கிருஷ்ணகிரி:''படித்த திருநங்கையருக்கு, தமிழக அரசு பணி வழங்க வேண்டும்,'' என, போலீஸ் பணிக்கு தேர்வாகி உள்ள ஈரோட்டைச் சேர்ந்த திருநங்கை பிரபா கூறினார்.
ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த கவுந்தம்பாடியைச் சேர்ந்தவர் முத்துசாமி, 26; இவர், எட்டாம் வகுப்பு படிக்கும் போதே, தன் உடல், மூன்றாவது பாலினத்துக்கு மாறி வருவதை உணர்ந்துள்ளார். 2014ல், ஊட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில், 87.4 சதவீத மதிப்பெண் பெற்று, பி.இ., சிவில் இன்ஜினியரிங் முடித்தார்.
பின், ஈரோட்டில் உள்ள தனியார் கல்லுாரியில், உதவி பேராசிரியராக, ஆறு மாதங்கள் பணியாற்றி வந்தார். முத்துசாமியை, எப்படியாவது அரசு வேலையில் சேர்க்க வேண்டும் என்பது, அவரது பெற்றோரின் கனவாக இருந்தது.ஆனால், இவர், தன் பாலினத்தை, 2014 நவம்பரில், திருநங்கையாக மாற்றி, பிரபா என்ற பெயரில், பெங்களூருவில் ஒன்றரை ஆண்டுகள் இருந்தார்.
இந்த காலத்தில், கடைகளில் காசு வாங்கும் தன் தொழில் மீது ஏற்பட்ட வெறுப்பால், கடந்த ஆண்டு கிருஷ்ணகிரிக்கு வந்தார். இங்கு, சமூக நலத் துறை அதிகாரிகள் உதவியுடன், கிருஷ்ணகிரியில் உள்ள, அட்லஸ் ஐ.ஏ.எஸ்., அகாடமியில் சேர்ந்து, பயிற்சி பெற்று, இரண்டாம் நிலை காவலர் பணியிடத்திற்கு தேர்வு எழுதினார்.
இதில், தமிழகம் முழுவதும், 16 திருநங்கையர் தேர்வெழுதி உள்ளனர். இதில், 65 சதவீத மதிப்பெண் பெற்று, பிரபா தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த பணிக்கான உடல் தகுதி தேர்வு, ஆக., 1ல், தர்மபுரியில் நடக்க உள்ளது.
பிரபா கூறியதாவது:
தமிழகத்தில், பெற்றோரால் கைவிடப்பட்ட என்னைப் போன்ற திருநங்கையர் பலர், கடைகளுக்கு சென்று, காசு வாங்கி பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்களில் பலர், டிகிரி வரை படித்துள்ளனர். ஆனால், எங்களுக்கு யாரும் வேலை கொடுப்பதில்லை. என்னை போல, ஒரு சிலர் துணிந்து வெளியே வந்து, பயிற்சித் தேர்வெழுதி வருகின்றனர். இனியாவது, திருநங்கையரில், படித்த பட்டதாரிகளுக்கு, அனைத்து துறைகளிலும், அரசு பணி வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.