குழந்தைகளை பண்பாட்டுடன் வளர்ப்போம்!| Dinamalar

குழந்தைகளை பண்பாட்டுடன் வளர்ப்போம்!

Added : ஜூலை 25, 2017

மனித வாழ்க்கையில் சொர்க்கம் என்பது மழலைச் செல்வங்கள்.பதினாறு செல்வங்களில்
குழந்தைப்பேறு, இல்லறத்தின் அடையாளச் சின்னம்.பெறுதற்கரிய பெருஞ்செல்வமான குழந்தைச் செல்வத்தைப் பெற்றெடுத்த பின்பு நாம்சரியாக வளர்க்கின்றோமா? என்பது தான் கேள்விக்குறி. பாட்டிசுட்ட வடையும், நரிஏமாற்றிய கதையும் கேட்டுக்கேட்டுப் பழகிப்போன நாம், வளர்ச்சிக்கேற்ப பிள்ளைகளின் வாழ்க்கை முறையை மாற்றி விட்டோம். நம்மை
வளர்த்ததைப் போல் அவர்களை வளர்க்க மறந்துவிட்டோம். எல்லாவற்றிற்கும் காரணம், சோம்பேறித்தனம். ஆன்ட்ராய்டு போனையும், அனிமேஷன் படத்தையும் காட்டிப் பழக்கப்படுத்திவிட்டு, அவர்களின் வளர்ச்சிப்பாதையை தடைபோட்ட பரமவிரோதிகள் நாம் தான்.
கடவுளையே குழந்தையாகப் பாவித்து வணங்கியதும் நம் சமூகம் தான்.

பண்பாடு மறந்தோம் : பண்பாட்டையும் கலாசாரத்தையும் பெற்ற பிள்ளைகளுக்குச் சொல்லித்தரத் தெரியாத பெற்றோர் முட்டாள்கள். தொல்லைவிட்டால் போதும், நம்மை தொந்தரவு
செய்யாமல் இருந்தால் போதும் என்று அருகிலே குழந்தைஇருந்தாலும் அவர்களுடன் பேசாமல் கையில் அலைபேசியை கொடுத்து, தானாக பேசி சிரிக்க வைத்து விளையாடச் செய்த சுயநலவாதிகள். தன்னுடைய ஆசைகளைப் பிள்ளைகள் மீது செலுத்தி, அவர்களைச் சமுதாய பார்வையில்லாது, புத்தகப் புழுக்களாக்கி, உடற்பயிற்சியின்றி, மனப்பயிற்சி இன்றி பித்துப்பிடிக்க வைத்தபெற்றோர்கள் பலர்.கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுத்து, குழந்தைகளைக் கெடுத்து வைக்கின்றோம். தேவைக்கு மேலேயே கொடுக்கிறோம். பொத்தி பொத்தி வளர்த்துப் பிள்ளைகளை சோம்பேறிகளாக்கி விட்டோம்.

கூட்டுக்குடும்பம் : வீட்டுக்குவந்த விருந்தினரை வரவேற்கச் சொல்லி கொடுக்காத பெற்றோர் உண்டு. யாருடனும் பேசாமல் அமைதியாக இருப்பது தான் நல்ல குணம் என்று, நான்கு பேருடன் பேசிப்பழகவிடாமல், தனிமையில் வைத்து அவர்களைக் கொடுமைப்படுத்தியவர்கள் அவர்கள். குழந்தையின் பசியை முகத்திலே பார்த்துத் தெரிந்து கொண்டு ஆசையாக ஊட்டிவிட்ட பாட்டிகளைத் தொலைத்து விட்டார்கள். கூட்டுக்குடும்பத்தில் நாமெல்லாம் கொஞ்சிக் குலாவி வாழ்ந்துவிட்டு, வேலையைக் காரணம் காட்டி, பெற்றோரை முதியோர் இல்லத்திற்கு விரட்டிவிட்ட முரடர்கள் வாழும் சமூகம் இது. அன்போடும் அறிவோடும் குழந்தைகளை வளர்க்கின்றோம் என்று நாம் பெருமைபட்டு கொண்டிருக்கிறோம். ஆனால் குழந்தைகளின் மூச்சுக்காற்று கூட முகாரி ராகம் பாடிக்கொண்டிருக் கின்றது. நம் வீட்டுத் தொட்டியில்வளர்க்கப்படும் பூக்காத குரோட்டன்ஸ் செடியைப் போல் வளர்த்துக் கொண்டியிருக்கிறோம். காய்ந்து போன கரிசல் காடாய் குழந்தைகளின் வளர்ப்பு, களையிழந்து கிடக்கிறது. நம்பிள்ளைகளுக்கு தன்முயற்சி என்றுஎதைச் சொல்லிக் கொடுத்தோம். மிட்டாயைக் காக்காய் கடி கடித்து பகிர்ந்து உண்ணப் பழகித்தந்தோமா? வேண்டாம் என்று துாக்கி எறிந்த மிதிவண்டியின் டயரை எடுத்து, பெரிய மில்லியனர் போல கீழே விழாமல் கார் போல ஒரே குறிக்கோளுடன் ஓட்டிய அந்த வித்தக வாழ்க்கையைவிளக்கமாகச் சொல்லிக் கொடுத்தோமா?

சொல்லித்தராத விஷயங்கள் : சுதந்திரப் பறவைகளாய் காடு மேடெல்லாம் சுற்றித் திரிந்தோம். வேகாத வெயிலிலும் நாம் போகாத இடம் இருக்குமா? நாம் பிறந்த பூமியில், கிடைத்தற்கரிய நெல்லிக்கனி கிடைத்தது போல் ஒரு புளியங்காயை ஆளுக்குகொஞ்சமாய் கடித்து பகிர்ந்து
உண்ணும் பழக்கத்தை பழக்கினோமா? நடை வண்டியும், மரப்பாச்சிப் பொம்மையும், செப்புச் சாமான்களில் மண்சோறு சமைத்து விபரம் தெரியாத வயதிலேவிருந்தோம்பல் செய்து விளையாடியதைச் சொல்லிக்கொடுத்தோமா? அயராது பெய்த அடை மழைக்குக் குளிர் தாங்காது ஒரு போர்வைக்குள் அண்ணன் தம்பிகள் இருவரும் இழுத்துப் போர்த்திச் சண்டை போட போர்வை கிழிந்துபோய், அதற்காக அர்த்த சாமத்தில் அம்மாவிடம் அடி வாங்கி, அழுது கொண்டே குளிரையும் பொருட்படுத்தாது அயர்ந்து துாங்கியதை பிள்ளைகளிடம் சொல்லி மகிழ்ந்தோமா? செருப்பறியாக் கால்களுடன், பூமித்தாயின் மடியில் புரண்டு விழுந்து காயம்பட்டு விளை
யாடிய பெருமையெல்லாம் நம் காலத்தோடு போய்விட்டது. நொண்டி, கிட்டிப்புல், கோலிக்குண்டு, தட்டாங்கல், பச்சக்குதிரை, திருடன் போலீஸ்,கண்ணாமூச்சி... இது போல எத்தனை வகையான விளையாட்டுக்களையெல்லாம் நாம் விளையாடிவிட்டு, இதில் ஒன்றுகூட நம்பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கவில்லையே?

வாழ்க்கை வைராக்கியம் : காதறுந்த பையும், செருப்பும், காத துாரம் நடந்த நடையும், வாழ்க்கை வசதி இருந்தும்இல்லாமையை உருவாக்கி, நம்மை தன்னம்பிக்கை வரும்படி வளர்த்த விதமும் எதிர்காலத்தை எப்படி வாழ்வது என்ற வைராக்கியத்தை கற்றுத் தந்தோமா? நம் தலைமுறை பெற்றோர் நல்ல வழி காட்டினார்கள், மாடாய் உழைத்து, ஓடாய் தேய்ந்தாலும் மன உறுதியுடன் வாழக் கற்றுக் கொடுத்தார்கள்.எப்படி வறுமையை விரட்டிஅடிப்பது, அதற்கு அயராத உழைப்புதான் அஸ்திவாரம் என்று சொல்லிக் கொடுத்தார்கள். புரிதல் இல்லாத வாழ்க்கையை புரிய வைத்தார்கள். அதனால் தான் நாம் எதையும் தாங்கும் இதயம் படைத்தவர்களாய் வாழ்க்கையை எதிர் நோக்கினோம். வெற்றியும் கண்டோம்.

எப்படி வளர்க்கிறோம் : ஆனால் நாம் நம் குழந்தைகளைஎப்படி வளர்க்கிறோம்? 'பெட்டில்'
படுத்து நெட்டில் விழிக்கும்பிள்ளைகளாக, பேஸ் புக்கையும், வாட்ஸ் அப்பையும் காட்டிக் காட்டி வளர்த்து விட்டோம். நான்ஸ்டிக் தவாவில் ஒட்டாது சுடப்படும் தோசை போல உறவுகளோடு ஒட்டாது வளர்க்கின்றோம்.அவர்களுக்கு டாம் அன் ஜெர்ரியும், சோட்டாபீமும் தான், குழந்தைகளின் உறவாக இன்று உருவாக்கி இருக்கின்றோம். காக்காய்க்கும், நிலாவுக்கும் சோறுாட்டி,
குழந்தைகளை வளர்த்த காலம் போய், 'டிவி'யிலும், அலைபேசியில் வரும் உயிரற்ற பொம்மைகளை காட்டி சோறுாட்டி அவர்களை உயிர்ப் பில்லாமல், நல்ல உணர்வில்லாமல் ஆக்கிவிட்டோம்.சிறுவயதில் சிங்காரமாய் சீரும் சிறப்புமாய் ஓடி ஆடி விளையாடி அனுபவித்த வாழ்க்கையில், சிறிதாவது சொல்லிக் கொடுத்தோமா? மேல்தட்டு மக்களின் திண்பண்டமாக இருந்த சாக்லேட் இன்று நிறத்திற்கு ஒன்றாய், நம் குழந்தைகளை நிம்மதி இழக்கச் செய்கின்றது. நாம் தின்று மகிழ்ந்த குச்சி மிட்டாயும், குருவி ரொட்டி யும் எங்கே போய்விட்டது. ஜவ்வு மிட்டாயில் செய்த கடிகாரமும், மோதிரமும் நம்மை ஜமின்தார் ஆக்கி காட்டிய நிகழ்வினை
இன்று நினைத்தாலும் உள்ளம் பூரிப்படைகிறது.

விளையாட்டு : பிள்ளைகளை மண் தரையில்விளையாட விடுவதில்லை. கை, கால்களில் மண் ஒட்டி கொள்ளும் என்று உறைகளை மாட்டிவிட்டு மகிழ்கின்றோம். நாம் குழந்தையாக
இருக்கும் போது நம்மைச் சுற்றி தாத்தா பாட்டி என்ற உறவுகள் இருந்தனர். இன்று நம் பிள்ளைகளைச் சுற்றி லேப்டாப், அலைபேசி, டேப் பென்டிரைவ், மின்சாதனங்கள் தான் இருக்கின்றன.
நாம் வாழ்ந்த ஊரிலே எத்தனைநாட்கள் நம் குடும்பத்துடன் சென்று நம் உறவுகளோடு உறவாடி இருப்போம். இயற்கையோடு நாம்இயல்பாக வாழ்ந்து விட்டு, பிள்ளைகளை செயற்கையாக
சீமான்கள் போல போலி வாழ்க்கையை வாழச்செய்கின்றோம். பிள்ளைகள்உட்காரப் பழகும் முன் ஒரு வண்டி, நடை பழகவிடாமல்,உட்கார்ந்து கொண்டே நடைபழக ஒரு வண்டி, வீட்டுக்கு
உள்ளேயே சின்ன மிதிவண்டி, பள்ளிக்குப் போவதற்கு ஒரு வண்டிஎன்று நடக்கவிடாமலே அவர்கள் வாழ்க்கையை வண்டியிலே தோண்டிப் புதைத்து, நொண்டிகளாக ஆக்கிவிட்டோம்.
பெண் குழந்தை வளர்ப்புபெண் குழந்தைகளை எப்படி வளர்க்கின்றோம். நாகரீகம்என்ற போர்வையில் அவர்கள் அணியும் ஆடைகளைச் சிறிதுசிந்தித்து பார்த்தோமா? முழங்கால் தெரிய ஆடை, உடம்பு முழுவதும் தெரியும்படி ஒரு மேலாடை. பெண் குழந்தைகளுக்கு உடல் மறைக்கும் படியாக, நல்ல ஆடையை அணியச் செய்யுங்கள். வீட்டிற்குள் நடக்கும் விஷயம் யாருக்கும் தெரியக் கூடாதென்று ஜன்னலில், வாசலில் திரை போட்டு மறைக்கின்றோம். ஆனால் பெண் பிள்ளைகளின் உடைவிஷயத்தில் மட்டும் ஒன்றும்சொல்வதில்லை. நாகரிகம் என்ற போர்வையில் பெண் பிள்ளைகளைப் பெற்றோர்களேகெடுக்கின்றோம். பாவாடை, தாவணி போட்ட காலமெல்லாம் போய், மேற்கத்திய ஆடைகளை அணியச் செய்கிறோம்.
ஈரோடு தமிழன்பன் தன் கவிதையில் குழந்தைகளை 'பாரம் சுமப்பவர்கள்” என்பார். அவர்தம் கவிதையில், ''வீணையை வீசி எறிந்து விட்ட வெள்ளைத்தாமரையாளுக்கு (தாய் மொழிக்கல்வி) - இப்போது இந்தக்கிதார்களில் (பிறமொழிக்கல்வி) தான் கிறுகிறுப்பு, அவள் அறிந்த வீணைச் சடலத்தின் மேல் மொய்த்துக் கிடக்கும் அனாதைகளான மொழிப்பாடல்'' என்பார்.
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் தான், அதில் ஓட்டை விழவிடக் கூடாது. வாழ்க்கையை
இனிமையாக வாழப் பழகிக் கொடுங்கள். எதிர்காலம் புதிர் காலமாக இல்லாமல், அவர்
களுக்கு புதுமையாக, புரிதலோடு இருக்கட்டும்.

-முனைவர் கே. செல்லத்தாய்
தமிழ் துறைத் தலைவர்
எஸ்.பி.கே. கல்லுாரி
அருப்புக்கோட்டை
94420 61060We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X