சிலை கடத்தல் வழக்குகளை பொன் மாணிக்க வேல் விசாரிக்க உத்தரவு

Added : ஜூலை 22, 2017 | |
Advertisement
சென்னை: சிலைகள் கடத்தல், திருட்டு வழக்குகளில் தொடர் விசாரணை நடத்த, ஐ.பி.எஸ்., அதிகாரி, பொன் மாணிக்கவேல் தலைமையில் சிறப்பு குழு செயல்படவும், வெவ்வேறு நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை, கும்பகோணம் நீதிமன்றத்துக்கு மாற்றியும், சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் ராஜேந்திரன் தாக்கல் செய்த மனு:அருப்புக்கோட்டை தாலுகா,

சென்னை: சிலைகள் கடத்தல், திருட்டு வழக்குகளில் தொடர் விசாரணை நடத்த, ஐ.பி.எஸ்., அதிகாரி, பொன் மாணிக்கவேல் தலைமையில் சிறப்பு குழு செயல்படவும், வெவ்வேறு நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை, கும்பகோணம் நீதிமன்றத்துக்கு மாற்றியும், சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் ராஜேந்திரன் தாக்கல் செய்த மனு:
அருப்புக்கோட்டை தாலுகா, ஆலடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த, ஆரோக்கியராஜ் என்பவரின் நிலத்தை தோண்டும் போது, பஞ்சலோக சிலைகள் கிடைத்தன. அந்தச் சிலைகளை கடத்தல்காரரிடமே, போலீஸ் அதிகாரி, காதர் பாஷா விற்று விட்டார்.
இது குறித்து, காதர் பாஷா, சுப்புராஜ் உள்ளிட்டோருக்கு எதிராக, சிலை தடுப்பு பிரிவு வழக்கு பதிவு செய்தது. வழக்கை, சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசிடம் இருந்து, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இதேபோல, வெங்கட்ராமன் என்பவர் தாக்கல் செய்த மனு: தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லுாரில் உள்ள பசுபதீஸ்வரர் கோவில் வசம், பல கோடி ரூபாய் மதிப்புடைய பழமை வாய்ந்த சிலைகள் இருந்தன. கீழமணக்குடியில் உள்ள, விஸ்வநாதசாமி கோவிலை சேர்ந்த ஐந்து சிலைகள், இடும்பேஸ்வரர் கோவிலை சேர்ந்த, ஒரு விநாயகர் சிலை காணாமல் போனது.
இதுகுறித்து, மயிலாடு துறையில், அறநிலையத்துறையிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. என் புகாரை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப் பட்டுளளது.
இரண்டு மனுக்களையும், நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்தார். பின், அவர் பிறப்பித்த உத்தரவு:
நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக இருந்த, பொன் மாணிக்கவேல் ஆஜராகி, துறையில் உள்ள பிரச்னைகள் மற்றும் நம்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு சிலைகள் கடத்தல் நடக்கும் விதம் பற்றி விவரித்தார். விருத்தாச்சலம், கும்பகோணம், ஸ்ரீவில்லிபுத்துார் மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் உள்ள நீதிமன்றங்களில், வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. போலீஸ் அதிகாரி, காதர் பாஷாவை பிடிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டதாகவும், ஐ.ஜி., கூறியுள்ளார்.
இந்த வழக்குகளை, அதிகாரி பொன் மாணிக்கவேல் தான், கண்காணித்து வந்தார். பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளை, அவர் மீட்டுள்ளார். அவருக்கு அடுத்ததாக வந்துள்ள அதிகாரி, திறமையில்லாதவர் என்ற அர்த்தமல்ல. பொன் மாணிக்கவேல் மற்றும் அவரது குழுவினர் நாடு முழுவதும்
பயணித்துள்ளனர்; குற்றவாளிகள் செயல்படும் விதத்தை அறிந்துள்ளனர்.
எனவே, தற்போது வேறு பொறுப்பில் இருந்தாலும், சிலை கடத்தல் வழக்குகளில், விரைவான தொடர் விசாரணைக்காகவும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் தொடர வேண்டும். அதற்காக, கீழ்க்கண்ட உத்தரவுகளை, இந்த நீதிமன்றம் பிறப்பிக்கிறது.
உத்தரவுகள் என்ன?
* ஐ.பி.எஸ்., அதிகாரி, பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை திருட்டு தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு என, திருச்சியில், தனி முகாமை ஏற்படுத்த, தலைமை செயலர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதற்கு தேவையான அடிப்படை வசதிகள், ஊழியர், போக்குவரத்து வசதிகளை அளிக்க வேண்டும்
* வெவ்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள, சிலை கடத்தல், திருட்டு வழக்குகள், கும்பகோணத்தில் உள்ள தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு மாற்றப்படுகின்றன. இந்த வழக்குகளை தினசரி விசாரித்து, விரைந்து முடிப்பதற்கு ஏதுவாக, இந்த மாற்றம் செய்யப்படுகிறது
* கும்பகோணம் நீதிமன்றத்தில், வழக்கு விசாரணை முடியும் வரை, ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் உளள அதிகாரிகள், புலன் விசாரணை மற்றும் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் தொடர்ந்து விசாரிக்க வேண்டும்.
தற்போது உள்ள பொறுப்புடன், இந்த வழக்குகளையும் சேர்த்து கவனிக்க வேண்டும்
* வெளிநாடுகளுக்கு சிலைகள் கடத்தப்பட்ட வழக்குகளின் விபரங்களை, மத்திய வருவாய் துறைக்கு அனுப்ப வேண்டும். சுங்க சட்டத்தின் கீழ் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க, இது ஏதுவாக இருக்கும்
* சிலை கடத்தலை தடுக்கும் விதமாக, வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் பார்சல்களை பரிசோதிக்க முடியுமா என்பது குறித்து, மத்திய அரசு அறிக்கை அளிக்க வேண்டும்
* அறநிலையத்துறையின் கீழ் வரும் கோவில்கள், அர்ச்சகர்கள் விபரங்களை, போலீஸ் அதிகாரிக்கு, அறநிலையத்துறை ஆணையர் வழங்க வேண்டும்
* பந்தநல்லுாரில் உள்ள பசுபதீஸ்வரர் கோவில் சிலைகள் திருடு போனது குறித்து, உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும்
* அதிகாரிகள் தவறு செய்திருப்பதற்கு ஆரம்ப முகாந்திரம் இருந்தால், அவர்கள் மீது, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்
* சிலைகள் இருப்பு பற்றி, நான்கு வாரங்களுக்குள், கணினியில் பதிவு செய்யப்பட வேண்டும். அதை, நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்
* அனைத்து கோவில்களிலும், சிலைகளை பாதுகாப்பாக வைத்திருக்க, அறை இருக்க வேண்டும். அலாரத்துடன், வீடியோ மூலம் கண்காணிக்கும் விதத்தில், பாதுகாப்பு வசதிகள் செய்ய வேண்டும். சிலைகளை பாதுகாப்பாக வைப்பதற்கான மையங்களிலும், இதுபோன்ற பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டும்
* மையங்களுக்கும், கோவில்களுக்கும் அவ்வப்போது, அதிகாரிகள் குழு சென்று, சிலைகளை சரிபார்க்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியதற்கான அறிக்கையை, செப்., 4ல் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X