தெய்வம் நீ - அதை உணர்ந்து செயல்படு!| Dinamalar

தெய்வம் நீ - அதை உணர்ந்து செயல்படு!

Added : ஆக 03, 2017
தெய்வம் நீ - அதை உணர்ந்து செயல்படு!

யு. கே.ஜி., படிக்கும் சத்யாவிடம் ஆசிரியர் “உங்கப்பா என்ன வேலை செய்கின்றார்?” எனக் கேட்டுள்ளார். அவனுக்கு கேள்வியின் அர்த்தம் புரியவில்லை. கேள்வியை எளிதாக்க ஆசிரியர் “உங்கப்பா யாரு?” எனக் கேட்டு உள்ளார். அவனும் தெரிந்ததை கூறியுள்ளான். பள்ளி முடிந்து வீடு வந்த மகன் “அப்பா நீ யாருப்பா?” எனக் கேட்டான். இந்த கேள்வி கொஞ்சம் என்னை உலுக்கவே செய்தது. நான் என்பது என்ன? கண்ணாடியில் தெரியும் முகமா? செய்யும் வேலையா? அனைவரும் அழைக்கும் பெயரா? என்னுள் இருக்கும் அறிவா? நான் யார் என்றவுடன் எழும் ஐயமா? என்னிடம் உள்ள உடமைகளா? மகிழ்ச்சியா? உணர்ச்சியா? நான் யார்?!
ஒருமுறை புத்தரை பார்க்க வந்த ஒருவன் “சுவாமி! தாங்கள் யார்? கடவுளா? ஞானியா? வரம் பெற்ற முனிவரா? உங்களது முகத்தில் காணப்படும் ஒளி என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றதே” என்றான். அதற்கு புத்தர் “நான் வெறும் விழிப்புணர்ச்சி. விழிப்புணர்ச்சி மட்டும்தான். மற்றபடி நான் என்பதுகூட இல்லை” என்றார்.

நம்மை பற்றிய புரிதல் : நான் என்பது குறித்த விழிப்புணர்வே நம்மை அறிய உதவும். அதுவே நம்மைப் பற்றிய புரிதலை உருவாக்கும்.மாலை நேரத்தில் உல்லாசமாகக் கழுதை மீது சவாரி போனார் முல்லா. கழுதை எதையோ பார்த்து மிரண்டு வெறியோடு ஓடியது. அவரால் கழுதையை கட்டுப் படுத்த முடியவில்லை. எனவே கழுதையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அதன் போக்கிலே ஓட விட்டுவிட்டார். இதை கண்ட ஒருவன் “முல்லா! இவ்வளவு
அவசரமாக எங்கே போகிறீர்? எனக் கத்திக் கேட்டார். “நான் எங்கே போகிறேன் என்று என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்? கழுதையைக் கேளுங்கள்!” என்று பதிலுக்கு கத்தினார். இப்படித்தான் உள்ளம் போன போக்கில் செல்கின்றார்கள் பலரும். மனம் இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்று கொண்டு இருக்கின்றோம். நம்மை இயக்குவது எது? மனமா? இல்லை நாமா?
எது மாயை

“உள்ளத்து ஒருவனை
உள்ளுரு சோதியை
உள்ளம் விட்டு ஓரடி நீங்கா ஒருவனை
உள்ளமும் தானும் உடன் இருக்கினும்
உள்ளம் அவனை உருவறியாதே”
என்கிறது திருமந்திரம்.
தான் வேறு தன்னுள் இருக்கும் மனது வேறு என்று நினைக்கும் நினைப்பே மாயை. “செப்பிடு வித்தைக்காரனுடைய ஜாலங்கள் அவனை மயக்காது. பிறரை மயக்கும். அதுபோல யோக
மாயையானது பகவானை மறைக்காது. பிறரையே மயக்கும் என்று ஆதிசங்கரர் கூறுகிறார். மாயை மறைக்க மறைக்க மறைப் பொருள். மாயை மறைய வெளிப்படும் அப்பொருள்என்கிறது திருமந்திரம். எள்ளினுள் இருக்கும் எண்ணெய் போல், பாலினுள் வெண்ணெய்போல், விறகினுள் இருக்கும் தீயைப் போல் பிரம்மம் உள்ளத்திலே மறைந்திருக்கிறது. பிரம்மம் என்பது ஆன்மா
என்கிறது சாந்தோகிய உபநிடதம்.

உடைந்த கல் : “உடைந்த கல்லில் ஒன்று தெய்வம். ஒன்று கோவில். ஒன்று வாசல்.” என்று பாடினான் கண்ணதாசன். தெய்வமாய் நிற்பதா, கோவில் கோபுரமாய் ஆவதா, வாசல் படியாய் மாறுவதா என்று நம் வாழ்வு உருவாவது விதி என்பதில் இல்லை. உள் இருக்கும் நான் என்பதை நாம் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கின்றோம் என்பதை பொறுத்தே வாழ்க்கை அமையும்.
ஒருமுறை புத்தரிடம் ஒருவன் கேட்டான் “ஐயா! உங்களுக்கு கடவுளிடமிருந்து என்ன
கிடைத்தது?' என்று. புத்தர் சிரித்தப்படி “நான் எதையும் பெறவில்லை. இருந்தவற்றை இழந்தேன். அதன்மூலம் என்றும் இருத்தலைப் புரிந்து கொண்டேன்” என்றார்.“நீ உன்னுள் இருக்கும் இறை சாம்ராஜ்யத்தைத் தேடு. பின்னர் எல்லாம் உனக்குத் தாமாகவே வழங்கப்படும்” என்கின்றார் இயேசு கிறிஸ்து. நம் உள்ளே சுடர்விடும் அந்த மனதை அறிந்து கொள்ள நாம் நமக்கு நேர்மையாக இருத்தல் வேண்டும். நம்மிடம் நாம் பொய் சொல்லாத வரை, சாக்கு சொல்லாதவரை, காரணங்களைக் குழம்பிக் கொள் ளாதவரை, நாம் நம்மை அடையாளம் கண்டு கொள்ள முடியும். தவறுகளை ஒப்புக் கொள்ள வேண்டும். அதனை திருத்திக் கொள்தல் நம்மை அடையாளப்படுத்த உதவியாக இருக்கும்.பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் அறிவியல் மேதை ஐன்ஸ்டீனிடம் பொறுப்பாளர்கள்“இன்றிலிருந்து உங்கள் பணியை ஆரம்பிக்கின்றீர்கள். உங்கள்
சிறப்பான பணிக்கு எது அடிப்படைத் தேவை என்று சொல்லுங்கள். எதுவானாலும்
ஏற்பாடு செய்து தருகின்றோம்.” என்று கூறினார்கள். “என் பணி சிறக்க அடிப்படைத் தேவை ஒன்றே ஒன்றுதான்; அது தான் குப்பைக் கூடை. உடனே ஏற்பாடு செய்யுங்கள்” என்றார் ஐன்ஸ்டீன். வியந்து நின்றார்கள் பொறுப் பாளர்கள். “என் ஆய்வு வாழ்வில் எத்தனையோ தவறுகளை நான் செய்ய விருக்கின்றேன். அவற்றைக் கிழித்துத் துாக்கிப் போட ஓர் இடம் வேண்டாமா? என்றார் ஐன்ஸ்டீன். தவறுகளை திருத்திக் கொள்பவர்களே அதிகம் சாதிப்பவர்களாக இருக்கின்றார்கள்.

வள்ளுவன் சொன்னது

“யான்எனது என்னும்
செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்”
என்கின்றார் திருவள்ளுவர். நான், என்னுடையது என்ற மயக்கங்களை விட்டவனே தேவர்களுக்கும் மேலான வீட்டின்பத்தை அடைவான். இதனையே வேறு விதமாய் பாரதி கூறுகின்றான்.
''வானில் பறக்கின்ற
புள்ளெல்லாம் நான்
மண்ணில் திரியும்
விலங்கெல்லாம் நான்
கானில் வளரும் மரமெல்லாம் நான்
காற்றும் புனலும் கடலுமே நான்''
என்று பாடுகின்றார் பாரதி.
அனைத்திலும் நான் என்ற உணர்வு பெற்றவராய் ஆன்ம ஒளி நிரம்பியவராய் பாரதி திகழ்கின்றார். 'அதுவே நீ' என்ற உபநிட
சிந்தனையை 'தெய்வம் நீ' என்று ஆத்திச்சூடியில் பாடியவர் பாரதியார். வேதத்தையும் அதன் ஞானத்தை யும் பாரதியார் மதிக்கிறார்.
“மானிடச் சமுத்திரத்தில் நானென்று கூவு” எனும்
பாரதிதாசன் தன்னில் உலகையும், உலகில் தன்னையும் சமய
சார்பில்லாமல் பார்க்கின்றார். அதனால் இவ்வாறு பாடுகிறார்.
'எல்லோருக்குள்ளும் நான்'
'அனைத்திலும் நான்'
'மானிடச் சமுத்திரத்தில் நான்'
நானை விசாலப்
படுத்துவதிலும் ஆழப்படுத்துவதிலும் பாரதியும் பாரதிதாசனும் பரிணாமம் பெற்றவர்களாக இருக்கின்றார்கள்.

மனதின் நிலை : நாம் பார்க்கும், ஏற்கும், மறுக்கும், தடுக்கும், முடக்கும் எண்ணங்கள் எனும் மின்சாரம் கொண்டு மனம் எனும் இயந்திரம் செயல்பாடுகளை வெளிப்படுத்தும். செயல்பாடு களின் எதிர் விளைவுகளைக் கொண்டு எண்ணங்களையும் உருவாக்கிக் கொள்ளும். நம் செயலனைத்தும் நிர்ணயிக்கும் மனம்தான் 'நான்' என்ற நிலை.நம் மனம் படருகின்ற கொடி போன்று ஏதாவது ஒன்றைப் பற்றிப் பிடித்து கொண்டு நிற்கின்றது. அது எதைப் பற்றிப் பிடித்து கொண்டிருக்கின்றது என்பதைப் பொறுத்து, நம் வாழ்வின் நிறைவும் மகிழ்வும் அடங்கியிருக்கிறது.
நம் மனம் இரண்டு வகையான காரியங்களை பற்றிப் பிடித்துக் கொள்ள முடியும். ஒன்று
நமக்கு வெளியே இருக்கின்ற காரியங்களான பணம், பதவி, வசதி, ஆடம்பரம் போன்றவற்றை! இரண்டு, நமக்கு உள்ளே இருக்கின்ற காரியங்களான கடந்து போகின்ற தன்மை, இறைச்சாயல், வாழ்வின் அர்த்தம் முதலியவற்றை! வெளிக் காரியங்களை மனம் பிடித்து கொண்டு
இருந்தால், நாம் மகிழ்ச்சியாக இருக்கப் போவதில்லை. ஏனெனில் வெளிக்காரியங்கள் நிலையானவை அல்ல! முழுமையானவையுமல்ல. அவை மாறிக் கொண்டே இருக்கும்.

உள்ளே இருக்கும் காரியங்களைப் பற்றி பிடித்துக் கொண்டோமென்றால், அவை நிறைவை கொடுக்கும்.உன்னை அறிந்தால் 'நான்' என்ற நிலை தேக்கம் அல்ல. தொடர் வளர்ச்சி.
வளர்ச்சி என்பது முன்னோக்கியது மட்டுமல்ல. பின்னோக்கியதும் ஆகும். செயல்பாடுகளின்
விளைவுகளாய் உணர்வுகள் உருவாகின்றன. இந்த உணர்வுகளின்சுகம் தருவதாகவும் வலி
தருவதாகவும் நாம் கற்றுக் கொண்டவை நம் மனத்தின் செயலை மீண்டும் நிர்ணயிக்கின்றன.
நேற்றின் தாக்கம் அறிந்து கொள்வதும் நம்மை அறிதல் ஆகும். “உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்” என்கின்றார் கண்ணதாசன்.
நம்மை அறிவோம்; நாளை நமதென்போம். தன்னை அறிதல் மிகவும் கடினமான செயல் தான். இருப்பினும் நற் செயல்கள் மூலம் முயற்சிப்போம். நாம் யார் என்பதை அறிந்து கொள்வோம். ஒரு தெளிவின் விடியலில் இதுவரை கண்படாத வைரத் தருணங்கள் கைபடலாம். அதை வைத்து மகுடம் செய்வதா, விழுங்கி மரணமெய்துவதா என்பதும் 'நான்' என்பதன்
செயல்பாடுதான்! 'தெய்வம் நீ' என்று பாரதி கூறியபடி தெய்வம் நாம் என்பதை உணர்ந்து நல்ல செயல்கள் பல செய்து நம்மை உயர்த்தி கொண்டு நமக்கு நாமே அரசனாய் வாழ்வோம்!

-க.சரவணன்
தலைமையாசிரியர்
டாக்டர் டி. திருஞானம் துவக்கப் பள்ளி, மதுரை
99441 44263We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X