காமராஜர் போல் ஒருவர் வருவாரா| Dinamalar

காமராஜர் போல் ஒருவர் வருவாரா

Added : ஜூலை 14, 2017 | கருத்துகள் (5)
காமராஜர் போல் ஒருவர் வருவாரா

இந்நாளில் எல்லோரும் தலைவர்கள். ஆனால், நாட்டு மக்களின் துயர் துடைத்து உயர் வாழ்வுக்கு வழிகாட்டுபவர்கள் மிகக்குறைவு. லட்சியங்களை மறந்து, கோடிகளை நினைத்து வாழும் 'தலைமைகள்' நிறைந்துள்ள போது தொண்டு தியாகம், லட்சியப்பிடிப்பு ஆகியவைகளை
மூலதனமாகவும், முதன்மையாகவும் கொண்டு வாழும் மனித உள்ளம் கொண்டோர் மிகக்குறைவு.

பரதனும், சீசரும், ராஜராஜனும் வாழ்ந்ததைப்போல் 20ம் நுாற்றாண்டில் வாழ்ந்தவர். பிரதமர் பதவியை இருமுறை வேண்டாமென்று ஒதுக்கியவர். நேர்மையானவர். கறைபடியாத கரங்கள் உடையவர். சட்டத்தை மதிப்பவர். வெற்றியையும், தோல்வியையும் சமமாக கருதுபவர். அவர் ஒரு துறவி. மூவாசைகளையும் வென்றவர் அவர்தான் பெருந்தலைவர் காமராஜர்.

கல்விப்புரட்சி

அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டல்ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'
என்றான் பாரதி.

இதை தலையாய குறிக்கோளாய் கொண்டு, 14 ஆயிரம் புதிய பள்ளிகளை திறந்தார். படிக்க வரும் குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டம் தீட்டினார். இத்திட்டத்திற்கு நிதி பற்றாக்குறை என்றுக்கூறி, எதிர்ப்புகள் வரவே இத்திட்டத்தை நிறைவேற்ற வீடு வீடாக சென்று பிச்சை எடுக்கவும் தயங்க மாட்டேன் என்று கூறிய தலைவனை இனிமேல் பார்க்க முடியுமா?

கொண்டு வந்த திட்டங்கள் : நெய்வேலி நிலக்கரி திட்டம், பெரம்பலுார் ரயில் பெட்டி தொழிற்சாலை, திருச்சி பாரத் ெஹவி எலக்ட்ரிக்கல்ஸ், ஆவடி கனரக வாகன தொழிற்சாலை, கல்பாக்கம் அணுமின் நிலையம், கிண்டி டெலி பிரின்டர் தொழிற்சாலை, ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை, சங்ககிரி சிமென்ட் தொழிற்சாலை, மேட்டூர் காகித தொழிற்சாலை, கிண்டி அறுவை சிகிச்சை தொழிற்சாலை, துப்பாக்கி தொழிற்சாலை, அரக்கோணம் இலகுரக ஸ்டீல் பிளான்ட், சமயநல்லுார் அனல் மின் நிலையம்.இவை மட்டுமா? மணி முத்தாறு,
ஆரணியாறு, சாத்துனுார், அமராவதி, கிருஷ்ணகிரி, வைகை, காவிரி டெல்டா, நெய்யாறு, மேட்டூர், பரம்பிக்குளம், புள்ளம்பாடி, கீழ்பவானி என்று இன்னும் விவசாயிகள் நம்பிக்கொண்டிருக்கும் பாசன திட்டங்கள் காமராஜர் உருவாக்கியவை. 14 சர்க்கரை தொழிற்சாலைகள்,
159 நுாற்பு ஆலைகள், 9 ஆண்டு ஆட்சி காலங்களில் எத்தனை எத்தனை... சொல்லிக் கொண்டே போகலாம்.

களம் கண்டவர் : 1965ல் இந்தியா - -பாக்., போர் மூண்டபோது லால்பகதுார் சாஸ்திரி பிரதமராக இருந்தார். இந்தியாவை பணிய வைக்க பாக்., அதிபர் அயூப்கான் கருதினார். பஞ்சாப் மாநில எல்லையில் போர்முனைக்கு சென்று நம் நாட்டு வீரர்களுடன் வீர உரையாட காமராஜர் விரும்பினார். ஆனால், பிரதமர், ஜனாதிபதி ராதாகிருஷ்ணனும் தடுத்தனர். காமராஜர் பிடிவாதமாக இருக்க, சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. கரும் பச்சை, பேண்ட் சட்டையில் செல்லுமாறு கூறினர். அதற்கு மறுத்துவிட்டார். வீரர்கள் மத்தியில் அவர் வீர உரையாற்ற, வடமாநில வீரர்கள் 'காலா காந்தி காலா காந்தி' என்றுக்கூவி மகிழ்ந்தனர். இந்தியா வரலாற்றில் அரசுப்
பதவி எதிலும் இல்லாத ஒரு தலைவர், தமது உயிரை துச்சமாக மதித்து போர்க்களம் சென்று திரும்பியது இன்றுவரை காமராஜரை தவிர வேறு யாருமில்லை.

எளிமையின் சின்னம் : காமராஜர் முதல்வராக இருந்தபோது மதுரை சென்றார். விருந்தினர் மாளிகையில் தங்கினார். இரவு மின்சாரம் இல்லை. 'கட்டிலை துாக்கி மரத்தடியில் போடு' என்றார். கட்டிலுக்கு அருகில் ஒரு போலீஸ்காரர் துப்பாக்கியை வைத்துக்கொண்டு காவலுக்கு நின்றார். 'நீ இப்படி துப்பாக்கியை வைத்துக்கொண்டு அருகில் நின்றால், எனக்கு
எப்படி துாக்கம் வரும். என்னை யாரும் துாக்கிச்சென்றுவிட மாட்டார்கள். நீ போய் படு' என்றார். இப்படி ஒரு முதல்வரை யாராலும் பார்க்க முடியுமா?

அன்னையாருக்கு ரூ.120 : காமராஜர் முதல்வராக இருந்தபோது தாயாருக்கு செலவுக்காக 120 ரூபாய் கொடுத்தார். 'முதல் மந்திரியின் தாயாராக நான் இருப்பதால், பலரும் என்னை பார்க்க வருகிறார்கள். அவர்களுக்கு சோடா, கலர் வாங்கிக்கொடுக்காமல் எப்படி அனுப்புவது? மாதம் 30 ரூபாய் கூடுதலாக 150 ரூபாய் வேண்டும்' என்றார். அதற்கு காமராஜர் என்ன சொன்னார் தெரியுமா? 'யார் யாரோ வருவார்கள், அவர்களுக்கு சோடா, கலர் வாங்கிக்கொடுக்க வேண்டும் என்று அவசியமில்லை. 120 ரூபாய்க்கு மேல் தரமுடியாது' என்று சொல்லிவிட்டார். கழிவறை கட்ட இடம் வாங்க 3 ஆயிரம் வேண்டும் என்றார். அதற்கும் மறுத்துவிட்டார்.

ராமநாதபுரம் புயல் : 1955ல் ராமநாதபுரம், புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டது. மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து துடித்தனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்க அதிகாரிகள் புறப்பட்டனர். தண்ணீரை கண்டு தயங்கி நின்றனர். பரமக்குடியில் பாலம் இடிந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. நேரில் பார்வையிட வந்த காமராஜரிடம், 'ஐயா, நிவாரணம் வழங்கும் பணிகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் செல்லுங்கள்' என்று அதிகாரிகள் கூறினர்.
'அதிகாரிகளே எல்லாத்தையும் கவனித்து கொள்ளுங்கள்' என்று கோட்டையில்
இருந்தபடியே உத்தரவு போட்டிருக்கலாமே. 'மக்களின் கஷ்டத்தை நேரில் பார்த்து ஆறுதல் சொல்லவே நான் வந்துள்ளேன்' என்றுச் சொல்லி வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு, சாரைக்கயிறைப் பிடித்துக்கொண்டு மார்பளவு தண்ணீரை கடந்து சென்றார். இதை அண்ணாதுரை
திராவிட நாடு இதழில் காமராஜரை பாராட்டி எழுதினார்.

பொது வாழ்வில் நேர்மை : காங்., மாநாடு நடந்து முடிந்து கணக்கு கேட்டபோது, '67 ரூபாய்
3 அணா குறைகிறது' என்று சொன்னவரிடம் 'பொது வாழ்வில் நேர்மை வேண்டும். உன் காசை போட்டு கணக்கை முடி' என்று சொல்லியவர் காமராஜர்.தன் தங்கையின் மகள் வழி பேரன் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம் போட்டுவிட்டு, 'தாத்தா, நீங்கள் சிபாரிசு செய்தால் போதும்; கிடைத்துவிடும்' என்றான். அதற்கு காமராஜர் 'அதற்கென்று கமிட்டி போடப்பட்டுள்ளது. நீ நல்லா பதில் சொன்னால் கிடைக்கும். கிடைக்கலைன்னா கோயம்புத்துாரில் பி.எஸ்சி., விவசாயம் ஒரு பாடம் இருக்கு. அதில் வேலை கிடைக்கும். சேர்ந்துபடி' என்றார்.முதல்வராக இருந்தபோது, மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்களை அவரிடம் கொடுத்து 'முதல்வர்
கோட்டாவில்' பத்தை தேர்வு செய்யுமாறு அதிகாரிகள் சொன்னார்கள். அவரும் 10 விண்ணப்பங்களை எடுத்துக்கொடுத்தார். 'உங்களுக்கு வேண்டியவர்களா' என அதிகாரிகள் கேட்டனர். 'இல்லை, தகப்பன் கையெழுத்து போடும் இடத்தை பார்த்தேன். அதில் கைரேகை வைத்துள்ள விண்ணப்பங்களை மட்டும் தேர்ந்தெடுத்தேன். பாவம் அந்த குடும்பத்தில் இந்த பையன்களாவது படித்து டாக்டராகட்டும்' என்றார். வாழ்வில் அவர் எவ்வளவு துாய்மையாக வாழ்ந்துள்ளார் என்பதற்கு இது சான்று.

வார்த்தைகளில் வாய்மை : 1967 ல் காங்., தோல்வி அடைந்தது. தி.மு.க., வெற்றி பெற்றது. அப்போது காமராஜர் சொன்னார், 'தி.மு.க., ஜெயித்திருக்கிறது. அவர்கள் ஆட்சியை திறம்பட நடத்த 6 மாதங்களாவது வேண்டும். ஆகவே, 6 மாதங்களுக்கு தி.மு.க., குறித்து பேசமாட்டேன்' என்றார். சொன்னது போல் நடந்தார். என்னே! காமராஜரின் வாய்மை!! காமராஜர் மறைந்ததும் அவர்
வாழ்ந்த வீட்டை வீட்டு உரிமையாளர் எடுத்துக்கொண்டார். அவர் பயன்படுத்திய காரை காங்., கட்சி எடுத்துக்கொண்டது. அவரது உடலை அக்னி எடுத்துக்கொண்டது. அவர் பெயரை மட்டும்
வரலாறு எடுத்துக்கொண்டது. வாழ்க காமராஜரின் புகழ்.

பேராசிரியர் குன்றக்குடி பெருமாள்
பேச்சாளர்
அருப்புக்கோட்டை
94437 38534

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X