சிறப்பு பகுதிகள்

சத்குருவின் ஆனந்த அலை

சோகத்தை சமாளிப்பது எப்படி?

Added : ஆக 01, 2017 | கருத்துகள் (8)
Advertisement
சோகத்தை சமாளிப்பது எப்படி?

கேள்வி: சத்குரு, நிறைவேறாதஆசைகள் நம்மை சோகத்தில் ஆழ்த்துகின்றன. இதை எப்படி சமாளிப்பது?

சத்குரு: ஒன்றை சமாளிப்பது, அல்லது அடக்கி ஆள்வது என்றால் அதற்கு என்ன அர்த்தம்? அதன் மீது நீங்கள் ஏறி அமர்ந்து கொள்ள விரும்புகிறீர்கள். ஒரு பிரச்சினையின் மேல் நீங்கள் அமர்ந்து கொள்வதால், உங்கள் வாழ்க்கை எவ்வழியிலாவது மேன்மையடையும் என்று நினைக்கிறீர்களா? இல்லை. அதையெல்லாம் ஏற்கெனவே முயற்சி செய்து பார்த்துவிட்டீர்கள்தானே? அது வேலை செய்வதில்லை. துயரத்தை எப்படி தவிர்ப்பது என்று என்னைக் கேட்காதீர்கள், ஆனந்தமாய் வாழ்வது எப்படி என்று கேளுங்கள். “
துயரங்கள் நீங்களே உருவாக்கிக்கொள்வது. அது உங்களுக்கு இயல்பாக ஏற்படுவதில்லை. உங்கள் மனதோடு குளறுபடிகள் செய்யாமல், இங்கு சும்மா அமர்ந்திருந்தால், நீங்கள் நன்றாகவே இருப்பீர்கள். ஆனால் இப்போது மனதுடன் மிகவும் சிக்கிப் போய்விட்டீர்கள், தொடர்ந்து மனதைக் கிளறிக்கொண்டே இருக்கிறீர்கள். ஒரு நொடிகூட அதை விட்டு விலகி வரமுடியவில்லை. அதுதான் பிரச்சினை. 'துயரத்தில் உழலாமல் இருப்பது எப்படி?' என்பதே பொருத்தமற்ற கேள்வியாக இருக்கிறது. ஏனெனில் அதை உருவாக்குவதே உங்கள் மனம்தான். மனதைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கான 'ஸ்விட்ச்' தெரியாமல், இருட்டில் துழாவிக் கொண்டிருக்கிறீர்கள். சில நேரம் தற்செயலாக ஏதோ ஒன்றைத்தொட்டுவிட, எல்லாம் நன்றாக இருக்கிறது. சில நேரம் வேறேதோ ஒன்றைத்தொட, அதுதுயரத்தை வரவழைக்கிறது. இதுதான் நடந்துகொண்டிருக்கிறது.
இது நீங்கள் ஒரு 'காரை' வைத்திருந்து, ஆனால் அதை ஓட்டும் வழிதெரியாமல் இருப்பதுபோல. மனம்போனபடி கீழிருக்கும் அந்த மூன்று மிதிக்கட்டைகளை (க்ளட்ச், பிரேக், ஆக்ஸெலரேட்டர்)யும் மாற்றி மாற்றி மிதித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் நீங்கள் எந்தளவு மோசமான ஓட்டுனராக இருப்பீர்கள் என்பதை அறிவீர்களா? பயணம் மிகவும் குலுங்கிக் குலுங்கித் தானே நடக்கும்? இப்போது உங்கள் உடலையும், மனதையும் அப்படித்தான் செலுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அவை எப்படி செயல்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள முயற்சி எடுக்காமல், தற்செயலாக அவற்றைச் செலுத்திக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு காரை ஓட்ட வேண்டும் என்றால் அதைப்பற்றி உங்களுக்கு நிறையத் தெரிந்திருக்க வேண்டும். அந்த எந்திரம் எப்படி வேலை செய்கிறது, அதை இயக்கும் விதிகள் என்ன என்பதெல்லாம் தெரிந்திருந்தால் அதை சுலபமாக இயக்கலாம். இது உங்கள் உடலிற்கும், மனதிற்கும், உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திற்கும் பொருந்தும். இன்று பரவலாய் ஒரு கலாச்சாரம் இருக்கிறது. நாம் விரும்பும் ஒன்று நடக்கவேண்டுமெனில், அதற்கு என்ன தேவையோ அதை செய்வதற்குப் பதிலாக, மற்றதை எல்லாம் செய்துவிட்டு, நாம் விரும்புவது நடந்துவிடவேண்டும் என்று வேண்டிக் காத்திருப்பதுதான். வாழ்க்கை எப்போதும் இப்படி நடக்காது என்பதை நீங்கள் புரிந்து கொள்வது நல்லது. குழந்தைகள்போல் இல்லாமல், இனியேனும் கொஞ்சம் முதிர்ச்சியோடு செயல்படுங்கள். 'இன்று நான் கடவுளிடம் வேண்டிக் கொண்டுவிட்டேன், அதனால் இன்றைக்கு எதுவும் தவறாக நடக்காது' இப்படிக்கூட நினைக்கிறீர்கள், இல்லையா? ஆனால் கடவுளை வேண்டிக் கொள்பவர்களும் தினமும் இறந்துகொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்தானே? பிரார்த்தனை போன்ற விஷயங்கள் எல்லாம் வேறொரு காரணத்திற்காக செய்ய ஆரம்பித்தார்கள். ஆனால், காலப்போக்கில், இப்போது, எதற்கு எது என்பதே புரியாது ஏதேதோ செய்துகொண்டிருக்கிறீர்கள். ஓட்டுவது சரியாக நடக்கவில்லை, வேண்டிக்கொள்வதும் சரியாக நடக்கவில்லை, தியானமும் சரியாக நடக்கமாட்டேன் என்கிறது. ஏனெனில் என்ன செய்ய வேண்டுமோ அதைச்செய்யாமல், வேறெதையோ நீங்கள் செய்துகொண்டிருக்கிறீர்கள்.
உங்களுக்குச் செடிவளர்க்கவேண்டுமென்றால், எல்லா பிரார்த்தனைகளும் செய்துவிட்டு, பிறகு விதையை மண்ணில் விதைக்காமல், அதைக் கூரையில் ஒட்டிவைக்கிறீர்கள். அது எப்போதாவது வளருமா? மண்ணில் தேவையான உரங்களைக்கலந்து, அதைச்சரியான பதத்தில் தயார்செய்து, அதில் வளரக்கூடிய விதையை விதைத்தால், அதுவளரும். சரியான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்பவருக்குத்தான் வாழ்வின் புதையல்கள்கிட்டும். நீங்கள் நல்லவராகவோ, கெட்டவராகவோ இருப்பதால் செடியில் பூக்கள்மலராது. “அவன் கெட்டவன். ஆனால் அவனிடம் செல்வம் சேர்கிறது. எனக்கு மட்டும் ஏன் நடக்கமாட்டேன் என்கிறது” என்று பலர் அலுத்துக் கொள்வதைக் கேட்டிருப்பீர்கள். நீங்கள் நல்லவர்தான், ஆனால் முட்டாளாய் இருக்கிறீர்கள், என்னசெய்வது? சரியான விஷயங்களை செய்யாதவரை, உங்களுக்கு வேண்டியவை நடக்காது. ஆனந்தமாக இருக்கவேண்டும் என்று நீங்கள் எண்ணினால், அதற்கு, உங்களுக்குள் என்ன செய்யவேண்டுமோ அதை நீங்கள் செய்யவேண்டும். வேண்டிக் கொள்வதாலோ, அல்லது அது 'வேண்டும், வேண்டும்' என்று ஆசைகொள்வதாலோ, அது உங்களுக்குக் கிடைத்துவிடாது. உங்களுக்குள் தேவையான சூழ்நிலையை நீங்கள் உருவாக்கிக்கொண்டால், ஆனந்தம் உங்களுக்குள் ஊற்றெடுக்கும். ஒரு மலரை உங்களால் மலரச் செய்யமுடியாது. ஆனால் அது மலர்வதற்குத் தேவையான சூழ்நிலைகளை உருவாக்கினால், ஒன்றல்ல ஓராயிரம் பூக்கள் மலரும். வாழ்வில் இதைத்தான் நீங்கள் செய்யமுடியும். அதைச் செய்தாலே போதும். வாழ்வில் ஏதோ ஒன்று உங்களுக்கு நடப்பதற்கு நீங்கள் வேறு எதையும் செய்யத் தேவையில்லை. உங்களுக்கு என்னவேண்டுமோ, அதற்கு சரியான சூழ்நிலைகளை நீங்கள் அமைத்தால்போதும், தேவையானது நடந்துவிடும். உங்களுக்கு சாதம் சமைக்கவேண்டும் என்றால், கொஞ்சம் அரிசி, நீர், வெப்பம் இவற்றை எப்படி வைக்கவேண்டுமோ அப்படி வைத்தால், சாதம் தயார் ஆகிவிடும். அதை நீங்கள் போய் சமைக்கவேண்டாம். சரியான சூழ்நிலைகளை உருவாக்க நீங்கள் கற்றுக்கொண்டால்போதும், சமைப்பதுதானாக நடந்துவிடும். முதல்முறை செய்தபோது சரியான சூழ்நிலைகள் என்னவென்று உங்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். அவ்வப்போது கையை உள்ளேவிட்டு, அன்று சாதத்திற்கு பதிலாக கஞ்சியை உருவாக்கினீர்கள். ஆனால் நாட்கள் செல்லச்செல்ல, சரியான சூழ்நிலையை உருவாக்க நீங்கள் கற்றுக்கொண்டபிறகு, அங்கே நீங்கள் நின்று கொண்டிருக்கவேண்டும் என்றுகூட அவசியம் இல்லை. சரியான சூழ்நிலையை உருவாக்கிவிட்டு, நீங்கள்அக்கம்பக்கத்தில் பேசிக்கொண்டிருந்து விட்டுவந்தாலும், சாதம் தயாராகிவிடும். இது அவ்வளவு சுலபம்.
உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சமும்கூட இதேபோன்றுதான். எங்கெல்லாம் சரியான சூழ்நிலைகளை நீங்கள் அமைத்தீர்களோ, அங்கெல்லாம் நடக்கவேண்டியவை நன்றாகவே நடக்கிறது. எங்கெல்லாம் சரியான சூழ்நிலையை உங்களுக்கு அமைக்கத் தெரியவில்லையோ, அங்கெல்லாம் எவ்வளவு முயற்சி செய்தாலும், நீங்கள் தலைகீழாகவே நின்றாலும், அதுநடப்பதில்லை. ஒரு சிறுகடையில் 300 ரூபாய் வியாபாரத்தை தினமும் சமாளிப்பவருக்கு இரத்தக்கொதிப்பு ஏற்பட்டு, அதுதாங்கமுடியாத பாரமாய் இருப்பதும், உலகெங்கும் 300 தொழில்ஸ்தாபனங்கள் நிறுவி, அவற்றை நேரில் சென்று பார்வையிடாமலேயே அவருக்கு எல்லாம் அற்புதமாய் நிகழ்வதையும் பார்த்திருக்கிறீர்கள்தானே? ஏன் இப்படி? இது ஏனெனில், தொழில்கள் வெற்றிகரமாக நடப்பதற்கு ஏதுவான சூழ்நிலையை எப்படி உருவாக்குவது என்பதை அவர் கற்றுக்கொண்டுவிட்டார். அந்த சூழ்நிலைகளை உருவாக்கிவிட்டு, அவை செயல்படுவதற்கு அனுமதித்தால், எல்லாம் நன்றாகவே நடக்கிறது. சரியான சூழ்நிலையை உருவாக்காமல், அதை சரியாக நானே நடத்துகிறேன் என்று முயற்சித்தால், உங்களுக்கு பித்துப்பிடித்துப்போகும். வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் இதுதான் உண்மை. உங்களுக்கு எதுவேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அது நடப்பதற்குத் தேவையான சூழ்நிலையை நீங்கள் உருவாக்கவேண்டும். இல்லையெனில் அது நடக்காது.
இப்போது ஆனந்தமாய் வாழவேண்டும், துயரத்தில் உழலக்கூடாது என்ற ஆசை உங்களுக்கு வந்திருக்கிறது. இதை உருவாக்கிக் கொள்ள எந்த மாதிரியான சூழ்நிலைகளை அமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை நீங்கள் புரிந்துகொண்டு, அப்படி அமைத்துக் கொள்ளவேண்டும். அப்போது அது நடக்கும். அவ்வாறு இல்லாமல், ஏதோ ஒன்றைக் கைவிடவேண்டும் அல்லது ஒதுக்கிவிட வேண்டும் என்று முயன்றால், இப்போது இருப்பதைவிட இன்னும் ஆழமான துயரத்தில் நீங்கள் உழல்வீர்கள். 'எப்படியேனும் நான் என்னை மாற்றிக்கொண்டே ஆகவேண்டும்' என்று தன்னை கட்டாயப்படுத்தி முயல்பவர்கள், ஆனால் அதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல் சாதாரணமாய் வாழ்பவர்களைவிட, அதிகமாக அவதியுறுவதைப் பார்த்திருக்கிறீர்களா? இப்படி இருக்கவேண்டும், அப்படி இருக்கவேண்டும் என்று தங்களுக்குத்தானே விதிகளை வகுத்துக்கொண்டு வாழ்பவர்கள், மற்றவர்களைவிட மிக அதிகமாக துன்பத்தில் உழல்கிறார்கள். அதற்குக் காரணம், திட்டவட்டமாய் வகுக்க முடியாதவற்றை வகுக்க நினைப்பதால்தான். என்னவேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அது நடப்பதற்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்குங்கள். அதுபோதும், வேண்டியது நடக்கும்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
02-அக்-201708:18:23 IST Report Abuse
Lion Drsekar வெண்தாடி மீது பல வழக்குகள், அப்படி இருந்தும் எப்படி எல்லாம் ஒருவன் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்தவனால் மட்டுமே இப்படி எல்லாம் அறிவுரை கூற முடியும், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
29-செப்-201702:30:25 IST Report Abuse
Dr.C.S.Rangarajan ஒரு முழு பக்கம் நிறையும் அளவில் சத்குரு அவர்கள் சோகத்தை களைந்து ஆனந்தமாய் வாழ்வது பற்றிய அறிவுரை, நெய்வேலிக்கு நிலக்கரியை எடுத்துச்சொல்வதுபோல் அமைந்திருக்கிறது. தங்களை உயர்ந்த பீடத்தில் வைத்துக்கொண்டு வழங்கும் அறிவுரைகள் நமக்கு தெரியாதவைகளா, அல்லது தெரிந்தவைகளை மறந்தநிலையில் உள்ளதாக அவர்களே கருதி தூசி தட்டி நம் நினைவுக்கு கொணரும் முயற்சியா? நான் ராமாயணத்தையும், மஹாபாரதத்தையும் கசடற கற்று காணப்போவது என்ன? ஆதார் கார்டை பெற்று, வங்கிகள், வருமானவரி துறை, ஓய்வூதியம், திருப்பதி லட்டு, என இன்னபிற துறைகளுடன் அதனை இணைப்பதிலேயே சோகத்தையும் ஆனந்தத்தையும் இணைத்துத்தரவல்ல அரசின் கீழ் நாம் காலத்தை 2019 வரை கடத்தியபின், மீண்டும் சோகமும் ஆனந்தமும் பின்னிப்பிணைந்து இரண்டறக்கலந்த வாழ்க்கை தான் மறக்கமுடியாத பாடங்களைத்தரவல்லது. சோகத்தை களைந்து, ஆனந்தத்தை பெற்றாலும், சோகமில்லா வாழ்க்கை இனிமைதரமுடியுமா? இனிமையே முதலும் முடிவுமாக அமைத்துவிடமுடியுமா? இளமை என்று ஒன்று இருந்தால் முதுமை வாராதுபோகுமா? நிரந்தரம் நம் சுதந்திரம் அல்லவே?
Rate this:
Share this comment
Cancel
A shanmugam - VELLORE,இந்தியா
16-செப்-201713:59:11 IST Report Abuse
A shanmugam சோகத்தை சமாளிக்க ஒரே வழி "உல்லாசம்தான்". எதை தெரியாத உங்களுக்கு ஒரு சாமியார் வேடம் கேடா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X