படிக்க குழந்தை அடம் பிடிக்கிறதா?

Added : ஆக 04, 2017 | கருத்துகள் (1)
Advertisement
படிக்க குழந்தை அடம் பிடிக்கிறதா?

எல்.கே.ஜி முதல் மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளை வீட்டில் படிக்க வைக்கவும், வீட்டுப்பாடம் செய்ய வைக்கவும் அனுதினமும் அம்மாக்கள் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல! மாலையில் பள்ளி யிலிருந்து வீட்டுக்குத் திரும்பும் அநேக குழந்தைகள் அபார்ட்மெண்ட் பார்க்கில் விளையாடுவது, தொலைக்காட்சி பார்ப்பது, பக்கத்து வீட்டுக்குழந்தைகளோடு விளையாடுவது, சைக்கிள் ஓட்டுவது போன்ற வற்றில்தான் அதிக ஆர்வம் காட்டும். அந்த நேரத்தில்
குழந்தைகளை வீட்டுப் பாடங்கள் செய்ய வைக்க வேண்டுமானால், அந்தக் குட்டி மனங்களைக் கையாள்வதற்கு அம்மாக்களுக்குத் தனித்திறமை வேண்டும்.

அட்டவணைக்குள் அடக்காதீர்கள்! : பொதுவாக பல அம்மாக்கள் செய்யும் தவறு இதுதான். அவர்கள் மாலை நேரத்திலும் இரவிலும் செய்ய வேண்டிய வேலைகளுக்கு என ஒரு கால அட்டவணை வைத்திருப்பார்கள். அதில் குழந்தைக்கு எனச் சிறிது நேரத்தை ஒதுக்கியிருப்பார்கள். அந்த நேரத்துக்குள் குழந்தையைப் படிக்க வைக்கவும் வீட்டுப் பாடம் செய்ய வைக்கவும் முயற்சிப்பார்கள். காரணம், அவர்களுக்கு அடுத்து அடுத்து பல வேலைகள் காத்து இருக்கின்றன. 'டிவி'யில் 'சீரியல்' பார்க்க வேண்டும். இரவு டிபனுக்குச் சமையல் செய்ய வேண்டும். சமூக வலைதளங்களில்கருத்து பதிவிட வேண்டும்; விவாதிக்க வேண்டும். அவற்றுக்கெல்லாம் நேரம் வேண்டுமே! அதனால் குழந்தைக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் அவர்களைப் படிக்க வைக்க அவசரப்படுவார்கள். ஆனால் குழந்தைக்கு அது புரியாது. அம்மாவின் அவ
சரத்துக்கு அதனால் ஈடுகொடுக்க முடியாது. ஆமை வேகத்தில்தான் தன் பணியைச் செய்யும். அதட்டினால், மிரட்டினால் அடம் பிடிக்கும்.அம்மாக்கள் இதைப் பார்த்து “ஒரு மணி நேரமா கத்துறேன்…ஒண்ணுமே படிக்கலே… எழுதலே!” என்று புலம்புவார்கள். அவர்களின் கோபம் குழந்தைகளின் மீது பாயும். ஆனால், அந்தக் கோபத்தாலோ, கண்டிப்பினாலோ அல்லது அவர்கள் கொடுக்கும் தண்டனையாலோ குழந்தையை அவர்கள் கைக்குள் கொண்டுவர முடியாது. இதை அம்மாக்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

நேரத்தை அதிகப்படுத்துங்கள் : அம்மாக்களின் தனிப்பட்ட வேலைகளுக்கான நேரத்தைவிட வீட்டில் குழந்தையைக் கவனிக்க என அதிக நேரத்தை ஒதுக்க வேண்டியது முக்கியம். அப்படிச் செய்யும்போது, குறைந்த நேரத்துக்குள் வீட்டுப்பாடம் செய்து முடிக்க வேண்டும் என்ற கட்டாயம் காணாமல் போகும். அதுவே குழந்தைக்குப் பெரிய சுதந்திரம் கிடைத்ததுபோல் ஆகிவிடும். அந்த சுதந்திரம் கொடுக்கும் சந்தோஷத்தில் குழந்தை தான் விரும்பிய வேலைகளையும் செய்து கொள்ளும்; வீட்டுப் பாடங்களிலும் கவனத்தைச் செலுத்தும்.

கற்கும் சூழலை சுவையூட்டுங்கள் : குழந்தைகள்வீட்டுப்பாடம் செய்யும்போது, ஓர் ஆசிரியை போல் அம்மாக்கள் அருகில் அமர்ந்து கண்டிப்பு காட்டக் கூடாது. குழந்தைகளை அடித்தும் திட்டியும் கற்றுத் தரக் கூடாது. கற்கும் திறன் குழந்தைக்குக் குழந்தை வேறுபடும். விளையாட, படிக்க, சாப்பிட, உறங்க எனக் குழந்தையின் தேவைக்கு ஏற்ப நேரம் ஒதுக்கி, அந்தந்த நேரத்துக்குள் குழந்தை தானாகவே தன் வேலைகளை செய்துமுடிக்கும் வகையில் அம்மாக்கள் உடன்
இருந்து உதவ வேண்டும். இன்னும் சரியாகச் சொன்னால், உற்ற தோழியாக இருந்து உதவ வேண்டும். அதற்கு வீட்டில் கற்கும் சூழலில் சுவைகூட்ட வேண்டும். கற்பிக்கும் முறைகளில் புதுமைகளைப் புகுத்த வேண்டும். குழந்தைகள் படிப்பது 'ரைம்ஸாக' இருந்தாலும் சரி, எழுதுவது கணித எண்களாக இருந்தாலும் சரி, அவர்கள் புரிந்து படிக்க உதவ வேண்டும். அதற்கு வாழ்க்கைப் பாடங்களை குழந்தையின் படிப்புக்கு ஏற்றாற்போல் சொல்லித்தர அம்மாக்கள் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். உதாரணமாக, கணிதப் பாடத்தில் வரும் செவ்வகத்தைப் புரிய வைக்க புத்தகத்தில் குறிப்பிடப்படும் பொருட்களுக்குப் பதிலாக,குழந்தைகள் தினமும் பார்க்கும் அலைபேசி, மடிக் கணினி போன்றவற்றின்வடிவத்தைக் காண் பிக்கலாம். நிறங்களைப் புரிய வைக்க குழந்தைகள் விரும்பிப் பார்க்கும் இயற்கைக் காட்சிகளைக் காண்பிக்கலாம்.
வானம் - நீலம். இலை - பச்சை. செவ்வந்திப்பூ-சிவப்பு. விமானம் எப்படி பறக்கிறது என்பதைப் புரிய வைக்க சிட்டுக் குருவி பறப்பதை உதாரணமாக காட்டலாம்.கதைகள் சொல்வது, பாட்டுப் பாடுவது, நாட்டியம் ஆடுவது போன்ற உடல் அசைவுகள் மூலம் கற்றுத் தந்தால் குழந்தை இன்னும் அதிகம் சந்தோஷப்படும். அப்போது அதன் கற்கும் சூழலில் சுவாரஸ்யம் கூடிவிடும். அந்த சந்தோஷ மனநிலையில் படிக்கும் போது கடினமான பாடங்கள்கூட குழந்தையின் மனதில் நன்றாகப் பதிந்துவிடும்.

இப்படியும் பயன்படுத்தலாம் : குழந்தையைப் படிக்கச் சொல்லிவிட்டு, அம்மாக்கள் சீரியல் பார்த்துக் கொண்டிருந்தாலோ,அலைபேசியில் பேசிக்கொண்டுஇருந்தாலோ குழந்தையின் கவனம் சிதறுவதற்கு அதிக வாய்ப்புண்டு. “அம்மா மட்டும் 'டிவி' பார்க்கிறார். நம்மை மட்டும் படிக்கச் சொல்கிறாரே!” என எண்ணத் தோன்றும்.அப்போது குழந்தையும் தனக்கு ஒதுக்கப்பட்ட வேலையிலிருந்து தப்பிக்கப் பார்க்கும். “தண்ணி குடிக்கணும்” “விளையாடப் போறேன்” “உச்சா போகணும்” என்று குழந்தை சொல்வதெல்லாம் இந்த எண்ணத்தின் விளைவுதான்.
அப்போதுகூட அம்மாக்கள், 'நானும் கூட வருகிறேன்' என்று சொல்லி குழந்தையுடன் சிறிது நேரம் வெளியில் சென்று விட்டு திரும்பினால், குழந்தைக்கு வீட்டுப் பாடத்தின்
மீதிருந்த இறுக்கம் குறைந்துவிடும்; மீண்டும் அது புத்துணர்வுடன்படிக்க ஆரம்பிக்கும்.

குழந்தைக்குத் 'டிவி' பார்ப்பதில் அதிக விருப்பம் என்றால், அதில் இ-லேர்னிங் முறையில் கற்பிக்கலாம். ரைம்ஸ் சிடிக்கள், பாட்டு சிடிக்கள்,கதை சிடிக்கள், கற்றல் சிடிக்கள் இப்போது ஏராளமாக கிடைக்கின்றன. அவற்றைத் 'டிவி'யில் ஓடவிட்டு, குழந்தைக்கு விளக்கம் சொல்லலாம். இதனால் குழந்தை யின் கற்றல் திறமை கூடும்.

பொறுமை முக்கியம் : பெரியவர்களாலேயே தொடர்ந்து அரை மணிநேரத்துக்கு மேல், ஒரே இடத்தில் உட்கார்ந்து அதே கவனத்துடன் வேலை செய்யமுடியாது என்பது மருத்துவ
உண்மை. அப்படியானால், குழந்தை மட்டும் தொடர்ந்து ஒரே இடத்தில் பல மணி நேரம்
உட்கார்ந்து படிக்க வேண்டும் என அம்மாக்கள் எதிர்பார்ப்பதில் நியாயமில்லை அல்லவா?
குழந்தையின் வயதோடு 3ஐக் கூட்டுங்கள். அவ்வளவு நிமிடங்கள் தான் குழந்தையால் தொடர்ந்து உட்கார்ந்து படிக்க முடியும். அதற்குப் பிறகு அதன் கவனம் குறைந்து விடும். வேடிக்கை பார்க்கும் அல்லது வேறு வேலையை செய்யத் தொடங்கும். இது இயல்பு.
ஆனால் இது அம்மாக்களுக்குப் புரியாது. குழந்தை படிக்காமல் வேடிக்கை பார்க்கிறதே எனக் கோபம் வந்து கண்டிப்பார்கள். அது குழந்தையின் கவனத்தைத் திசை திருப்புமே தவிர, படிக்கவோ, எழுதவோ தூண்டாது. குழந்தை படிக்காமல் வேடிக்கை பார்க்கும்போது, சில நிமிடங்களுக்கு அதனுடன் பேச்சுக் கொடுத்துவிட்டு, மீண்டும் படிப்பதற்கோ எழுதுவதற்கோ சிறு ஆலோ
சனைகள் சொன்னால் குழந்தை அதை ஏற்றுக்கொள்ளும். இந்த மாதிரியான
வழிமுறைகளைப் பின்பற்ற அம்மாக்களுக்கு நிறைய பொறுமை வேண்டும். அந்தப் பொறுமை தான் படிக்க அடம் பிடிக்கும் குழந்தைகளை அம்மாக்களின் வழிக்கு கொண்டுவர உதவும்.

-டாக்டர் கு. கணேசன்
மருத்துவ இதழியலாளர்
ராஜபாளையம்
gganesan95@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
04-ஆக-201711:44:18 IST Report Abuse
Nallavan Nallavan எளிய, ஆனால் பயனுள்ள அறிவுரைகள் ..... கட்டுரையாசிரியருக்கும், வெளியிட்ட தினமலருக்கு நன்றி ..... குழந்தை வளர்ப்பில் பயன்தரும் இது போன்ற கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X