அஜித்தை இயக்க ஆசை : சவுந்தர்யாவின் 'டார்கெட்'| Dinamalar

அஜித்தை இயக்க ஆசை : சவுந்தர்யாவின் 'டார்கெட்'

Added : ஆக 06, 2017 | கருத்துகள் (1)
அஜித்தை இயக்க ஆசை : சவுந்தர்யாவின் 'டார்கெட்'

ரஜினி மகள் சவுந்தர்யா 'கோச்சடையான்' படத்தில் தந்தையையே இயக்கியவர். தற்போது தனுஷ், அமலாபால் நடிக்கும் 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் இரண்டாம் பாகம் ('வி.ஐ.பி. 2') இயக்கிய குஷியில் தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறந்த தருணம்...
* வி.ஐ.பி. 2 எப்படி வந்துள்ளது? சிறப்பாக செய்திருக்கிறேன். படம் வெளியீட்டை ஆவலோடு எதிர்நோக்கி உள்ளேன். முக்கிய 'மெசேஜ்' உண்டு. அந்த லுானா வண்டி, ஹாரிபாட்டர் அனைத்தும் இதிலும் உண்டு.
* தனுஷை இயக்கிய அனுபவம்? நல்ல நடிகர். தொழில் பக்தி உள்ளவர். கதை, வசனம் எழுதி படத்தையும் தயாரித்துள்ளார். கதை விவாதத்தில் எனக்கும், அவருக்கும் சில விவாதம் நடந்தது. கதை ஆசிரியராக எனக்கு விளக்கமளித்தார். அவருடன் தொடர்ந்து பல படங்களில் பணியாற்ற விருப்பம்.
* ஷான் ரோல்டன் இசை பற்றி... ஷான் உடன் வேலை பார்த்த சில நாட்களிலேயே இசை பற்றி ஓரளவு தெரிந்து கொண்டேன். இப்படத்தின் மூலம் ஷான் வேற லெவலுக்கு செல்வாருனு நம்புகிறேன். ஷான் - தனுஷ் நல்ல 'காம்பினேஷன்'. 'வேலையில்லா பட்டதாரி...' என்ற அனிருத் 'தீம் சாங்' இப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
* மீண்டும் கஜோல், எப்படி நடந்தது... கதை எழுதும் போதே 'வசுந்தரா பரமேஸ்வரன்' என்ற ரோலுக்கு கஜோல் தான் நடிக்கணும் என முடிவு செய்தேன். மும்பையில் அவரிடம் கதை கூறினேன். மீண்டும் தமிழில் நடிக்கிறார். இரண்டு 'டயலாக்' மட்டும் தான் என கூறினோம், ஆனால் நான்கு, ஐந்து 'டயலாக்' பேசும்படி ஆனது, அதை "பொய் சொல்லி அழைத்து வந்து விட்டோம்," என தமாஷாக கூறியுள்ளார். துணிச்சலான பெண் தொழிலதிபர் ரோலில் கலக்கியிருக்கிறார்.
* பெண் இயக்குனர்களுக்கான வாய்ப்பு... அதிக பெண் இயக்குனர்கள் இத்துறைக்குள் வர வேண்டும். என் 'டீமில்' அனைத்து துறையிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளேன்.
* பெற்றோர் 'சப்போர்ட்' உள்ளதா? அவர்கள் இல்லாம இயக்குனராகியிருக்கவே முடியாது. மகன் வேத், அக்கா குழந்தைகள் யாத்ரா, லிங்கா ஆகியோரை அம்மா தான் கவனித்துக்கொள்வார். பொறுமையின் சிகரம் அவர்.
* அரசியலுக்கு ரஜினி வரவேண்டும் என்கிறார்களே? அரசியல் பற்றி பேச வேண்டாம் என நினைத்தேன். எதை எந்த நேரத்தில் செய்ய வேண்டுமோ, அதை என் அப்பா சரியாக செய்வார். எந்த முடிவு எடுத்தாலும் துணை நிற்போம்.
* 'கோச்சடையான்' பற்றி... நன்றாக போகவில்லை என்ற வருத்தம் இருந்தது. அந்த டெக்னாலஜி யாருக்கும் அந்த சமயத்தில் புரியவில்லை. அப்பா 'கிராபிக்ஸ்' இல்லாம நடித்திருக்கலாம் என ரசிகர்கள் விரும்பினர். அனிமேஷனை யாரும் விரும்பவில்லை. அதுதான் பெரிய குறை.
* அப்பா, தனுஷ் அடுத்து யாரை வைத்து படம் இயக்க ஆசை? அஜித்தை வைத்து இயக்க ஆசை உள்ளது.
* ஒரு இயக்குனராக இன்னும் யாரிடம் கற்றுக்கொள்ள ஆசை? ராஜமவுலி, ஷங்கர்.
* சிறந்த அம்மா, சிறந்த இயக்குனர் எதை விரும்புவீர்கள்? என் மகன் வளர்ந்து, என் அம்மா நல்ல இயக்குனர் என்று கூறும் அளவிற்கு, சிறந்த அம்மாவாக, சிறந்த இயக்குனராக வேண்டும் என்பதே என் ஆசை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X