புதுடில்லி: போபர்ஸ் பீரங்கி பேரத்தில் உரிய முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என பார்லி.,யில் பா.ஜ., வலியுறுத்தியுள்ளது.
போபர்ஸ் பீரங்கி பேரம்:
பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சரும், பா.ஜ.,வை சேர்ந்தவருமான, அனந்த குமார், லோக்சபாவில் நேற்று பேசியதாவது: ராஜிவ், 1984ல் பிரதமராக இருந்தபோது, போபர்ஸ் பீரங்கிகள் வாங்கியதில் நடந்த ஊழல் தொடர்பாக, விசாரணை நடத்திய, சுவீடன் விசாரணை அதிகாரி, ஸ்டன் லிண்ட்ஸ்ட்ரோம், தன்னிடம் ஏராளமான ஆவணங்கள் இருப்பதாக கூறியுள்ளார். எனவே, போபர்ஸ் பீரங்கி பேரத்தில், பல கோடி ரூபாய் கமிஷன் தொகை, கை மாறியது தொடர்பாக, உரிய முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும், என்றார்.
காங்., தொடர்பு:
முன்னதாக, ஸ்வீடனின் போபர்ஸ் ஏபி நிறுவனத்திடம் பிரங்கிகள் வாங்குவது தொடர்பாக கடந்த 1986ம் ஆண்டு இந்தியா ஒப்பந்தம் செய்தது. இதில் இந்திய அரசியல்வாதிகளுக்கு மிகப்பெரிய தொகை லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. குறிப்பாக இதில் முன்னாள் பிரதமர் ராஜீவ்க்கு தொடர்பு உள்ளதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.