பொது செய்தி

தமிழ்நாடு

தேவாங்குகளின் சொர்க்கம் அய்.. அய்... அய்யலூர்!

Added : ஜூலை 29, 2017 | கருத்துகள் (5)
Advertisement
 தேவாங்குகளின் சொர்க்கம்  அய்.. அய்... அய்யலூர்!

பூமி பந்தில் வாழும் புழுக்களுக்கும் உடலும், உயிரும் உள்ளது. ஒவ்வொரு விலங்கும் ஒரு தனித்தன்மையை பெற்றவையே. அந்த திறமையால் சுற்றுச்சூழலை சமநிலைப்படுத்தி, இயற்கை செழிக்க உயிரினங்கள் உதவுகின்றன.

இவற்றில் விவசாயிகளின் உற்ற நண்பனாக விளங்கும் தேவாங்கும், மிகவும் முக்கிய உயிரினமே. உருட்டு கண்கள், திருட்டுப் பார்வை, இருட்டு வாழ்க்கையென வாழும் இந்த உயிரினம், உலகிலேயே அதிகளவில் வசிக்கும் பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் அய்யலுார் வனம் உள்ளது.


குரங்கு இனம்


குரங்கினங்கள் நம் மூதாதையர் என்பது நாம் அறிந்ததே. இந்த இனத்தை சேர்ந்ததுதான் தேவாங்கு. இதில் உலகெங்கும் 800க்கும் மேற்பட்ட சிற்றினங்கள் காணப்படுகின்றன. அவ்வினங்களில் உள்ள 2 வகை தேவாங்கு இனங்கள், இந்தியாவை பூர்வீகமாக கொண்டவை.

தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் 'ஸ்லெண்டர் லோரிஸ்' என்ற வகை உள்ளது. வடஇந்தியாவில் 'ஸ்லோ லோரிஸ்' என்ற இனம் காணப்படுகிறது. இவை பாலுாட்டி இனத்தை சேர்ந்தவை. 14 - 15 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.


வாழ்விடங்கள்


கிழக்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதியில் முட்புதர் காடுகள், கள்ளிச்செடிகள், அடர்ந்த காடுகளில் இவை அதிகம் காணப்படுகின்றன. தோட்டங்களை சுற்றியுள்ள வேலியோரத்தில் வளர்ந்துள்ள மரங்களையும், வாழ்விடமாக கொண்டிருக்கின்றன. பகல் வேளைகளில் மரத்தின் இடுக்குகளிலும், பொந்துகளிலும் சுருண்டு படுத்துக் கொள்ளும். இரவில் மட்டுமே உணவைத் தேடி வெளியே வரும். 600 அடி மற்றும் 800 அடி உயர குன்றுகளில் அதிகளவு காணப்படும்.


இரை


தேவாங்குகள் பெரும்பாலும் 4 முதல் 7 வரை கொண்ட சிறு, சிறு குழுக்களாகவே காணப்படும். அதேசமயம் தனித்தே இரை தேடும். பூச்சிகள்தான் இதன் முக்கிய உணவு. பயிர்களுக்கு தீமை செய்யும் மாவு பூச்சி, பொரி வண்டுகள், இலைச்சுருட்டு புழுக்களை விரும்பி உண்ணும்.
உசிலை, வேம்பு, இழப்பை, ஆவாரம் பூக்கள், இலைகள் உட்பட பலவிதமான மரத்தின் தளிர்களை மட்டும் உண்ணும். நாவல், அரசம் பழம் உட்பட பல விதமான பழங்களையும், பறவைகளின் எச்சங்களில் உருவாகும் பூச்சிகளையும் உண்ணும்.


இனப் பெருக்கம்


இணை சேர்க்கை ஆண்டுக்கு இருமுறை நடக்கும். சினைக்காலம் 170 நாட்கள். இரண்டு குட்டிகள் வரை ஈனும்; தாய்மை உணர்வோடு அவற்றை பேணி பாதுகாக்கும். தனது உடலில் இருந்து வெளியாகும் நறுமணம் மூலமும், சிறுநீர் மூலமும் தனது எல்லைக் கோட்டை வகுத்துக் கொள்வதுடன், தகவல்களையும் பரிமாறும்.


விவசாயிகளின் நண்பன்


பயிர்களை அழிக்கும் மாவு, அந்துப் பூச்சிகளை உண்பதால், விவசாயிகளின் நண்பனாக
திகழ்கிறது. பழங்கள், பறவைகளின் எச்சங்களில் உள்ள புழு, பூச்சிகளை உண்பதால், தேவாங்கு எச்சங்களின் மூலம் மரங்கள் வளர்ந்து செழிக்கும். இதன் மூலம் காட்டு மரங்கள் இனப்
பெருக்கத்திற்கு விதை பரவல் மூலம் உதவுகின்றன.

காட்டுப் பூனைகளின் உணவுப்பட்டியலில் தேவாங்கும் இடம் பெற்றுள்ளது. இவ்விலங்கினை காப்பதன் வாயிலாக காட்டுப் பூனைகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க முடியும். தேவாங்கை காப்பதன் வாயிலாக உயிர்ச்சூழ்லையும் பேணமுடியும்.


அழிவுக்கு காரணம்


புதர் காடுகளை ஒன்றுக்கும் உதவாதவை என அழிப்பதாலும். வேட்டையாடுவதாலும், சிறுவர்கள் தேவாங்குகளை கொன்று விளையாடுவதாலும் இவை அழிகின்றன. சிலர் செல்லப்பிராணியாக வளர்க்கவும், ஜோதிடச் சீட்டு எடுக்கவும், கயிறு மந்திரித்து தருவதற்கும் பிடித்து செல்கின்றனர்.

இவற்றை பிடிக்க ஒட்டுப்பசையை பயன்படுத்துகின்றனர். காடுகளில் குறுக்கிடும் மற்றும் தாழ்வாக செல்லும் மின்சாரக் கம்பியில் சிக்கியும் உயிர் விடுகின்றன.தேவாங்கு தோலில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் முடக்கு வாதத்திற்கு நல்லது என்ற மூட நம்பிக்கை மக்களிடம் மேலோங்கி உள்ளது. தேவாங்கு இறைச்சி பாலுணர்வை துாண்டும், கண் பார்வை தெரியும் என தவறாக நம்பப்படுவதாலும் இவ்வினம் அழிக்கப்படுகிறது.

சிலர் தேவாங்குகளை பிடித்து உடற்கூறு மருந்து ஆராய்ச்சிக்காக வெளிநாடுகளுக்கு கடத்துகின்றனர். காட்டுப் பகுதிகளில் அதிக வேகமாகச் செல்லும் வாகனங்களில் அடிபட்டும் இறக்கின்றன.மலையை ஒட்டியுள்ள வயல்கள், தோட்டங்களில் கத்தரி, தக்காளி செடிகளை பயிரிடுகின்றனர். இவற்றில் ரசாயன மருந்துகள் தெளிக்கின்றனர். இப்பயிர்களில் இருக்கும் பூச்சிகள்
ரசாயன மருந்தின் மயக்கத்தில் இருக்கும்.

இது தெரியாமல் தேவாங்குகள் அப்பூச்சிகளை உண்பதாலும் இறக்கின்றன. கால்நடைகளை வளர்ப்போர் மலைப்பகுதி மேய்ச்சலுக்கு செல்கையில், மரங்களில் இருக்கும் தேவாங்குகள் கொல்லப்படுகின்றன.


வனச்சரணாலயம் வேண்டும்


திண்டுக்கல் காந்தி கிராம உயிரியல் துறை பேராசிரியர் ஆர்.ராமசுப்பு கூறியதாவது: உலகில் உள்ள 4 வகை தேவாங்குகளில் மிகவும் மெலிந்த வகையை சேர்ந்த 'ஸ்லெண்டர் லோரிஸ்' என்னும் தேவாங்குகள் அய்யலுார் பகுதியில்தான் அதிகளவு வசிக்கின்றன.

அய்யலுார் மலைப்பகுதியில் பூச்சிகள் பரவல் அதிகமாக உள்ளது. இதனால் இங்கு வந்து முகாமிட்ட தேவாங்குகள் பல்கி பெருகி, வேறு இடங்களுக்கு இடம் பெயராமல் உள்ளன.இது குறித்து காந்திகிராம உயிரியல் துறை மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோம். ஒரு சதுர கி.மீ.,க்கு 3 தேவாங்குகள் வீதம் வசிக்கின்றன. மலைப்பகுதி தோட்டங்களில் பூச்சிக் கொல்லி மருந்து அதிகம் பயன்படுத்துவதால் தேவாங்குகள் இறக்கின்றன.

அதற்கு மிகவும் பிடித்த உணவான உசிலை மரங்களை சிலர் வெட்டுகின்றன. சிலர் தொழிற்
சாலைகள், கட்டடங்கள் கட்ட இப்பகுதியை தேர்வு செய்து அரசுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
இதனால் தேவாங்குகள் மட்டுமல்ல, இவை விரும்பி உண்ணும் தேள், எலி உட்பட பல விலங்குகள், தேவாங்கை உண்ணும் காட்டுப் பூனைகள் என, ஒட்டு மொத்த பல்லுயிரும் அழிந்து விடும். இவற்றை பாதுகாக்க அரசு தாமதிக்காமல், வனச் சரணாலயம் ஆக்க வேண்டும்.

மேற்கு மலை தொடர்ச்சியாக உள்ளதால் அங்குள்ள தேவாங்குகள் எளிதில் இடம் பெயர்ந்து விடுகின்றன. ஆனால் கிழக்கு மலைத் தொடர், இடையிடையே விட்டு விட்டு இருப்பதால் இடம் பெயறும் தேவாங்குகள் வாகனங்களில் அடிபடுகின்றன. என்றார்.


சீட்ஸ் தொண்டு நிறுவன நிர்வாக இயக்குனர் முத்துச்சாமி:


அய்யலுார் காடுகளில் தேவாங்கு குறித்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். காடுகளை நம்பி இருக்கும் மக்கள், தேன், கடுக்காய், பட்டை, புளி, அரப்பு, சோற்றுக் கற்றாழை, துளசி உட்பட பல மூலிகைகளை பறிக்க செல்கின்றனர். இவர்கள் தேவாங்குகளையும் பிடித்து விற்கின்றனர்.
சிலர் வாங்கி வெளிநாடுகளுக்கு விற்பனை செய்கின்றனர். சிலர் ஆடு, மாடுகளை காடுகளில் மேய்ச்சலுக்கு விடுகின்றனர். இதனால் காடு வளம் பாதிக்கப்படுகிறது. இதனால் காட்டை நம்பியுள்ள தேவாங்குகள் நிலையும் கேள்விக்குறியாகிறது.

எனவே, நாங்கள் அய்யலுார் மலையை சுற்றியுள்ள கிராம மக்களை மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என தனித்தனி குழுக்களாக பிரித்து சிறு தொழில் வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.மரங்களை வெட்ட வேண்டாம் என்பதற்காக, அவர்களுக்கு அடுப்பு எரிக்க காஸ் இணைப்பு ஏற்பாடு செய்து தருகிறோம். சுயதொழில்களை கற்று தருகிறோம்.


பாலிதீனால் ஆபத்து


காடுகளுக்குள் செல்வோர் பாலிதீன் பைகளில் உணவை கொண்டு சென்று, பின் அப் பைகளை வீசி எறிகின்றனர். இந்த உணவு எச்சங்களுடன், பாலிதீன் பொருட்களையும் தேவாங்குகள் உண்ண வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதனால் தேவாங்குகளுக்கு மரணமும், கருச்சிதைவும் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதையும் கண்டறிந்துள்ளோம். எனவே, வனச் சரணாலயமானால் தேவாங்கு பாதுகாக்கப்படும், என்றார்.


இரவினில் ஆட்டம் பகலினில் துாக்கம்


அய்யலுார் வனப்பகுதியில் தேவாங்குகள் குறித்து ஆய்வு நடத்தி வரும் எம்.சிவக்குமார் கூறியதாவது: தேவாங்குகள் இரவில் சக்தி வாய்ந்தவையாக திகழ்கின்றன. இரவில் அதன் கண்கள் மோட்டார் சைக்கிளின் 'ஹெட் லைட்' மாதிரி எரியும். பூச்சிகள் அதனை வெளிச்சம் என எண்ணி ஏமாந்து வரும் போது அதைப் பிடித்து உண்ணும்.

இரவில் மரத்தில் இருந்து விரைவாக கீழே இறங்கும்; மேலே ஏறும். மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். பகலில் நன்றாக துாங்கும். வெயில் நேரத்தில் வெளியே வராது. சாதாரண முள் வேலியில் கூட நிற்கும். அதன் கைகள் மென்மையாக இருக்கும். கைகளில் ரேகைகளும் உள்ளன. மனிதர்கள் பழக ஆரம்பித்தால் கிளி, குரங்கை போல நெருங்கி பழகும், என்றார்.

எஸ்.அரியநாயகம் படம்: ஏ.ரவிச்சந்திரன்


நாற்பது குன்றுகளில் தேவாங்குகள்


உலகில் அதிகளவு தேவாங்குகள் வசிக்கும் பகுதியாக அய்யலுார் மலை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மலை 16 ஆயிரத்து 308 எக்டேர் பரப்புள்ளது. திண்டுக்கல், திருச்சி, கரூர் ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கியது.

அய்யலுார் வன சரணாலயத்தில் 40 குன்றுகளில் தேவாங்குகள் குடும்பம், குடும்பமாக காணப்படுகின்றன. பீரங்கி கரடு, தண்ணீர் கரடு, பூச்சி தின்னும் கரடு, செம்மலை, கரந்த மலை, முடிமலை, கோட மலை, பறையா மலை உட்பட 40 குன்றுகள் மற்றும் கரடுகளில் இவை வசிக்கின்றன. பூச்சிகள், முசுறு எனப்படும் எறும்புகள் அதிகளவு இந்த மலையில் கிடைக்கிறது.

மேலும் அது வாழ்வதற்கேற்ற தட்பவெப்ப நிலையும் இங்குள்ளது. இந்த பகுதியில் வாழும் தேவாங்குகள் (கிரே) 'மரம் நிறத்தில்' 150 கிராம் முதல் 170 கிராம் வரை எடையுள்ளது.


பாதுகாக்கும் வழி


தேவாங்கு மனிதனுடன் நெருங்கி பழகக் கூடிய விலங்கு. பயிர்களுக்கு தீங்கான பூச்சிகளை உண்டு, நன்மை செய்யும் நண்பனாக விளங்குகிறது . இது மனிதனை அண்டி வாழும்
ஒரு பாலுாட்டும் விலங்கு. இவற்றை பாதுகாப்பதில் மக்களின் பங்கு மிகவும் முக்கியம். பத்து ஆண்டுகளுக்கு முன் திண்டுக்கல் மாவட்டம் அய்யலுார் வனப்பகுதியில் ஒரு ச.கி.மீ.,க்கு
4 என்ற எண்ணிக்கையில் இருந்தன. இது குறித்த விழிப்புணர்வும், பங்கேற்பும் அவற்றை பாதுகாக்க வழிவகுக்கும்.


மீட்டெடுக்க


புதர் காடுகளை காத்தல், உயிர் வேலிகள் அழிக்கப்படுவதை தடுப்பது முக்கியம். தீ, மரம் வெட்டுதல் மற்றும் வேட்டை கும்பலை தடுக்க வேண்டும். பூச்சிக் கொல்லியை தவிர்த்து விவசாயத்திற்கு இயற்கை உரமிட வேண்டும். இதன் மூலம் இரை தட்டுப்பாடு இன்றி அவற்றை
காக்கலாம். காடுகளுக்குள் செல்லும் மின் கம்பிகளை தரையில் பதிப்பதன் வாயிலாகவும் அழிவிலிருந்து காக்கலாம். வளர்ப்பு பிராணியாக வளர்ப்பதை தவிர்க்க வேண்டும்.

அய்யலுார் பகுதியை சரணாலயமாக்கினால் வனத்திற்கு பல வசதிகள் கிடைக்கும். கிராம
மக்களும் பயன் பெறுவர். தேவாங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுத்து
வருகிறோம். பழங்குடியினரை தவிர மற்றவர்கள் வனத்திற்கு செல்ல அனுமதிப்பதில்லை.
வனத்தை சுற்றி வன அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இரவிலும்
கண்காணித்து வருகிறோம்.

விஜயக்குமார், வன ரேஞ்சர்


அய்யலுார் வனப்பகுதியை தேவாங்குகளின் சரணாலயமாக்க அரசுக்கு ஏற்கனவே பரிந்துரை
செய்யப்பட்டுள்ளது. தற்போது யாரும் தேவாங்குகளை வேட்டையாடுவதில்லை. தொடர்ந்து
கண்காணிக்கிறோம். இதற்காக வனப்பகுதியில் வனக்குழுக்கள் கடந்த 1993ல் துவக்கப்பட்டுள்ளது. கிராம மக்களுக்கு பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, காடுகளுக்குள் செல்வது தடுக்கப்பட்டுள்ளது.

வெங்கடேசன், மாவட்ட வன அலுவலர்


அய்யலுாரில் அதிகளவு தேவாங்குகள் இருப்பதால் சரணாலயம் அமைப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுஉள்ளது. வன சரணாலயத்திற்கான அனைத்து
ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. அரசின் அனுமதி கிடைத்தவுடன் அமல்படுத்தப்படும்.

வினய், திண்டுக்கல் கலெக்டர்

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganapathy Moorthy - suffern,யூ.எஸ்.ஏ
29-ஜூலை-201718:34:29 IST Report Abuse
Ganapathy Moorthy AWARD WINNING ARTICLE
Rate this:
Share this comment
Cancel
Nagaraj - Doha,கத்தார்
29-ஜூலை-201712:04:10 IST Report Abuse
Nagaraj மிகுந்த பயனுள்ள செய்தி .
Rate this:
Share this comment
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
29-ஜூலை-201711:14:24 IST Report Abuse
JeevaKiran தேவாங்குகளை பற்றிய நல்ல தகவல்கள். எல்லோருமாக சேர்ந்து இதனை காப்போம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X