்பட்ட போது இந்தி இசையமைப் பாளர்கள் எம்.எஸ்.வி.,யை போல் தம்மால் இசையமைக்க முடியுமா? என்பது சந்தேகமே என்று கூட வெளிப்படையாக கூறியதுண்டு.

குவிந்த பாராட்டுகள் : எம்.எஸ்.வி., தனது மானசீக குருவாக இந்தி இசையமைப்பாளர் நவுஷத்தை ஏற்றார். நவுஷத் பாடல்களை கேட்பதற்காகவே இளம் வயதில் கோவையில் டீக்கடை ஒன்றில் எம்.எஸ்.வி., வேலை பார்த்ததாகக் கூறுவர். அந்த நவுஷத் பின்னாளில் இப்படி சொல்லி
யிருக்கிறார். ''எம்.எஸ்.வி., என்னை குரு என்கிறார். ஆனால் உண்மையிலேயே அவர் தான் எனது குரு. ஏனென்றால் பாலும் பழமும், எங்கள் வீட்டுப்பிள்ளை படங்களை இந்தியில் எடுக்கும் போது நான் இசையமைப்பாளர். ஆனால் எம்.எஸ்.வி.,யை போன்று என்னால் இந்திப் படங்களில் இசையமைக்க முடியவில்லை,'' என பெருமையாக கூறியிருந்தார். பாசமலர், பாலும் பழமும், பாவம் மன்னிப்பு போன்ற பாடல்களை கேட்டு விட்டு லதா மங்கேஷ்கர், ''இதுபோன்ற பாடல்களை நான் தமிழிலில் பாட ஆசைப் படுகிறேன்,'' என கூறியிருக்கிறார்.பாடல்களுக்கு மட்டுமின்றி சம்பவங்களுக்கான பின்னணி இசை, தலைப்பிற்கான இசை வடிவம் என்று ஒரே படத்திற்கு தனது வித்தைகளை காட்டியவர் எம்.எஸ்.வி.,இவரது இசையில் டி.எம்.
சவுந்திரராஜன், பி.சுசீலா, ஏசுதாஸ், எஸ்.பி. பாலசுப்பிரமணியன் போன்ற பாடகர்கள் பாடும்போது ஒருவித மொழி சுத்தம் இருப்பதை உணர முடியும். பாடகர்கள் பாடல் வரிகளை உச்சரிக்கும்போது மொழியின் ஒலியில் எவ்வித சிதைவும் ஏற்படாமல் கவனித்து இசையமைத்தமையால் உன்னதமான பாடல்களை இவரால் தர முடிந்தது. இது தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும், இவர் செய்த மகத்தான சேவை.

இசையின் பெருந்தன்மை : எம்.எஸ்.வி., இசையமைத்ததற்காக கறாராக பேசி பணத்தை கேட்டு வாங்க மாட்டார். மார்க்கெட் ஏறி விட்டதற்காக பணத்தை எந்த தயாரிப்பாளரிடம் இருந்தும் உயர்த்தி கேட்டதில்லை. ஒரு சில நேரங்களில் படம் தோல்வியை தழுவி னாலும், இவரது பாடல்கள் வெற்றியடைந்து காலங் காலமாக ஒலித்து கொண்டிருக்கும். 1962ல் வெளிவந்த பாசம் திரைப்படம் தோல்வியடைந்து ரசிகர்களின் பாசத்தை இழந்தது. பாடல்கள் வெற்றி
பெற்றன. ''உலகம் பிறந்தது எனக்காக,'' போன்ற பாடல்களை மறக்க முடியுமா? பெரும்பாலும் கவிஞர்கள் 'ரேண்டம் தாட்ஸ்' முறையில் கவிதைகள் எழுதுவார்கள். அதாவது கற்பனையில் மனம் போன போக்கில் ஆழ்ந்த கருத்துக்களில் எழுதுவது பொருள் நிறைந்ததாகவும், ரசிக்கக்கூடிய தாகவும் இருக்கும்.

''உலகம் பிறந்தது எனக்காக,ஓடும் நதிகளும் எனக்காக, மலர்கள் மலர்வது எனக்காக, அன்னை மடியை விரித்தால் எனக்காக,'' போன்ற வரிகளும் எம்.எஸ்.வி.,யின் இசையில் சேரும் போது தமிழ் திரையுலகம், சிறந்த பல்கலையாக இருந்தது என சொல்லத்தோன்றும்.எம்.எஸ்.வி.,யின் இசைக் குழு இவரது குழுவில் தாத்தா, மகன், பேரன் என மூன்றுதலைமுறையினர் வேலை பார்த்து உள்ளனர். கிதார் வாசிக்கும் பிலிப், மாண்டலின் ராஜூ, தபேலா, மிருதங்கம் வாசிக்கும் கோபால கிருஷ்ணன், டிரம்பட் தாமஸ், ஷெனாய் சத்தியம், பியானோ மங்கல மூர்த்தி, புல்லாங்குழல் நஞ்சுன்டையா, ஹென்றி டேனியல், ஜோசப் கிருஷ்ணா போன்ற இசைக் கலைஞர்கள் எம்.எஸ்.வி.,யின் முதுகெலும்பாக இரவு பகல் பாராமல் பணியாற்றி
யுள்ளனர். இவர்கள் அனைவரும் வெறும் பணத்திற்காக மற்றும் பணியாற்றவில்லை.
எல்லா ராகமும் இவருக்கு சொந்தம்

எந்த ராகத்திலும் இசையமைக்கும் சரஸ்வதி கடாட்சம் எம்.எஸ்.வி.,க்கு இறைவனால் அருளப்பட்டது என்பர். இந்துஸ்தானியில் 'கர்ணன்' படப்பாடல்கள், கிளாசிக்கல் பாணியில் ''மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்,'' போன்ற பாடல்கள், ''என்னை மறந்ததேன் தென்றலே'' என்று கஜல் வகை பாடல்கள், வெஸ்டர்ன் மியூசிக், தத்துவம், சோகம், வீரம், சகோதரப்பாசம், நட்பு, தேசப்பற்று, தாய்ப்பாசம் என்றுஎல்லாவற்றிருக்கும் பாடல்களை கொடுத்த இசை சக்ரவர்த்தி ஆவார். கவிஞர்களின் பாடல்களுக்கு உயிர் கொடுத்தார். 1952ல் பணம் படத்தில் ராமமூர்த்தியுடன் இணைந்து பணியாற்ற துவங்கினார்.இரட்டையர் இணைந்து 1965ல் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வரை பணியாற்றினர். பின்னர் இருவரும் தனியாக இசைப்பயணங்களை மேற்கொண்டனர்.

உயர் பண்புகள் : தலைக்கனம் இல்லாமல்எவரிடமும் வெளிப்படையாக எளிதாக பழகும் தன்மை கொண்டவர். சிறு குழந்தை போல் பழகுவார். பிறர் மனம் புண்படாமல் பேசுவது இவரது இயல்பு. இவர் இசையமைத்த படங்களில் ஒரு நடிகரோ, நடிகையோ தொடர்ந்து நடித்தால் அவர்கள் நட்சத்திர அந்தஸ்து உறுதி. இவர்களின் வெற்றி என்பதற்கான அடிப்படை கூறு இவரையே சார்ந்தது. உழைக்க தெரிந்த இவருக்கு பிழைக்க தெரியவில்லை என்பர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2014ல் விழா எடுத்து எம்.எஸ்.வி.,யை கவுரவித்தார். இசைச்
சக்ரவர்த்தி என்ற பட்டமும் வழங்கினார்.

- ஆர்.சுகுமார்
கோட்ட ஆய்வாளர்(ஓய்வு)
நில அளவைத்துறை
சிவகங்கை. 77087 85486

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X