உடனே வருது கந்து வட்டி பாக்கி... உதவுது போலீஸ் துப்பாக்கி!

Added : ஆக 01, 2017
Share
Advertisement
உடனே வருது கந்து வட்டி பாக்கி... உதவுது போலீஸ் துப்பாக்கி!

ஆலாந்துறையில் உள்ள தோழியின் வீட்டிற்கு, 'கால் டாக்சி'யில் சென்று கொண்டிருந்தனர், சித்ராவும், மித்ராவும். ஏதோ பக்திப்பாடல், 'சிடி'யை சத்தமாய் ஒலிக்க விட்டுக் கொண்டிருந்தார் டிரைவர்.
தனது அலைபேசியில் வந்த, 'வாட்ஸ் ஆப்' வீடியோவைக் காண்பித்த மித்ரா, ''அக்கா... 'முகம்மது பின் துக்ளக்' படத்துல, 40 வருஷத்துக்கு முன்னால சோ பேசுற 'டயலாக்' இது. நம்ம கார்ப்பரேஷனுக்கு அப்பிடியே இப்ப, 'செட்' ஆகுது. எதை எடுத்தாலும், லஞ்சம் விளையாடுது. பேசாம, சோ சொன்னது மாதிரி, லஞ்சத்தை அதிகாரப்பூர்வமா ஆக்கிடலாம்,'' என்றாள்.
''மித்து... நம்ம கோயம்புத்தூர்ல சம்பாதிக்கிற யாரும், இப்போ இங்க சொத்து வாங்கிப் போடுறது இல்லை; கேரளா, ஆந்திரா அமராவதி, குஜராத், கர்நாடகான்னு எல்லை கடந்து போயிர்றாங்க,'' என்றாள் சித்ரா.
''நீங்க யாரைச் சொல்றேன்னு எனக்குத் தெரியலை... ஆனா, நம்ம கார்ப்பரேஷன்ல இருக்குற ஆபீசர்க, விவரமா சொந்த ஊர்ல அல்லது மாமனார் ஊர்ல சொத்தை வாங்கிக்கிறாங்க. நம்ம கார்ப்பரேஷன், 'நார்த்'ல வருவாய்ப் பொறுப்புல இருந்த ஒருத்தரு, இப்போ 'ஜேஎன்என்யுஆர்எம்' திட்டத்தைக் கண்காணிக்கிற பொறுப்புல இருக்காரு. அவரு, இங்க சம்பாதிச்சதை வச்சு, பாலக்காட்டுல சொத்து வாங்கிக் குவிச்சிருக்காராம்,'' என்றாள் மித்ரா.
காரில் ஒலித்த, 'சிடி'யில், 'காக்கும் கடவுள் கணேசனை நினை...' என்று சீர்காழியின் வெண்கலக்குரல், தெறிந்தது.
''அதே 'நார்த்'ல முக்கியமான பொறுப்புல இருக்குற கார்ப்பரேஷன் ஆபீசர், அவரோட மாமனார் ஊரான மைசூர்ல ஏகப்பட்ட 'இன்வெஸ்ட்மென்ட்' பண்ணிருக்காராம். ரத்தினபுரி பி.எம்.சாமி காலனியிலயும் பிரமாண்டமா ஒரு வீடு கட்டிருக்காராம்,'' என்றாள் சித்ரா.
காரில் ஒலித்த, 'சிடி'யில் 'சரவண பொய்கையில் நீராடி...' என்று சுசீலாவின் பாடல், செவிகளை வருடியது. மித்ரா கேட்டாள்...
''அஞ்சு ஏ.டி.பி.ஓ.,க்கும் கமிஷனர் ஏதோ, 'நோட்டீஸ்' கொடுத்தாராமே... அவுங்களுக்கு மேல இருக்குற பொறுப்பு அதிகாரி, ஆபீசுக்கே வர்றதில்லை; வந்தாலும், உடனே கிளம்பிர்றாங்க; எங்க தான் போறாங்கன்னே தெரியலைன்னு புரமோட்டர்க புலம்புறாங்க.''
''அவுங்க மட்டும் தானா... ஞானமுள்ள இன்ஜினியரு, 'கருப்பு' இன்ஜினியரு, இப்பிடி சீனியர்ஸ் பல பேரு, ஆபீசுக்கே வராம, சம்பாதிக்கிறதுல மட்டும் தான் குறியா இருக்காங்கன்னு கார்ப்பரேஷன்ல பல பேரு குமுறுறாங்க.''
''மத்தவுங்களுக்கு ஏரியாவுல தான வேலை... இவுங்களுக்கு அப்பிடியில்லையே. ரிசர்வ் சைட் பிரச்னைக்கு, ஏழாம் தேதி, கோர்ட்ல ஆஜராவாங்களா, அங்கேயும் போகாம இருந்துக்குவாங்களா?''
''ஏற்கனவே, பசுமை தீர்ப்பாயத்துல, கோயம்புத்தூர் கார்ப்பரேஷனை வாங்கு வாங்குன்னு வாங்கிருக்காங்க. இதுல என்ன பதில் சொல்லப் போறாங்களோ தெரியலை,'' என்றாள் சித்ரா.
''அதெல்லாம் விடுக்கா... கிரவுண்டே இல்லாத கார்ப்பரேஷன் ஸ்கூலுக்கு, பிஸிக்கல் டைரக்டர் போட்ருக்கிற கூத்து தெரியுமா?'' என்று கேட்டாள் மித்ரா.
''அது தெரியலை... ஆனா, ஏற்கனவே கிரவுண்ட் இல்லாத ஒரு ஸ்கூலுக்கு, பி.டி.வாத்தியாரைப் போட்ருக்கிறதா ஒரு பிரச்னை வந்து, அவரைக் கூட மாத்துனது எனக்குத் தெரியும்,'' என்றாள் சித்ரா.
''பரவாயில்லைக்கா... நீயும் 'அப்டேஷன்'ல தான் இருக்குற...இப்போ கொடுமை என்னன்னா, 'பி.டி.' டீச்சரே வேணாம்னு மாத்துன அதே ஸ்கூலுக்கு தான் இப்போ, 'பிஸிக்கல் டைரக்டரை' நியமிச்சிருக்காங்க,'' என்றாள் மித்ரா.
காளம்பாளையத்தைத் தாண்டியதும், வண்டியை இளநீர் கடையில் ஓரம் கட்டச் சொன்னாள் மித்ரா. அருகில் டீ குடித்து விட்டு வருவதாகச் சென்றார் டிரைவர். இளநீர் குடித்துக்கொண்டே, பேச்சைத் தொடர்ந்தாள் சித்ரா...
''அக்னி நட்சத்திரம் மாதிரி வெயில் அடிக்குது; அஞ்சே நிமிஷத்துல இப்பிடி வேர்த்துக்கொட்டுது!''
''இதுக்கே இப்பிடின்னா... ஹெல்த் மினிஸ்டர், நம்ம கலெக்டராபீஸ்ல புது கட்டடத்துல நடத்துன கூட்டத்துல, மூணு அமைச்சர்கள், ஏ.சி., இல்லாம, வேர்த்து விறுவிறுத்துப் போயிட்டாங்க. டிபிஎச், டிஎம்இ ரெண்டு பேருக்கும், சேர் கூட இல்லியாம். புது கலெக்டர் ஆபீஸ்ல இன்னமும் எதுவுமே 'செட்' ஆகலையாமே!''
''நீ அதை ஒரு பிரச்னையா சொல்லுற... அந்தக் கூட்டத்துல, ஹெல்த் மினிஸ்டர், ஆபீசர்களை எல்லாம் காய்ச்சி எடுத்திருக்காரு. 'டெங்கு', மர்மக் காய்ச்சல்களை ஒழிக்கிறதுக்கு, 21 நாள் கெடு கொடுத்துருக்காராம்!''
''நல்ல தகவலா இருக்கே... அந்தக் கூட்டத்துல, நம்மூரு கருப்பு எம்.எல்.ஏ., கலந்துக்கிட்டு, 'கலெக்டராபீஸ்க்கு பின்னாலயே சாக்கடை தேங்கிக் கிடக்கு; அதையே 'க்ளீன்' பண்ணாம, எப்பிடி 'டெங்கு'வை ஒழிப்பீங்க'ன்னு அறிவுப்பூர்வமா கேள்வி கேட்டாராமே,'' என்று சிரித்தாள் மித்ரா.
''அதுக்கு தான், 'சாக்கடைனால 'டெங்கு' கொசு உற்பத்தியாகாதுன்னு' மினிஸ்டர் விளக்கமாச் சொல்லிருக்காரு. அதிகாரிகளை, வாங்கு வாங்குன்னு வாங்குன மினிஸ்டர், கோயம்புத்தூர்ல எங்க பார்த்தாலும் 'குட்கா, பான் பொருள்' தாராளமா புழங்குறதைப் பத்தி, ஒரு வார்த்தை கூட பேசலை; புட் சேப்டி டிபார்ட்மென்டை ஒரு கேள்வியும் கேக்கலைன்னு ஹெல்த் டிபார்ட்மென்ட்காரங்க கொந்தளிக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.
இருவரும் இளநீர் குடித்துவிட்டு, வண்டியில் ஏற, டிரைவர் வண்டியைக் கிளப்பினார்; சுசிலாவின் குரலில், 'மாணிக்க வீணை ஏந்தும் மாவேணிக் கலைவாணி...' என்ற பாடல் ஒலிக்க, காருக்குள் மெலிதாய் தென்றல் நுழைந்தது.
''அக்கா... இந்த வீணையோட பேரைக் கொண்டவர் ஒருத்தரு, மதம் சார்ந்த மக்கள் கட்சியில முக்கியப் பொறுப்புல இருக்காரு. காளப்பட்டியில கேபிள் நடத்துறாரு. சசிகுமார் மர்டருக்கு அப்புறம், இவருக்கு துப்பாக்கி ஏந்துன போலீஸ் பாதுகாப்பு கொடுத்துருக்காங்க. ஆனா அவருக்கு காரெல்லாம் கிடையாது. 'பைக்'ல தான் போவாரு...'' என்று மித்ரா சொல்லும்போதே குறுக்கிட்டாள் சித்ரா.
''உதயநிதி நடிச்ச 'மனிதன்' படத்துல, அவரோட ஸ்கூட்டர்ல துப்பாக்கியோட பின்னால ஒரு நோஞ்சான் போலீஸ் உட்கார்ந்துட்டு வருவாரே; அது மாதிரியா?''
''அதே மாதிரி தான்... ஆனா, இவரு, அந்த துப்பாக்கி போலீசைக் காமிச்சே, பல வேலைக பண்றாராம்; எல்லை தாண்டி, கேபிள் அடிக்கிறது; கந்து வட்டிக்கு விட்டு, கறாரா பாக்கிய வசூல் பண்றது; தாபாக்கள்ல போயி, 'இல்லீகலா சரக்கு விக்கிறாங்களா'ன்னு மெரட்டி, வசூல் பண்றதுன்னு நல்லா 'யுட்லைஸ்' பண்றாராம்'' என்றாள் மித்ரா.
பக்திப்பாடல்களுக்கு ஓய்வு கொடுத்து விட்டு, பண்பலையை ஒலிக்க விட்டார் டிரைவர்.
'பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்லச்சிரிக்க...பொன்னிலும் சிவந்த வானம் எங்கும் மிதக்க...' என்று எஸ்.ஜானகியின் காந்தக்குரல், காருக்குள் மென்மையைப் பரப்பி விட்டது. ஏதோ நினைவுக்கு வந்தவளாய்க் கேட்டாள் சித்ரா...
''மித்து... கோயம்புத்தூர்ல நடந்த பன்னீர் அணி செயல் வீரர்கள் கூட்டத்துக்கு, செம்ம கூட்டமாமே''
''ஆமாக்கா...சரியான கூட்டம்; அதுல நம்மூரு 'மாஜி' அமைச்சர் தாமோதரனும், எம்.எல்.ஏ., அருண்குமாரும் சூப்பரா பேசிருக்காங்க. அணி மாறுன எம்.எல்.ஏ.,வைப் பத்தி தாமோதரன் பேசுறப்போ, 'நாம அவரை ஏதோ புலின்னு நினைச்சோம்; கடைசியில அவரு எலின்னு நிரூபிச்சுட்டாரு'ன்னு செமையா கலாய்ச்சிருக்காரு,'' என்றாள் மித்ரா.
''கூட்டத்துக்கு முன்னால, அணி மாறலாம்னு நினைச்ச பல பேரு, 'கட்சி இவுங்க கிட்டதான் வரும்'னு அணி மாறுற திட்டத்தையே கை விட்டுட்டதா கட்சிக்காரங்க பேசிக்கிட்டாங்க,'' என்றாள் சித்ரா.
''நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்க்கா... இ.பி.எஸ்., அணியில முக்கியப் பொறுப்புல இருக்கிறவுங்களே, ஓ.பி.எஸ்., சைடுலயும் ஒரு தொடர்பு இருக்கட்டும்னு நினைச்சு, இந்த கூட்டத்துக்கு, வண்டிகள் 'அரேஞ்ச்' பண்ணிக் கொடுத்தாங்களாம்,'' என்றாள் மித்ரா.
''வண்டின்னதும் ஞாபகம் வந்துச்சு... சூலுார்ல இருக்குற ஆர்டிஓ யூனிட் ஆபீஸ்ல இருக்குற 'பிரேக்' ஆபீசர், யாரையும் மதிக்கிறது இல்லியாம்; ஜேடிசி, ஆர்டிஓ யார் மீட்டிங் நடத்துனாலும் வர்றதில்லையாம்; நாலு பேரு பாக்குற வேலைக்கும், இவரே காசை வாங்கிக்கிறாராம். ஆபீசுக்கு முன்னால, அவரே நாலு கடையும் போட்டு, எல்லாமே அங்க தான் வாங்கணும்னு அதுலயும் காசு பாக்குறாராம். பேர்லயே கோட்டை வச்சிருக்குற மினிஸ்டரோட சொந்தம்கிறதால இந்த ஆட்டமாம்,'' என்றாள் சித்ரா.
இதைக் கவனிக்காத மித்ரா, அலைபேசியில் வந்த அழைப்பை எடுத்து, 'சத்தியமூர்த்தி சார்... நாளைக்கு உங்க ஆபீஸ் வர்றேன்...' என்று ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். சித்ராவின் அலைபேசியும் அலற, இருவரும் பேச, வேகமெடுத்தது கால்டாக்சி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X