சகிக்க முடியாத அரசியல் அநாகரிகங்கள்!| Dinamalar

சகிக்க முடியாத அரசியல் அநாகரிகங்கள்!

Added : ஜூலை 29, 2017 | கருத்துகள் (4)
 சகிக்க முடியாத அரசியல் அநாகரிகங்கள்!

தமிழகத்தில், அரசியல் நாகரிகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டதை, அண்மை காலமாக, அடுத்தடுத்து அரங்கேறி வரும், அசிங்கமான சம்பவங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன், நாளிதழ்களைப் புரட்டினால், சிறு சிறு குற்றங்கள், அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்த, வழிப்பறி, கொலை, கொள்ளை பற்றிய செய்திகள் இடம் பெற்றிருக்கும்.ஆனால், இன்றோ அந்நிலை மாறி, செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சி ஊடகங்களிலும், அரசியல்வாதிகளின் லஞ்ச, ஊழல்கள், சமூக விரோதச் செயல்கள், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடைபெற்ற குற்றங்கள் தொடர்பான செய்திகளைத் தான் அதிகம் காண முடிகிறது.கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றங்களில் கூட அரசியல்வாதிகளின் பங்கு இருப்பதை காண முடிகிறது.குறிப்பாக, மற்ற மாநிலங்களைக் காட்டிலும், தமிழகத்தில், அரசியல்வாதிகளின் குற்றங்கள் அதிகரித்திருக்கும் அவலத்தைக் காண்கிறோம். இதற்கு, நம் அரசியல் அமைப்புச் சட்டத்தில் இருக்கும் குறைபாடுகளும், நம் சட்ட திட்டங்களில் இருக்கும் ஓட்டைகளும் தான் காரணம்.சான்றோர், நாட்டுப் பற்றுடையோர், சமூகப் பணிகளில் அக்கறை கொண்டிருப்போர், அரசியலில் பங்கேற்ற நிலை மாறி, குற்றப் பின்னணி உடையோர், சமூக விரோதிகள், மக்கள் நலனைக் காட்டிலும் சுயநலத்தை அதிகமாகப் பேணுவோர், அரசியலில் அதிக அளவில் பிரவேசித்து விட்டதே, இந்த அவல நிலைக்கு பிரதான காரணம்.அப்பழுக்கற்ற அரசியல்வாதிகளான, ஓமந்துார் ராமசாமி ரெட்டியார், ராஜாஜி, காமராஜர் போன்றோரை தவப்புதல்வர்களாக கொண்டிருந்த தமிழகம், இன்று, சில கழிசடை அரசியல்வாதிகளின் பிடியில் சிக்கிய, பரிதாப மாநிலமாக மாறிப் போயிருக்கிறது.தமிழக அரசியலில் நடக்கும் இத்தகைய அசிங்கங்களைப் போக்க, வழியே இல்லையா என்ற கேள்வி தான், அனைவரின் உள்ளங்களிலும் எழுகிறது.இந்த அரசியல் அசிங்கங்கள், தமிழ்ச் சமுதாயத்திற்கு தலைக்குனிவை ஏற்படுத்தி இருப்பதோடு, தமிழர்களாகிய நாம், மக்களாட்சியின் மாட்சிமையை அனுபவிக்கத் தகுதியுடையோர் தானா... என்ற ஐயத்தையும் எழுப்பியுள்ளது.அண்ணாவால், கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்ட, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபைக்குள் ரவுடிகள் போல செயல்பட்டனர்.கும்பலாகச் சென்று, சபாநாயகரை இருக்கையில் இருந்து அப்புறப்படுத்தி, அவரின் இருக்கையில் அமர்ந்து, கூத்தாடிய காட்சிகள், தமிழக அரசியல் எத்தகையோர் கைகளுக்குச் சென்று விட்டது என்ற கவலையை ஏற்படுத்தியது.அரசியல்வாதிகள் செய்யாத குற்றங்களே இல்லை என, சொல்லும் அளவுக்கு, நிலைமை மோசமாகி இருக்கிறது. ஆட்சிப் பொறுப்பில் இருப்போரின் கைக்கூலிகளாக அரசு அதிகாரிகள் இருப்பதால், இவ்விரு அதிகார வர்க்கத்தினரும் இணைந்து செய்யும் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.மக்கள் வரிப் பணத்தைக் கொள்ளையடித்து, கோடிகளை சுருட்டுவதே கூட்டணிகளின் லட்சியமாக இருக்கிறது. நம் சட்டங்களை சரியாகப் பயன்படுத்தினால், எந்த ஒரு அரசியல் தலைவரும், அதிகாரியும் சிறைக்குச் செல்வதிலிருந்து தப்ப முடியாது என்ற நிலைமை தான் தற்போது உள்ளது.எம்.எல்.ஏ., - எம்.பி., 'சீட்' வாங்குவதற்கு லஞ்சம், அமைச்சர் ஆவதற்கு லஞ்சம், கான்ட்ராக்டுகள் வழங்குவதில் லஞ்சம்; மக்கள் நலத் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் பணத்தில், 50 சதவீதம் வரை களவாடுதல்.பல துறைகள் சார்ந்த பணிகளுக்காக ஒதுக்கப்படும் பணத்தில் ஊழல்கள் புரிவது, வாக்காளர்களுக்கு ஆயிரங்கள் லஞ்சமாகக் கொடுத்து, அவர்களின் ஓட்டுகளைப் பெற்று, பதவியில் அமர்வது என, இவர்கள் புரியும் அக்கிரமங்களுக்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது.அரசியல்வாதிகளை மிஞ்சும் அளவுக்கு, லஞ்சம், ஊழல்கள் புரிவதில், அவர்களுக்கு ஆசான்களாக விளங்குகின்றனர், அரசு அதிகாரிகள். நேர்மையான அதிகாரிகள் யாரையும், ஆட்சியாளர்கள் பொறுப்பான பதவிகளில் அமர்த்துவதில்லை.ஒவ்வொரு முறையும் அரசுகள் மாறும் போது, ஆட்சிக்கு வருவோர், பழைய அதிகாரிகளை மாற்றி விட்டு, அவர்கள் சொற்படி நடக்கும் அதிகாரிகளை தேர்வு செய்து, பணியில் அமர்த்துவது, ஒரு எழுதப்படாத சட்டமாகவே இருந்து வருகிறது. இது, கூட்டுக் கொள்ளை அடிப்பதற்கான எளிய வழி.தற்போது, காவல் துறைக்கும், பிற துறைகளுக்கும், சவால் விடும் அளவுக்கு சிறைத் துறையிலும் லஞ்சம், ஊழல் கொடி கட்டிப் பறக்கிறது. முன்பெல்லாம், வறுமையில் வாடுவோர், சிறு சிறு குற்றங்கள் புரிந்து, சிறைக்குச் செல்வது வழக்கம்.ஆனால் இப்போது, வசதி படைத்த கோடீஸ்வரர்களும், தீவிரவாதிகளும், சமூக விரோதிகளும், அரசியல் பிரமுகர்களும், பயங்கரமான குற்றங்களை புரிந்து, சிறைக்குச் செல்வது வாடிக்கையாகி விட்டது.பண பலம் மிக்க மனிதர்கள் குற்றவாளிகளாக சிறைக்கு வருவது, சிறைத் துறையைச் சேர்ந்தோருக்கு ஒரு வரப்பிரசாதமாக ஆகி விட்டது. யாரிடமும் கெஞ்சிக் கூத்தாடாமல், கையேந்தாமலேயே அவர்களின் பாக்கெட்டுகள் லஞ்சப் பணத்தால் பிதுங்கிக் கொண்டிருக்கின்றன.
லஞ்சப் புகார்களில் சிக்கி, சிறைக்குச் செல்லும் அரசியல் பிரமுகர்கள், கோடிக்கணக்கில் பணத்தை அள்ளி வீசும் இடமாக சிறை வளாகங்கள் மாறிவிட்டன.சிறையில் உள்ள தீவிரவாதிகளின் கைகளில் மொபைல் போன்கள், பணம், போதைப் பொருட்கள் தாராளமாகப் புழங்குகின்றன. சிறையில் உள்ள அரசியல் பிரமுகர்களுக்கு, வீட்டுச் சாப்பாடு, பிரியாணி, மது பானங்கள் தாராளமாக கொண்டு செல்லப்பட்டு, தரப்படுகின்றன.இதில், சாதாரண காவலர் முதல், உயர் அதிகாரிகள் வரை கூட்டாகச் செயல்படுகின்றனர். தமிழக அரசியல்வாதிகளின் ஊழல் கரங்கள், பிற மாநிலங்களுக்கும் நீண்டிருப்பது, தமிழகத்தின் மானத்தையே காற்றில் பறக்க விட்டிருக்கிறது.சிறைத் துறையில் உடனடி சீர்த்திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டிய கட்டாயம், மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில், குற்றவாளிகள் வெளியே உருவாவதற்கு பதிலாக, சிறைச்சாலைகளிலேயே உருவாகும் அவலம் உண்டாகியிருக்கிறது.கடந்த, 15 ஆண்டுகளில் காங்கிரசும், தி.மு.க.,வும் இணைந்து செய்த பல இமாலய ஊழல்கள் ஒருபுறம் இருக்க, அவர்களை மிஞ்சும் அளவுக்கு, அ.தி.மு.க.,வினர் செய்த, செய்து வரும் ஊழல்கள், தமிழகத்தை உலக அரங்கில் தலைக்குனிய வைத்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்துாரில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு கோடிகள் கைமாறியதாக வந்த செய்தி, உலகையே மலைக்க வைத்தது. சுயமரியாதையை குப்பைத் தொட்டியில் போட்டு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், அக்கட்சியின் துணை பொதுச்செயலர் தினகரனுக்குப் பின் செல்வது, மேய்ப்பவனுக்கு பின்னால் ஆட்டு மந்தை செல்லும் காட்சியைத் தான் நினைவூட்டுகிறது.ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, அ.தி.மு.க.,வில் நடந்து வரும் உட்கட்சி சண்டைகள், கோடிகளை மையமாக வைத்தே நடைபெற்று வருகின்றன என, கூறப்படுகிறது.காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் சிக்கல், விவசாயிகள் தற்கொலை, மீனவர் பிரச்னை, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்னைகளில் தமிழ் மக்கள் அவதிக்குள்ளாகியிருக்கும் நிலையில், தமிழக அமைச்சர்கள், மத்திய அரசு சொல் கேட்டு ஆடுவது, அசிங்கமாக இருக்கிறது.இந்நிலை மாற, மத்திய, பா.ஜ., அரசு உடனே, 'லோக்பால்' சட்டத்தை நிறைவேற்றி, அனைத்து மாநிலங்களிலும், 'லோக் ஆயுக்தா' அமைப்புகளை உருவாக்க வேண்டும். அரசியல்வாதிகள் லஞ்சப் பேர்வழிகளாக வலம் வருவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.தற்போதைய, தமிழக அநாகரிக அரசியலை முடிவுக்குக் கொண்டு வர, மக்களும் நேர்மையானவர்களுக்கு மட்டுமே ஓட்டளிப்பது அவசியம். தமிழக அரசியல் சாக்கடையை துாய்மைப்படுத்த வேண்டியது மக்களின் தலையாய கடமை. ஜி. கிருஷ்ணசாமி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பணி நிறைவு)இ-மெயில்: Krishna--samy 2010@yahoo.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X