சேலம்: ரத்த புற்றுநோய் பாதித்த, பள்ளி சிறுவனை காப்பாற்ற பணமின்றி, அவரது தந்தை தவிக்கிறார்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜா, 41; மனைவி ராதா, 35. இரு மகன்கள் உள்ளனர். இவர்கள், கோவை, எலச்சிப்பாளையத்தில் குடும்பத்துடன் வசிக்கின்றனர். ராஜா, அதே பகுதியில், நெசவு தொழில் செய்து வருகிறார். மூத்த மகன் கோகுல்ராஜ், 16, பிளஸ் 1 முடித்துள்ளார். அவருக்கு, சிறுநீர் சரியாக வராமல், ஆப்பரேஷன் செய்ததால், ஓராண்டாக, வீட்டில் இருக்கிறார்.
இளைய மகன் பிரவீன்குமார், 14, ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். மூன்று மாதங்களுக்கு முன், அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு சென்ற போது, ரத்த புற்றுநோய் பாதிப்பு தெரிந்தது. சேலம் அரசு மருத்துவமனை, வேலுார், சி.எம்.சி.,யில் சிகிச்சை பெற்றார். மே, 15 முதல், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள, ரீஜனல் கேன்சர் சென்டர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
ஆனால், 'நான்கு மாதங்கள் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டும். இரு ஆண்டுகளுக்கு, அவ்வப்போது உரிய மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதற்கு, ஐந்து லட்சம் ரூபாய் வரை செலவாகும்' என, டாக்டர்கள் கூறியுள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களாக, கையில் இருந்த பணம், கடன் என, இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல், ராஜா செலவு செய்து விட்டார். மேலும் பணமின்றி, மகனை காப்பாற்ற போராடி வருகிறார். தொடர்புக்கு, 97504 86985.