இப்படி எல்லாம் இருக்க கூடாது!

Added : ஜூலை 18, 2017
Advertisement
இப்படி எல்லாம் இருக்க கூடாது!

இத்தனை அக்கிரமங்கள் நடக்கின்றனவே இவற்றை யாரும் தட்டிக் கேட்பதில்லையா... தவறென்று அவர்களுக்குச் சுட்டிக் காட்டுவதில்லையா... என்று அரசியல்வாதிகளைப் பார்த்துக் குமுறும் பொதுஜனத்துக்கு ஆறுதலாக கூறப்படும் பதில், ''அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா...'' என்பதுதான். 'அரசியல் என்றால் இப்படித்தான் இருக்கும். அரசியல்வாதிகள் என்றால் அப்படி தான் இருப்பார்கள்' என்று ஆத்திரப்படுகிறவர்களை ஆற்றுப்படுத்திவிடுகிறது இச்சமூகம்.இப்படியெல்லாம் இல்லாமலும் இந்தியாவில் அரசியல் நடந்திருக்
கிறது. இன்றைய இளைஞர்களுக்கு அது வியப்பாக இருந்தால்கூட பரவாயில்லை; பிரமாண்ட மான கற்பனையாகவே இருக்கும்.

அன்றும், இன்றும் : அன்று தலைமை சிறந்திருந்தது. தலைமையின் கீழ் அத்தனை பேரும் சிறந்திருந்தனர். அரசியலில் ஒரு நாகரிகம் இருந்தது. அரசியலைக் குடும்பமாக்கி, குடும்பத்துக்கு
அரசியலை உரிமையாக்கிஎண்ணற்ற அலங்கோலங்களை அரங்கேறியிருக்கிற இந்நாளைப்போல அந்நாள்கள் இல்லை. நெகிழ்வூட்டும் ஒரு நல்ல செய்தி... காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது ஒரு தென் மாவட்டத்திற்கு நேருவை அழைத்துப் போயிருக்கிறார். வழியில் அவருடைய தாயாரைப் பார்க்க விரும்பியிருக்கிறார் நேரு. நேருவின் கார் வீட்டுக்குச் செல்லவில்லை. சாலையில் ஒரு ஓரமாக நிறுத்தப்படுகிறது. காமராஜ் தாயாருக்குத் தகவல் சொல்லியனுப்பப்படுகிறது.வயற்காட்டில் நாற்று நடவு செய்து கொண்டிருந்த சிவகாமி சேறும் சகதியுமாக வந்து நிற்கிறார். நேரு அதிர்ந்து போகிறார். ஒரு மாநில முதலமைச்சரின் தாயார், மகன் அந்தப் பதவி வகிக்கிறபோதே, வயற்காட்டில் இறங்கி வேலை செய்து கொண்டிருப்பது அன்றைக்கு வியப்பென்றால் இன்றைக்கு அதீதமான கற்பனை.இன்றைக்கு ஒரு நகராட்சி உறுப்பினரின் மைத்துனர்கூட, மச்சான் வகிக்கிற பதவி ஆதிக்கத்தில் விலையுயர்ந்த பெரிய கார்களில் வலம் வந்து கொண்டிருப்பார். அரசியலைக் குடும்பம் அண்டவிடாமற் பார்த்துக் கொண்டது அன்றைய அரசியல். அரசியலில் யாரையும் அண்டவிடாமல் பார்த்துக் கொள்கின்றன இன்றைய குடும்பங்கள். ஒரு குடும்பத்தைத் தவிர்க்க நினைத்தால் இன்னொரு குடும்பத்தைக் கொண்டுவந்து நிறுத்துகிறது இன்றைய தேர்தல்.

கக்கனின் எளிமை : அமைச்சராக இருந்த கக்கன் தலைமைச் செயலகத்திலிருந்து வீடு திரும்பும் நேரத்திற்கு முன்னதாக, பள்ளிக்கு போய்அவருடைய மகன் காசி விஸ்வநாதனை (பின்னாளில் தன் சொந்த முயற்சியால் அதிகாரியானவர்) அழைத்துக்கொண்டு வர கக்கன் மனைவி கூற அவ்வாறே செய்திருக்கிறார் ஓட்டுநர். அலுவலகத்திலிருந்து கீழே இறங்கி
வந்து காரில் ஏறப்போனபோது மகன் உள்ளே அமர்ந்திருப்பதைப் பார்த்து, 'இது அரசு வாகனம். சொந்தப் பயனுக்கானதல்ல' என்று கூறி மகனை இறக்கிவிட்டுவிட்டார் கக்கன்.
அரசியலில் இன்றைய நிலைமை எப்படி இருக்கிறது. இவையெல்லாம் சகஜமென்று மக்கள் ஏன் சமாதானம் செய்து கொள்கிறார்கள் என்றால் அரசியல் நடத்த பணம் வேண்டும். தேர்தலுக்குச் செலவிடவேண்டும். கட்சித்தலைமைக்குக் கொட்டிக் கொடுக்க வேண்டும் என்கிற கடப்பாடுகள் தான். பணமில்லாதவர்களையும் பணம்பார்க்க ஆசைப்படாதவர்களையும் மக்களும் பெரிதாக
வரவேற்கத் தயாரில்லை. காரணம் நமக்கும் அவர்களிடமிருந்து சலுகைகளும், சில்லறையும் வேண்டும் என்கிற தேவைதான்.

நிலைமை மாறுமா : இந்த நிலைமை இப்படியே தான் இருக்குமா? இது மாற சாத்தியமுண்டா என்றால் முடியும் என்றுதான் தோன்றுகிறது. அதற்கு முயன்று பார்க்கிற முனைப்பு தான் முதலில் வேண்டும்.காமராஜர் ஆட்சியைக் கொண்டு வருவதாகக் கூறுகிறவர்கள் ஒருபுறம்; அதுதான் நடந்து கொண்டிருக்கிறது என்பவர்கள் மறுபுறம். இவர்களெல்லாம் காமராஜர் ஆட்சி பற்றி பேசுவதிருக்கட்டும், முதலில் நம்மில் சில காமராஜர்களை கண்டுபிடிப்போம். இனிமேல் அரசியலில் இதெல்லாம் சகஜமென்று சமாதானம் சொல்லிக் கொண்டிராமல், நல்ல மாற்றங்களை மாறாத இளைஞர்களைக் கொண்டு, மாற்றங்களை நிகழ்த்திக் காட்டுவோம்.

குடும்பங்களில் எப்படி : அரசியலில்தான் இப்படி யென்றால் இல்லங்களில் உறவுகள் எப்படி இருக்கின்றன? மாமியார் என்றால் அப்படித்தான் இருப்பார்கள். கூட்டுக்குடும்பங்களில் இதெல்லாம் சகஜம் என்று அரசியலுக்குக் கூறப்படுகிற அதே சமாதானம் சொல்லப்படுவது
இன்றைய மணவாழ்வின் முடிச்சை அவிழ்க்கிற முயற்சிகளில் ஒன்றாக இருக்கிறது. மாமியாரும் ஒருநாள் மருமகளாக இருந்தவள் தான். அவளும் தன் மாமியாரிடம் அடங்கியிருந்தவர்தான் என்பவை சாதாரண காரணங்கள். அடங்கி யிருந்தவர்கள் அடக்கியாள வேண்டும் என்பது எந்த வகையில் நியாயமாகும்? அனுசரித்தும், அரவணைத்தும் போகாத எவர் இருவருக்கும் அவர் இருவரேபிரச்னை. அன்பான மருமகள் உங்களுக்கு வேண்டுமானால், அன்பான
மாமியாராக நீங்கள் இருக்க வேண்டும். மருமகள்கூட ஒருவகையில் மகளைப் போலத்தான். தன் மகள் வேறு ஒரு வீட்டுக்கு மணமாகிச் செல்லும்போது, அவளுடைய மகன்தான் தன்
மனைவியைத் தாய்க்கு இன்னொரு மகளாக -- மருமகளாகக் கொண்டு வரக் காரணமாக இருக்கிறான். மருமகளோடு பிணக்கு என்பது உலகவழக்காக இருப்பினும் மாமியாருக்கும் தம் மருமகளைமகளாகக் கருதிப் போற்றிய நிகழ்ச்சிகளும் நடவாமலில்லை.

மும்பை பெண் : மும்பையைச் சேர்ந்த வைஷாலி என்ற இளம் பெண்ணுக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை அவசியமாகிறது. அவளுக்கு மனமுவந்து தம் சிறுநீரகங்களில் ஒன்றைத் தந்தவள் வேறு யாருமல்ல அவளுடைய மாமியார் 58 வயதான சுரேகா என்கிற பெண். வயோதிகத்தில் தன் தாய் சிரமப்படக்கூடுமே என்று தயங்கிய மகனிடம் அந்தத் தாய் 'என் மகளாய் இருந்தால் நான் இதைச் செய்யமாட்டேனா..! அதுமட்டுமின்றி நாளை எனக்கு உடல் நலமில்லாமல் போனால் இவள் பார்த்துக்கொள்ள மாட்டாளா?' என்று கேட்டபோது குடும்பமே நெகிழ்ந்துவிட்டது. தியாகம் என்பது இதுதான். குடும்பங்களில் இது அன்றிருந்தது இன்று இல்லை. இல்லாமற்போனால் எப்படி இல்லறம் இனிக்கும். குடும்பங்கள் எப்படி குதுாகலிக்கும்? குடும்பமென்றால் இதெல்லாம் சகஜம் என்று வேண்டாதவற்றை நியாயப்படுத்துவதைக் காட்டிலும் அன்பினால் வீட்டை நிரப்பி ஆனந்தம் பெற ஏன் நாம் முயற்சிப்பதில்லை?

அரசு அலுவலகங்களில்... : குடும்பங்களைப் போலவே அரசு அலுவலகங்கள்; இங்கு லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் தடைசெய்யப்பட்டிருக்கிறது. 'யாருக்கும் கையூட்டு கொடுக்கவேண்டாம்' என்ற அறிவிப்புகளுக்குக் கீழமர்ந்து பணியாற்றுகிறார்கள் நமது அலுவலர்கள். இதைவிட அதிகமாய் அவர்களைக் கேவலப்படுத்தமுடியாது. அரசு அலுவலர்கள் இந்த அறிவிப்பை அகற்றப் போராடவேண்டும். அரசே அவர்களை அவமானப்படுத்துவதாக நான் கருதுகிறேன்.ஆனால் அரசு அலுவலகமென்றால் லஞ்சம் என்பது சகஜம் தானே என்று மக்கள் நியாயப்படுத்தத் தொடங்கிவிட்ட பிறகு, அமோகமாக அது கிளை விட்டு, விழுதுவிட்டுப் படர்ந்த பிறகு, அரசுக்கும் இந்த அறிவிப்பு பலகை வைப்பதன்றி வேறு வழியில்லை. ஏதோ இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சிலர் சிக்குகிறார்கள். ஆனால், பலர் வாங்குவதும் இயங்குவதுமாக வளர்ந்தோங்கிவிடுகிறார்கள். கொடுத்தாலும் வேலை நடந்துவிடுகிறது என்கிற நிம்மதியும், வாங்கி னாலும் மனுஷன் வேலையை முடிச்சி கொடுத்திடுறான் என்கிற பாராட்டும் லஞ்ச லாவண்யங்களை நியாயப்படுத்தி இக்கொடுமையை ஒரு தேசியப் பண்பாடாகவே வளர்த்துவிட்டது வேதனைக்குரியது.அந்நாளில் லஞ்சம் வாங்குவது தவறு என்று உணர்ந்திருந்தார்கள். பிறகு தவறில்லை என்று கருதினாலும் பயந்திருந்தார்கள். தொடர்ந்து பயமிருந்தாலும் பாதியை மேலே கொடுத்தால் பழியில்லை என்றானது. இப்படி அதன் பரிணாம வளர்ச்சிக்குக் காரணம் 'இதெல்லாம் அரசு அலுவலகங்களில் சகஜம்' என்கிறநிலைப்பாடுதான். கண்காணிப்பு காமிராக்கள் மேலே இருப்பதிருக்கட்டும். கடவுள் என்று ஒருவன் பார்த்துக்கொண்டிருப்ப
திருக்கட்டும்! உங்களுக்குள்ளேயே ஒன்று அதுதான் மனசாட்சி; அதை ஏன் சாகடிக்கவேண்டும்?
இப்படி அரசியலில், குடும்பங்களில், அரசுப்பணிகளில், வணிகத்தில், தொழிலில், பொது வாழ்க்கையில், கல்வியில் நியாயம் என்று தீயவற்றை அங்கீகரிப்பதும், அவற்றைத் தேர்ந்து கொள்வதும், அவற்றிற்கு துணைபோவதும், நியாயப்படுத்துவதுமாக இருந்தால் நேற்றிருந்த நாளை, நாளை நாம் காண்பது கானல் நீராகிவிடும். ''அப்படித்தான் இருக்கும்'' என்பதை அப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்பதாக நாம் முயன்று மாற்றினால்தான் நாடும் நாமும் எப்படி இருக்க வேண்டும் என்கிற நலமான நாள்கள் நம் கண்முன்னே தரிசனம் தரும்.
இதுவரை என்பது இன்று இருண்டகாலமாக இருந்துவிட்டுப் போகட்டும். நேற்று இருந்த அந்த நல்ல நாள்களுக்காக கனவு காண்போம்; உழைப்போம். முன்பு எப்படி இருந்ததோமோ அப்படி இருக்க இப்போதுஇருந்தே நம்மை நாம் மாற்றிக்கொள்வோம்.

-ஏர்வாடி ராதாகிருஷ்ணன்
எழுத்தாளர்
94441 07879

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X