இருளில் ஆழ்த்திய இருவர் ஆணவம்!| uratha sindhanai | Dinamalar

இருளில் ஆழ்த்திய இருவர் ஆணவம்!

Updated : ஜூலை 23, 2017 | Added : ஜூலை 22, 2017 | கருத்துகள் (4)
Share
உரத்த சிந்தனை , uratha sindhanai

'நாட்டிய மங்கையும் நாடாள்வர்; பின், தான் என்ற அகந்தையில் தன்னையே அழித்துக் கொள்வர்!'இது, முதுமொழி; தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு முற்றிலும் பொருத்தமானதாக இருக்கிறது. அவர் ஒன்றும், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே போல, அரச குடும்பத்தின் வாரிசல்ல.

அன்றாட பிழைப்புக்கு ஆடி, பாட வந்தவர் தான். அதற்காக அவரை நான் தரம் தாழ்த்தவில்லை. உழைப்பின் மிகுதியால் உயர்வுக்கு வந்தவரும் அவர் தான். அதில் பல உன்னத நிலைகளையும் அடைந்தவர் தான்.

அதையெல்லாம் மறந்து, பதவிக்கு வந்தவுடன் தன்னை விட யாரும் இந்த இடத்திற்கு வந்து விடக்கூடாது; இங்கு, தன்னை மிஞ்சியவர் யாருமில்லை; தான் மட்டுமே அனைத்திலும் திறமைமிக்கவர் என்ற இறுமாப்பு, தலை, கால் புரியாமல் அவரை ஆட வைத்து விட்டது.

கலைத்துறையிலிருந்து ஒரு அப்பாவியாய், எம்.ஜி.ஆரால் அரசியலுக்கு அறிமுகப் படுத்தப்பட்ட ஜெயலலிதா, பின்னாளில், தன் மானசீகக் குருவின் கண்ணியத்திற்கே களங்கம் ஏற்படுத்தும் விதமாய், சிலரால் அகந்தையோடு வளர்த்து விடப்பட்டிருக்கிறார்.

அவரின் மானசீக குருவான, எம்.ஜி.ஆரிடம் துளியும் இல்லாத அகந்தை, இவரிடம் அதிகமாகவே இருந்தது. எம்.ஜி.ஆர்., தனக்கு கீழ் இருந்த அமைச்சர்களையோ, கட்சிக்காரர்களையோ, ஜெயலலிதா நடத்திய அளவிற்கு கீழ்த்தரமாக எப்போதும் நடத்தியதில்லை.

தான் செயல்படுத்திய எத்தனையோ, மக்கள் நலத் திட்டங்களில், ஒரு போதும் தன் பெயரையோ, தனக்கான, 'புரட்சித்தலைவர்' என்ற அடைமொழியையோ அவர் பயன்படுத்தியது இல்லை.மறைந்த பிறகு தான், அவர் கொண்டு வந்த சத்துணவு திட்டத்திற்கு, அவர் பெயர் சூட்டப்பட்டது. ஆனால், ஜெயலலிதாவோ, அரசு சார்பாக செயல்படுத்தப்படும் அத்தனை திட்டங்களிலும் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தினார்.

'அம்மா' உணவகம், 'அம்மா' குடிநீர், 'அம்மா' உப்பு, 'அம்மா' சிமென்ட் என, அரசு சார்பிலான திட்டங்கள் பலவற்றில், தன் பெயரை இணைத்து, விளம்பரம் தேடிக் கொண்டார்.அத்துடன், கட்சிக்காரர்களை தன் முன் கை கட்டி, வாய் பொத்தி நிற்க வைத்தும், மந்திரிகளை தன் காலடியில், நெடுஞ்சாண் கிடையாக விழ வைத்தும் பூரிப்படைந்தார்.

ஒரு மனிதன் மண்டியிட வேண்டிய இடம், இரண்டே இரண்டு தான். ஒன்று, இறைவன் சன்னதி அல்லது பெற்றோர் காலடி. இன்னொன்று, தன்னை விட வயது முதிர்ந்தவர்கள் அல்லது ஞானிகளின் காலடி.ஆனால், அவர், வயது வித்தியாசமின்றி, அத்தனை பேரையுமே, தன் காலடியில் விழ வைத்தது மட்டுமன்றி, தான் வந்த காரின் சக்கரத்தையும், ஏன், தடத்தையும் கூட தொட்டுக் கும்பிட வைத்தார்.

அதிலும் ஒரு படி மேலே போய், தான் வரும் ஹெலிகாப்டரை அண்ணாந்து பார்த்து கும்பிட வைத்த பெருமையும், ஜெயலலிதாவையே சாரும். அவர் முன், எந்த ஒரு அதிகாரியும், அமைச்சர்களும், நிமிர்ந்து நின்றதில்லை.

அனைவரும், ஜப்பானியர் வணக்கம் சொல்வது போல, இடுப்பை வளைத்து வணங்கி நின்ற படங்கள் தான், பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்டன. ஆணவம் தான், ஒருவரின் திமிரை இந்த அளவுக்கு பீடு நடை போட வைக்க முடியும்.தான் சேர்த்த பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை விற்று, 'அம்மா' என்ற தன் பெயர் அல்லது அவரின் அம்மா பெயரில், மக்களுக்கு நல்லது பல செய்திருக்கலாமே... அவ்வாறு செய்திருந்தால், குருவை மிஞ்சிய புகழை பெற்றிருக்கலாம்!

'தமிழக மக்களை விட்டால் எனக்கு வேறு நாதியில்லை; என் உற்றார் உறவினரையும், ஒதுக்கி தள்ளி விட்டு உங்களுக்காகவை உயிர் வாழ்கிறேன்' என்றவருக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்து எதற்கு?பொது வாழ்வில் இருப்பவரின் வீட்டு உலை, ஊர் மக்களுக்காக தான் கொதிக்க வேண்டும். ஒருபோதும் ஊரை அடித்து, தன் வீட்டு உலையில் போட நினைக்க கூடாது.
ஆனால், ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்ததென்னவோ அத்தனையும் தலை கீழ். பொது வாழ்வின் பெயரில், முழுக்க முழுக்க தன்னை பகட்டு வாழ்க்கைக்கே முன்னெடுத்துச் சென்றார்.

ஊருக்கு ஒரு பங்களா; உறங்க ஒரு பண்ணை வீடு; ஓய்வெடுக்க ஓராயிரம் ஏக்கரில் எஸ்டேட் என, திரும்பிய பக்கமெல்லாம் திக்கு முக்காட வைக்கும் வகையில் சொத்துகளை சேர்த்தார்.
தன் அமைச்சர் சகாக்களையும், பாலில் இருந்து பருப்பு வரை ஊழல் செய்ய விட்டு, அவரவர் தகுதிக்கேற்ப, அடுத்த, நான்கு தலைமுறைக்கு போதுமான சொத்துகள் சேர்க்க வைத்தார்.

கிராமத்தில் புளி விற்றவர், டீ விற்றவர் கூட, அமைச்சர்களாகி, புதிதாக தீவு வாங்கும் அளவிற்கு, 'முன்னேறி'னர். ஆனால், மக்களுக்காக துவங்கப்பட்ட நல்ல பல திட்டங்கள், அரைகுறையாக கிடப்பில் போட்டு விட்டனர்.

தன்னை நம்பி ஓட்டளித்த மக்களை, ஜெயலலிதா ஏமாற்றி விட்டார். இது தான், படித்த பெண்ணின் பண்பாடா... மனித இனத்தின் கலாசாரம் தெரியாமல், எப்படி இவர், கலைத்துறையில் கற்றுத்தேர்ந்தார் என்பது தான் வியப்பாக உள்ளது.

எனினும், அவரின் செயல்பாட்டில் எந்த குறையும் சொல்ல முடியாது. ஆட்சியிலும், கட்சியிலும், மக்கள் விரோத கொள்கையாளர்களை துாக்கி வீசுவதில் வல்லவர். ஆட்சிக்கு வந்த, முதல் ஐந்தாண்டுகள் மட்டும் தான் அவரால், நல்லாட்சி தர முடிந்தது.அதன் பிறகு அவரைத் தொற்றிக்கொண்ட ஒரு பீடை, தான் வாழ பிறரை அழிக்கும் ஒரு பிணியாய், ஜெயலலிதாவின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டு விட்டது.

சவால்கள் நிறைந்த அரசியல் வாழ்க்கையில், ஒரு பெண்ணாக, எத்தனையோ இடர்களைத் தாண்டி, இத்தனை ஆண்டுகள், தமிழக அரசியல்வாதிகளைச் சமாளிக்கத் தெரிந்த ஜெயலலிதா, தன்னைச் சுற்றி நடந்த சூழ்ச்சி வலையை எப்படி கவனிக்க தவறினார் என்பது புரியாத புதிராக உள்ளது.

கடைசியில் அதுவே, அவரை குற்றவாளி கூண்டு வரை இழுத்துச் சென்று, தண்டனை கைதியாகவே சாகடித்தும் விட்டது.'அம்மா... அம்மா...' என, வாஞ்சையுடன் அழைத்த, அ.தி.மு.க.,வின் கோடிக்கணக்கான தொண்டர்களுக்கு, ஒரு பொறுப்புள்ள தலைவியாக அவரை இருக்க விடாமல், ஆட்சியிலும், கட்சியிலும், தன் ஆதிக்கத்தையே நிலை நிறுத்தியது அந்த தீயசக்தியான சசிகலா.

முப்பது ஆண்டு காலம், ஜெ.,வின் ஆஸ்தான தோழியாய், அவருடன் ஒரு போலி தவ வாழ்க்கை வாழ்ந்த சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில், இன்று, தண்டனை கைதியாக, பெங்களூரு சிறையில் இருக்கும் போதும், அவர் ஆணவத்தின் கொட்டம் அடங்கவில்லை.

அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள, போலி முத்திரைத்தாள் மோசடி மன்னன், அப்துல் கரீம் தெல்ஹியை விட தான் ஒன்றும், குற்றத்தில் குறைந்தவள் அல்ல என்ற எண்ணத்தில், சிறையையே பணத்தால் வளைத்துள்ளார்.

'கம்பிகளுக்கு நடுவே களி தின்ன முடியாது' என எண்ணி, பணத்தை விட்டெறிந்து, சிறைக்குள் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளார். இதற்காக, பலரை மிரட்டியுள்ளார்; பல அதிகாரிகளையும் விலை பேசியுள்ளார்.

அவரின் சதிக்கு உடந்தையாக இருந்ததால், சத்ய நாராயண ராவ் மூலம் சிறைத்துறையும், முருகக்கடவுள் பெயர் கொண்டவரால், நீதித்துறையும் தன் மேன்மையை இழந்து விட்டதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

செய்த தவறுகளை எண்ணி, அவற்றை திருத்திக் கொள்ளவே, குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். ஆனால், அங்கு சென்ற பிறகும், தன் குரூர எண்ணத்தால், தானும் கெட்டு, அரசு ஊழியர்களையும், வஞ்சகத்தில் வீழ்த்தியுள்ளார்.ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதால், இடைத்தேர்தல் ரத்தாகி, முதல்வர் கனவை பறிகொடுத்துள்ள தினகரன், இரட்டை இலை சின்னத்தை தக்க வைக்க, தேர்தல் கமிஷனுக்கும் விலை பேசினார்.

இப்போது, அவரின் சித்தி, பெங்களூரு சிறையை தன் கைக்குள் கொண்டு வந்து, சிறைத்துறையையே களங்கப்படுத்தியுள்ளார். பணத்தால் எதையும் சாதிக்கலாம் என நினைக்கும் இவர்களுக்கு, அவ்வப்போது வெற்றி கிடைத்தாலும், இறுதியில் தோல்வி நிச்சயமே.

தான் என்ற அகந்தை, தன்னையே அழித்து விடும் என்ற சிந்தனை, இப்படிப்பட்டவர்களின் எண்ணங்களில் எப்போது மேலோங்குகிறதோ, அப்போது தான், இந்த நாடு உருப்படும்.'தென் கடல் வளாகம் பொதுமை இன்றி வெண் குடை நீழற்றிய ஒருமையோர்க்கும் நாடு நாள் யாமத்தும் பகலும் துஞ்சான்கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவர்க்கும் உண்பது நாழி, உடுப்பது இரண்டே'
என்ற, புறநானுாற்று பாடலின் அர்த்தம் தெரிய வேண்டும்.

இந்த உலகில் நாம் நிரந்தரமாக வாழ போவதில்லை. உயிரோடு இருக்கும் நாட்களுக்கு மட்டும், அன்றாடத் தேவைக்கு, கால் படி உணவும், உடுக்க இரு உடையும் வைத்து கொண்டால் போதும். அது தான், மனித வாழ்வின் உண்மையான தத்துவம்.

அதை விடுத்து, மூர்க்கத்தனமாக, கோடிக்கணக்கில் சொத்து சேர்ப்போர், பொது வாழ்வில் ஈடுபட அருகதை இல்லாதவர்கள். சேர்த்தவற்றை அனுபவிக்காமலே அழிந்தும் போவர்.

- க. சோணையா - சமூக ஆர்வலர்

இ-மெயில்:
k.sonaiah@gmail.com

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X