"குத்தாட்ட' அழகிகள் மீது போலீஸ் நடவடிக்கை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

"குத்தாட்ட' அழகிகள் மீது போலீஸ் நடவடிக்கை

Added : பிப் 07, 2011 | கருத்துகள் (1)

சேலம்: சேலத்தில், இருவேறு இடங்களில், "குத்தாட்டம்' நிகழ்ச்சி நடத்திய, 46 பேர் மீது, போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். இதற்கு மாவட்ட திரைப்பட நடன கலைஞர்கள் சங்கம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.சேலம், கொண்டலாம்பட்டியில் குத்தாட்ட நடன நிகழ்ச்சி நடந்தது. ஓமலூர், வெள்ளாளப்பட்டியில் நடந்த குத்தாட்டத்தில் பெரும் ரகளை ஏற்பட்டு, வாலிபர்களுக்கு இடையே கோஷ்டி மோதல் உண்டானது.குத்தாட்ட அழகிகள் மற்றும் இடைத்தரகர்களை கைது செய்ய சென்ற கொண்டலாம்பட்டி பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர், ஜீப் கண்ணாடி உடைக்கப்பட்டது. குத்தாட்ட அழகிகள், புரோக்கர்கள், ரகளையில் ஈடுபட்டவர்கள் என, 46 பேரை, போலீஸார் கைது செய்துள்ளனர்.இந்நிலையில்,சேலம் மாவட்ட திரைப்பட மற்றும் மேடை நடன கலைஞர்கள் சங்க கூட்டம், தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்தது.


கூட்டத்தில், இடைத்தரகர்கள் நடன கலைஞர்கள் போர்வையில், ஆபாச நடன நிகழ்ச்சியை, பல்வேறு இடங்களில் போலீஸாருக்கு தெரியாமல் நடத்தி வருகின்றனர். இடைப்பாடி, இளம்பிள்ளை, திருச்செங்கோடு, ஓமலூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள புரோக்கர்கள், நடன குழுவின் பெயரை தவறான முறையில் பயன்படுத்தி, அழகிகளை அழைத்து வந்து, ஆபாச நடன நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.இவ்வாறு ஆபாச நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் புரோக்கர்களை, மாவட்ட போலீஸார் கண்காணித்து, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் மாவட்ட திரைப்பட நடன கலைஞர்கள், 1,500 பேர் உள்ளனர். எங்கள் சங்கம் சார்பில், கோவில் விழாக்களில் நடன நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு, இரண்டு ஆண்டாக போராடி வருகிறோம். ஆனால், நடன குழுவின் பெயரில், புரோக்கர்கள் வெளி மாநிலங்களில் இருந்து அழகிகளை அழைத்து வந்து, கோவில் விழாக்களில் குத்தாட்ட நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். இதுபோன்ற புரோக்கர்கள் மீது, போலீஸார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.மேலும், குத்தாட்ட அழகிகள், புரோக்கர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்ததற்கு, சேலம் மாவட்ட திரைப்பட மற்றும் மேடை நடன கலைஞர்கள் சங்க கூட்டத்தில், பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X