உலகில் அனைவரும் ஆனந்தம் உணர வழி என்ன?| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சத்குருவின் ஆனந்த அலை

உலகில் அனைவரும் ஆனந்தம் உணர வழி என்ன?

Added : ஆக 03, 2017 | கருத்துகள் (19)
உலகில் அனைவரும் ஆனந்தம் உணர வழி என்ன?

சத்குரு இந்த உலகில் அனைவரும் ஆன்மீகத்தில் ஈடுபட்டு அன்பும் ஆனந்தமும் கொண்டவர்களாக மாறவேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
சத்குரு: அனைவரும் இன்னும் சிறப்பாக இருக்கவேண்டும், ஒருவருக்கொருவர் அன்பும் அக்கறையுமாக இருக்கவேண்டும், அதைநோக்கி இந்த உலகம் மாறவேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு மனிதருக்குமே இருக்கிறது. ஆனால், அதைத் தவறான இடத்திலிருந்து தொடங்க முயற்சிக்கின்றனர். தான் அன்பும் அக்கறையுமாக இருப்பதற்கு முன் மற்றவர் எல்லோரும் அன்பும் அக்கறையுமாக இருக்கவேண்டும் என்று நினைக்கின்றனர். ஒருவருக்கு அன்பும் அக்கறையும் எப்போதுவரும்?மகிழ்ச்சியாகவும் ஆனந்தமாகவும் இருக்கிற நேரங்களில் அனைவரும் இயல்பாகவே அன்புடனும், தாராள சிந்தையுடனும், அற்புதமான மனிதராகவும் தான் இருக்கிறீர்கள். இதை உங்களிடமே பலமுறை நீங்கள் கவனித்திருக்க முடியும். அதேநேரத்தில் நீங்கள் மகிழ்வற்ற தன்மையிலும், மனவேதனையிலும் இருக்கும்போது காரணமில்லாமலே கூட அனைவர் மீதும் எரிந்து விழுபவராக இருக்கிறீர்கள். எனவே நீங்கள் முதலில் மகிழ்ச்சியானவராகவும் ஆனந்தமானவராகவும் மாறவேண்டியது முக்கியம். உங்களுக்குள் முதலில் இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இல்லாமல் அடுத்தவர்மீது முயற்சி செய்து அன்புடன் இருக்க விரும்பினால் அப்படி அது நடக்காது. எனவே ஒவ்வொருவரும் தாங்கள் முதலில் ஆனந்தமும், களிப்பும் மிகுந்தவராக மாறுவதற்கான முயற்சியை மேற்கொள்ளவேண்டும். மக்கள் ஆனந்தமாக இருக்கும்போது அற்புதமனிதர்களாக இருக்கின்றனர். மக்கள் ஆனந்தமாக இருக்கும்போது தங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் இயல்பாகவே அன்பையும் ஆனந்தத்தையும் பொழிகின்றனர். எனவே மனிதர்களை உண்மையாகவே ஆனந்தம் கொண்டவர்களாகச் செய்வதுதான் என்னுடைய ஒட்டுமொத்த வேலையாக இருக்கின்றது. அதற்கு ஆன்மீக செயல்முறை அவசியமாக இருக்கிறது. ஆன்மீகம் என்றால் வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்வது என்று பொருளல்ல. ஆன்மீகம் என்றால் முழுஅளவில் நீங்கள் உயிரோட்டமாக இருப்பதுதான். வாழ்க்கையின் மையம்வரையில் உயிர்ப்புடன் இருப்பது. எனவே உங்கள் மகிழ்ச்சியும் உயிர்த்துடிப்பும் அதிகரிக்க ஆன்மீகத் தேடுதலும் உதவுகிறது. ஆன்மீகம் என்பது எப்போதும் தாகமும், தேடுதலும் உள்ளடக்கியது.
நீங்கள் முதலில் ஆனந்தமானவராக மாறும்போது உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலை ஆனந்தமானதாக மாறுகிறது. உங்களின் ஆனந்தமான சூழ்நிலையே அடுத்தவரின் மனத்திலும் ஒருதாக்கத்தை ஏற்படுத்த முடியும். இப்படி சமூகத்தில் ஒவ்வொருவரும் தங்களுக்குள் ஆனந்தமானவராக மாறும்போது ஒருவருக்கொருவர் அன்பும் அக்கறையுமாக இருப்பது இயல்பாகவே நிகழ்ந்துவிடும். அப்போது அந்த சமூகமே அற்புதமானதாக இருக்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X