ரூட்டை மாத்து... ஊரை ஏமாத்து... உடைச்சு ஊத்து!

Added : ஜூலை 14, 2017
Share
Advertisement
ரூட்டை மாத்து... ஊரை ஏமாத்து... உடைச்சு ஊத்து!

சென்னையிலிருந்து ரயிலில் வந்த சித்ராவை அழைத்துச் செல்வதற்காக, வண்டியில் வந்திருந்தாள் மித்ரா. அவளை ஏற்றிக் கொண்டு, கோவை ரயில்வே ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தாள் மித்ரா. ஸ்டேஷன் எதிரில், கீதாஹால் ரோட்டுக்கு, வண்டியைச் செலுத்த முடியாமல், கற்கள் வைத்து பூசப்பட்டு, பாதை அடைக்கப்பட்டிருந்தது.
''அடடே! பரவாயில்லையே... இந்த இடத்துல, வண்டிங்க குறுக்க வர்றதால பயங்கர பிரச்னை வருதுன்னு இப்பிடிப் பண்ணீட்டாங்களா... நம்ம போலீசும், அப்பப்போ நல்ல விஷயமெல்லாம் பண்றாங்க,'' என்று உற்சாகமாய்ப் பேசினாள் சித்ரா.
''நீ வேற கடுப்பை கெளப்பாதக்கா... அந்த விவகாரமே வேற. இது, நம்ம குடி மக்களுக்காகப் பண்ணது இல்லை; 'குடி' மகன்களுக்காகப் பண்ணுனது,'' என்று கூறியபடி, வண்டியை கலெக்டர் ஆபீஸ் திசையில் விட்டாள்.
''என்னடி சொல்ற...இதை அடைக்கிறதுக்கும், 'குடி' மகன்களுக்கும் என்ன சம்மந்தம்?'' என்று ஆர்வமாய்க் கேட்டாள் சித்ரா.
''அக்கா...லங்கா கார்னர்ல 'கிராஸ்' பண்றது, என்.எச்.,67 தெரியும்ல. என்.எச்.,ரோட்டுல இருந்து, 520 மீட்டர் துாரத்துக்குள்ள தான், கீதா ஹால் ரோடு இருக்கு. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, அங்க இருந்த ஓட்டல் 'பார்'களையும், ஒரு டாஸ்மாக் கடையையும் எடுத்துட்டாங்க. அதையெல்லாம் மறுபடியும் திறக்கிறதுக்கு, நம்ம 'மாவட்ட ஆபீசர்' பண்ணுன மாபெரும் 'வேலை' தான், இந்த ஐடியா. இதனால, இந்த வீதியில பூட்டிக்கிடந்த ஏழு ஓட்டல் 'பார்'களையும் திறந்துட்டாங்க'' என்றாள் மித்ரா.
இனிமே, ராப்பகலா, சரக்கை உடைச்சு ஊத்துவாங்க. அந்த டாஸ்மாக் கடையையும் திறந்துட்டாங்களா?'' என்று கேட்டாள் சித்ரா.
''அதுக்கான வேலையும் நடக்குது; இந்த 'பார்'களை திறக்க அனுமதிச்சதுக்கு, மிகப்பெரிய 'அமவுண்ட்' கை மாறிருக்காம். அப்பிடி இருக்குறப்போ, ஆளுங்கட்சி ஆளு நடத்துற 'பார்' மட்டும் திறக்காம இருப்பாங்களா?'' என்றாள் மித்ரா.
''ஓட்டல் 'பார்'களாவது பரவாயில்லை; இந்த கடையத் திறந்தா, விடிய விடிய வியாபாரம் நடக்குமே'' என்றாள் சித்ரா.
வண்டியை கோர்ட் எதிரிலுள்ள பேக்கரியில் நிறுத்தினாள் மித்ரா. இருவரும் டீ சாப்பிட, உள்ளே நுழைந்தனர். ஆளுக்கொரு 'வெஜ் சாண்ட்விச்', டீ சொல்லி விட்டு, மீண்டும் அதே மேட்டரைத் தொடர்ந்தாள் மித்ரா...
''டாஸ்மாக் கடைக்கு எதிரா, தி.மு.க.,காரங்க போராட்டம் நடத்துறாங்க; இன்னொரு பக்கம், அவுங்களே, கடைக்கு கட்டடம் தர்றாங்க. ரத்தினபுரியில ஏற்கனவே, ரெண்டு டாஸ்மாக் கடை இருக்குறப்போ, இன்னொரு கடை திறக்கக் கூடாதுன்னு மக்களோட சேர்ந்து தி.மு.க.,காரங்க போராட்டம் நடத்த, அந்த வார்டு செயலாளரான உடன் பிறப்பே, தன்னோட கட்டடத்தை, சரக்குக் கடைக்கு வாடகைக்குக் கொடுத்திருக்காரு; யாரு சொல்லியும் கேக்கலையாம்''
''நானும் ஒரு மேட்டர் கேள்விப்பட்டேன்; தி.மு.க., ஆட்சியில, டாஸ்மாக் 'பார்'களை எல்லாம் 'கன்ட்ரோல்' பண்ணிட்டு இருந்தாரே, ஆனந்தமான உடன் பிறப்பு; அவரு தான், இவுங்க பின்னணியில இருக்காராம்; ஆளுங்கட்சியோட ரகசிய உடன் படிக்கை பண்ணிக்கிட்டு, டாஸ்மாக் கடைக்கு எதிரா உடன் பிறப்புகள் போராடுனா, அவுங்களைக் கூப்பிட்டு, பேரம் பேசுறாராம்'' என்றாள் சித்ரா.
''தி.மு.க., மேட்டர் பேசவும், எனக்கு தெற்கு மாநகர் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம், ஞாபகம் வந்துச்சு. சரியான கூட்டம்க்கா...சரக்கு, பிரியாணின்னு உடன் பிறப்புகள், 'உற்சாகத்துல' மிதந்தாங்க. ஆறேழு வருஷத்துல இப்பிடி ஒரு கூட்டம் நடந்ததில்லைன்னு புதுப்பொறுப்பாளரை புகழ்றாங்க'' என்றாள் மித்ரா.
''அது சரி...வேற 'மாவட்டங்க' வந்தாங்களா?''
''ரெண்டு மாவட்டங்கள் வந்தாங்க. சி.ஆர்.ஆர்.,க்கு நிகழ்ச்சி...வராத முக்கியமான ரெண்டு பேரு, பொங்கலூர்க்காரரும், அவரு பையனும்'' தன் மீது அமர்ந்த பெரிய 'டைகர்' கொசுவை, ஓங்கி அடித்த சித்ரா, ''இது தான டெங்கு கொசு,'' என்றாள்.
''இதே தான்...மாவட்டத்துல 1074 டெங்கு கேசு, பதிவாயிருக்கு. பிரைவேட் ஹாஸ்பிடல்ல சேர்ந்தவுங்க பல நுாறு பேரு, இந்த கணக்குலயே வரலை; ஆனா, கொசு மருந்து அடிக்கிறதை, மருந்துக்குக்கூட பார்க்க முடியலை'' என்றாள் மித்ரா.
''கார்ப்பரேஷன்ல வார்டுக்கு 10 பேருன்னு, ஆயிரம் பேரு, கொசு மருந்து அடிக்கிற கணக்குல வேலை பாக்குறாங்க. ஒரு ஆளுக்கு ஒரு நாள் சம்பளம், 300 ரூபா; ஆனா, உண்மையா, 300 பேரு, வேலைக்கு இருந்தாலே பெருசு தான்.
இருக்குற ஆளுகளுக்கும் சம்பளத்துல, 100 ரூபா குறைச்சு தான் தர்றாங்க. ஆளுங்க வந்ததா பொய்க்கணக்கு, கொடுக்குற சம்பளத்துல அடிக்கிறதுன்னு கொசு மருந்துல அடிக்கிறது மட்டும், மாசத்துக்கு 70 லட்சத்தைத் தாண்டும்'' என்றாள் சித்ரா.
''அடுத்து, குப்பைய யாரு அள்ளுறதுங்கிறதுல, சேனிட்டரி இன்ஸ்பெக்டர்களுக்கும், இன்ஜினியர்களுக்கும் இடையில பெரிய தகராறு நடக்குதாமே'' என்றாள் மித்ரா.
''ஆமா மித்து...இப்போ இந்த வேலைய, எஸ்.ஐ.,கள்தான் பாக்குறாங்க; டீசலு அடிக்கிறது, 'டிரிப்' கணக்கு காமிக்கிறதுன்னு நல்லா சம்பாதிக்கிறாங்க...நம்மூர்ல 'நார்த்'ல இருக்குற 'ஜெட்எஸ்ஓ' ஒருத்தரு, பல கோடி ரூபாயில கட்டிருக்குற வீடுதான் இதுக்கு சாட்சியா சொல்றாங்க. ஆனா, நேர்மையான எஸ்.ஐ.,க்கள், இந்த வேலைகளை இன்ஜினியரிங் செக்ஷன்தான் பார்க்கணும்கிறாங்க. சி.எம்.ஏ.,என்ன முடிவு எடுக்கப்போறாரோ?'' என்றாள் சித்ரா.
சாண்ட்விச் வந்தது; அதைச் சுவைத்துக் கொண்டே கேட்டாள் மித்ரா...
''அக்கா...இந்த மேட்டரைப் பேசவும், சுந்தராபுரம் ஏரியாவுல இருக்குற ஒரு சேனிட்டரி சூபர்வைசர் ஞாபகம் வந்துச்சு. அவரு தான், அந்த ஏரியாவுல 'கார்ப்பரேஷன் தாதா' மாதிரி வலம் வர்றாராம். அவருக்கு மேல இருக்குற, எஸ்.ஐ., எல்லாரையும் மெரட்டுறாராம். செம்ம கலெக்ஷன் பார்ட்டியாம். அவரைப் பத்தித் தெரியாம, அங்க இருக்குற சோஷியல் ஒர்க்கர் ஒருத்தவுங்க, பெரிய ஆபீசர்ட்ட, எஸ்.ஐ.,களைப் பத்தித் தப்புத்தப்பா போட்டுக் கொடுத்துர்றாங்களாம்''
''அவருக்கு யாரு, எப்பிடின்னு தெரியும்ல?''
''அது தெரியலை...ஆனா, இவுங்க சொன்னா சரியா இருக்கும்னு, 'மெமோ' கொடுக்கப்போறதா அந்த எஸ்.ஐ.,யைக் கூப்பிட்டு, 'வார்ன்' பண்ணிருக்காரு''
''இவுங்க, 'ஸ்வாச் பாரத்' வேலையப் பார்க்காம, நிர்வாக விஷயத்துல எதுக்கு தலையிடுறாங்க?'' என்று கேட்டாள் சித்ரா.
அதைக்கவனிக்காத மித்ரா, ''நம்ம சிட்டியில, டிராபிக் போலீஸ்காரங்களைப் பத்தி, ஏகப்பட்ட கலெக்ஷன் 'கம்பிளைன்ட்' வருதுக்கா...என்னன்னு விசாரிச்சா, டிராபிக்போலீஸ்ல, பல வருஷமா சில பேரு நகராம ஆணி அடிச்சது மாதிரி உட்கார்ந்து இருக்கிறது தான் காரணம்கிறாங்க. அதுலயும் வெரைட்டிஹால் ரோட்டுல இருக்குற சார்ஜெண்ட் ஒருத்தரு, மத்த போலீஸ்களுக்கு லீவு வாங்கித்தர்ற அளவுக்கு, மேலிடத்துல செல்வாக்கா இருக்காராம்'' என்றாள் மித்ரா.
''எனக்குத் தெரியவே, மூணு வருஷமா, டிராபிக்ல பல பேரு மாறாமலே இருக்காங்க'' என்றாள் சித்ரா.
கொதிக்கக்கொதிக்க டீ வந்தது; குடித்துக் கொண்டே ஆவேசமாய்ப் பேசினாள் மித்ரா...
''மருதமலையில நடக்குறதா ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்க்கா...அங்க மொத்தம் 13 உண்டியல் இருக்கு; அதுல எட்டு, கருவறைக்குப் பக்கத்துல அர்த்த மண்டபத்துல இருக்கு. மாசத்துக்கு, பல லட்ச ரூபா, காணிக்கை வருமாம். அதை, பெரிய ஆபீசருங்க 'சீல்' வச்சிருவாங்க. ஆனா, அங்க இருக்குற பூசாரி ஒருத்தரு, அந்த உண்டியல்களுக்கு திருட்டு சாவி கண்டு பிடிச்சிட்டாராம்''
''கேமராவெல்லாம் இருக்குமே'' என்று குறுக்குக் கேள்வி கேட்டாள் சித்ரா.
''ரெண்டு கேமரா இருக்கு; அர்த்தஜாம பூஜை முடிஞ்சதும், அந்த ரெண்டு கேமராவுக்கும் கருப்புத் துணி போட்டு மூடிட்டு, உண்டியலை உடைக்கிறாங்களாம். இதுல, ஆபீஸ்ல இருக்குற ஒருத்தரு உட்பட ஒரு 'டீம்'க்கே பங்கு இருக்காம். எச்.ஆர்.என்.சி., ஆபீஸ்ல கேட்டா, 'சான்சே இல்லை'ன்னு தட்டிக் கழிக்கிறாங்களாம்'' என்றாள் மித்ரா.
அருகிலுள்ள மேசையில் இருந்தவரின் அலைபேசியில், 'மருதமலை மாமணியே முருகய்யா' என்று பாடல் அலற, இருவரும் சிரித்தபடி, கிளம்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X