வாழ்க வையகம், வாழ்க வளமுடன்! : ஆக. 14 வேதாத்திரி மகரிஷி பிறந்த தினம் | Dinamalar

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்! : ஆக. 14 வேதாத்திரி மகரிஷி பிறந்த தினம்

Added : ஆக 10, 2017
Advertisement
 வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!  : ஆக. 14 வேதாத்திரி மகரிஷி பிறந்த தினம்

“எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி ? அங்கே எனக்கோர் இடம் வேண்டும்” என்பது திரைப்பாடல். அமைதி தேடி விளையாட்டுப் பார்க்கிறார் ஒருவர், விளையாடிப் பார்க்கிறார் ஒருவர், திரைப்படம் பார்க்கிறார் ஒருவர், தொலைக்காட்சியில் மூழ்குகிறார் ஒருவர். அமைதி கிடைக்கிறதா? “கொடுமை கொடுமை என்று கோயிலுக்குப் போனாளாம் ஒருத்தி, அங்கே இரண்டு கொடுமை ஆடிக்கொண்டிருந்ததாம்” என்பது புதுப்பழமொழி. அமைதிக்கு வழி தான் என்ன?
அமைதிக்கு வழி காட்டுகிறர் 1911ல் கூடுவாஞ்சோரியில் பிறந்து, ஆழியாற்றில் வாழ்ந்து, 2006 ல் இறை நிலை பெற்ற வேதாத்திரி மகரிஷி.உலக அமைதிக்குச் சமுதாய அமைதி தேவை என்றும், சமுதாய அமைதிக்குத் தனிமனித அமைதி தேவை என்றும், தனி மனித அமைதிக்குத் தன்னிலை விளக்கமே சரியான தீர்வு என்றும், அதனைத் தருவது மனவளக்கலையே என்றும் கூறியுள்ளார் வேதாத்திரி மகரிஷி.9.1.1975 ல் ஐ.நா.சபையில் உலக சமாதானம் குறித்து
வேதாத்திரி மகரிஷி உரையாற்றிஉள்ளார். அப்போது அவர் உலக அமைதிக்காக ஐ.நா. சபைக்குப் பரிந்துரை சமர்ப்பித்துள்ளார்.தன் பிறந்த நாளை உலக அமைதி தின விழாவாக நடத்துமாறு
சீடர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஒவ்வோர் ஆண்டும் அவர் பிறந்தநாள் உலக அமைதி தினவிழாவாக நடைபெற்றுவருகிறது.

தனி மனித அமைதி : மனிதனுக்கு ஐவகைக் கடமைகள் உண்டு. அவை; தான், குடும்பம், சுற்றம், ஊரார், உலகம் ஆகியவையாகும். தான், குடும்பம், சுற்றம், ஊர், உலகம் என்று ஐந்து பிரிவினருக்கும் கடமை செய்து வாழ வேண்டியது அவசியம். இந்த ஐவகைக் கடமைகளையும்
அவரவர்கள் ஆற்றலுக்கும் வயதிற்கும், அறிவிற்கும் தக்கவாறு உயர்த்திக் கொண்டே இருக்கலாம். ஆனால் முதலில் தன் உடல், மனம் இவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதன் பிறகு குடும்பம், சுற்றம், ஊரார், உலகம் என்று ஆற்ற வேண்டிய கடமை விரிய வேண்டும்.
இந்த ஐந்தில் ஒன்றினால் மற்றென்று பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 'நான் சமுதாயத்திற்காக உழைக்கின்றேன்' என்று கூறி, தன் குடும்பத்தைப் பராமரிக்காமல் விட்டாலோ, உடல் நலத்தைச் சிதைத்துக் கொண்டாலோ, சமுதாய நலனிற்கு ஒருவர் தொண்டு செய்ய முடியுமா? குடும்ப நலனும், உடல் நலனும் வீணாகி விடும்.

தனிமனிதன் : தனி மனிதன் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு 1. உடல் நலம் 2. மனவளம் 3. பொருள் வளம் என்ற மூன்றில் முழுமை அடைய வேண்டும்.தனிமனிதன் தேவைகள் நிறைவு பெறச் சமுதாயக் கூட்டமைப்பு இன்றியமையாதது.
“உணவிலே உலக ஒற்றுமை கண்டிடுஉழைப்பினால் பதில் உலகுக்குத் தந்திடு”
என்பார் வேதாத்திரி மகரிஷி. இயற்கை வளம் சமுதாய வளமாக மாற, சமுதாயக் கட்டமைப்பு மிகவும் தேவை. சமுதாய அமைப்பிற்கேற்பத் தனிமனிதனின் செயல்திறன் அமைகிறது. இறையுணர்வும் அறநெறியும் இணைந்த சமுதாயத்தில் தனிமனிதன் நலம் பெறுகிறான். தனிமனிதனால் சமுதாயம் நலன் காக்கப் பெறுகின்றது. சமுதாயத்தை ஒரு வணிகச் சந்தையாகக் கருதாமல் 'சமுதாயத்திற்குக் கடமை செய்யக் கடன்பட்டிருக்கிறேன்.' என்ற உணர்வு தனி மனிதனிடத்தில் உண்டாதல் வேண்டும். அப்போது தான் சமுதாய வளம் நீடிக்கும்.குடும்பம்

குடும்பம் என்ற அமைப்பு : இந்திய மரபில் இன்றியமையாத இடத்தை வகிக்கிறது. ஆன்மிக உயர்விற்கும் ஒழுக்க உயர்விற்கும் குடும்பம் பேருதவியாக இருக்கிறது.குடும்பம் என்பது தாய்,
தந்தையார், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என்று உறவுகளின் கூட்டு அமைப்பு. இவ்வுறவு
களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளிலிருந்து என்றும் தவறக் கூடாது. நம்மைப் பெற்றெடுத்து, இரவு பகல் பாராது, கண் துஞ்சாது, தன்னுடைய நலன்களையெல்லாம் நமக்காகத் தியாகம் செய்து வளர்த்தவர் தாய். 'தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை, தந்தைசொல் மிக்க மந்திரமும் இல்லை'என்பார்கள். தன் உடல் நலத்தையும் பாராது இரவு பகலாக உழைத்து, அறிவை ஊட்டி நம்மை மேன்மைப் படுத்தியவர் தந்தை. அடுத்து வாழ்க்கைத் துணை, இவர் தன்னுடைய நலம் பாராது உழைப்பவர். குழந்தைகள் சமுதாயத்தில் உயர்வான இடத்திற்குச் சென்று குடும்பத்திற்கும், சுற்றத்திற்கும், சமுதாயத்திற்கும் தொண்டாற்ற வேண்டியவர்கள். ஆக இவர்களுக்கெல்லாம் ஆற்ற வேண்டிய கடமைகளிலிருந்து வழுவாதிருக்க வேண்டும்.
இதனால் குடும்ப அமைதி சிறக்கும்சகோதர சகோதரிகள், உறவினர்கள் ஆகியோர் உயிரளவில்
ஒன்றுபட்டவர்கள் தான். ஒன்றுபட்ட உயிர்த்தொடர்பு இருப்பவர்கள் நன்றாக இருக்க வேண்டும்; அவர்கள் நன்றாக இருக்கும் போதுதான் நாமும் நன்றாக இருப்போம். அவர்கள் துன்பப்பட்டால் அது நமக்குத் துன்பத்தைக் கொடுக்கும். எனவே அவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையிலிருந்து தவறக் கூடாது. அவர்களோடு எப்பொழுதும் இணைந்து நட்பு நலத்தோடு இருந்தால், நம் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

உறவுகள் மேம்பட : குடும்பத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும் விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்கவும் 'உறவுகள் மேம்பட' என்னும் தலைப்பில் மகரிஷி வெளியிட்ட கருத்துகள் பலர் உள்ளங்களிலும், இல்லங்களிலும்
அலுவலகங்களிலும் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன.பல குடும்பங்கள் உள்ள ஒரு
பகுதியை ஊர் என்று சொல்கிறோம். ஊர் என்பது சமுதாயத்தைத்தான் குறிக்கும். சமுதாயம் தான் நம்மை உருவாக்கியது ; வளர்த்து அறிவூட்டியது; வாழத் தகுதியுடைவர்களாக ஆக்கியது. இன்றைக்கும் உணவு, உடை, வீடு, மற்றும் எல்லா வசதிகளையும் அளித்துக் காக்கிறது. காலை முதல் மாலை வரையில் நமக்குத் தேவையான பொருட்களைச் சமுதாயம்தான் அளிக்கிறது. அந்தச் சமுதாயத்திற்கு உடலாற்றல், அறிவாற்றல் இவற்றைக் கொண்டு கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். எல்லோரும் வேலை செய்துதான் ஆக வேண்டும். ஏதேனும் ஒரு வழியில் சமுதாய நன்மைக்கு, உயர்வுக்குப் பணியாற்ற வேண்டும்.உடல் வளர்ச்சியாலும் அறிவு வளர்ச்சியாலும் பெற்ற வலுவைக் கொண்டு சமுதாயத்திற்கு எந்தெந்த அளவில் நன்மை செய்ய
முடியுமோ, அதை உணர்ந்து, நலம் தரத்தக்க வழியில் செயல்படுத்த வேண்டும்; கடனைத் திருப்பித் தர வேண்டும் என்ற எண்ணம் நீதியுணர்வு ஆகும். அந்த நீதி உணர்வை ஒட்டிய செயல், அந்தச் செயலில் விளையக்கூடிய நல்விளைவு, சிந்தனை, அனுபவங்கள் இவற்றையே கடமையுணர்வு என்கிறோம்.

உலகம் : உலகில் உள்ள வளங்கள் அனைத்தையும் உலக நாடுகள் அனைத்தும் முறையாகப் பகிர்ந்து வாழும்போதுதான் அனைத்து நாடுகளும் அமைதியாக வாழ முடியும். முன்பெல்லாம் ஒரு நாட்டில் வசிப்பவர்கள் மற்ற நாட்டினரைப் பார்க்க முடியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இப்பொழுது வாகன வசதிகள் பெருகிவிட்டன. அனைத்து நாட்டவரும், அனைத்து நாடுகளுக்கும் செல்ல முடியும். இக்காலத்தில் பொருளாலும், விஞ்ஞான அறிவாலும் மக்கள்குலம் ஒன்றுபட்டுள்ளது.'மக்கள் எல்லோரும் சகோதரர்களே' என்ற உண்மை நிலையை உணரச் செய்து, ஒருவர் மற்றவருக்குத் துன்பம் கொடுக்கக் கூடாது என்ற உணர்வை
ஏற்படுத்த வேண்டும்.

சிந்தனைகள் : தமிழ்ப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள வேதாத்திரியச் சிந்தனைகள் என்னும் நுால் வாயிலாக அவர் உலக அமைதிக்கு ஆற்றிய தொண்டுகளை அறிந்து மகிழலாம்.
“ஒரு தனி மனிதனின் அமைதியே உலக அமைதிக்கு வழி கோலுகிறது என்பதற்குத் தக்க சான்றாக விளங்குவது வேதாத்திரி மகரிஷியின் வாழ்க்கை. எளிய குடும்பத்தில் பிறந்த இவர் தன்னம்பிக்கை என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துக் கொண்டு ஒரு தனிமனிதன் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதனை மெய்ப்பித்தார். இவரின் அமைதியின் விளைவாக மனவளக்கலை பிறந்தது. இதன் பயனால் மற்றொரு மனிதனைப் பண்படுத்த முடிந்தது.
பண்பட்டதன் விளைவாய்க் குடும்ப அமைதி பிறந்தது. குடும்ப அமைதியின் பயனாய்ச்
சமுதாய அமைதியும், சமுதாய அமைதியின் பயனாய் உலக அமைதியும் பிறந்தது. உலகில் உள்ள அனைவராலும் வேதாத்திரி மகரிஷியின் கருத்துகள் ஏற்றுக் கொள்ளப் பட்டமையே தக்க சான்றாகும். ” மகரிஷி தம் சீடர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்.“காலையில் எழுந்தவுடன் உலகமக்களின் நலம் கருதி, அமைதி கருதி, 10 தடவை வாழ்க வையகம் வாழ்க வளமுடன் என்று வாழ்த்துங்கள். உங்களின் தவ வலிமையால் விரைவில் உலக அமைதி கிடைப்பது உறுதி.”
“யானையின் பலம் தும்பிக்கையில்; மனிதனின் பலம் நம்பிக்கையில்”- என்கிறார் மகரிஷி.

- ப. வெள்ளை,
பேராசிரியர், மனவளக்கலை மன்றம்,
ஸ்ரீவில்லிபுத்தூர்.
99762 77979வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X