பெண் வேலைக்கு செல்வது அவசியமா| Dinamalar

பெண் வேலைக்கு செல்வது அவசியமா

Added : ஆக 08, 2017 | கருத்துகள் (2)
தாய்மை,Motherhood, அம்மா, Mother, இறைவன்,God, அன்பின் ஊற்று அம்மா, Proud of love Mother,  பெண்கள்,  women, வேலை, work, வாழ்க்கை, life,உழைப்பு , Labor

'அன்னையின் அன்பின் முன்னே
அலைகடலும் தோற்றுப் போகும்'

தாய்மை போற்றப்படவேண்டிய ஒன்று. நம் சுக, துக்க, வலி, வேதனை, கோப தாபம் போன்ற அனைத்து வேளைகளிலும் உச்சரிப்பது 'அம்மா' என்ற வார்த்தையைத் தான். தாய்மை என்பது மனித இனத்திற்கு மட்டுமல்ல. அனைத்து உயிரினங்களிலும் உள்ள பண்பு. தன் குஞ்சுப் பறவைகளுக்கு உணவை அலகால் ஊட்டி பசியாற்றும் பறவை இனம், உருவில் மிகப்பெரிய யானை முதல் பூனை வரை தாய்ப்பாசம் என்பது ஒன்று தான். முட்டையிலிருந்து வெளிவந்த கோழிக் குஞ்சை எடுக்கச் சென்றால் கோபமாக சிறகுகளை விரித்து கொத்தி தனது எதிர்ப்பை வளர்த்தவர்களிடம் கூட காட்டும் தாய்க் கோழி.

அன்பின் ஊற்று அம்மா : உலகத்தில் எல்லா மொழிகளிலும் மிக அழகான சொல் அம்மாவை குறிக்கும் சொல் தான். இவ்வுலகை படைத்த இறைவன், எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் இயங்க முடியாததால் தான் தாயை படைத்தான். தாயிடம் அன்பு செய்யும் ஆற்றல் இயல் பாகவே அமைந்துள்ளது. தாய் என்பவள் யார்.. தன்னையே தருபவள் தாய். அவளின் ரத்தம் தான் நம் ஒவ்வொருவரிடமும் ஓடிக்கொண்டிருக்கிறது. அம்மா என்ற மூன்றெழுத்திற்கு அதிசய சக்தி உண்டு. நாம் மனம் கலங்கி நிற்கின்ற வேளையிலும் மனதின் பாரத்தை குறைத்து நல்ல
ஆலோசனை வழங்கி கோண லானவற்றை செம்மைப்படுத்தி வாழ்க்கையின் சறுக்கல்களில் நாம் சறுக்கி விழாமல் நம்மை நிலைநிறுத்த உதவுபவர் தாய். தன் காதலிக்காக தாயின்
இதயத்தை பரிசாக கொண்டு செல்லும் மகன், கால் தடுக்கி விழும் போது கூட 'மகனே! பார்த்துப் போப்பா' என்று தாயின் இதயம் கூறியதாக கதை கூறுவார்கள். கதையில் மட்டுமல்ல
உண்மையும் அது தான். பிள்ளைகள் வளர வளர தனது தேவைகளைக் குறைத்து அவர்
களுக்குத் தேவையானவற்றை நிறைவேற்றுவதையே வாழ்வின் லட்சியமாக கொண்டவள் தாய். தனது வாழ்வையே அர்ப்பணித்து வாழ்பவள் தாய்.

குழந்தையின் முதல் ஆசான் : ஒவ்வொரு குழந்தையின் முதல் ஆசிரியர் தாய் தான். குழந்தையின் பிறப்பின் போது ஏற்படும் அத்தனை வலிகளையும், குழந்தையின் முகம் பார்த்து
மறப்பது தாயின் இயல்பு.

'தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை'

என்ற பாடல் வரிகள் தாயின் பெருமையை பறைசாற்றுவதாக உள்ளது. கடவுளின் படைப்பில் சிறந்த உன்னத படைப்பு தாய் தான். நடைபழகும் குழந்தையின் முதல் நடைவண்டி தாயின் விரல்கள் தான். பேசப் பழகும் குழந்தைக்கு புரியும் ஒரே மொழி தன் தாயின் மொழி. அதுவே அதன் தாய்மொழியாகிறது. குழந்தையின் நடை, உடை, ஆசான் தாய் தான். இடி, மின்னல், மழையின் போது தாயின் முந்தானையில் ஓடி ஒளியும் குழந்தைக்கு தெரிந்து
இருக்கிறது தாய் என்பவள் அதையும் விட பெரிய சக்தி என்று. பிறந்த வீட்டில் கரப்பான் பூச்சி, பல்லி இவற்றைக் கண்டு பயந்து அலறி ஊரைக்கூட்டும் பெண் பிள்ளைகள், தாயானவுடன் தன் பிள்ளைக்கு அருகில் பாம்பு வந்தா லும் தயங்காமல் துணிச்சலுடன் அதை கொல்ல முயல்வாள்.
பால்குடி குழந்தைகளுக்காக தன் உணவில் பத்தியம் கடைபிடித்து துாக்கம் மறந்து, முடி கொட்டி, பற்சிதைந்து புற அழகியல் மாறுபாடு கண்டாலும் தாய்மையை பெரும் பேறாக போற்றுவது தான் பெண்ணின் சிறப்பு.

சுமைதாங்கியானவள் தாய் : பத்துமாதம் தன் வயிற்றில் சுமந்த தாய், தன் பிள்ளையை ஈன்றெடுத்த பின்பும், அக் குழந்தையை இறக்கி விடுவதற்கு மனமின்றி எத்தகைய சூழலிலும் தன் இடுப்பில் மாறி மாறி வைத்தும், இடது தோளிலும், வலது தோளிலும் மாற்றி மாற்றி கீழே இறக்கி விடாமல் இருப்பாள். உணவு நன்றாக இருந்தால் இன்னும் கொஞ்சம் அதிகமாக
சாப்பிடுவோம். ஆனால் கொஞ்சமாக இருந்தால் தனக்கு பசியில்லை என்று சாப்பிட்டு விட்டேன் என்றும் மழுப்புவது தாய் தான். அனைவருக்கும் உணவளித்து அதில் மகிழ்ந்துபிள்ளைகள் பசியாற்றுவதைகண்டு தன் பசிமறப்பவள் தாய்.

வேலைக்கு செல்வது : முன்பெல்லாம் ஒரு வீட்டில் நான்கு அல்லது ஐந்து குழந்தைகள்
இருப்பார்கள். இவர்கள் சண்டையிடுவது, விளையாடுவது,கோபித்துக் கொள்வது எல்லாம் இவர்களுக்குள் தான். இத்தகைய சண்டையோ, கோபமோ இவர்களிடம் விரிசலையின்றி
நெருக்கத்தை தான் ஏற்படுத்தியது. தாயானவள் தன் முழு உழைப்பையும் கொடுத்து குழந்தைகளின் நலனை, குடும்ப நலனை கவனிக்கும் பொறுப்பு ஏற்பாள். இதில் குடும்பநலனுடன் சமுதாய நலனும் அடங்கும். ஆனால் இன்றைய சூழல் பெரிய கேள்விக்குறியை நம்முன் வைக்கிறது.

'ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவில் ஓங்கி இவ்வையம் திளைக்கும்'

என்ற வரிகளின் உண்மைத்தன்மையை ஆராயாமல் மறந்ததால், 'என் தந்தை விவசாயி' என்று சொல் வெட்கப்பட்டது போலவே இன்று 'என் தாய் வேலைக்குசெல்லாமல் வீட்டில்
இருக்கிறாள்', என்று சொல்வது அவமானமாகி விட்டது.பெண்கள் வேலைக்கு
செல்வது என்பது குடும்பத்தின் தேவையை பொறுத்தது. குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும் என்பதில் ஐயமில்லை. என்றாலும் அதன் அடித்தளம் ஆட்டம் காணக்கூடாது. வேலைக்கு செல்வதால் தன் குழந்தையைச் சரிவர கவனிக்க முடியவில்லை என்றால் குழந்தை வளர்ந்த பின் செல்லலாம். நாம் எவ்வளவு சம்பாதித்தாலும் நமக்கு போதாது என்ற மனநிலை தான் தற்போது அனைவரிடமும் குடி கொண்டிருக்கிறது.'நான் வேலைக்கு சென்று
சம்பாதிப்பது எனது குழந்தைகளின் நலனுக்குத் தான்' என்று பல பெண்கள் கூறுவார்கள். ஆனால் அக் குழந்தைகள் நன்றாக இருக்கிறார்களா என்று அறிந்து கொள்ளக்கூட நேரம் கிடைப்பதில்லை. இன்றைய சமுதாயத்தில் நிலவும் பலவிரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு காரணம் பெற்றோரின் கவனமின்மை மற்றும் நேரமின்மையே.ஒரு பெண் கல்வி கற்றால் ஒரு குடும்பம் சிறக்கும்.அவ்வாறு கற்ற பெண்கள் தங்கள் குழந்தைகளை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும் ஏணிப்படிகளாக இருக்க வேண்டும்.

எது சாதனை : மதிப்பெண்களில் சாதனை, விளையாட்டில் சாதனை, உலக சாதனை இப்படி தின சரிகளில் வருபவர்கள் மட்டும் சாதனைப் பெண்கள் அல்ல. தன் குழந்தைகளை ஒழுக்கமாக வளர்த்து, சிறந்த கல்வியை அளித்து, சமுதாயத்தில் தலைநிமிர்ந்து வாழச் செய்த
ஒவ்வொரு தாயும் சாதனையாளர்கள் தான். தன் பிள்ளையின் படிப்பிற் காக, வேலைக்காக, திருமணத்திற்காக இப்படி ஒவ்வொரு நிலையிலும் சொந்த பந்தங்களுடன் நட்பு வட்டங்களுடன் ஒருமித்து, கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் குடும்பத்திற்காக பொறுமையுடன், புன்னகையுடன் தனது விருப்பு வெறுப்புகளையும், மனவெழுச்சி களையும் கட்டுப்படுத்தி குடும்பத்தின் பெருமையை காக்கும் தாய் சாதனைப் பெண்.தனக்கு கிடைக்காத, தான் அனுபவிக்காத, தான் ஆசைப்பட்ட இப்படி அனைத்தையும் தன் பிள்ளைக்கு அளித்து அகமகிழ்பவள் தாய். சிறுவயதில் மருந்து கசக்கும் என குடிக்க மறுக்கும் குழந்தையை போக்கு காட்டி புகட்டும் தாய், வளர்ந்த பின்பு வாழ்க்கை பாடத்தையும், கசப்பான அனுபவங்களையும் எதிர் கொள்ள தன் குழந்தையை தயாராக்குகிறாள்.

தியாக உருவம் தாய் : 'தான் பெற்ற பிள்ளைகளுக்காக தாய் செய்யும் தியாகத்தை இன்னதென்று எழுத்தால் எழுத முடியாது' என்றார் தமிழ் தென்றல் திரு.வி.க.,தாய்ப்பாலோடு மொழிப்பாலும், அறிவுப்பாலும், வீரப்பாலும் சேர்த்து ஊட்டி மகிழ்பவள் தாய். தாய்மை என்னும் ஆல
மரத்தின் கிளைகள் பிள்ளைகள். வார்த்தை ஜாலத்திற்குள் அடங்காதஉறவு தாய்மை. இப்படி தாய்மையை, பெண்மையை பற்றி பல யுகங்கள் பேசினாலும் இணையாக எதையும் சொல்ல முடியாது.

மு.சுலைகாபானு
ஆசிரியை, மதுரை
sulaigabanu@gmail.com

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X