டி.வி.ஆர்., வளர்த்த தமிழுணர்வு!| Dinamalar

டி.வி.ஆர்., வளர்த்த தமிழுணர்வு!

Updated : ஜூலை 21, 2017 | Added : ஜூலை 20, 2017 | கருத்துகள் (4)
 டி.வி.ஆர்., வளர்த்த தமிழுணர்வு!

எங்கும் தமிழ், எதிலும் தமிழ், குழந்தைகளுக்கு தமிழில் கல்வி தர வேண்டும், தமிழில் பேச வேண்டும், எழுத வேண்டும் என்ற எண்ணமும், தமிழன் என்ற உணர்வும் நம்மிடையே இப்போது மேலோங்கி வருகிறது. இது வரவேற்கத்தக்க அம்சம். இந்த உணர்வுக்கு உயிரூட்டும் பங்கு, ஊடகங்களுக்கு உண்டு.
அச்சு ஊடக உலகில், தமிழ், தமிழர் என்ற உணர்வை ஊட்டி வளர்த்த பத்திரிகையாளர் என்ற பெருமைக்குரியவர், 'தினமலர்' நிறுவனர், டி.வி.ராமசுப்பையர்.டி.வி.ஆர்., என அழைக்கப்படும் இவர், அன்றைய நாஞ்சில் நாடு, அதாவது, இன்றைய குமரி மாவட்டம், தாய் தமிழகத்துடன் இணைய பாடுபட்டவர், 'வளர்ச்சி இதழியலுக்கு' வழி காட்டியவர், தமிழ் நாளிதழ்களின் நோக்கையும், போக்கையும் மாற்றி காட்டிய முன்னோடி என்றெல்லாம் அறியப்பட்டாலும், அவ்வளவாக அறியப்படாதது அவரது தமிழ் உணர்வு; அவரது தமிழார்வம் அலாதியானது.


போராட்ட 'போர்வாள்'


திருவனந்தபுரத்தை தலைமையிடமாக கொண்டிருந்த, திருவிதாங்கூர் சமஸ்தானத்தில், இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் இணைந்திருந்த காலக்கட்டம் அது. தமிழர்கள், தங்கள் உரிமைகளை நிலைநாட்ட, தமிழ்நாட்டோடு இணைய, பல்வேறு போராட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தனர். இந்த போராட்டங்களுக்கு, 'போர்வாளாக' இருக்க ஒரு நாளிதழ் தேவைப்பட்டது.

பிறப்பால், 'பச்சை தமிழர்களான' அந்த நாஞ்சில் நாட்டு மக்கள், மலையாளத்தில் பேசுவதும், அதை பள்ளியில் படிப்பதும் கண்ட, டி.வி.ஆர்., போராட்டத்தை முன்னெடுப்பதற்கும், தமிழ் வளர்ச்சிக்கும், நாளிதழ் அவசியம் என உணர்ந்தார். இதன்மூலம், அனைவரும் தமிழ் படிக்க வேண்டும் என விரும்பினார். அதற்காக தான், 'தினமலர்' நாளிதழை துவக்கினார்.

தமிழ்வழி பள்ளிகளின் அவசியம் பற்றி செய்திகள் வெளியிட்டார். திவான் சர்.சி.பி.ராமசாமி ஐயர் கொண்டு வந்த, கட்டாயக் கல்வி திட்டத்திற்கு பேராதரவு அளித்து, புதிய பள்ளிகள் நிறுவ காரணமானார். இன்று குமரி மாவட்டத்தில், மலையாளத்தை தாய்மொழியாக கொண்டவர்களும், தமிழ் படிக்கின்றனர். அங்குள்ள தமிழர்களின் படிப்பறிவு உலகறிந்தது. இதற்கு வேராக, டி.வி.ஆர்., இருந்தார் என்றால் மிகையல்ல.


போராட்ட குணம்


பத்திரிகைத் தொழில், டி.வி.ஆருக்கு பாரம்பரியம் அல்ல; அவர் படைப்பிலக்கிய வாதியாகவும் இருக்கவில்லை. என்றாலும், அவருக்குள் இருந்த தமிழுணர்வு, பத்திரிகை துவங்கும் துணிச்சலை தந்தது. மலையாள மொழி பேசும் மக்களின் தலைநகரான திருவனந்தபுரத்தில், தமிழ் நாளிதழை துவக்குவது, அன்று எளிதல்ல.

இன்றைய கால கட்டத்திலும், ஜனரஞ்சகமான ஒரு தமிழ் நாளிதழை, பெங்களூரிலோ, திருவனந்தபுரத்திலோ, முதன் முதலாக துவக்கும் தைரியம் யாருக்கும் வராது. தமிழகத்தில் வெளியாகும் நாளிதழுக்கான, புதிய பதிப்பை வேண்டும் என்றால் துவக்குவர்.

ஆனால், 1951ம் ஆண்டே, டி.வி.ஆரின் போராட்ட குணத்தால், இந்த வித்தியாசமான முடிவை எடுக்க முடிந்தது.'தினமலர்' நாளிதழை துவக்கி வைக்க வருமாறு, அன்றைய திருவிதாங்கூர் முதல்வர் கேசவனை அழைத்தார், டி.வி.ஆர். ஆனால், 'மலையாள மொழி பேசும் இடத்தில், தமிழ் பத்திரிகையா' என்பதால், வர மறுத்து விட்டார் கேசவன். பின், டி.வி.ஆர்., தன் நண்பரும், தலைசிறந்த தமிழறிஞருமான வையாபுரி பிள்ளை தலைமை ஏற்க, 'தினமலர்' நாளிதழை வெளியிட்டார்.


தமிழர் உரிமை


நாஞ்சில் நாட்டு மக்களின் தேவைகளை, தமிழ் நாளிதழ்களும் சரி, திருவனந்தபுரத்தில் இருந்து வெளியாகும் மலையாள நாளிதழ்களும், கண்டுகொள்ளவில்லை.அதற்காகவே, ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, திருவனந்தபுரத்தை தேர்வு செய்தார். துவக்க உரையில், 'தமிழர் - மலையாளி உறவை வளர்க்க, தினமலர் பாடுபடும். ஆனால், தமிழர்களின் நியாயமான குறைகளுக்கு பரிகாரம் தேடுவதே நாளிதழின் சீரிய நோக்கம்' என, கொள்கை பிரகடனம் செய்தார்.
வெறும் பேச்சோடு நிற்கவில்லை; செய்திகளில் பிரதிபலித்தார். திருவனந்தபுரத்தில் வாழும் தமிழர்கள் மேம்பாட்டிற்காக நிறைய எழுதினார். அங்குள்ள தமிழாசிரியர்களின் ஊதியம் பரிதாபமாக இருந்தது. கேரள பல்கலையில், தமிழ்த் துறையில் விரிவுரையாளர் மட்டுமே இருந்தார். இவற்றை செய்தியாக வெளியிட்டு, தமிழர் உரிமையை நிலைநாட்டினார்.

நாஞ்சில் நாடு, குமரி மாவட்டமாக, தமிழகத்துடன் இணைக்கப்பட்ட பின், லட்சியம் நிறைவேறிய திருப்தியில், தினமலர் நாளிதழை திருநெல்வேலிக்கு மாற்றினார்.


தமிழ் எழுத்தாளர் மாநாடு


குமரி மாவட்டத்தில், முதன் முறையாக, 1958ல், தமிழ் எழுத்தாளர்களின் மாநில மாநாட்டை டி.வி.ஆர்., நடத்தினார். 'தாய் தமிழகத்துடன் இணைந்து விட்ட குமரி மாவட்டம் மீது, இனியாவது தமிழ் எழுத்தாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்; குமரி மக்களும் தமிழில் படைப்புகளை உருவாக்க வேண்டும்.

அதற்கு இந்த மாநாடு உதவும்' என, டி.வி.ஆர்., நினைத்தார். அவர் நினைத்தது போலவே, குமரி தமிழறிஞர்கள் பலர், அந்த மாநாட்டால் அடையாளம் காணப்பட்டனர்.மாநாட்டின் வரவேற்புக் குழு தலைவரான, டி.வி.ஆர்., நிகழ்த்திய உரை, அவரின் ஆழ்ந்த தமிழ்ப்பற்றை உணர்த்துவதாக இருந்தது...

'தமிழ் எழுத்தாளர்கள், பாரதத்தின் இதர மொழி எழுத்தாளர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல; ஒருபடி மேலே என்று கூட சொல்லலாம். புதிய படைப்பில், மொழி பெயர்ப்பில், தழுவலில் தமிழ் வேகமாக முன்னேறி வருகிறது. உலக மொழிகளை கற்று, அதன் சாரத்தை தமிழில் கொண்டு வர வேண்டும்.
'விஞ்ஞானத்தில், ஆங்கிலத்தை விட ரஷ்ய மொழி முன்னேறி விட்டது. எனவே, ரஷ்ய மொழி கற்று, விஞ்ஞான அறிவை தமிழில் வளர்க்க வேண்டும். வடமொழியில் எத்தனையோ தமிழ்ச் சொற்கள் உள்ளன. தமிழை உலகப்பெரு மொழிகளில் ஒன்றென ஆக்குவது நம் கடமை; அதை செய்தே தீருவோம்' - தினமலர், ஜூன் 1, 1958.


தமிழ்நாடு பெயர் மாற்றம்


மெட்ராஸ் மாநிலம், 'தமிழ்நாடு' என, 1968ல் அண்ணாதுரை முதல்வராக இருந்தபோது, மாற்றம்
செய்யப்பட்டது. 'தமிழ்நாடு' என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என, பலமுறை எழுதியவர், டி.வி.ஆர். 1958ல், தமிழ் எழுத்தாளர் மாநாடு தொடக்க நாளில், தினமலர் தலையங்கத்தில், டி.வி.ஆர்., எழுதியது:

'அரசு அலுவல் மொழி, தமிழாக மாறி வரும் இக்கட்டத்தில், ராஜ்யத்தின் பெயரை மட்டும், 'தமிழ்நாடு' என, மாற்றாமல் இருப்பதில் என்ன நியாயம் இருக்கிறது. தமிழ்நாடு என்று பெயர் ஏற்படும் போது தான், தமிழுக்கும், தமிழர்களுக்கும் இயற்கையான பெருமிதம் ஏற்பட முடியும்.

'தமிழர்களின் கலை, கலாசாரம், பண்பு அனைத்திலும் முன்னேற, தமிழ்நாடு என்ற தனிப்பெயர் தேவை. அரசு இனியும் வீண் சடங்குகளுக்கு வழி வகுக்காமல், தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்திற்கு முன் வருமா...'- இப்படி தாய் மண்ணின் உணர்வை, தமிழ் மொழியின் பெருமையை, தன் எழுத்திலும், பேச்சிலும் எப்போதும் பிரதிபலித்தார். தேசப்பற்று மிக்கவர்; தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தியவர், டி.வி.ஆர்., அதே நேரத்தில், தாய்மொழி ஆர்வலராக இருந்ததால், தன் நாளிதழ் மூலம் தமிழ் வளர்த்தார் என்பது வரலாறு.


சீர்திருத்தவாதி

பிறந்தது: 2.10.1908

மறைந்தது: 21.7.1984
மூட நம்பிக்கைகளை அறவே வெறுத்தவர், டி.வி.ஆர்., ஜாதகம், சடங்கு, வரதட்சணை சம்பிரதாயங்களில் நம்பிக்கை அற்றவர். ஜாதி, மத வேறுபாடுகள் அவருக்கு இல்லை. ஒரு சீர்திருத்தவாதியாகவே, சிறப்பு வாழ்க்கை வாழ்ந்தவர்.-ஜி.வி.ரமேஷ் குமார், பத்திரிகையாளர்rameshgv1265@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X