எதிர்கால எரி பொருள்... உயிரி எரிபொருளே! இன்று(ஆக. 10) உலக உயிரி எரிபொருள் தினம்| Dinamalar

எதிர்கால எரி பொருள்... உயிரி எரிபொருளே! இன்று(ஆக. 10) உலக உயிரி எரிபொருள் தினம்

Added : ஆக 10, 2017
எதிர்கால எரி பொருள், Future fuels, உயிரி எரி பொருள், Biofuel ,  உலக உயிரி எரிபொருள் தினம், world bio fuel day,ஆகஸ்ட் 10, august 10, ஜெர்மனி விஞ்ஞானி, German scientist, ரூடல்வ் டீசல், Roaldav Diesel,கடலை எண்ணெய்,Groundnut oil, தாவர எண்ணெய், vegetable oil,டீசல் ,diesel,இந்தியா, India, தேசிய மாநாடு , national conference, மத்திய பெட்ரோலியம் இயற்கை எரிவாயு, central petroleum natural gas, அமைச்சர் தர்மேந்திர பிரதான்,Minister Dharmendra Pradhan,  உயிரி எரிபொருள் வணிகம்,Biofuel Business,பிரதமர் நரேந்திர மோடி, Prime Minister Narendra Modi, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், Indian Oil Corporation,  பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், Bharat Petroleum Corporation, இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் , Hindustan Petroleum Corporation

ஒவ்வொரு ஆண்டும் ஆக. 10ம் தேதி உலக உயிரி எரிபொருள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஜெர்மனி விஞ்ஞானியான ரூடல்வ் டீசல் 1983 ஆக.10ம் தேதி டீசல் இயந்திரத்தில் கடலை
எண்ணெய்யை பயன்படுத்தி வெற்றிகரமாக இயக்கினார். அதை நினைவுபடுத்த இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. வரும் நுாற்றாண்டில் இயந்திர எரிபொருளாக பெட்ரோலுக்கு பதில் தாவர எண்ணெய் பயன்படுத்தப்படும் என டீசல் முன்கூட்டியே கணித்தார்.

உயிரி எரிபொருள் வணிகம்

டில்லியில் 2016ல் உலக உயிரி எரிபொருள் நாளை முன்னிட்டு இந்தியாவில் ஆற்றல் பாதுகாப்பு உயிரி எரிபொருள் பொருளாதாரத்தை உருவாக்குதல் என்ற தலைப்பில் தேசிய மாநாடு நடந்தது. இதில் பங்கேற்ற மத்திய பெட்ரோலியம் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான், ''இந்தியாவில் தற்போதைய உயிரி எரிபொருள் வணிகம் 6,500 கோடி ரூபாயிலிருந்து ஒரு லட்சம் கோடி ரூபாயாக உயரும்,'' என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2022 ஆண்டில் சுத்திகரிக்கப்படாத பெட்ரோலிய இறக்குமதியை பத்து சதவீதம் குறைக்க வேண்டும் என்ற இலக்கை கொண்டுள்ளது. இது எப்படி சாத்தியம் என கேள்வி எழலாம். இது விரிவாக்கப்பட்ட உயிரி எரிபொருள் பயன்பாட்டில் தான் உள்ளது. உயிரி எரிபொருளை மாற்று எரிபொருளாக பயன்படுத்துவதன் மூலமே இதை சாத்தியமாக்கலாம்.

அதிகரிக்கும் தேவை

இந்தியாவின் எரிபொருள் தேவை என்பது மிக மிக வேகமாக அதிகரித்து வருகிறது. உலகளவில் ஆற்றலை அதிகமாக பயன்படுத்தும் நாடுகளுள் இந்தியா மூன்றாவது பெரிய நாடாக உருவாகி வருகிறது.பெட்ரோலிய அமைச்சகம் உயிரி எரிபொருளுடன் எத்தனால் கலந்து பயன்படுத்துதல் மற்றும் உயிரி கழிவுகளை மறு சுழற்சி செய்து ஆற்றலாக மாற்றி பயன்படுத்துதல் போன்ற திட்டப்பணிகளை தீவிர கவனம் கொடுத்து செய்து வருகிறது.

பெட்ரோலிய எண்ணெய் தொடர்புடைய நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகியவை இந்தியாவில் எத்தனால் தயாரிக்க பத்து இடங்களில் 5,000 கோடி ரூபாய் முதலீட்டில் 2 ஜி
எத்தனால் பிளான்ட்ஸ் நிர்மானித்து முதலீடு செய்யும் வாய்ப்பு உள்ளதாக மதிப்பீடு செய்துள்ளன.

சில தனியார் முதலீட்டாளர்களும் 5,000 கோடி ரூபாயை உயிரி எரிபொருள் துறையில்
முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளன. பெட்ரோலிய அமைச்சகம் இந்தாண்டில் 4 சதவீத இதர எரிபொருட்களுடன் எத்தனாலை கலந்து பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தி வருகிறது.

இந்தியாவில் உயிரி எரி பொருளுடன் கலந்து பயன்படுத்தும் முன்னோடி திட்டமானது 10.8.15 ல் பரிசோதனையாக ஐந்து நகரங்களில் துவக்கப்பட்டு தற்போது ஆறு மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளது.இந்தியாவில் உயிரி எரிபொருள் கலந்து, டீசலானது 2,200 சில்லரை வணிக மையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வேறு வழி முறைகளிலும் எத்தனால்
தயாரிக்கும் முறைகளுக்கு இந்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

உயிரி எரிபொருள் திட்டம்

சுற்றுச்சூழல் மாசுகளை வெகுவாக குறைக்க கூடியது. எரிபொருள் தேவைக்கு இறக்குமதியை நம்பி இருக்கும் நிலையை மாற்றி, இந்தியாவிற்கு தற்சார்பு தன்மையை அளித்து அன்னிய
செலாவணி கையிருப்பினை உயர்த்தும்.

மாற்று எரிபொருளுக்கான அவசிய தேவை

எரிபொருள் என்பது ஆற்றலை இருப்பு நிலையில் சேமித்து வைத்து பின், பல்வேறு பணிகளை செய்ய தேவைப்படும் இயக்க ஆற்றலாகவும், வெப்ப ஆற்றலாகவும் மாற்ற பயன்படும் ஒரு பொருள். எரிபொருள் என்பது நமக்கு காலை முதல் நள்ளிரவு வரை பயன்பட்டாலும் கூட, வெப்ப ஆற்றலைப் பெறவும் மின் உற்பத்திக்காகவும் வாகனங்களை இயக்கவும் மட்டுமே அது முக்கியமாக பயன்படுகிறது.எரிபொருள் என்பது பெரிய அளவில் மின் உற்பத்திக்காக மட்டுமே உலகளவில் பயன்படுகிறது. அறுபது சதவீதத்திற்கு மேலாக மின் உற்பத்தி பூமிக்கு அடியில் உள்ள படிம எண்ணெய்யிலிருந்து தான் கிடைக்கிறது.

உயிரி எரிபொருள் என்றால் என்ன

பூமிக்கு அடியில் உள்ள படிம எண்ணெய் என்பது கடந்த காலங்களில் இறந்த விலங்குகளின் உடல்கள், பல ஆண்டு காலமாக மக்கி அவற்றிலிருந்து சுரந்து வெளியேறிய திரவத்தை
குறிப்பதாகும். உயிரி எரிபொருள் என்பது பூமிக்கு மேல் உயிர் வாழும் தாவரங்கள் மற்றும் விலங்குகளிடமுள்ள ஹைட்ரோ கார்பன் மூலக்கூறிலிருந்து கிடைப்பதாகும்.

நாம் பூமிக்கு அடியில் புதைந்து இருந்த படிம எண்ணெய்யை காலங்காலமாக பயன்படுத்தி விட்டோம். இனி மாற்று முறை எரிசக்தி எண்ணெய் குறித்து கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.உண்மையில் ெஹன்றி போர்டு, எத்தனால் என்ற எரி
எண்ணெய்யை பயன்படுத்தி இயக்கும் வாகனங் களை தான் வடிவமைத்தார். டீசல் இயந்திரங்களில் பெட்ரோலை அடிப்படை யாக கொண்ட டீசல் எண்ணெய்யை பயன்படுத்துவதற்கு முன்னரே மக்கள் டீசல் இயந்திரங்களில் தாவர எண்ணெய்யை வெற்றிகரமாக பயன்படுத்தி உள்ளனர்.

டீசல் இயந்திரத்தின் கண்டுபிடிப்பாளர் ரூடல்ப் டீசல், இயந்திரங்களை தாவர எண்ணெய் கொண்டு இயக்குவதற்காக தான் வடிவமைத்தார். ஆனால் அப்போது, அதிக தேவையில்லாத பெட்ரோலிய எண்ணெயானது அதிக தேவையுற்ற தாவர எண்ணெய்யை காட்டிலும் மிக
வேகமாக எரிந்து நல்ல பயன் தந்ததால் பெட்ரோலிய பயன்பாடு நடைமுறைக்கு வந்து விட்டது.
தற்போது காலஓட்டத்தில் அதிக பயன்பாடு மற்றும் குறைந்த கை இருப்பு காரணமாக, பெட்ரோல் மதிப்பு உயர்ந்து மிக அதிக விலையுள்ள பொருளாக மாறி விட்டது.

இதனால் உயிரி எரிபொருளுக்கான தேவை அதிகரித்து விட்டது. 1970 களில் நிலவிய எரிபொருள் தட்டுப்பாட்டினால், உயிரி எரிபொருள் குறித்த எண்ணம் மக்கள் மத்தியில் பிரபலமானது. 1990 களில் சுற்றுச்சூழல் மிக அதிகளவில் மாசுபாடு அடைவது உணரப்பட்டதாலும், பொருளாதார சிக்கன நடவடிக்கைக்காகவும் உயிரி எரி பொருள் குறித்த எண்ணம் மக்களிடம் மென்மேலும் அதிகரித்து வருகிறது.

தயாரித்தல்

கிழங்கு மற்றும் கரும்பு பயிரிடப்பட்டு அவற்றிலிருந்து கிடைக்கும் மாவு மற்றும் சாறினை நொதிக்க வைத்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது. இயற்கையாக விளையும் சில தாவரங்களிலிருந்து அதிக ஒட்டும் தன்மை உள்ள எண்ணெய் எடுக்கப்பட்டு அதனை வெப்பப்படுத்தி அதன் அடர்வை குறைத்து நேரடியாக டீசல் இயந்திரங்களில் பயன்படுத்தலாம். உயிரி எரிபொருளிலுள்ள எரிசக்தி யானது பெட்ரோலில் உள்ள 90 சதவீத எரிசக்திக்கு நிகராக உள்ளது.

எத்தனாலில் உள்ள எரிசக்தியானது 50 சதவீத பெட்ரோலிய வாயுவுக்கு நிகரான எரிசக்தியை அளிக்கிறது. பெரும்பாலான உயிரி எரி பொருட்கள் நிலக்கரிக்கு நிகராக எரிசக்தியை கொண்டு இருந்தாலும் கூட அவை எரிக்கப்படும் போது குறைவான கரியமில வாயுவை வெளியேற்றி நம் சுற்றுச்சூழலை பாதுகாக்கின்றன.

முதல் தலைமுறை உயிரி

எரிபொருள் என்பது நம் உணவுபொருட்களிலிருந்து நேரடியாக பெறப்படுவது. உயிரி எரிபொருள் என்பது அடிப்படையில் மாவு, சர்க்கரை, மிருக கொழுப்பு மற்றும் தாவர எண்ணெயிலிருந்து கிடைக்கிறது.மனிதன் உண்ணக்கூடிய உணவு பொருட்கள் நேரடியாக எரி பொருளாக முதல் தலைமுறையில் பயன்படுத்தப்பட்டன. மனிதன் பயன்படுத்திய பின் கிடைக்கும் உணவு கழிவுகளிலிருந்து உயிரி எரிபொருள் தயாரிக்கப்பட்டால் அது இரண்டாம் தலைமுறை சேர்ந்தது. மனிதர்களின் பயன்பாட்டில் இல்லாத பாசி போன்ற சில தாவர இனங்களிலிருந்து உயிரி எரி பொருள் பிரித்து எடுத்து பயன்படுத்துவது மூன்றாம் தலைமுறை எரிபொருள்.

உயிரி எரிபொருளும், சுற்றுப்புறச்சூழலும்

உயிரி எரிபொருட்களை எரிக்கும் போது பெட்ரோலிய எரிபொருட்களை விட குறைந்த அளவே மாசுக்களை வெளியேற்று கின்றன. ஆனால் உயிரி எரி பொருளை தயாரிக்க 84 மடங்கு நீர் அதிகமாக தேவைப்படுகிறது. அதிக நீர் தேவையில்லாத தாவர வகைகளை கண்டறிந்து பயன்
படுத்தலாம். உயிரி எரிபொருளில் கந்தகம் இல்லாததால் எரியும் போது நச்சு பொருட்களை வெளியேற்றாது.

இந்தியாவில் எரிபொருள் தேவையை முன்னிட்டு வாகனங்களின் பயன்பாட்டிற்கு மாற்று எரிபொருளான உயிரி எரிபொருள் கவர்ச்சிகரமானதாகவும், பாதுகாப்பானதாகவும் தோன்றுகிறது. உயிரி எரி பொருள் தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருட்கள் மிக குறைந்த விலையில் சேகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

மத்திய அரசானது உயிரி எரி பொருள் தயாரிப்பை அதிகரிக்க பல சலுகைகளை அறிவித்துள்ளது. இருப்பினும் தயாரிப்பு செயல் திட்டங்கள் எதிர்பார்த்த அளவிற்கு இன்றளவிலும் நடைமுறைக்கு வரவில்லை. காலமும் தேவையும் தான் போதிய விழிப்புணர்வை அளிக்க வேண்டும்!

-அ.கதலி நரசிங்கப் பெருமாள்,

விரிவுரையாளர்,

மதுரை காமராஜ் பல்கலை உறுப்புக் கல்லுாரி,
ஆண்டிபட்டி.
98421 89404





We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X